ஆவணங்கள் இல்லாமலேயே மறு சான்றிதழ் பெறலாம்.

univerசென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். அதுபோல, பலரது கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பிற சான்றிதழ்களும் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், செய்வதறியாது நிலைகுலைந்த இவர்களுக்கு பிளஸ்-2 வரையிலான பள்ளிச் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி மீண்டும் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதுபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பட்டச் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறு சான்றிதழ்களை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, வெள்ளத்தில் பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்கள் சான்றிதழ் தவறியதற்கான காவல்துறை புகார் பதிவுச் சான்று, அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அல்லது கவுன்சிலரின் பரிந்துரைகளுடன் சம்பந்தப்பட்ட கல்லூரியின் ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்தது.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே கடுமையான இன்னலை எதிர்கொண்டுள்ள இவர்களை, மறு சான்றிதழ் பெறுவதற்காக காவல் துறை சான்று, வட்டாட்சியர் பரிந்துரைகளைப் பெற அலைக்கழிப்பது அவர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்குவதுபோல் ஆகிவிடும் எனப் பேராசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர்.
இந்தக் கருத்துகளின் அடிப்படையில், எந்தவித ஆவணங்களும் இன்றி மறு சான்றிதழை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் ஆகியோர் கூறியதாவது:
வெள்ள பாதிப்பில் பட்டச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் பொதுத் தகவல் மையத்தை அணுகி, தன்னிலை விளக்கத்தை மட்டும் அளித்தால் போதுமானது.
இந்தத் தன்னிலை விளக்கம் ஏற்கெனவே அச்சடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர் பல்கலைக்கழக மையத்தில் அளிக்கப்படும் படிவத்தை நிரப்பி, தன்னிலை விளக்கத்தில் கையெழுத்திட்டால் போதுமானது. அவர்களுக்கு மறு சான்றிதழ் எந்தவிதக் கட்டணமும் இன்றி அளிக்கப்பட்டு விடும்.
இதற்காக, காவல் துறை புகார் பதிவுச் சான்றோ, வட்டாட்சியர் அல்லது கவுன்சிலர் பரிந்துரையோ, அவர்கள் படித்த கல்லூரியின் ஒப்புதலோ தேவையில்லை என்றனர்.