வளர்ந்த நாடுகளின் பருவ நிலை பயங்கரவாதம்!

Climate Terror
சமீபத்தில் நடந்து முடிந்த பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச நாடுகளின் 21 ஆவது உச்சி மாநாடு ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2015 ஆம் ஆண்டு 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க, நவம்பர் 30 முதல் டிசம்பர் 13 வரை நடந்த அந்த மாநாட்டில் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. இதை அலசுவதற்கு முன் இத்தகைய மாநாடுகள் கடந்து வந்த பாதைகளை நோக்கினால் இதனுள் இருக்கும் முரண்பாடுகளையும், வளர்ந்த நாடுகளின் அத்துமீறல்களையும் அறிவதற்கு ஏதுவாக இருக்கும் .
ஸ்டாக் ஹோம் மாநாடு :-
1972 ஆம் ஆண்டு ஜுன் 5 முதல் 16 வரை ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக் ஹோமில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “சுற்றுச் சூழல் தொடர்பான அனைத்து நாடுகளின் மாநாடு - 1972” என்கிற தலைப்பில் 114 நாடுகளுடைய பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்ற அப்போதைய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் சென்ற குழு மாநாட்டில் எடுத்து வைத்த வாதம் சுற்றுச் சூழலைப் பற்றிய உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மாநாட்டில் உரையாடிய இந்தக் குழு “இந்தியா உட்பட வளரும் நாடுகளின் சுற்றுச் சூழல் பிரச்சனைக்கு நாட்டின் வளர்ச்சியின்மையே தவிர அதிகமான வளர்ச்சியினால் ஏற்பட்டது அல்ல என்பதை உலக நாடுகளுக்கு உணர வைத்தது!” இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் நாம் வாழுகின்ற பூமி “ஒரே ஒரு பூமி” என்பதனை ஏற்றுக் கொண்டது. இந்த மாநாடு தொடங்கிய ஜூன் 5 ஆம் தேதியை “உலக சுற்றுச் சூழல் தினமாக” கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது.
நைரோபி மாநாடு :-
சரியாக பத்து ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்ட இந்த மாநாடு நைரோபியில் ஐக்கிய நாட்டு சபையின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இது முந்தைய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எந்த அளவிற்கு உலக நாடுகள் நிறைவேற்றியுள்ளன என்பதை சரிபார்க்கும் மாநாடாக அமைந்தது. இது உலக “உலக சுற்றுச் சூழல் 1972 - 1982” என்று தலைப்பிட்ட அறிக்கையில் உலக நாடுகளின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு இன்னும் பருவநிலை பாதுகாப்பிற்காக செயலூக்கம் தேவை என்கிற வேண்டுகோளுடன் ஆய்வறிக்கை அமைந்திருந்தது. இதன் நீட்சியாக 1983 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட “பிரண்ட் லேண்ட் கமிஷன்” 1987 இல் “நம் பொது எதிர்காலம்” எனும் தலைப்பிட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இதில் பயன்படுத்தப்பட்ட “நீடித்த நிலையான வளர்ச்சி” எனும் சொல்லாடல் உலக நாடுகளிடையே பயன்பாட்டுக்கு வந்தது. இந்த அறிக்கையில் இரண்டு முக்கிய கோட்பாடுகளை கண்டறிந்து வலியுறுத்தியது.

1. தேவைகள் பற்றிய கோட்பாடு. குறிப்பாக உலகிலுள்ள அடிமட்ட ஏழைகளின் இன்றியாமையாத் தேவைகளுக்கே எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
2. இன்றைய மற்றும் எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்வதற்கான தொழில்நுட்பம் மற்றும் சமூக அமைப்புகள் மீது விதிக்கும் தடைகள் பற்றியது ஆகும்.
