அறிவியலின் பாதை...(8)

 மருத்துவ இயலின் தந்தை

ஹிப்போகிரட்(டீ)ஸ்

காமயம் ப.சேக் முஜீபுர் ரகுமான்

மருத்துவத்துறை வரலாற்றில் 2,500 ஆண்டுகளாக உச்சரிக்கப்படும் பெயர் ஹிப்போகிரட்(டீ)ஸ். இன்றும் புதிதாகத் தகுதி பெறும் மருத்துவர்கள், ஹிப்போகிரட்ஸின் பெயரால் அமைந்த உறுதிமொழியைத்தான் (Hippocratic Oath) எடுத்துக்கொள்கிறார்கள்.
உடல் நலிவுறுவதை காரண-காரிய அடிப்படையிலும், நோக்காய்வு அடிப்படையிலும் அணுகிய பண்டைய கிரேக்க மருத்துவர்களில் மிகவும் புகழ்பெற்றவர் ஹிப்போகிரட்ஸ்.
ஹிப்போகிரட்ஸ் பற்றி நமக்கு நேரடியாகத் தெரிந்தது குறைவுதான் என்றாலும், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் மேற்கோள் காட்டும் அளவுக்கு அவர் புகழ்பெற்றவராக இருந்துள்ளார்.
பண்டைக் கிரேக்கர்களின் மருத்துவ துறை அறிவு "ஹிப்போகிரட்டிய திரட்டு" மூலம் தெரிய வருகிறது. 60 நூல்கள் அடங்கிய இந்த திரட்டில் இடம்பெற்றுள்ள நூல்கள் முழுவதும் ஹிப்போகிரட்ஸ் எழுதியவை அல்ல என்றாலும், அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு மருத்துவத்துறை முன்னோடியாக அறியப்பட்டிருக்கிறார் ஹிப்போகிரட்ஸ்.
பூசாரி (அல்லது மதகுரு அல்லது சாமியாரின்) பணியும், மருத்துவரின் பணியும் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என ஹிப்போகிரட்சும், அவரைப் பின்பற்றிய அல்லது அவருக்கு முன்னோடியாக இருந்த கிரேக்க மருத்துவர்களும் கருதியதாகத் தெரிகிறது. நோயாளியைக் கண்காணிப்பில் வைத்திருத்தல் என்பது, மருத்துவப் பேணலின் முக்கியமான அம்சம் என்பதும் அவர்களது கருத்து. பண்டைய கிரேக்க மருத்துவர்கள், நோயறிவதற்காக நோயாளியை "நாடி பிடித்துப் பார்த்திருக்கிறார்கள்" என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நோயாளியை கண்காணிப்பில் வைத்திருந்தது, நோக்கியறிந்தவற்றை பதிவு செய்ய வேண்டும் என்பது ஹிப்போகிரட்சின் வழிமுறை. மருத்துவத்துறைக்கான அறிவியல் அடிப்படை இதிலிருந்தே பிறக்கிறது. அதனால்தான் ஹிப்போகிரட்ஸ் மருத்துவ இயலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
ஹிப்போகிரட்டிய திரட்டுகளில் மருத்துவர்களுக்கு பின்வருமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன: "மருத்துவர்கள் முதலில் நோயாளியின் முகத்தைப் பார்த்து, தோல் வறண்டிருப்பது, கிடங்கு விழுந்த கண்கள், முகம் கருத்தோ சிவந்தோ நீலம் பாய்ந்தோ காணப்படுவது, மூக்கு வீங்கியிருப்பது போன்ற இயல்புக்கு மாறான நிலை தென்படுகிறதா என பார்க்க வேண்டும். நோயினுடைய இந்த தொடக்க நிலை அறிகுறிகள் தென்பட்டால், தூக்கம் இல்லையா, வயிற்றுப்போக்கு இருக்கிறதா, சரியாக சாப்பிடுவதில்லையா என நோயாளியிடம் வினவ வேண்டும்".
