வாரம் ஒரு முறையாவது...

vaaram oru na
ஒரு முதியவர் தன் செல்போனை சர்வீஸ் செய்ய கொண்டு போனார். செல்போன் சரி செய்பவர் அந்த போனை வாங்கி பார்த்துவிட்டு, "அய்யா போன் நல்லா தானே இருக்கு. எதுக்கு கொண்டு வந்திங்க?" னு கேட்கிறார். பெரியவர் அந்த போனை கண்ணீருடன் வாங்கிக்கொண்டு, "அப்பறம் ஏன் என் பசங்க போன் பண்ண மாட்டேங்கிறாங்க?" என்றாராம். இது போன்ற பல கதைகளைப் படித்திருப்போம்.
யாருக்கும் காத்திராமல் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் நகராமல் நின்றிருக்கின்ற ஒரு பகுதியினர் இருக்கிறார்கள்.
காலக் குதிரையின் சடுதியான ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓரமாய் ஒதுக்கியிருக்கும் எங்களைச் சுற்றியிருக்கும் வயது முதிர்ந்த பெற்றோர்கள் அல்லது தலை நரைத்த பாட்டனார்கள், உம்மும்மாக்கள் தான் அவர்கள்.
அவர்கள் வேண்டுவதெல்லாம் வேளைக்கொரு ஆடையும், வாய்க்கு ருசியாக வகைவகையான சாப்பாடுகளும் கைநிறையக் காசும் அல்ல. உங்களுடைய நிர்மலமான அன்பைத் தான்.
அந்த வயதான குரல்களுக்கு செவிகளைக் கொடுங்கள்; சதா அலைபேசியிலும் இணையவலைப்பின்னலிலும் மூழ்கியிருக்கும் உங்களுக்குள் தொலைந்திருக்கும் சுதந்திரமான குழந்தையின் மனசை மீளப்பெறலாம்.
அவர்களோடு மனம் விட்டுப் பேசுங்கள். ஏச்சு வாங்குங்கள்; செல்லமாய் குட்டினாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஓடையில் மிதக்கும் காலத்தோணியில் பின்னோக்கிச் செல்லும் அந்தக் காலக் கதைகளில் கரைந்து போகும் அதிஷ்டம் எத்தணை பேருக்கு வாய்க்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்பு காட்டுவதற்கு எந்த எதிர்பார்ப்பும் தேவையில்லை.அந்த வயதான கரங்களை எடுத்து உங்கள் கரங்களுக்கும் பொத்திக் கொள்ளுங்கள். அந்த சுருங்கிய உள்ளங்கைக்குள் ஓடும் ஆயிரம் ரேகைகளில் ஆயிரம் கதைகளுக்கு இறக்கை முளைக்கும்.
அவர்கள் உட்கார்ந்திருக்கும் போது எழுந்து நில்லுங்கள். "நீங்கள் முக்கியம் எங்களுக்கு, உங்கள் அனுபவம் தேவை எங்கள் வாழ்க்கைக்கு' என்ற வாய்விட்டுச் சொல்லுங்கள்.

வாரம் ஒரு முறையாவது ஒரு வயசான மனசுக்கு ஒத்தடம் கொடுங்கள்; உங்கள் காயங்களுக்கும் அந்தச் சந்திப்பு ஆறுதலாகும்.அந்த ஒரு நாளிலாவது உண்மையாக வாழ்கிறோம் என்ற மனநிறைவில் உங்கள் உள்ளங்கள் பட்டாம் பூச்சியாகும்.