ஹரியானா மாநில சர்ச்சை : பொது இடங்களில் தொழுகை வக்ப் இடங்களை கேட்கிறது வாரியம்

‘நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்வோம். ஐந்தாவது ஆண்டு அரசியல் செய்வோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது கூறினார். இது 5 வது ஆண்டு. பாஜக இதுவரையில் இல்லாத புதிய பிரச்சனைகளை கையில் எடுத்திருக்கிறது. 

ஒன்று அரியானா மாநிலம் குருக்ராமில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை பொது வெளியில் சிறப்புத் தொழுகை நடத்துவது. மற்றொன்று, உத்தரப்பிரதேசம் அலிகரில் உள்ள அலிகர் பல்கலை கழகத்தின் நூலகத்தில் சுவரில் மாட்டியிருந்த முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படத்தை அப்புறப்படுத்தியது. முஸ்லிம்கள் மத வழிபாட்டுக்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பார்கள். பிரிவினைக்கு காரணமான ஜின்னாவின் படத்தை இந்திய பல்கலை கழகத்தில் வைத்து கௌரவிப்பார்கள் என்று புதிய அவதூறுகளை கிளப்பி இருக்கிறது.

அரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், குருக்ராமில் தொழுகையை இடையூறு செய்த இந்துத்துவ அமைப்பினரின் செயலை பாராட்டி இருக்கிறார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் அலிகர் பல்கலை கழகத்தில் ஜின்னாவின் புகைப்படத்தை கழட்டி வீசிய ஏபிவிபி மாணவர்களை பாராட்டி இருக்கிறார். இவர்கள் மக்கள் முதல்வர்களாக இல்லாமல் சமூக விரோதிகளின் கையாட்களாகவும் இருக்கிறார்கள். மாட்டுக்கறி பிரச்சனை தொடங்கி அத்துனை சமூக விரோத செயல்களும் ஆளும் தரப்பின் ஆதரவோடு தான் நடந்திருக்கின்றன. பாஜக அல்லது இந்துத்துவாவினர் ஆளாத மாநிலங்களில் இந்த வகை பிரச்சனைகள் இல்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

இவர்கள் மாநிலங்கள் தோறும் ஆட்சிகளை கைப்பற்றிக் கொண்டு வருவது முதலில் அங்கங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு முடிந்த அளவு இடையூறு செய்து அச்சத்தை ஏற்படுத்த தான். இவர்கள் பின்னர் தலித்துகள் அதன் பின்னர் பிற்பட்ட மக்கள் என வரிசையாக அச்சுறுத்தி பணிய வைப்பார்கள் . இது ஒரு மெகா திட்டம். இதை செய்து முடிப்பதற்கு ஜனநாயகமே வசதியான தளமாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அது, அத்தகைய தன்மை கொண்டது தான். இன்று உலகம் முழுவதும் ஜனநாயக பெருமைகள் பேசும் நாடுகளில் மத தீவிரவாதம் அல்லது முஸ்லிம் வெறுப்பு வாதம் கொண்டவர்கள் அதிகாரத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பதை உணரலாம்.

வழிபாடுகளை பள்ளிவாசல்கள் அல்லது மைதானம்( ஈத்கா) போன்றவற்றில் நடத்த வேண்டும். பொது சாலையை அடைத்துக் கொண்டு தொழுகை செய்ய கூடாது. இது நிலத்தை ஆக்கிரமிக்கும் செயல் என்று அரியானா முதல்வர் கட்டார் கருத்து கூறி இருக்கிறார். எவரும் புகார் கூறாத பட்சத்தில் எங்களுக்கு இதில் அக்கறை இல்லை. எவரேனும் ஒருவர் புகார் அளித்தால் அந்த பிரச்சனையில் கவனம் செலுத்துவோம். தொழுகை நடப்பதை நிறுத்தும்படி நான் எதுவும் கூறவில்லை. அதே நேரம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு என்றுள்ளார் கட்டார்.
குருக்ராமில் பல்லாண்டு காலமாக சிறப்புத் தொழுகை சாலையை மறித்து நடந்து வருகிறது. சிறப்பு தொழுகைக்காக காவல்துறை போக்குவரத்தை மாற்றி அமைத்து தரும். இது இதுவரையில் பிரச்சனை இல்லாமல் நடந்த விசயம். இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்துத்துவ அமைப்பினரை தூண்டி சட்டப்படி ஒரு புகார் அளிக்கச் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது கட்டார் அரசு.