இன்றும்கூட மருத்துவர்கள் இதே வினாக்களை எழுப்புகின்றனர். இதில் என்ன புதுமை இருக்கிறது என்பதல்ல, மருத்துவத்தை அறிவியல் அடிப்படையிலானதாக, முறைப்படியான ஒரு துறையாக வளர்த்தெடுப்பதில், இந்த நெறிமுறைகள் பெரும்பங்காற்றியுள்ளன.
நோய் அறிகுறிகளையும், அன்றாடம் நோக்கியறிந்தவற்றையும் குறிப்பெடுத்து, ஒரு குறிப்பிட்ட நோய் தொடர்பான விவரங்களை தொகுக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நோயினால் எதிர்கால பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கூறமுடியும் என "கொள்ளை(தொற்று) நோய்கள் பற்றி" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. "நோயின்பாதிப்புகள் எப்படி இருக்கும் என முன்கூட்டியே கணிப்பது மருத்துவரைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான ஒன்று. தற்போதைய நோய் அறிகுறியிலிருந்து அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தால் சிறப்பான சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்ள முடியும்" என்கிறார் ஹிப்போகிரட்ஸ்.
இயற்கைக்கு மேலான ஒன்று என்று பார்க்காமல், இயற்கையான காரணங்களால்தான் அனைத்து நோய்களும் வருகின்றன என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே ஹிப்போகிரட்சும், அவரைப் பின்பற்றிய மருத்துவர்களும் பணியாற்றியுள்ளனர். வலிப்பு போன்ற நோய்களை கடவுளே நேரடியாக ஏற்படுத்துகிறார் என்ற பூசாரிகளின் நம்பிக்கையை ஹிப்போகிரட்ஸ் ஏற்கவில்லை. அவர் சொன்னார்: "அறியாமை மற்றும் திகைப்பு காரணமாகவே, வலிப்பு என்பது தெய்வீக நோய் என்று மனிதர்கள் கருதுகிறார்கள்".
ஹிப்போகிரட்டிய திரட்டில் இடம்பெற்றுள்ள கருத்துகளை, மருத்துவ முறையியல் மற்றும் நெறிமுறைகள் என இருபெரும் பிரிவுகளாகப் பகுக்ககலாம். அதாவது நோயறிதல்+சிகிச்சை பற்றியும், மருத்துவர்களுக்கான நடத்தை நெறிகள் (professional ethics) என்பது பற்றியும் இவை பேசுகின்றன.
ஹிப்போகிரட்ஸ் தாம் வாழ்ந்த காலத்தில் மருத்துவராகவும், ஆசிரியராகவும் போற்றப்பட்டிருக்கிறார். சமகாலத்தில் வாழ்ந்த, அதேசமயம் அவருக்கு இளையவரான பிளேட்டோ, ஹிப்போகிரட்ஸ் மருத்துவ இயலுக்கு தத்துவஞான அணுகுமுறையைப் பயன்படுத்தியவர் என்றும், தலைமுறை தலைமுறையாக மிகச்சிறந்த மருத்துவர்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு இடங்களில் அவரைப் பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார். அரிஸ்டாட்டிலின் மாணவரான மெனோ, மருத்துவத்தின் வரலாறு என்ற நூலில், நோய் தோன்றுவது பற்றிய ஹிப்போகிரட்சின் கருத்தை குறிப்பிடுகிறார். ஹிப்போகிரட்ஸ் மாபெரும் மருத்துவர் என்று போற்றப்பட்டாலும் அரசியலில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்பது அரிஸ்டாட்டில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ஹிப்போகிரட்ஸ் பற்றிக் கூறுவது இவ்வளவுதான். 