ரியோ புவி உச்சி மாநாடு :
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்கப்பட்ட இம்மாநாடு “நம் பொது எதிர்காலம்” என்ற தலைப்பினை பலப்படுத்துவதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்கள், சமுதாய குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவர்களை ஒன்று கூட்டி சுற்றுச் சூழல் பற்றிய ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் விவாதிக்கப்பட்டது. இதில் கீழ்கண்டவைகள் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது.
1.பசுமைக் குடில் வாயு வெளிப்பாடு
பசுமைக்குடில் வாயுக்களான கார்பண்டை ஆக்ஸைடு மற்றும் கரியமில வாயுக்களை அதிகமாக வெளியிடுவது வளர்ந்த நாடுகள்தான். குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளாக இவை அதிகரித்துள்ளது என்றும் இதை 2005 ஆம் ஆண்டிற்குள் 20 % குறைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.
2.காடுகள்
பணக்கார நாடுகள் காடுகளை முற்றிலுமாக அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் அதிலுள்ள மரங்கள் பெரும் செல்வந்தர்களுக்கு மரச்சாமான்கள் தயாரிக்கவும், தனியார் தொழிற்சாலைகளுக்கு காகிதம் தயாரிக்கவும் காடுகள் பயன்படுத்தப் படவேண்டும் என்றது. ஆனால் ஏழை நாடுகளோ காடுகள் எங்களுடைய இயற்கை வளமாகவும் கால்நடைத் தீவனம் மற்றும் மனிதனுக்கான உணவு நுகர்பொருளாகவும் பயன்படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்தன.
3.மக்கள் தொகை
வறுமையும், மக்கள் தொகை பெருக்கமும் சுற்றுச் சூழல் அழிவிற்கு முக்கிய காரணம் என்றும் காடுகள் மற்றும் நீர் மாசுபாட்டிற்கு இதுவே முக்கிய காரணியாக திகழ்கிறது என்றும் வளர்ந்த நாடுகள் கூறின. ஆனால் ஏழை நாடுகளோ எங்கள் நாட்டின் வளங்கள் அனைத்தையும் தொழில் புரட்சி என்ற பெயரில் வளரும் நாடுகள் சுரண்டுகின்றன. இதுவே காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்கு காரணம் என்று குற்றம் சுமத்தின.
4.தொழில் நுட்ப மாற்றம்
சுற்றுபுற சீர்கேட்டிற்கு ஆகப் பெரும்பான்மையான காரணம் வடக்கத்திய நாடுகளே! மேலும் இதை கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை தனது நவீன தொழில் புரட்சியின் மூலம் கண்டெடுத்துள்ளன. ஆகவே தெற்கத்திய நாடுகளான ஏழை நாடுகளுக்கும் சுற்றுச் சூழல் மாசுபாடுகளை எளிதாக சுத்தம் செய்யும் உபகரணங்களையும், ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்தும் திறன்மிகு இயந்திரங்களையும் வடக்கத்திய நாடுகளே இலவசமாக அளிக்க வேண்டும் என்று கோரியது.
5.நிதி
உலக சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நிதியை பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்க முன் வருவதில்லை, அதற்கு மாறாக உலக சுற்றுச் சூழல் வாரியம் மற்றும் உலக வங்கியை நிதி வழங்கிட நிர்பந்திக்கின்றன. இதை ஏழை நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தொழில்மயமான வடக்கு நாடுகள் தொழில் புரட்சியினால் அதீத வளர்ச்சி பெற்று உலகப் பொதுச் சூழல் பாழாக்கப்படுவதால் இதற்கான கட்டுப்படுத்தலுக்கான நிதியை முழுமையாக பணக்கார நாடுகளே வழங்க வேண்டும் என்று வற்புறுத்தின.
ஏறத்தாழ 1972 இல் தொடங்கி 1992 வரையிலான 30 ஆண்டுகள் வீரியத்தோடு வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இதை ஏற்றுக் கொள்ளாத வளர்ந்த நாடுகள் இதை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல சூழ்ச்சிகள் செய்தன. ரியோ பிரகடனத்தை எதிர்க்கச் செய்ததும், ஏற்றுக் கொள்ள மறுத்ததும் ஏன் என்பதை கீழே காண்போம்.
