"குர்பானி கொடுப்பது ஏன்...?"

மவ்லவி ஷிழிஸி ஷவ்கத்அலி மஸ்லஹி இர்ஃபானுல் ஹீதா அரபிக்கல்லூரி, தாராபுரம்.

Taqwa-copy-1200x896

குர்பான் என்ற அரபுச் சொல்லிற்கு "நெருங்குதல்" என்று பொருள். அதாவது ஒரு அடியான் அல்லாஹ்விற்காக குர்பானி கொடுப்பதின் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல் என்று இன்னும் சற்று விரிவாக இதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நமது அடிப்படை நோக்கங்களில் ஒன்று இறைநெருக்கத்தை நாம் பெறுவது. அதற்கு எவையெல்லாம் துணையாக இருக்குமோ அவையாவுமே போற்றுதலுக்கும், கொண்டாடுதலுக்கும் உரியது. அந்த வகையில் தான் இந்த தியாகத்திருநாளை இனிதே நாம் இன்றும் கொண்டாடி வருகிறோம்.
அல்லாஹ்வின்அருட்கொடைகளை அடைவதற்கு ஆடு, மாடுகளை நாம் ஏன் அறுத்துப் பலியிட வேண்டும்..? என்பது தான் இன்றைக்கு பலரின் முதற்கேள்வியாய் முன்னிற்கிறது.
முதலில் நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது சுய இஷ்டப்படி செய்யப்படும் ஒரு செயலல்ல.! இது ஈருலக இறைவனின் அன்புக் கட்டளை. இறைமறை இயம்புகிறது இப்படி : எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது,குர்பானியும்கொடுப்பீராக ! (அல்குர்ஆன் : 108:2)

அல்லாஹ்தான் நம்மைப்படைத்தான் அவன்தான் அக்கால் நடைகளையும் படைத்தான். அவன்தான் அவற்றை அவனுக்காக அறுத்துப்பலியிடவும் சொன்னான். அப்படியானால் நாம் அவனிட்ட கட்டளையைச் செய்வதா..? அல்லது "ஜீவகாரூண்யம்" என்று சொல்லிக் கொண்டு அவற்றை நாம் அறுக்காமல் விட்டுவிடுவதா?அல்லது மிருகவதை ஒழிப்பாளர்களின் அதீத பசபசப்புப் பேச்சைக் கேட்டு இறைக் கட்டளை மறுப்புப்போராட்டம் நடத்துவதா.? சற்று ஆழ, அகலமாக, யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் இது.

உயிர்வதை என்பது குர்பானியில் மட்டும் தான் என்றால் அது ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும் தான்...! ஆனால் தினம் தினம் அறுபடும் ஆடுகள் எத்தனை..? மாடுகள் எத்தனை..? ஏன் பால் தரும் பசுக்கள் எத்தனை..? கோழி, காடை, முயல், நண்டு, மீன், இறால் என்று தினமும் எத்தனையெத்தனை உயிர்கள் நமக்காக "உயிர்நீக்கம்" செய்யப்படுகின்றன...? ஏன் அன்றாடம் நாம் சுவாசிக்கும் நமது மென்மையான உயிர்மூச்சில் உள்ள உஷ்ணக்காற்றின் காரணமாக எத்தனையெத்தனை சிற்றுயிர்கள் தினம் தினம் செத்துமடிகின்றன..? ஏன் இவைகளெல்லாம் உயிர்வதைகளில்லையா...? அல்லது இவைகளெல்லாம் இக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லையா?