500 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கத்தை சேர்ந்த மருத்துவரான சொரானஸ், ஹிப்போகிரட்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ளவை பெரும்பாலும் மரபுவழியாகச் சொல்லப்பட்டவைதான். தம் வாழ்நாள் முழுவதும் கிரேக்கம் மற்றும் சிற்றாசியா (Asia Minor) பகுதிகளில் விரிவான பயணங்கள் மேற்கொண்ட ஹிப்போகிரட்ஸ், தமது கலையை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தாம் பிறந்த காஸ் தீவில் மருத்துவப் பள்ளி ஒன்றையும் நிறுவி போதித்துள்ளார். அவரது பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய காலக் குறிப்புகள் தோராயமானவை.மருத்துவ இயல் வளர்ச்சியிலும், மருத்துவர்களுக்கான அறநெறி மற்றும் லட்சியங்களை உருவாக்குவதிலும் வாழ்நாளுக்குப் பிறகும் செல்வாக்குச் செலுத்திய, வரலாற்றில் வாழ்ந்த மனிதர் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
ஹிப்போகிரட்சுக்கு இருந்த நன்மதிப்பும், அவரது வாழ்க்கை பற்றிய புனைவுகளும், அவர் இறந்து ஒரு நூற்றாண்டு கழித்துத்தான் பெருகத் தொடங்கின. ஹெல்லனீசிய காலகட்டம் (Hellenistic period) என்று சொல்லப்படும் அலெக்சாண்டர் இறப்புக்கும் ரோமப் பேரரசின் எழுச்சிக்கும் இடையிலான காலகட்டத்தில் எகிப்தில் இருந்த அலெக்சாண்ட்ரியா அருங்காட்சியகத்தின் நூலகத்திற்காக பண்டைய கிரேக்கத்தின் அறிவுச் செல்வங்கள் திரட்டப்பட்டன. அந்த வகையில் மருத்துவம் தொடர்பான படைப்புகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, ஹிப்போகிரட்ஸ் திரட்டு என்றழைக்கப்பட்டன. மருத்துவர்களும், அறிஞர்களும் அதற்கு உரை எழுதி உருவான பண்டைய கிரேக்க மருத்துவ அறிவுத்திரட்டு முழுவதும் ஹிப்போகிரட்ஸ் பெயரால் அழைக்கப்பட்டதுடன், அதிலிருந்து அவரது ஆளுமை (personality) பற்றிய புனைவுகளும் உருவாக்கப்பட்டன.
ஹெல்லனீசிய காலகட்டத்திலும் அதன் பிறகும் மருத்துவ அறிவியல்-தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தது. அறுவைசிகிச்சை (Surgery), மருந்தியல் (pharmacy), உடற்கூற்றியல் (anatomy) மேம்பட்டது. விமர்சன கண்ணோட்டத்தின் மூலம் மருத்துவக் கோட்பாடுகள் செம்மைப்படுத்தப்பட்டன. மருத்துவ இயல் தொடர்பான சிந்தனைப் பள்ளிகள் (அனுபவவாதம், பகுத்தறிவுவாதம்), ஹிப்போகிரட்ஸே தங்களுக்கு மூலம் என்றும், தங்களது கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துபவர் என்றும் கூறிக்கொள்ளத் தொடங்கின. கி.பி. 2ம் நூற்றாண்டை சேர்ந்த ரோமப் பேரரசில் வாழ்ந்த கிரேக்க மருத்துவரான காலன் (Galen of Pergamum), தமக்கு முன்பிருந்த மருத்துவ அறிவுகளையெல்லாம் திரட்டி, தம்முடைய பங்களிப்புகளையும் இணைத்து மாபெரும் மருத்துவமுறை ஒன்றை உருவாக்கினார். அவை அனைத்திற்கும் ஹிப்போகிரட்ஸ்தான் மூலம் என்றும் சொல்லிக் கொண்டார். இதுதான் பின்னர் அராபிய, ஐரோப்பிய மருத்துவத்திற்கும் அடிப்படையாகி, மறுமலர்ச்சிக் காலம் வரை செல்வாக்கு செலுத்தியது. 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் உடற்கூற்றியல், வேதியியல், நுண்ணுயிரியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், காலனும் அவரது முறைகளும் மறுதலிக்கப்பட்டு, மறக்கப்பட்டு விட்டாலும், இன்றளவும் ஹிப்போகிரட்ஸ் மருத்துவ இயலின் தந்தையாகவே போற்றப்படுகிறார்.