ரியோ பிரகடனமும் வளர்ந்த நாடுகளின் உண்மை முகமும்:
அதிமுக்கியமான 27 கோட்பாடுகளை கொண்ட ரியோ பிரகடனம் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான அடிப்படை ஆவணம் மட்டுமே. இது சட்டப்படியான அந்தஸ்து அற்றது என்பதினை ஸ்டாக் ஹோம் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. இவை அனைத்து நாடுகளுக்குமான வேண்டுகோள் நிறைந்ததாக இருந்தாலும் வளர்ந்த நாடான அமெரிக்கா இதில் கையெழுத்திட மறுத்தது. குறிப்பாக இந்த பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள கோட்பாடு எண் 3, 7, 12 மற்றும் 23 யை எதிர்த்தது. அமெரிக்கா ஏற்க மறுத்த மேற்கூறிய கோட்பாடுகளின் உட்கூறுகளாவன:
கோட்பாடு 3 :-
இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சித் தேவைகளைச் சமமாக நிறைவு செய்கிற வகையில் வளர்ச்சியின் உரிமை இருக்க வேண்டும்.
கோட்பாடு 7
பூவிச் சூழல் மண்டலத்தின் இசைவான தன்மையையும், நலத்தையும் போற்றிப் பாதுகாத்து, மீண்டும் பழைய செழுமையான நிலையை எய்திடச் செய்ய அரசுகள் யாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சியற்ற நாடுகள் சுற்றுச் சூழலின் மீது ஏற்படுத்துகின்ற நெருக்கடிகளின் விளைவுகளையும் தம்மிடம் உள்ள உயர் தொழில் நுட்பம் மற்றும் நிதி ஆதாரங்களைக் கொண்டு இவ்வுலகில் நீடித்த நிலையான வளர்ச்சியினை ஏற்படச் செய்வதில் தமக்குள்ள பங்கையும், பொறுப்பையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
கோட்பாடு 12
எல்லா நாடுகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகின்ற சர்வதேச திறந்த பொருளாதார முறையை ஊக்குவித்து சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்கான நடவடிக்கைகள் கூடுமான வரையில் அனைத்து நாடுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
கோட்பாடு 23
ஒடுக்கம், ஆதிக்கம், ஆக்ரமிப்பு ஆகியவற்றுக்கு ஆட்பட்ட மக்களின் சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆக மேற்கூறிய கோட்பாடுகள் அனைத்தும் வளர்ந்த, ஏகாதிபத்திய நாடுகளின் உண்மை முகத்தை உரசிப் பார்த்தது. குறிப்பாக அமெரிக்கா இந்த நான்கு கோட்பாடுகளை முற்றிலும் எதிர்த்து கையொப்பமிட மறுத்தது. இறுதியாக 23 வது கோட்பாடு வளர்ந்த நாடுகளில் வற்புறுத்தலின் பேரில் மாற்றியமைக்கப்பட்ட பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கியோட்டோ ஒப்பந்தம்
ஜப்பானில் உள்ள கியோட்டோவில் 1997 இல் முதல் மாநாடு “உலக சீதோஷ்ண நிலை” என்கின்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது. இந்த மாநாட்டுப் பிரகடனத்தில் தொழிற்சாலை மிகுந்த நாடுகள் ஒட்டுமொத்தமாக கார்பண்டை ஆக்ஸைடு, மீத்தேன், குளோரேஃப்ளோரா கார்பன் போன்ற பசுமைக் குடில் வாயுக்களை 5.2 விழுக்காடாவது 2008 லிருந்து 2012 ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்று முன் மொழிந்தது. இந்த ஒப்பந்தத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான இலக்குகளை அடைவதில் வளரும் நாடுகள் தன்னிச்சையான பங்கேற்பு இருக்க வேண்டும் என்கின்ற ஏதேச்சதிகாரமான வளர்ந்த நாடுகளின் ஒப்பந்த முன் வடிவினை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பால் இந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டது.