அகில பாரதிய ஹிந்த் க்ராந்தி தள் அமைப்பின் ராஜீவ் மித்தல், இதர மாநிலங்களில் சிறப்புத் தொழுகையை பொதுவெளியில் நடத்துவதை தடுப்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமையும். முஸ்லிம் நாடுகளில் கூட பொதுவெளியில் தொழுகை செய்ய தடை உள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றுள்ளார். தலைநகரம் அருகில் இருப்பதால் குருக்ராம் நகரமய வளர்ச்சியை அடைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் உயரமான பல்லடுக்கு கட்டடங்கள் நகரம் எங்கும் நிரம்பி இருக்கின்றன. உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு புறமும் வசதிவாய்ப்புகள் பின்தங்கிய மக்கள் ஒரு புறமும் இருப்பதை குருக்ராமில் காணலாம். அங்கு பின்தங்கிய சமூகமாக இருப்பவர்கள் முஸ்லிம்கள். புதிதாக பெரிய பள்ளிவாசல்கள் கட்ட முடியாது. கட்டுவதாக இருந்தாலும் அரசு அனுமதி கிட்டாது. இந்த நிலையில் தான் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களை அடுத்துள்ள புற வெளியில் தொழுகை நடத்தி கலைகிறார்கள். அதிகபட்சம் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம். குருக்ராம் நகர மக்கள் இதுவரையில் எதிர்ப்பு கூறவில்லை. இது இந்துத்துவ அமைப்புகள் கிளப்பும் புதிய பிரச்சனை.

குருக்ராம் எப்போதும் அமைதியான நகரம் தான். இங்கு ஜாட் மற்றும் குஜ்ஜர் இன மக்கள் வாழ்கிறார்கள். மொத்தத்தில் ஜாட் இன மக்கள், குஜ்ஜர் இன மக்கள். அதாவது ஜாட் இந்துக்கள், ஜாட் முஸ்லிம். அதேபோல், இந்து குஜ்ஜர்கள், முஸ்லிம் குஜ்ஜர்கள். அதனால், மத அடையாளம் என்பது இரண்டாம் இடம் தான். இன அடிப்படையில் ஐக்கியமாக இருக்கிறார்கள்.

இந்த பகுதியில் நிச்சயமாக மோதல் என்பது இல்லவே இல்லை. மேவாதி வரலாறை எடுத்துக் கொள்ளுங்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த மக்கள் தொகையில் அவர்கள் மொத்தமும் இந்துக்கள் என்று வகை செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் என்று பதியப்பட்ட வில்லை. இப்போது முஸ்லிம்கள் தனியாக பட்டியலிடப்படுகிறார்கள். மேவாத்தில் ஜாட்களுக்கும் முஸ்லிம் களுக்கும் இடையான மோதல்கள் வெகு சமீப காலமானது, இந்த பகுதியின் வரலாறுக்கே முரணானது என்கிறார் பேராசிரியர் ஹிலால் அகமது. இவர் அலிகர் பல்கலை கழகத்தில் வளரும் சமூகங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான மையத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

இங்குள்ள ஜாட், குஜ்ஜர் மற்றும் முஸ்லிம்கள் வெளியில் இருந்து வந்த எந்த அரசையும் ஏற்றதில்லை. அது சுல்தான்களாக இருந்தாலும், மொகலாயர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகளையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. தனி அடையாளமாக இருந்துள்ளனர். அவர்கள் ஜாட் அடையாளத்தில் இருந்து இந்து அடையாளத்துக்கு சமீபமாகத் தான் மாறினார்கள். ராமர் கோவில் இயக்கத்திலும் கூட அவர்கள் பெரிய அளவில் பங்கெடுக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவின் பிரதமராக இருந்த சௌத்தரி சரண் சிங் ஜாட் சமூகத்தின் பெரிய தலைவர்களில் ஒருவர். அவரது அரசியல் மதவாதமாக இருந்ததில்லை. எனவே ஜாட்கள் பெரும்பாலும் பாஜகவை தொடர்ந்து எதிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

