ஆயுளை அதிகரிக்கும் ரமலான்

ramadan-kareem-wallpaper
(அரபு மூலம்: கலாநிதி ஜாசிம் அல் முதவ்வஃ. தமிழில் : உம்மு இயாத் – இலங்கை )
இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் நிலைத்து உயிர் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். இது மனித இயல்பு, இதனைக் கூறியே ஷைத்தானும் ஆதம் (அலை) அவர்களுக்கு ஆசை ஊட்டினான் “நிலையான மரத்தையும், அழியாத அதிகாரத்தையும் உமக்கு நான் காட்டித் தரட்டுமா?” மனிதன் நிலையாகவும், நீண்ட நாட்கள் ஆசைப்படுவதென்பது வாழ்வில் அடிப்படையான ஒரு விஷயம். இதன் காரணமாகத் தான் மருத்துவத்தின் அனைத்து விதமான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் மனிதனின் நீடித்த வாழ்க்கை, தேக ஆரோக்கியத்திற்காக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அண்மையில் மருத்துவ அறிக்கை ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அதில் மனிதனின் நீடித்த, சுகமான ஆயுளுக்கு மூன்று விதமான அடிப்படையான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை : உணவில் சமநிலை, உடற்பயிற்சி, புகைத்தலை விடுதல்.
இவற்றுடன் நான் “ரமழான மாதமும் ஆயுளை நீடிப்பதற்கான காரணம்” என்று சேர்த்துக் கொள்ள விரும்புகின்றேன். இங்கு நீண்ட நாள் என்பது பிறந்தது தொடக்கம் இறக்கும் வரையான காலத்தினைக் குறிக்கவில்லை. மாறாக அக்காலப் பகுதிக்குள்ளால் செய்யப்படும் நன்மைகள், சேர்த்துக் கொள்ளப்படும் புண்ணியங்களைத் தான் குறிக்கின்றது. ஒருவர் எழுபது ஆண்டு காலம் இவ்வுலகில் வாழ்ந்து விட்டு இவ்வுலகை விட்டும் பிரியலாம். அனால், அவர் செய்த செயல்களை எண்ணிப் பார்த்தால் ஏறக் குறைய எட்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும். இதனைத் தான் ரமலான் மாதம் நமது வாழ்வில் செய்கிறது. இதனால் தான் இம்மாதம் ‘அருள் பாலிக்கப்பட்ட மாதம்’ எனப்படுகின்றது. அதன் நாட்களில், செயல்களில், நன்மைகளில், என அனைத்திலும் அருள்பாலிக்கப்பட்ட மாதம் அது.
முன்னைய சமூகங்கள் நீண்ட காலம் வாழ்ந்துள்ளன.
ஆனால், இந்த சமூகத்தின் ஆயுட்காலம் அறுபதுக்கும் எழுபதுக்கிமிடையிலானது என்று நபியவர்கள கூறியுள்ளார்கள். எனவே தான் அல்லாஹுதஆலா இந்த சமூகத்தின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வகையிலான மூன்று விஷயங்களை, மூன்று இறைப் பேறுகளை ஏற்படுத்தியுள்ளான். அவை : நிய்யத்து, நன்மைகளை பலமடங்காக்கிக் கொடுத்தல், லைலதுல் கத்ர். இவை மூன்றும் நம்மில் நீண்ட ஆயுளை ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு நல்ல செயலை செய்யாவிட்டாலும் கூட அதை செய்ய வேண்டும் என்று கொண்ட எண்ணத்திற்காக கூலி கிடைக்கும்.
ஒரு ஹதீஸில் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள்: “ஒருவர் ஒரு நன்மையைச் செய்ய முயற்சித்தும் அவரால் அதனைச் செய்ய முடியவில்லையெனில் அவருக்கு அதனை செய்ததற்கான பூரணமான நன்மை கிடைக்கும். அந்த நன்மையைச் செய்ய முயற்சித்து செய்தும் விடுகிறார் என்றால், அவருக்கு அல்லாஹ் பத்து நன்மைகள் முதல் எழுநூறு நன்மைகள் வரை பலமடங்காக்கப்பட்ட நன்மைகளை எழுதுகிறான். ஒரு பாவத்தைச் செய்ய முயற்சித்து செய்யாமல் விட்டு விடுகிறான் என்றால் அவனுக்கு ஒரு பூரணமான நன்மை கிடைக்கப் பெறுகின்றது. அந்தப் பாவத்தைச் செய்கிறான் என்றால் அவனுக்கு ஒரு பாவம் எழுதப்படுகிறது”.
எனவே இந்த இறைக்கொடை நல்ல எண்ணத்தின் மூலமான விளைவு. அது நமது ஆயுளை நன்மைகளால் நிரப்பிவிடுகின்றது. ஆகவே தான்: ‘எத்தனையோ சிறிய செயல்களை எண்ணம் மிகப் பெரும் செயல்களாக மாற்றி விடுகிறது’ என்று கூறப் படுகிறது.