இதே தலைப்பின் கீழ் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 8 இல் கத்தார் நாட்டிலுள்ள தோஹாவில் நடைபெற்றது. இதில் 194 நாடுகள் பங்கேற்றன. 1997 இல் கியோட்டாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை 2020 வரை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.
1. கியோட்டோ மாநாடு ஒப்பந்த ஷரத்துகள் மற்றும் தோஹாவில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களையும் ஒவ்வொரு நாடும் தனது பொறுப்புகளை 1.01.2013 முதல் 13.12.2020 வரை நிறைவேற்றிட உறுதியளித்தல்.
2. 2013 முதல் 2020 வரையிலான “கியோட்டோ” ஒப்பந்தத்தின்படி சம்பந்தப்பட்ட நாடுகள் தாம் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுக்கள் பற்றிய பட்டியலை சமர்ப்பித்தல்.
மேற்கூறப்பட்ட தீர்மானங்களின்படி 2013 முதல் 2020 வரையிலான எட்டாண்டு காலகட்டத்தில் பசுமைக் குடில் வாயுக்களை குறைந்தபட்சமாக 18% என்று குறைத்திட ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் 83 நாடுகள் மட்டுமே கையொப்பமிட்டுள்ளன. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஆஸ்திரேலியா ஆகியவை மேற்கூறிய தீர்மானங்களை எதிர்க்கின்றன. குறிப்பாக 1997 கியோட்டோ மாநாட்டில் கையெழுத்திட்ட அமெரிக்கா, சீனாவும் இதில் கையெழுத்திட மறுத்தது. இது அப்பட்டமான வளர்ந்த நாடுகளின் சுயநலத்தையே பிரதிபலித்தது.
21 வது பருவ நிலை மாநாடு – பாரிஸ் :
ஐக்கிய நாடுகள் சபை 1988 டிசம்பரில் பருவ நிலை மாற்றத்திற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை இயற்றியது. அதன்படி 1995 மார்ச்சில் ஜெர்மனி பெர்லின் நகரில் “பருவ நிலை மாற்றத்திற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக நாடுகளின் முதலாவது கூட்டம்” (First Congerence Of Parties - Cop1) நடைபெற்றது. இத்தகைய கூட்டம் ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டின் தலைநகரிலும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் நடந்த அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்த 21 வது மாநாடு (Cop - 21) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது.
இதற்கு முன்னர் பார்த்த சுற்றுச் சூழல் மாநாடுகளில் வளர்ந்த நாடுகளுக்கான பொறுப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் மற்ற எல்லா நாடுகளையும் விட வளர்ந்த நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பாவும் பொருளாதார உற்பத்தியில் அதீத வளர்ச்சியடைந்திருக்கின்றன. உதாரணமாக குளிர் சாதனப் பெட்டியானது (Air Condition) முதன் முதலில் வீட்டில் பொருத்தப்பட்டது 1914 லிலும், குளிர்பதனப்பெட்டி (Fridge) 1980 லும் வீட்டுக்குள் நுழைந்தன. ஒரு வீட்டில் இவை இரண்டையும் பன்படுத்தியது 1965 இல் பிரிட்டன்தான் என்பதினை “கார்டியன்” இதழ் சுட்டிக் காட்டுகிறது. மேலும் சமகாலத்தில் இந்த இரண்டிற்கும் சேர்த்து 20 % மின்சாரம் செலவழிக்கப்படுகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஒட்டு மொத்த நாட்டில் உள்ள மக்கள் குடியிருப்பு பரப்பளவில் 87% குளிரூட்டப்பட்டவை. இதிலிருந்து வெளிவரும் குளோரோபுளோரோ கார்பன் என்கிற வாயு கார்பண்டை ஆக்ஸைடைக் காட்டிலும் 4000 மடங்கு அதிபயங்கரமானவை, சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை. ஆனால் மற்ற வளரும் நாடுகளின் நிலைமையோ இதற்கு தலைகீழாக காணப்படுகிறது. உதாரணமாக இந்த பூமிப் பந்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்வசதி இல்லை. 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமையல் சாதனங்கள் இல்லை.