குருக்ராமில் 22 பள்ளிவாசல்கள் தான் இருக்கின்றன. பள்ளிவாசல்கள் பழைய மக்கள் தொகைக்கு கட்டப்பட்டு இருக்கின்றன. மக்கள் தொகை வளர்ச்சி பள்ளியை பிதுக்கிக் கொண்டு மக்களை வெளியே தள்ளுகிறது. 1990 களில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மக்கள் தொகை அதிகம். ஏழை முஸ்லிம்களும் அதிகம். புலம்பெயர்ந்து வந்துள்ள மக்களை உட்கொள்வதற்கு 22 பள்ளிகள் போதுமானதல்ல. இதனால் தான் தொழுகைக்கு மக்கள் புறவெளிக்கு வருகிறார்கள். மக்கள் சிறப்புத் தொழுகைக்கு மட்டும் தொழுகை விரிப்புகளை கொண்டு வருகிறார்கள். தொழுது விட்டு சென்று விடுகிறார்கள். வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை பகல் 1 மணி முதல் 2 மணிக்குள் முடிந்து விடும். இது யாருக்கும் இடையூராக இருக்கவில்லை. இதுவரையில் அங்கு எந்த சச்சரவும் உண்டானது இல்லை.

பள்ளிவாசல்கள் சட்டப்பூர்வமான இடங்களில் கட்டப்பட்டு இருக்கின்றன. அடுத்தவர்கள் நிலத்தையும் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து பள்ளிவாசல்கள் கட்டக் கூடாது என்பது இஸ்லாமிய சட்டம். ஒரு இடத்தை விலைக்கு வாங்கித் தான் பள்ளிவாசல் கட்ட வேண்டும். சட்டப்படி இட உரிமை பெறாத கட்டடங்கள் பள்ளிவாசல் என்ற தகுதியை இழக்கும். இது இஸ்லாமிய சட்டம். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையான ஆவணங்கள் இருக்கின்றன. எனவே, தொழுகை மூலம் முஸ்லிம்கள் இடங்களை ஆக்கிரமிக்கிறார்கள் என்பது தேவையில்லாத அச்சம் என்கிறார் பேராசிரியர் ஹிலால் அகமது. இவரது வளர்ந்து வரும் சமூகங்கள் பற்றிய ஆராய்ச்சி மையம்(CSDS) சாலைகளில் மத ஊர்வலம் செல்வது காலி இடங்களில் வழிபாடு செய்வது பற்றி 2015 ல் ஒரு ஆய்வு செய்திருக்கிறது.

மக்களில் பெரும்பாலானவர்கள் சாலைகளில் மத ஊர்வலம் செல்வதையும் சாலைகளில் தொழுகை செய்வதையும் அனுமதிக்கக் கூடாது என்று பதில் கூறி இருக்கிறார்கள். அதே நேரம் காலி மனைகளில் தொழுகை நடத்துவது வேறு வகையானது. அது இடத்துக்கு இடம் வேறுபடும். இந்து மத வழிபாடாக இருந்தாலும் முஸ்லிம்கள் தொழுகை செய்வதாக இருந்தாலும் அதை உள்ளூர் மக்கள் முடிவு செய்வதாக இருக்க வேண்டும். பெரிய அளவில் மக்கள் பிரச்சனையாகவோ போக்குவரத்து பிரச்சனையாகவோ மாறாத வரையில் அரசு தலையிடக் கூடாது.

hariyana 1

பழைய தில்லியில் இந்து கடை உரிமையாளர்கள் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு கடைக்குள் இடம் ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். இந்துக்கள் விழாக்கள் நடக்கும் போது முஸ்லிம்கள் உணவு வழங்குகிறார்கள். இந்து மத வழிபாடுகளும் முஸ்லிம்கள் தொழுகையும் இந்தியாவில் ஒரு நாளும் பிரச்சனையாக உருவானது இல்லை. ஆனால், பாஜக இதனை இரு பிரிவினருக்கு இடையான மோதலாக மாற்ற விரும்புகிறது. குருக்ராமில் இடம் அடிப்படை பிரச்சனையாக இருக்கிறது. மக்கள் வழிபாடு செய்ய போதிய இட வசதி செய்து தர வேண்டியது அரசின் கடமை. அதனை பாஜக அரசுகளிடம் எதிர்ப்பார்க்க முடியாது. முதல்வர் கட்டார் பேச்சுக்கு அரியானா வக்பு வாரியம் பதிலளித்து இருக்கிறது. வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான நிலங்களை மாநில அரசு ஆக்கிரமித்து வைத்துள்ளது. அவற்றை எங்களிடம் ஒப்படையுங்கள். பொது வெளியில் தொழுகை செய்யும் அவசியம் இல்லை என்று இதற்கு தக்க பதிலடி கொடுத்தது அரியானா மாநில வக்பு வாரியம்.

அரியானாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து குருக்ராமில் 19 பள்ளிவாசல்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களின் பட்டியலை அரியானா வக்பு வாரியம் மாநில அரசிடம் அளித்துள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது கண்டு கட்டார் அரசு கண்ணம் வீங்கி நிற்கிறது. அரியானா சம்பவம் அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று அகில பாரதிய ஹிந்த் க்ராந்தி தள் அமைப்பின் ராஜீவ் மித்தல் சொன்னது, உண்மையில் இதையே சாக்காக கொண்டு அனைத்து மாநிலங்களிலும் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு இடங்களை சட்டப்படி மீட்டுக் கொள்ள ஒரு வழி கிடைக்கும்.

ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை சட்டப்பூர்வமாக காலி செய்து காவல்துறை பாதுகாப்பும் அளிக்க முன்வந்தால் முஸ்லிம்கள் பொது இடங்களில் தொழுவதை தவிர்த்து விடுவார்கள் என்று அரியானா வக்பு வாரிய தலைவர் ஜமாலுதீன் 19 இடங்களின் பட்டியலை கொடுத்து பளார் என்றும் சொல்லி விட்டார். இப்போது திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விக்கி நிற்கிறது ஆளும் பாஜக அரசு.

எங்கள் இடங்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள் எங்கள் சொந்த செலவில் பள்ளிவாசல்களும் கட்டி சொந்த செலவில் இமாம் போட்டு கொள்கிறோம், புற வெளியில் தொழுகை நடத்தும் முஸ்லிம்களை அந்த இடத்துக்குள் கொண்டுவிட முடியும், பிரச்சினையை சுமூகமாக தீர்த்து விடவும் முடியும் என்கிறார் ஜமாலுதீன்.

பாலம் விகாரில் உள்ள சௌமா கிராமத்தில் 2 ஏக்கருக்கும் அதிகமான இடம் அரசு பிடியில் இருக்கிறது. இந்த இடத்துக்கு பகரமான இடத்தை வக்பு வாரியத்துக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு போட்டுள்ளது என்கிறார் ஜமாலுதீன்.

ஜமாலுதீன் கொடுத்துள்ள பட்டியலில் வசிராபாத், தௌலத்பூர் - நஸ்ரியாபாத், தன்கோட், நவ்ர்கன்பூர், ஜர்ஷா, பாதுஷாபூர் மற்றும் பாருக் நகர் கிராமங்களில் பள்ளிவாசல்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதே போல் உள்ளூர்வாசிகள் எதிர்ப்பின் காரணமாக போன்த்சி, குராம்பூர், தன்கோட், மியோகா, கர்கி ஹர்சாரு கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள் தொழுகைக்கு பயன்படாமல் இருக்கின்றன. ஜர்சா, ஜர்சா - ஃபாஸில்பூர், நவ்ரங்பூர் மற்றும் மியோகாவில் வக்பு இடங்களில் வக்பு வாரியம் பள்ளிவாசல்கள் கட்டும் முயற்சிக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்கிறார் ஜமாலுதீன்.

தற்போது, குருக்ராமில் 4 - 5 பள்ளிவாசல்களும் மைதானங்களும் (ஈத்கா) தான் இருக்கின்றன. வாழ்வாதாரம் தேடி நகரத்தில் நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்காக்கள் போக 150-200 பொது இடங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்து வருகிறது என்கிறார் வக்பு வாரிய தலைவர் ஜமாலுதீன்.

அரியானா மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஆப்தாப் அகமது, “ பொது வெளியில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கும் மாநில அரசு, அதே நேரம், பொது மக்கள் வக்பு சொத்துகளை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறது. முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கை படி வழிபாடு செய்ய விடாமல் தடுத்து அவமானப்படுத்தவே அரசு விரும்புகிறது என்று சாட்டியுள்ளார்.