பேராசை உருவாக்கிய பெருவெள்ளம்

கேரளா
கேரளா நம்மை விட இயற்கையைப் பாதுகாத்து வரும் மாநிலம். அங்கேயே இப்படிப்பட்ட பேரிடர் எனில் நம்முடைய நிலை கவலைக்கிடமே. இப்பேரிடரை ‘மானுடரால் உருவாக்கப்பட்ட இயற்கை பேரிடர்’ என்பதே பொருந்தும். மனிதருடைய தவறுகளால் காட்டுயிர்களும் வளர்ப்பு விலங்களும் தம் உயிரை இழந்துள்ளன.
மலைகள், காடுகள், ஆறுகள், ஓடைகள், காயல்கள் ஆகியவற்றால் கொடையளிக்கப்பட்ட மாநிலம் கேரளா. சோலைக்காடுகள் ஆறுகளின் தொட்டில். அவை மழைநீரை ஈர்த்து வைத்து கொஞ்ச கொஞ்சமாகக் கசியவிடும் தன்மை கொண்டவை. இதனால் வெள்ளம் கட்டுப்படும்.
ஆனால் ஓரினப்பயிர் தோட்டங்கள் தொட்டில் கயிற்றை அறுத்துவிட்டன. மண் அரிமானம் மழைநீரை துரிதமாக வெளியேற்றுகின்றன. காடுகளை விடத் தேயிலைத் தோட்டங்கள் வெளியேற்றும் நீரின் அளவு 45 மடங்கு அதிகம் என்கிறது கென்யாவில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு. விளைவு, பெய்யும் மழை 48 மணி நேரத்தில் மொத்தமுள்ள 44 ஆறுகளின் வழியாக விரைவாகக் கடலில் கலந்துவிடுகிறது.
தோட்டப்பயிர் ஒருபோதும் காடு ஆகாது. மேலும் சோலைக்காடுகள் இருந்த இடங்களில் முளைத்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்காது. கிரானைட், லேட்டரைட் என்னும் செங்களிப்பாறை மற்றும் ஜல்லி தொழிலுக்கு நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கேரளாவிலும் சட்டவிரோத மணற்கொள்ளைகள் நிகழ்கின்றன இவை நீர்வரத்தைத் தடுத்துத் திசை மாற்றிவிடும். இவ்வளவும் நடந்து பிறகு பெருமழையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
கேரளாவில் 217 பெரிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவை மாநிலத்தின் மொத்த பரப்பளவில் ஐந்திலொரு பங்காகும். கேரளாவின் வெள்ளப்பெருக்கை நெடுங்காலம் தாங்கிவந்த இவை இன்று ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டன. தவிர ஏரிகளில் கொட்டப்பட்டுள்ள டன் கணக்கான குப்பைகள் நீர் உறிஞ்சும் தன்மையைக் குறைத்துள்ளன.
அண்மைக் காலமாகவே மழையளவில் பெரும் மாற்றம் இல்லையெனினும் மழைநாட்கள் குறைந்துவிட்டன. பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களிலேயே நீரிடியைப் போல் கொட்டித் தீர்த்துவிடுகின்றன. அதிகமாக மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரைத் தாங்கிக்கொள்ளும் வலிமைகொண்ட நெல் வயல்களை அழித்து அங்கெல்லாம் நகரங்களைக் கட்டி அமைத்ததுதான் கேரளத்தின் இடைநிலங்களில் வெள்ளப்பெருக்குக் காரணமாகியது.
மழை நீரை தாங்கும் சூழலியல் அமைப்பைக் கொண்ட நிலப் பகுதிகளின் மேல் மனிதன் ஏற்படுத்தும் அதீதமான அழுத்தங்கள், ஆக்ரமிப்புகளும் பேரழிவுகளுக்கு வழிவகுக்கின்றன.
வளர்ச்சியின் பெயரால் இனி அழிப்பதற்கு கேரளத்தில் வனங்களும் ஆறுகளும் நெல்வயல்களும் மீதமில்லை என்பதை ஆட்சியாளர்கள் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.
எனவே, இந்தப் பேரழிவு மனிதர்கள் உருவாக்கியது என்பதில் சந்தேகமேயில்லை! வளர்ச்சி வளர்ச்சி என்று அறைகூவிக்கொண்டு இப்பூமியிலிருந்து மனித வாழ்வைத் துடைத்தழிக்கும் திட்டத்துக்குக் கட்சி வேறுபாடுகள் எதுவுமில்லை! ஒவ்வொரு பேரழிவும் கற்றுக்கொள்வதற்கும் திருத்தியமைப்பதற்குமான பல அனுபவப் பாடங்களை வழங்குகிறது. ஆனால், ஆட்சியாளர்கள் எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்வதில்லை.