இதில் 95% க்கும் அதிகமானவர்கள் சகாரா பாலைவனத்திலும், தெற்கில் உள்ள நாடுகளிலும், ஆசிய கண்டத்திலும் வாழுகின்றனர். இவற்றில் 84% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நைஜீரியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலின் போது உங்கள் வேட்பாளரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்ட போது “வெளிச்சத்தை” என்று பதில் அளித்தனர் என “ஜோஸ்டெயின் ஐக்லேன்” தனது கட்டுரையில் பதிவு செய்கிறார். இந்தியாவை பொறுத்தவரை மின்சார உற்பத்திக்கு படிம எரிபொருளான நிலக்கரியையே ஆகப்பெரும்பான்மையாக நம்பியுள்ளது.
சர்வதேச அளவில் நிலக்கரி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் தனிநபர் நுகர்வு (வாட்) இந்தியாவில் 2005 ஆம் ஆண்டில் 217.2 ஆக இருந்தது. 2014 இல் 377.3 வாட்டாக உயர்ந்திருக்கிறது. மின்சார உற்பத்தியிலும், சேமிப்பிலும், விநியோகத்திலும் பலவித பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேர்கிறது. குறிப்பாக எரிபொருள் உற்பத்தி தொடங்கி பயனாளிகள் சென்றடையும் வரை உள்ள தொலைவில் 60% மின்சாரம் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக அமெரிக்காவின் “லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுக்கூடம்” தெரிவிக்கிறது. அதிநவீன தொழில் நுட்பத்தைக் கையாலும் அமெரிக்காவுக்கு இத்தகைய நிலைமை எனில் இந்தியாவைப் பொருத்தவரையில் மின்சார சேமிப்பிலும், பராமரிப்பிலும் அத்தகைய தொழில்நுட்பம் இதுவரை கைகூடவில்லை. அப்படியெனில் உற்பத்தியாகக்கூடிய மின்சாரம் எத்தகைய இழப்பை சந்திக்கும் என்பதினை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆக வளர்ந்து வரும் நாடுகளின் துயரங்கள் இப்படி இருக்கையில் பாரிஸ் மாநாடு வளர்ந்த நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பினைத் தட்டிக் கழிக்கும் விதமாக ஒரு யுக்தியைக் கையாண்டது. அது யாதெனில், ஒவ்வொரு நாடும் தானே முன்வந்து “பருவநிலை மாற்றத்திற்கெதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள்” (INDC – Intended Nationally Determined Contributions) குறித்து அறிக்கை தருமாறு ஐ.நா. வலியுறுத்தியது. இது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பியாவின் சூழ்ச்சி என்று வளரும் நாடுகள் குற்றம் சாட்டின. பருவநிலை பாதுகாப்பிற்கான தனது பொறுப்பை அனைத்து நாடுகளின் மீதும் சுமத்துகிறது என்றும் இந்தியா போன்ற நாடுகள் சர்வதேச நாடுகளின் மறைமுக நெருக்கடியை அடுத்து 2015 அக்டோபர் 2 ஆம் தேதியன்று இந்தியா பருவநிலை மாற்றத்திற்கெதிரான 2030 க்குள் தாம் மேற்சொன்ன நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்டது அதன் விவரங்கள் :-
1. தனது கரியமில வாயு வெளியீட்டினை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் கடந்த 2005 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்தியா வெளியிடப்பட்ட அளவிலிருந்து 33 – 35 சதவிகிதம் குறைத்துக் கொள்ளும்.