நாம் கொடுக்கும் குர்பானியின் வழியாகத்தான் அல்லாஹ் நமது தக்வா எனும் பயபக்தி எப்படியிருக்கிறது..? என்று பரிசோதித்துப் பார்க்கிறான். எனவேதான் அருள்மறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக்காட்டுகிறான் : (எனினும்), குர்பானியின் இறைச்சிகளோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா(எனும்பயபக்தி)தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் : 22:37)
இவ்வசனத்தை மீண்டும் ஒருமுறை நிதானமாக நின்று, நீங்கள் வாசித்துப் பாருங்கள் இறையச்சம் என்பது நமது குர்பானியின் இறைச்சித் துண்டுகளில் இல்லை. நமது இதயத் துண்டுகளில்தான் இனிதே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வெகு எளிதாக எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதற்காக நாம் குர்பானி கொடுக்காமல்" இதோ! இதயத்தில் இறையச்சம் இருக்கிறது" என்று கூறி தன்னைத்தானே மிகவும் நல்லவனாய் நிலைநிறுத்திக் காட்டிக் கொள்ள முடியாது. அது வீண் விதண்டாவாதமாகத்தான் இறுதியில் முடியும். இது முற்றிலும் தேவையற்ற ஒன்று.
தக்வா - இறைபக்தி என்பது நமது புறக்கண்களால் பார்க்கப்படும் ஒரு பருப்பொருளல்ல அது..! வெட்கத்தைப்போல அது ஒரு தனிப் பண்பு நிலை, அதை நாம் தனித்துக் காண முடியாது. இவ்வாறுதான் நாம் நமது இறையச்சத்தையும் வெறும் உடலில், வெறுமை இதயத்தில் காணமுடியாது. அதற்கென்று பல்வேறு வடிவங்கள் உண்டு. அதிலொன்றுதான் இந்த குர்பான், உள்ஹியா, பக்ரீத் என்று பல்வேறு பெயர்களைக் கொண்ட இந்த "அறுப்புநிகழ்ச்சி". எதையும் நாம் அது "அல்லாஹ்வுக்காக.." என்று செய்கிறபோது, அவையாவுமே மிகவும் இலகுவாக மறுமாற்றம் பெற்று விடுகிறது. ஆம்! நாம் அல்லாஹ்வை நெருங்கிச் செல்கிற போது, அல்லாஹ் நம்மை நோக்கி நெருங்கி வருவதாகத்தானே சொர்க்கத்து நபி சொன்னார்கள்.
இறைநெருக்கம் என்பது அது சும்மா கிடைக்கும் நமதூர் கடைச்சரக்கல்ல.!
இறையச்சமிக்க இதயத்தால் பெறப்படவேண்டிய நன்நடத்தைச் சரக்கு அது..!

சொல்லப்போனால், இஸ்லாத்தில் எந்த ஒரு காரியமும் இறையச்சத்தை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன. அதில் குர்பானியும் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறை வசதியுள்ள எவரும் குர்பானி கொடுப்பது கடமை. அதன் இறைச்சித் துண்டுகளை நாம் நமக்கு, நம் உறவுகளுக்கு, நம்மைச் சுற்றியுள்ள வறியவர்களுக்கு என்று மூன்றாகப் பங்கிட்டுக் கொடுப்பது மிகவும் சிறப்பு. கொடுத்து வாழ்வதில் தானே கோடான கோடி நன்மைகள் கூடி வாழ்ந்து கொண்டிருக்கின்றன...!

குர்பானி என்பது அதுவெறும் உயிர்ப் பலியல்ல..! அது வறுமையில் வாடி வதங்கும் பலரின் கடுமையான பசியைப்போக்கிடும் உன்னதமான ஒரு தர்மச் செயல், உறவுகளை சங்கமிக்க வைக்கும் ஓர் வசந்தவாசல், நட்புகள் சந்தித்துக் கொள்ளும் புதுச்சங்கமம் என பல்வேறு பாதைகளை வகுத்துக் கொடுக்கும் ஓர் உயர்தரமான அமல் என்பதை நாம் ஏன் உணர்வதில்லை? அதைப்பற்றி அடுத்தவர்களுக்கு ஏன் உணர்த்துவதுமில்லை..?

உயிரறுப்பு மட்டும் இதிலில்லை; பல உயிர்ப்பிப்புகளும் இதிலிருக்கின்றன.ஆம் ! அம் மிருகங்கள் தம் உயிர்களை தாராளமாகத் தந்து விட்டுச் செல்லும் போது தான் மனித உயிர்கள் இனிதே புனிதம் பெறுகின்றன என்று எவருக்கும் நாம் சொல்லித் தரவேண்டியதில்லை.

