விகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..!

download

தேர்தலே ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண். நாளுக்கு நாள் தேர்தல் செலவு அதிகரித்தபடியே இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யாமல் ஊழலையும், கறுப்புப் பணத்தையும் முற்றாக ஒழிக்கவே முடியாது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தேர்தலை ரத்து செய்யவும் மேலும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது போன்ற மிக முக்கியமான தேர்தல் சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. பிறகெப்படி ஊழலையும்,கறுப்புப்பணத்தையும் ஒழிக்க முடியும்?
இந்தியாவில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும் ‘வோட்டுக்கு நோட்டு’ என்ற நடைமுறை நிறுவனமயமாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு உள்நாட்டுக் கம்பெனிகள், பெரும் பணக்காரர்கள் அரசாங்கத்தை வளைக்க, சட்டத்தின் சந்து பொந்துகளில் சுற்றுலா சென்று வர, நாட்டின் வளங்களை ஒரேயடியாக பட்டாப் போட அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் ஜெயிக்க பணம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் மூலம் ஓட்டுப் போடும் குடிமகன் விலைபோகிறான். இது போன்ற தேர்தல் நடைமுறைகளால் இந்தியாவின் ஒட்டுமொத்த அமைப்பும் கறைபடிந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் பதவிக்கு வாக்காளர்களின் ஆசை தூண்டப்பட்டு ஒவ்வொரு குற்றத்திலும் பங்காளியாக ஆக்கப்படுகிறான் சாமானியன்.
நாம் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர வேண்டுமானால், தேர்தலில் பணத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக் கட்சிகளாலும் செலவு செய்யும் முறை மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெற அனுமதிக்கக்கூடாது. இந்திய நாட்டின் சூழலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இதற்குத் தீர்வாக அமையும்.
சட்டக் கமிஷனின் 170ஆவது அறிக்கை ஒரு முக்கியமான ஆலோசனையை முன்வைக்கிறது. “வீணாகும்” வாக்குகளை குறைக்கவும், நியாயமான முடிவுகளை அடையவும் உகந்த வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நோக்கி நகர்வதை பேசுகிறது.
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல வகைகள் உண்டு. கட்சிகள் மட்டும் தத்தமது சின்னங்களில் தேர்தலில் நிற்கும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு கட்சியினர் வாங்கும் ஓட்டுகள் அடிப்படையில், அவர்களுக்கான, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கும். இந்த தேர்தல் முறையில் அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் முடிந்த அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. சிறு கட்சிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பெறும் வாய்ப்புகளை விகிதாச்சார தேர்தல் முறை அதிகரிக்கிறது. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.