மனித இனத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமாக நாம்

erdukhan
ரஜப் தையிப் அர்துகான்
(14 – 15 – 04 – 2016 இல் இஸ்தான்பூலில் நடைபெற்ற ஒஐசி யின் 13 வது கூட்டத்தொடரில் அதன் தற்போதைய தலைவர் துருக்கி ஜனாதிபதி ஆற்றிய ராஜதந்திர உரையின் தமிழாக்கம்.)
ரமீஸ் நளீமி
அரசியல் கருத்துக்கள், இனங்கள், மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் வேறுபட்டமையலாம். ஆனால் எல்லா மனிதர்களதும் பொதுத் தேவையாக நீதியும் சமாதானமும் காணப்படுகிறது. மனித வரலாறு கூட சமாதனத்தை தேடும் ஒன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரபிகளின் பரம்பரையின் வேர்களில் எப்போது ‘ஸலிம’ என்ற சொல் செதுக்கப்பட்டதோ அப்போது முதல் அரசியல், வியாபாரம், சமூகம், பொருளாதாரம் போன்ற வாழ்வின் அனைத்து துறைகளிலும் நீதியை நிலை நாட்டுமாறுதான் இஸ்லாம் பணித்துள்ளது. சமூகத்தில் ஒரு அங்கம் என்ற வகையில் குடும்ப விவகாரங்களில் அதனை ஆரம்பிக்குமாறு தூண்டியுள்ளது. 14 நூற்றாண்டுகளாக நீண்டு சென்ற இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட ஆஃப்ரிக்கா, ஆஸியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கூட மிகவும் தெளிவாக இனங்கானப்பட்ட பண்பாக நீதி, சமாதானத்தை விதைப்பதாகத்தான் இருந்து வந்தது.
இன்று உலகம் இந்த இரண்டையும் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சிரியாவில் ஆரம்பித்து ஈராக், மத்திய ஆஃப்ரிக்கா, லிபியா, ஃபலஸ்தீன், யமன் என்று பட்டியல் நீள்கிறது. மில்லியன் கணக்கான நமது சகோதர சகோதரிகள் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக போராடுகிறார்கள். நீதி, சமாதானம், பாதுகாப்பு, மானுட கண்ணியம் போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் பழைய நகரங்கள் இஸ்லாமிய நாகரீக கலை, பண்பாட்டு செயல்பாடுகளாலும் வாசக சாலைகள் பள்ளிவாசல்கள், அழகான கட்டிடங்கள் போன்றவற்றிலும் வரலாற்று பதிவுகள் நிரம்பிக் காணப்பட்டது.
ஆனால் இன்று அவை நமது கண் முன்னாலேயே பயங்கரவாத காட்டுமிராண்டி அமைப்புகளால் இடித்து தரைமட்டமாக்கப்படுவதை காண்கிறோம். இன்று இஸ்லாமிய உலகம்; சமாதானத்தையும், பாதுகாப்பையும் இழந்து உள்நாட்டு யுத்தங்கள் திணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
மேலும் முஸ்லிம்களின் அணியில் பெரும் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இனங்களுக்கு இடையிலான குரோதத்தை தூண்டி விடுகிறார்கள். 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலே ஐரோப்பா இத்தகைய பிரச்சனைகளுக்கு பரிகாரம் கண்டு தீர்த்துக் கொண்ட போதும் 21 ஆம் நூற்றாண்டில் கூட இஸ்லாமிய உலகம் இப்பிரச்சனையை தொடர்ந்து முகம் கொடுத்த வண்ணம் அதன் கைதியாக உள்ளது என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயமாகும்.
ஒன்றை நான் இங்கே அழுத்திச் சொல்வது முக்கியமானது என்று நினைக்கிறேன். "எனது மார்க்கம் சுன்னியுமல்ல ஷியாவுமல்ல, நான் ஒரு முஸ்லிம்"
"எங்களுடைய மார்க்கம் சமாதானத்தைப் போதிக்கும் மார்க்கம்"
" முஹம்மத் (ஸல்) அவர்கள் சமாதானத்தின் தூதர்"
"சகோதரத்துவத்தை நாவால் மொழிவதால் மாத்திரம் திருப்தியடைய முடியாது, சகோதரத்துவம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்."
"முஸ்லிம் உலகம் விசாலமானது என்பதை மேற்குலகுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டும்"
மேலும் முஸ்லிம் உலகில் குழுவாதத்தில் கொல்லப்படும் ஒரு முஸ்லிம் அல்லாஹ் அக்பர் என்று கூறியவாறு மரணிக்கிறார். கொல்பவரும் அல்லாஹு அக்பர் என்று சொல்கிறார் இவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
இனவாதம் முஸ்லிம் நாடுகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற அதேநேரம் அவர்களின் தக்வாவில் இருந்தும் மனித நேயத்தில் இருந்தும் அவர்களை தூரமாக்குகிறது.