2. 2030 க்குள் தனது ஒட்டுமொத்த மின் தேவையில் 40 சதவிகிதம் வரை மரபுசாரா வளங்கள் மூலம் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
3. கூடுதல் பரப்பில் காடுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 2 பில்லியன் டன்கள் வரையிலான கரியமில வாயுவை குறைத்துக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்பதாக அறிக்கை அமைந்திருக்கிறது.
மேற்கூறிய இலக்குகளை எட்டுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய இந்தியாவிற்கு சுமார் 206 பில்லியன் டாலர் அளவிலான நிதி தேவைப்படும் என்றும் மேலும் 2030 ஆம் ஆண்டு வரை மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் முதலீடுகள் மற்றும் இதனால் ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 2.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை இந்தியா எந்த வகையில் திரட்டும் என்பதற்கான பதில் இல்லை. அதேவளையில் முன்னர் நடந்த மாநாடுகளில் வளர்ந்த நாடுகளால் வழங்கப்பட்ட வாக்குறுதியான மாற்று எரிசக்திக்கு மாறுவதற்கு 100 பில்லியன் டாலரை ஒதுக்கும் என்பதான அறிவிப்பு அது வந்து சேருவதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இதை இந்தியா இந்த மாநாட்டில் பகிரங்கமாக சுட்டிக்காட்டவில்லை. மாறாக அமைதிகாத்தது.
பாரிஸ் மாநாடும் இந்தியாவின் முரண்பாடும்:
பாரீஸ் பருவநிலை மாநாட்டைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் சட்டப்படியாக நாடுகளை கட்டுப்படுத்தாது. அனைத்து நாடுகளும் தாங்களாகவே முன்வந்து கார்பன் குறைப்பிற்கான அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்புரட்சி வேகமாக அடைய வேண்டும். அதே வேளையில் சுற்று சூழலுக்கு எத்தகைய சேதமும் ஏற்படக்கூடாது என்பதுதான் அதிமுக்கியமான வேண்டுகோள். இதனடிப்படையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புடைய இந்தியாவை உருவாக்குவதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த மாநாட்டை சாதுர்யமாக பயன்படுத்தியிருக்க வேண்டிய இந்திய அரசு வளர்ந்த நாடுகள் மற்றும் கார்பரேட்களின் சூழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. குறிப்பாக நமது நாட்டில் ஏறத்தாழ 400 மில்லியன் மக்களுக்கு மின்சார பயன்பாடு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்ற நிலையில் நமது பிரதமர் ஆற்றிய உரையில் “சுற்றுச் சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும்” என்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கும், சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு வழிகோலுமே தவிர வளர்ந்து வரும் இந்தியாவில் ஆகப்பெரும்பான்மையான ஏழைகள் வாழ்கிற கிராமப்புறங்களுக்கு எந்தவிதமான தீர்வையும்,வளர்ச்சியையும் ஏற்படுத்தித்தராது.
உலகின் 17 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உதாரணமாக நமது நாட்டில் 100 கோடீஸ்வர குடும்பங்கள் 64,000 கோடி மதிப்புள்ள சொத்தை வைத்திருக்கையில், 90 சதவீதம் இந்திய குடும்பங்கள் மாதம் வெறும் ரூ.10,000 ஊதியம் பெற்று ஏழ்மையில் தத்தளிக்கின்றன என்பதாக தரவுகள் கூறுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது ஏழைகளின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணியே தவிர கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி அல்ல என்பதினை பா.ஜ.க. வின் மத்திய அரசும் பிரதமரும் அறிந்து செயல்படுவது என்பது உண்மையான சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும், வெற்றியைத் தரும். அதை விடுத்து அமெரிக்காவிடமும், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளிடமும் கைகோர்த்துக் கொண்டு இந்த உலகை சுற்றுசூழல் அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைப்பது “பாலுக்கும் காவல்”, பூனைக்கும் தோழன் என்பதற்கு ஒப்பானது.