மனித உறவின் நீட்சி

faamily மனிதன் இந்த உலகின் மிகப்பெறுமதியான படைப்பினம். அனைத்து படைப்பினங்களையும் விடவும் அவனுக்குத் தான் அந்தஸ்து அதிகம். உலகின் அனைத்து படைப்பினங்களும் அவனுக்காகத் தான் படைக்கப்பட்டுள்ளன. இது அல்குர்ஆன் மனிதனைப்பற்றி கூறும் நிஜங்கள்.

மனிதன் இந்த உலகில் தனித்து வாழ முடியாது. அவனது

வாழ்க்கை மற்ற மனிதர்களுடன் நெருக்கமான  தொடர்பு கொண்டது. ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுடன் இணைந்து செல்லும் வாழ்வைத் தான் அவன் தேர்ந்தெடுக்க வேண்டியவனாக இருக்கின்றான். “மற்ற மனிதர்களுடன் சேர்ந்து வாழாத விசுவாசியினை விட , மற்றவர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் ஏற்படும் கஷ்டங்களில் பொறுமையுடன் இருக்கும் விசுவாசி தான் மிகச் சிறந்தவன்” என்பது

நபிமொழி.

மற்றவர்களுடனான வாழ்க்கை சிலருக்கு மிகவும் சுவையாக இருக்கும் இன்னும் சிலருக்கு இப்படியான ஒரு வாழ்க்கை ஏன் என்று எண்ணத் தோன்றும். இதனை  சரியாக கையாள முடியாத போது அதுவே மிகப்பெரும் சோதனையாகவும் மாறிவிட வாய்ப்புண்டு.

இப்படியான வாழ்க்கைக்கு ஒருவன் தன்னைதானே தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தன்னைப் போன்றுதான், தன்னைச் சூழ உள்ள அனைவரும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவர்கள். இந்த எண்ணத்துடன் மனித உறவு நீடிக்காது. என்னைப்பற்றிய மனப்பதிவு மற்றவர்களிடம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் அவர்களைப்பற்றிய பிழையான மனப்பதிவுகளுடன் வாழ்வை கொண்டு செல்ல முடியாது.

மனித உறவுகளின் நீட்சி மற்றவர்களது செயல்களுக்கு நியாயம் காணும் பண்பிலும் தங்கியிருக்கிறது. இந்த நிலை அனைவராலும் முடியாது, குறிப்பாக மற்றவர்கள் பற்றிய பிழையான மனப்பதிவுகளால் தங்கள் உள்ளத்தினை நிறைத்து வைத்திருக்கும் மனிதர்களால் முடியவே முடியாது. தூய்மையான உள்ளம் கொண்டவர்களால், பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களால் மாத்திரம் தான் முடியும்.

“குறித்த இன்ன சகோதரன் எனது தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்க வில்லை...வழக்கமாக எனது குறுஞ் செய்திகளுக்கு உடனேயே பதிலளிப்பவர் இன்னும் பதில் தரவில்லை...ஏன் இன்று இவர் வீட்டிலிருந்து நேர காலத்துடன் செல்கிறார் ?... இப்படி நமக்கு மற்றவர்களிடம் வித்தியாசமாகத் தெரியும் விஷயங்களுக்கு சில கேள்விகளை நாமாகவே எழுப்பிக் கொள்வதுண்டு.. அனால், இவற்றுக்கான நியாயம் என்ன என்பதனை அறிந்து கொள்ளாது நாமாகவே ஒரு விடையினைத் தேர்ந்தெடுப்பது பலவகையிலும் ஆபத்தானது. இந்தம் நிலை கடைசியில் மற்றவர்களைப்பற்றிய பிழையான மனப்பதிவை ஏற்படுத்தி, மனித உறவையே சீரழித்துவிடும்

“அவருக்கு ஏதோ வேலையாக இருக்கலாம், அவர் இன்னும் தொலைப்பேசியினைப் பார்த்திருக்க மாட்டார்..” இப்படியாக நியாயங்களைத் தேடுவது மனித உறவுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். எமது ஸலபுகள்(முன்னோர்கள்) “ஒரு சகோதரனது ஒரு செயலுக்கு தொண்ணூறு காரணத்தை தேட வேண்டும்” என்று கூறுகிறார்கள்.. காரணம் மனித உறவு அப்போது தான் அழகாக தளிர்விடத் தொடங்கும்.

நம்மிடம் அரிதாகி போகின்ற மிக முக்கியமான பண்பு மற்றவர்களைப்பற்றி முதல் தடவையிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிழையான எண்ணம் கொள்வது ..

மற்ற சகோதரனது செயல்களுக்கு நியாயமான காரணத்தைத் தேடாது பிழையான விளக்கத்தினைக் கொள்வது நமது மறுமை வாழ்கையை அதிகமாகவே பாதித்து விடும்.

“ மிகத் தூய்மையான உள்ளத்துடன் வருகின்றவருக்குத் தான் அந்த மறுமை நாளில் விமோசனம்..”(ஷுஅரா:89)

“முஃமின் மற்றவர்களின் செயல்களுக்கு நியாயமான காரணம் தேடுவான் , முனாபிக் மற்றவர்களது குறைகளைத் தேடுவான்” இப்னு மாசின் –ரஹ்-