அது போல இந்த இரண்டாவது விஷயமான நன்மைகள் பன்மடங்காக்கிக் கொடுக்கப்படுவதனைப் பொறுத்தவரை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். : “யார் ஒரு நன்மையைக் கொண்டுவருகிறாரோ அவருக்கு அது போல பத்து நன்மைகள் உண்டு, யார் ஒரு பாவத்துடன் வருகிறாரோ அவருக்கு அது போல ஒன்றிற்காகத் தான் தண்டனைக் கிடைக்கும். அவர்கள் அநியாயம் இழைக்கப்படமாட்டார்கள்”.
நபியவர்கள் இப்படிக் கூறினார்கள்: “ உங்களில் ஒருவர் தனது இஸ்லாத்தை மிகச் சிறந்த முறையில் ஆக்கிக் கொண்டால் (இஸ்லாத்தினை மிகச் சிறந்த முறையில் பின்பற்றினால்) அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அது போல பத்து முதல் எழுநூறு மடங்கான நன்மைகள் கிடைக்கப் பெறும். ஆனால் அவர் செய்யும் ஒரு பாவத்திற்கு அது போலதொரு பாவம் தான் எழுதப்படும்”.
இந்தக் குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஒரு மனிதன் அவனது அதிகமான நன்மைகள், குறைவான பாவங்கள் மூலம் நீண்ட ஆயுளைப் பெற்றவனாக மாறுகிறான் என்ற கருத்தைக் கூறுகின்றன. ஏனெனில் மனிதனது ஆயுள் அவன் வாழ்ந்த காலங்களின் மூலம் அளவிடப்பட முடியாது. மாறாக, அவன் வாழ்ந்த காலங்களில் சம்பாதித்துக் கொண்ட நன்மைகளை வைத்துத் தான் கணிப்பிடப்பட முடியும்.
உலகம் என்பது செயல்பாடுகளைக் கொண்ட ஒரு பேழை. நம்மிடம் ; நீங்கள் நூறு வருட காலம் வாழலாம் அதற்கென ஆயிரம் வருட காலம் வாழ்ந்த ஒருவரின் செயல்பாட்டுக்குரிய நன்மைகள் கிடைக்கும். அல்லது ஆயிரம் வருடங்கள் வாழலாம் ஆனால் நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரின் செயல்பாட்டுக்குரிய நன்மைகள்தான் கிடைக்ககும் என்ற இரு தேர்வுகள் முன்வைக்கப்பட்டால் நிச்சயம் முதலாவதையே தேர்வு செய்வோம் என்பதில் சந்தேகம் கிடையாது.
மூன்றாவது விஷயமான ‘லைலத்துல் கத்ர்’ ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு. ஆயிரம் மாதங்கள் என்பது கிட்டத்தட்ட என்பத்தி மூன்றுக்கு கொஞ்சம் அதிகமான வருடங்கள். ஒருவர் எழுபது வருட காலங்கள் வாழ்ந்துள்ளார், பத்து வருடங்கள் லைலத்துல் கத்ரை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைத்துள்ளது என்று வைத்துக் கொள்வோம்.அப்படியானால் ஏறக்குறைய 830 வருட நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதனுடன் அவர் வாழ்ந்த எழுபது வருடங்களையும் சேர்த்துப் பார்த்தால் 900 வருடங்கள் வாழ்ந்தவரைப் போன்றவராவார். இது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கும் மிகப் பெரும் அருள்.
இந்த மூன்று இறைக் கொடைகளும் நமது ஆயுளில் அதிகரிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் குறிப்பாக மூன்றாவது கொடை ரமலானில் மாத்திரம் தான் சாத்தியப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் ரமலான் மாதம் ஒவ்வொரு நோன்பாளியினதும் ஆயுளில் அதிகரிப்பை ஏற்படுத்துகின்றது என்று நாம் கூறுகின்றோம்.
ரமளானின் இறுதிப் பத்தில் அந்த இரவை அடைந்து கொள்ள நாம் முயற்சி செய்தால் அல்லாஹ்வின் உதவியோடு அந்தப் பேற்றை நெருங்கலாம். அது ஆயிரம் மாதங்களுக்கு நிகரானது அல்ல. மாறாக ஆயிரம் மாதங்களை விட கண்ணியமானது. இதன் கருத்து இந்த இரவில் நன்மைகள், கூலிகளது வாயில் திறந்து விடப்பட்டுள்ளது என்பது தான். எனவே, இம்மாதம் மனிதனது ஆயுளை அதிகரிக்கின்றது ஏனெனில் மனித ஆயுள்; செய்யப்படும் செயலை, பெற்றுக்கொள்ளும் நன்மைகளை வைத்து கணிப்பிடுவது தான் மிகப் பொருத்தம்.