நாடு எங்கே போகிறது?

  16 வது பாராளுமன்றம் குறுகிய காலத்தில் நிதி நிலை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளது. கூடுமானவரை இந்த நிதி நிலை அறிக்கை சாமான்ய மக்களை விட கார்ப்பரேட்களை குஷிபடுத்துவதில் கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு 41 நாட்களுக்குள் பெட்ரோல் விலை ஏற்றியது, முன்பை விட எல்.பி.ஜி. விலையை கூட்டியது. ரயில் கட்டணத்தை உயர்த்தியது. இப்படி வாக்களித்த மக்களை வஞ்சித்து

விட்டு மூர் மார்க்கெட் மோடி மஸ்தான் வித்தை காட்டும் போது எல்லோருடைய கவனமும் தன் மீது விழுவதற்கு ஏற்ப ஆவேசமாக, சத்தமாக மேளெமடித்து பேசுவது போல், வழக்கறிஞர் அருண் ஜெட்லி வசதியாக ஒய்வெடுத்துக் கொண்டும் ,1 தண்ணீர் குடித்துக் கொண்டும் நிதி நிலை அறிக்கையைப் படித்தார். இது கிட்டத்தட்ட பழைய பானையில் புதிய கள்.

அமெரிக்காவை முன்னிறுத்தியே நிதி நிலை அறிக்கை கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த மன்மோகன் அரசு அணுமின் திட்டங்களுக்காக உள் நாட்டில் உள்ள நிலக்கரி வளத்தை சுரங்க அனுமதிகளாக பலருக்கும் தந்தனர். திட்டமிட்டு இந்த நிலக்கரி டெபாசிட்களை உரியவாறு எடுக்காமல் மெத்தனம் காட்டின. இதனால் பல்வேறு மாநிலங்கள் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்தன. நம் நாட்டின் மொத்த நிலக்கரி இருப்பில் 18 புள்ளி 6 சதவீதம் அளவுக்குத்தான் நிலக்கரி சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 60 சதவீதம் எடுத்தால் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் திட்டமிட்டே இதை செயல்படுத்தாமல் அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் அணுமின் திட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அரசும் மன்மோகனை அடியொற்றியே மேல்தட்டு மக்களுக்காகவே நிதி நிலை அறிக்கையை தயாரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் விலை வாசியை உடனடியாகக் குறைப்போம் என்றார்கள். ஆனால் சொன்னது போல் அதி அவசிய பொருட்கள் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்கப்படுவதுடன் பதுக்கலே விலையேற்றத்துக்கு காரணம் என புது கர்ஜனை செய்கிறார் ஜெட்லி.

41 நாட்களுக்குள் இவர்கள் போடும் ஆட்டம் கண்டு நாடே கதி கலங்கி நிற்கிறது.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலை திட்டத்துக்காக 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விவசாய நிலங்கள் தார்ச்சாலைகளாக பயன்பட்டன. இதில் இவர்கள் வைர சாலை திட்டத்திற்காக இவர்கள் பங்கிற்கு விளைநிலங்களை வீணாக்கப் போகின்றனர். அத்துடன் ஒரு நகரம் அமைந்தாலே பல கிராமம் அழியும். ஆனால் இந்த அரசு 100  ஸ்மார்ட் நகரங்களை அமைக்கப்போகிறதாம். இதனால் ஆயிரக்கணக்கில் கிராமங்கள் காணாமல் போகும். இதன் மூலம் ஊரக வளர்ச்சித்துறை கிராமங்களுக்காக, கிராமங்களின் தன்னிறைவுக்காக ஒதுக்கப்படும் நிதி திசை திருப்பப்படும்.

மொத்தத்தில் இந்த அரசு மக்களை ஓரிடத்தில் திரட்டுவதன் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை பெருக்கி பெரும் முதலாளிகளை கொழுக்க வைக்கும் வேலை நடைபெறுகிறது. இந்தியனுக்கு தேச பக்தி தேவையில்லை. மாறாக நுகர்வு வெறி மட்டும் இருந்தால் போதும் என்ற 2மோடி மூளைக்குள் உருவான திட்டம்தான் 100 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு.

மோடி பிரச்சாரக் கூட்டங்களில் இளைஞர்களைப் பார்த்து பரிதாபப்பட்டார். இளைஞர்களும் மோடியின் உருகுதலைக் கண்டு மனம் மகிழ்ந்தனர். ஆகா நமக்கு வழிகாட்டி வந்துவிட்டார், நமக்கு வேலை தர, குடும்ப சுமைகளை நீக்க, பொருளாதார உயர்வு பெற வந்து விட்டார் என நம்பினர்.

ஆனால் இந்த அரசியல் நடிப்புலக நாயகன் வாக்களித்த இளைஞனை விதவிதமான உடைகளை அணிந்து, செல்போன் தந்து விரல் சூப்ப வைத்து விட்டார்.

வைரம் விலை குறைப்பு, செல்போன் விலை குறைப்பு, எல்.சி.டி டி.வி விலை குறைப்பு என தேவையற்ற பொருட்களுக்கு விலை பொருட்களுக்கு விலை குறைப்பு செய்து உணவுப் பொருட்கள் பற்றி மூச்சு விடவில்லை. தொழில் துறை பற்றி இந்த அரசு தெளிவுபடுத்தவில்லை. மொத்தத்தில் இந்த அரசு இந்திய இளைஞனுக்கு இந்த அரசு நெற்றியில் பட்டை நாமம் சாற்றியுள்ளது.

முன்பு ஆண்ட காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட்கள் தயவால் குறைந்த பட்சம் ஏழைகள் பற்றி யோசித்து உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி ஏழைகள் வயிற்றில் பால் வார்த்தது. இவர்களோ பாலை புளிக்கச் செய்து அஜீரணப்படுத்தும் கார்ப்பரேட் திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதை நாம் ஐந்தாண்டுகளுக்கு அனுபவித்துதான் ஆகவேண்டும்.

மக்கள் கொஞ்ச காலத்துக்கு காங்கிரஸ் என்ற நிழலை உணரட்டும்.

மலிவான வண்ண வண்ண உடை அணிந்து ஐந்தாண்டிற்கு வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு 2019 வரை வாழ வேண்டும் என்பது விதி.

அனுபவி ராஜா! அனுபவி! சுக துக்கத்தை பகிர்ந்து கொள்ள செல்போன் பேசு, எல்.சி.டியில் கிரிக்கெட் பார்!

கௌதம்.