குர்பானி என்ற இப்புனிதச் செயல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வழியாக இவ்வையகத்திற்கு வழங்கப்பட்ட ஒன்றாகும் என்பது குர்ஆன் கூறும் இனிய வரலாறு. தமக்கு அதிக வயதாகியும் குழந்தை ஒன்று வாரிசாகயில்லையே என்ற ஏக்கம் நீண்ட நாட்களாக நிலவிவந்த போதுதான் திடீரென ஒருநாள், உங்களுக்கு விரைவில் "இஸ்மாயீல்"என்றொரு குழந்தை பிறக்கும் என்ற சுபச்செய்தி சொல்லப்பட்டது. அவ்வாறே பிறந்து, வளர்ந்து, விளையாட்டுப் பருவத்தை அடைந்த போது அப்பிள்ளையை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட வேண்டுமென்று இறைக்கட்டளை வந்திறங்கிற்று.

எனினும் இப்றாஹீம் நபி சற்றும் மனமுடைந்து விடவில்லை."எல்லாம்அவன் செயல்" என்பதில் மிகவும் மனஉறுதியோடு இறுதிவரை இருந்தார்கள். இறைக் கட்டளையை இனிதே நிறைவேற்ற முற்பட்டு தம் அருந்தவப் புதல்வனை மலையுச்சிக்கு அழைத்துச் சென்று
அறுக்கவும் முற்பட்டார்கள். இச்செயல் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்துப் போய்விட அதை தம் அடியார்கள் அனைவருக்கும் இறுதிநாள் வரை கட்டாயக் கடமையாக ஆக்கிவிட்டான்.
இது பற்றி குர்ஆன் இப்படிப் பேசுகிறது ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். (அல்குர்ஆன் : 37:107,108)
இன்னொரு இறைவசனமும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கதே..! நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வால் இடப்பட்ட கட்டளை இது தான் : நபியே நீர் கூறுவீராக ! மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும்,என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன் : 6:162) ஆக நாம் வாழ வேண்டிய வாழ்க்கையின் சாராம்சம் "எல்லாம் அவன் செயல்", "எல்லாம் அவனுக்காக...!" என்று, என்று நாம் ஒன்றுபட்டு நின்று வாழ முற்படுகிறோமோ அன்றுதான் நமக்கான நாளைய வெற்றியே வேர் விட்டுக் கொள்ளத் தொடங்குகிறது.

இன்றைக்கு நமது தினவாழ்க்கைச் சக்கரம் எப்படிச் சுழன்றுகொண்டிருக்கிறது.? அல்லது கழன்று கொண்டிருக்கிறது..? மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. "எல்லாம் என் செயல்" என்று நாகூசாமல் எப்படி இந்த அற்ப மனிதனால் மட்டும் சொல்ல முடிகிறது...?
இப்படிப்பட்ட கொடும் மனங்களை எல்லாம் சீர் செய்யும் சீரிய ஆயுதம்தான் இந்தக் குர்பானி என்ற புனிதச் செயல். அங்கே ஆடு அறுபடும் போது கூடவே சேர்ந்து நம் தீயமனமும் அறுபடவேண்டும். அதில்தான் நமது முழுமையான வெற்றி இருக்கிறது.

நாம் கஷ்டப்பட்டு, காசுகொடுத்து வாங்கிய ஆடுதான். ஆனால் அது இப்போதுநம் ஆடல்ல..! நம் வழியே வந்துள்ள ஆடு அதனால்தான் அதை "குர்பானிஆடு" என்று செல்லப் பெயரிட்டு அழைக்கிறோம். அந்த ஆட்டை, மாட்டை நாம் முழு மனதோடுஅறுத்துக் குர்பானி
கொடுத்து, அதன் இறைச்சியை ஆள்பார்க்காது அனைவருக்கும் நீதமாய் தாராளமாய் வாரி வாரி வழங்கும்போது தான் நமது குர்பானியோ அல்லது கூட்டுக் குர்பானியோ புனிதம் பெறுகிறது.
இவ்வாறெல்லாம் இனிய இஸ்லாமிய வரலாற்றை எப்போது நாம் தௌ்ளத் தெளிவாக புரிந்து கொள்ள தொடங்குகிறோமோ அன்று தான் நமக்கு நமக்குரிய மெய்யான வெற்றி வாசல்கள் தன் கதவுகளை மெல்ல மெல்ல திறக்கத் தொடங்கும்.
வாருங்கள்...! தூய மனங்களை அள்ளுவோம்...! தீய மனங்களைத் தள்ளுவோம்...!