அல்லாஹ் எங்களை குலங்களாகப் படைத்தான். நாங்கள் உலகில் ஒவ்வொரு குலத்தை இனத்தையும் மதிக்கிறோம். ஒரு இனம் இன்னொரு இனத்தை விட தாம் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முயற்சி செய்தால் குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

அரசியல் பேராசை, குறுகிய கால நலன்கள் என்ற பெயரில் இந்த முரண்பாட்டை அரசியல் காரணங்களுக்காகவே தூண்டுகிறார்கள் மார்க்க நோக்கத்திலல்ல! இத்தகைய அரசியலின் காரணமாக கடந்த பல நூற்றாண்டுகளாக சக வாழ்வை பேணிய இனங்கள், மதக்குழுக்களுக்கிடையே பகைமையையும் குரோதத்தையும் தூண்டி விடுகிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் பயங்கரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில், நாட்டில் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. மாற்றமாக சர்வதேச அளவுக்கு அது வியாபித்துள்ளது. ஐரோப்பா முதல் தென்னாசியா வரையும் மேற்கு ஆஃப்ரிக்கா முதல் அமெரிக்க கண்டம் வரையும் நீண்டு பரவியுள்ள பயங்கரவாத அலைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். பெயர்களாலும், கருத்துப் போக்குகளாலும் எத்துனைதான் வேறுபட்டமைந்த போதிலும்
துவேஷ சக்திகள் முஸ்லிம்களை இலக்காக கொள்வதில் சமபங்கை பெறுகிறார்கள். அவை முஸ்லிம்களின் ஞாபக சக்தியை அழிப்பதற்கும், சிறுகச் சிறுக கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய உயர்ந்த மதிப்பீடுகளை சீரழிப்பதற்கும் நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சூனியமாக்கவும் முயற்சிக்கின்றன.
இன்று ஐரோப்பாவின் பலா நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் செய்கிறார்கள். பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், வேலை செய்யும் இடங்களை தாக்குகிறார்கள். முஸ்லிம்களை சிக்கல்களில் சிக்க வைப்பதற்கும், எவ்வித வடிவத்திலும் தொடர்பற்ற விஷயங்களில் குற்றம் சுமத்துவதற்கும் எதிராக நாம் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
காரணங்கள் எதுவாக அமைந்த போதிலும் கூட பயங்கரவாத அமைப்புகளை பிரித்து நோக்குவது பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும். நல்ல பயங்கரவாதி என்று தாம் கருதுவோரை வைத்து மோசமான பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டும் அணுகுமுறை இரு அளவுகோல்களால் அளக்கின்ற முறையாகும். இது பயங்கரவாத அமைப்புகளுக்கு உற்சாகமாக அமைவதோடு பயங்ரவாதத்ததுக்கு எதிரான போராட்டத்தை காயடிக்கும் செயலுமாகும்.
பயங்ரவாத அமைப்புகளை தோற்கடிப்பதற்கான ஒரே வழிமுறை சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பரஸ்பர பொறுப்புணர்வையும், ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதுடன் அதற்கான தலைமைத்துவத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதுமாகும். இந்த விஷயத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உறுப்பு நாடுகள் தலைமைத்துவ பாத்திரத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.
நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக நமது குரலை உயர்த்துவதோடு அநீதிகளை இயக்குறவர்கள் அவர்களது மூலங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அநியாயத்துக்கு உட்பட்டவனின் நிலையோ, அநியாயக்காரன் யார் என்பதோ நமக்கு முக்கியமில்லை. எப்படியிருந்த போதிலும் போதிலுக் கூட பலிகடா ஆக்கப்பட்டவர்களுக்கு சார்பாக நாம் இருக்க வேண்டும்.
நாம் இஸ்தான்பூலில் கூடியுள்ளது ஷியாக்கள் சுன்னீக்கள் ஆஃப்ரிக்கர் ஆசியர், கிழக்கை சேர்ந்தவர், மேற்கை சேர்ந்தவர் கருப்பர் வெள்ளையர் பணக்காரர் ஏழை இந்த இனத்தை சேர்ந்தவர் அந்த இனத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அல்ல! மாற்றமாக 1.7 பில்லியன் முஸ்லிம்களின் சுமையை சுமந்துள்ள தலைவர்கள் என்ற வகையில் இல்லை. மனித இனத்தின் சுமையை சுமந்தவர்கள் என்ற அடிப்படையில் செய்தியை மிகவும் தூய்மையான எண்ணத்தோடு உறுதிப்படுத்த வேண்டிய தேவை எனக்குள்ளது. நாம் மனிதன்தான் மிக கண்ணியமான படைப்பு என்று நம்பும் நாகரீகத்தின் பிரதிநிதிகளாக கூடியுள்ளோம். இவ்வகையில் நாடு வாழ வேண்டுமானால் மனிதன் வாழ வேண்டும்.
இந்த கஷ்டமான் காலத்தில் நாம் நமது தோள்களில் சுமந்துள்ள சுமை மிகவும் மதிப்பிற்குரியது என்பதை அறிந்தே வைத்துள்ளோம். சமூக பிரச்சனைகளில் முன்னுரிமை வழங்க வேண்டியதை முற்படுத்துவதன் ஊடாகவும் அவற்றை தனிப்பட்ட நலன்களை விட உயர்த்திப் பிடிப்பதன் மூலமும் நமக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இதன் தொடராகத்தான் 21 ஆம் நூற்றாண்டில் தங்களை காத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமல்ல காலத்திற்கே உரிய கடமைகளை செய்கிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமயப்பட்ட சக்தியாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்த வரை உலக ஒழுங்கிற்கு ஏற்ப பொருத்தமான அந்தஸ்த்தை அடைவதற்காக வேண்டி உலக சனத்தொகையின் கால் பகுதியை தன்னகத்தே கொண்டிருக்கிற நமக்கு இது முக்கியமானது என்று கருதுகிறேன்.
நீண்ட நெடிய முரண்பாடுகளால் தன்னை அழித்துக் கொண்ட சமூகத்தில் சமாதானம் நீதிய ஏற்படுத்துதல் என்ற கனவை எமது அமைப்பினர் பலப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். இந்த உச்சி மாநாடு மனித குலத்து நலன் பயக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.