விமர்சனக் கண்ணோட்டத்தின் அவசியம்

readers-leaders
இஸ்லாம் எப்போதும் சிந்தனைக்கோ பகுப்பாய்வுக்கோ எதிரான மார்க்கம் அல்ல. இஸ்லாம் எப்போதும் பகுத்தறிவையும், பகுப்பாய்வையும் ஆர்வமூட்டுகிறது. அவசியமாக்கி இருக்கிறது. இஸ்லாமிய வரலாறு முழுக்க நடந்த அறிவுச் செயல்பாடுகளில் இருந்து இதை நாம் கண்டுகொள்ள முடியும்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை நம்பிக்கையும் அறிவும் தீர்வுகாண முடியாத முரண்பாடுகள் அல்ல. கேள்வி கேட்பது என்பது ஒருவரது நம்பிக்கையை சீர் குலைத்து விடாது. மாறாக பகுப்பாய்வு ரீதியான கேள்விகள் ஒருவரது நம்பிக்கையை மேலும் ஆழமாக்கும்.
சமகால இஸ்லாமிய அறிஞர் தாரிக் ரமதான் “விமர்ச ரீதியான சிந்தனையின் (Critical Thingking) அவசியம்” என்ற தனது உரையில்… தற்காலத்தில் முஸ்லிம் உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக இந்த விமர்சனக் கண்ணோட்டமின்மையைக் குறிப்பிடுகிறார். ஹூபைப் இப்னு முன்திர் (ரழி) என்ற நபித் தோழர் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் உரையாடிய ஒரு சம்பவத்தை விமர்சனக் கண்ணோட்டத்திற்கான இஸ்லாமிய சட்டமாக அந்த உரையில் தாரிக் ரமதான் முன் வைத்திருப்பார். நபித் தோழர் ஹூபைப் இப்னு முன்திர் (ரழி) பத்ர் போர் சமயத்தில் நபி (ஸல்) அவர்களை சென்று சந்தித்து படைகள் முகாமிட்டிருக்கும் இடத்தேர்வின் தன்மை குறித்து வினவுகிறார். “இந்த முடிவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதா? அல்லது உங்களின் முடிவா?” என்றார். அதன் பொருள் இந்த முடிவு முஹம்மத் (ஸ்ல) அவர்கள் இறைத்தூதர் என்ற தன்மையிலிருந்து ‘வஹி’ யை அடிப்படையாகக் கொண்டு எடுத்த முடிவு என்றால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். மாறாக மனிதர் என்ற நிலையில் இது உங்களது போர் உத்தி - தந்திரம் என்றால் என் கருத்தை நான் சொல்கிறேன். போர் உத்தி என்ற அடிப்படையில் உங்களது இந்த முடிவு சரியானது அல்ல என்றார்.
அதாவது மனிதனிடமிருந்து வரும் அத்தனையும் கேள்விக்கும் விவாதத்திற்கும் திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
ஆனால் இறைவன் புறத்திலிருந்து வரும் அத்தனை விசயங்களும் செவியேற்பதற்கும் கட்டுப்படுவதற்குமான காரியங்களாகும்.
அதே நேரத்தில் ‘வஹி’ என்பது எல்லா பிரச்சனைகளுக்குமான “தயார் செய்யப்பட்ட பதில்களைக் கொண்டதல்ல.” மாறாக ஒவ்வொரு காலத்திலும் மனிதன் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அது எப்பொழுதும் சில வழிகாட்டுதல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நடப்பு நிலையையும் வஹியையும் சேர்த்து ஆய்வுப் பூர்வமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதுதான் இஸ்லாம் கூறக்கூடிய வழிமுறை. அதைத்தான் நாம் “இஜ்திஹாத்” என்கிறோம்.
இஸ்லாமை விளக்கப்படுத்துவது கேள்விக்கும் திறனாய்வுக்கும் அப்பாற்பட்டது கிடையாது ஏனெனில் விளக்கம் – வியாக்கியானம் என்பது மனித சிந்தனைகளைச் சார்ந்துதான் இயங்குகிறது. அதனால் மனித சிந்தனைக்கு இருக்கும் அத்தனை எல்லைகளும் அந்த வியாக்கியானத்திற்கு உண்டு. அதனால்தான் எந்த எந்த ‘இஜ்திஹாதும்’ முடிந்த முடிவு அல்ல. எந்த முஜ்தஹிதின் தீர்ப்பும் இறுதித் தீர்ப்பும் அல்ல. அதே போன்று ‘இஜ்திஹாத்’ அல்லது மீளாய்வுக்கான கதவு இறுதி வரை திறந்தேதான் இருக்கும்.
விமர்சனக் கண்ணோட்டத்திற்கு அடிப்படையானது பரவலாக கற்பதாகும். தான் சார்ந்த சிந்தனைப் பள்ளி (மத்ஹப்) அமைப்பு, மதம், அரசியல் நிலைபாடு என்று வாசிப்பை சுருக்கிக் கொள்பவர்களால் விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளவே முடியாது. முறையான அறிவு வளர்ச்சி என்பது எல்லா பக்கங்களிலும் நடக்க வேண்டும். ஒரெயொரு புறத்தில் மட்டும் வளர்ந்தால் அதை வளர்ச்சி என்று சொல்ல மாட்டோம். வீக்கம் என்றுதான் சொல்வோம். ஒரு துறையில் ஆழ்ந்து செல்வது அவசியம் தான். ஆனால் ஒரு துறையில் ஆழக் கற்க வேண்டுமென்றாலும் ஏனைய துறைகள் குறித்தும் வாசித்தால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்காவது பரிச்சயம் இருக்க வேண்டும். வாசிப்பில் ஒரு குறுகலான வெளிக்குள் அகப்பட்டுக் கொள்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
ஆளும் வர்க்க சமூகங்களுக்கு பொருள், ஆட்சி, அதிகாரம் என்று பல ஆயுதங்கள் இருக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் முன்னேற “அறிவு” ஒன்றுதான் வழி. விமர்சன மனப்பான்மை, பரவலான வாசிப்பு அதன் விளைவாக நடக்கும் அறிவு உற்பத்தி இவைதான் எந்தவொரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் ஆயுதமாக இருந்திருக்கிறது இருக்கிறது. இந்த வழியில் நாம் கவனம் செலுத்தாத வரை முஸ்லிம் சமூகத்தின் விடிவு காலம் இன்னும் தாமதமாகிக் கொண்டுதான் இருக்கும்.