ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட வேண்டும்

தூத்துக்குடியில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததென சித்தரிக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. ஆனால் அது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றிய கொலைபாதகச்செயலாகும். தங்கள் ஆலை இருக்கும் தூத்துக்குடியில் 144 தடைச்சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பே நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் ஆலைக்கு பாதுகாப்பு கேட்காமல் ஒட்டுமொத்தமாக 144 கேட்க உங்களுக்கு உரிமையில்லையென நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்றமே மறுத்த விஷயத்தை மாவட்ட நிர்வாகத்தை வைத்து நிறைவேற்றிக்கொண்டது ஸ்டெர்லைட் நிர்வாகம்.
மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை மிரட்டுவதற்கும் துப்பாக்கிச்சூடு நடத்துவதென முடிவு செய்து அதைநோக்கி மாவட்ட நிர்வாகத்தை நகர்த்தி தனது கருவியாக ஸ்டெர்லைட் நிறுவனம் பயன்படுத்திக்கொண்டு இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளார்கள்.144 தடை உத்தரவில் கையெழுத்திடவேண்டிய மாவட்ட ஆட்சியரோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாமல், ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் போய் இருந்துகொண்டு, காவல்துறையே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளில் நல்லமுறையில் பணியாற்றிய அதிகாரிகளுக்குக்கூட உடனடியாக மாற்றுப்பணியிடம் வழங்கப்பட்டதில்லை. ஆனால் இப்படுகொலைகளுக்கு காரணமான கலெக்டருக்கும் எஸ்.பிக்கும் பணியிடமாற்றம் வழங்கபட்டு செளகரியமான பதவிகளில் பணியமர்த்தப்பட்டிருப்பதை அவர்களின் செயலுக்கு அரசு வழங்கிய பரிசாகவே நினைக்கத்தோன்றுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி மக்களை சுட்டுள்ளனர். காஷ்மீரில் மக்களை சுடுவதற்கு இதே வகை துப்பாக்கிகளையே பயன்படுத்தி உள்ளனர். இத்துப்பாக்கிகளை முன்கூட்டியே எடுத்துவந்து பயன்படுத்தியிருப்பதன் மூலம் இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய சம்பவம் என்பதும் உறுதியாகிறது. தென்மாவட்டங்கள் முழுதிலுமிருந்து 80% ஆயுதப்படையினர் வரவழைக்கப்பட்டதும் இதை உறுதிசெய்கின்றன.
போபாலில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனத்தை தேசிய பேரிடரை உருவாக்கிய நிறுவனம் என அறிவித்து தடை செய்ததைப்போலவே, 14 பேரின் கொலைக்கும் நூற்றுக்கணக்கானோரின் படுகாயத்துக்கும் காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தை தேசிய பேரிடரை உருவாக்கிய நிறுவனமாக அறிவித்து தமிழக அரசு உடனடியாக தடை செய்யவேண்டும்.
சு.வெங்கடேசன், தமுஎகச பொதுச்செயலாளர்