ரோஹிங்கியாவின் துயரம்

- ஜி.அத்தேஷ்

rohing 6

இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? இந்த நாடுகள் அனைத்து யார் யாருக்குச் சொந்தம்? எங்கெங்கே யார் வாழலாம், யார் வாழக்கூடாது? இதையெல்லாம் நியாயப்படுத்துவது, வகைப்படுத்துவது யார்? என் நாடு, என் இனம், என் மக்கள் என்ற அடையாள அரசியல் இன்று உலகம் முழுமைக்கும் வியாபித்திருக்கிறது. இதன்காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் மத, இன, மொழி சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. அவர்கள் அரசியலில் செல்வாக்கோ, அதிகாரமோ பெற்றுவிடாத படிக்கு நெருக்கப்படுகிறார்கள். செழிப்பான வாழ்வாதாரத்துக்கான வாசல்களை அடைத்து சேர்களும் சேரிகளும் அவர்களை சூழ்ந்துகொள்ளும் திட்டங்கள் ஒரு திரைமறைவில் எப்போதும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி சேருக்குள் சிக்கிக்கொள்ளும் கெடுவாய்ப்பு பெரும்பாலான நாடுகளில் முஸ்லிம்களுக்கு வாய்த்திருக்கிறது.
அப்படியானதொரு புதைகுழியில் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களும் சிக்கிக் கொண்டார்கள். தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மியான்மர் ராணுவம் சன்னம் சன்னமாக ரோஹிங்கியா இன முஸ்லிம்களைக் கொலை செய்து வருகிறது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முற்றுப்பெற்று தேர்தல் அடிப்படையிலான ஜனநாயக அரசு அமைந்த பிறகும் ராணுவம் செய்யும் படுகொலைகள் குறையவில்லை.
மியான்மரின் ராஹினோ (Rakhine) மாநிலத்தில் இந்த ரோஹிங்கியா (Rohingya) இன முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அண்டை நாடுகளும், சர்வதேச நாடுகளும் வற்புறுத்தி கேட்டுக்கொண்ட பிறகும்கூட அங்கே இனச் சுத்திகரிப்பை மியான்மர் ராணுவம் செய்து வருகிறது. ரோஹிங்கியர்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அழிக்கப்படுவதற்கும், மொத்தமாக வெளியேற்றப்படுவதற்கும் செயற்கைக்கோள் படங்கள் மறுக்கமுடியாத ஆதாரங்களாக இருக்கின்றன. மியான்மர் படை வீரர்கள் பெண்களையும், குழந்தைகளையும் வெறிகொண்டவர்களாக கொலை செய்யும் காட்சிகளையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பார்வையிடச் செல்லவும் உதவவும் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ரோஹிங்கியர்கள் பலநூறு பேர் புலம்பெயர்ந்து வங்கதேசம் போயிருந்தார்கள். இப்போது புதிதாக பெரியதொரு எண்ணிக்கையாக அவர்கள் வங்கதேசத்துக்கே புலம்பெயர்ந்திருக்கிறார்கள். ரோஹிங்கியர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை மனிதத்தன்மைக்கு எதிரான குற்றமாகத்தான் வகைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
ஐ.நா.வின் முன்னாள் செயலர் கோஃபி அன்னான், நடந்த சம்பவங்களின் உண்மைகளை அறிய வேண்டி ஒரு குழுவுடன் 2016 நவம்பர் இறுதி வாரத்தில் சென்றிருந்தார். சூழ்நிலையைப் பார்வையிட்ட அன்னான், ரோஹிங்கியர்களுக்கு உதவிகள் இடையறாது வழங்க வேண்டும், சர்வதேச ஊடகங்கள் அவர்களின் அவலங்களை உடனடியாக வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும், ரோஹிங்கியர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளை பலப்படுத்த வேண்டும், இன ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவசர அறைகூவல் விடுத்தார்.
ராஹினேயில் உள்ள சூழ்நிலையை ஆய்வு செய்ய மியான்மரின் சக்திமிக்க தலைவராக இருக்கும் ஆங்சான் சூகி 2016, ஆகஸ்ட் மாதம் ஒரு குழுவை ஏற்படுத்தினார்.
அந்தக் குழுவின் தலைவராக கோஃபி அன்னான் இருக்கிறார். ராஹினே மாநிலத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதற்குத் தேவைப்படும் கெட்டியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இந்தக் குழுவுக்கு கொடுக்கப்பட்ட பணி. இந்தக் குழுவில் மொத்தம் 6 பேர். அதில் 3 பேர் மியான்மரை சேர்ந்தவர்கள். அதில் ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட இல்லை. 6 பேரில் பௌத்தர்கள் பெரும்பான்மை.
1982க்கு முன்னர் ரோஹிங்கியர்கள் தேசிய இனமாக ஏற்கப்பட்டிருந்தனர். அவ்வாண்டு ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது. அதேநாளில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட 135 தேசிய இனங்களின் பட்டியலில் இருந்து ரோஹிங்கியர்களை நீக்கி ஒரு சட்டத்தை ராணுவம் கொண்டு வந்தது. இப்போது கோஃபி அன்னான் குழுவும் அந்த சட்டத்தின் வரம்பை மீறாமல்தான் துயராற்றும் பணிகளைச் செய்ய வேண்டும்.
மியான்மர் நாட்டின் ஆளும் கட்சித் தலைவராக ஆங்காங் சூகி இருக்கிறார். வெளிநாட்டவர் ஒருவரை மணந்து கொண்டதால் அதிபராகும் வாய்ப்பை இழந்தவர். என்றாலும் மியான்மரின் தேசிய முகம் சூகி தான். ராணுவ ஆட்சியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர் சூகி. இப்போது உலக நாடுகளில் சுற்றி வருகிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய வீரப் பெண்மணி. அவரது அமைதி வழி போராட்டத்துக்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
சூகி தற்போது பயணம் செய்யும் நாடுகளில் எல்லாம் ரோஹிங்கியாக்கள் பற்றி விசாரிக்கப்படுகிறார். மியான்மர் ஜனநாயகம் மலர்ந்துள்ள நாடு என்றாலும் அது ராணுவத்தின் உள்ளங்கையில் தான் மலர்ந்திருக்கிறது. ராணுவம் எப்போது வேண்டுமானாலும் கைகளை மூடிக்கொள்ளலாம். அதனால் சூகி கவனமாகப் பேசுகிறார். ராஹினேயில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கின்றன என்றும் கூறும் அவர் அதற்கான குற்றத்தை உடனடியாக ராணுவம் மீது சுமத்தவில்லை. 2016, நவம்பரில் ஜப்பான் சென்றிருந்த போது, "மனித உரிமைகள் மீறலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்று முழுமையான ஆதாரம் கிட்டும் வரையில் யாரையும் குற்றம்சாட்டுவதில்லை என்பதில் கவனமாக இருக்கிறோம்" என்று கூறினார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கும் நடவடிக்கை 2012ல் உருவான இன மோதலுக்குப் பிறகுதான் மிகப்பெரிய அளவில் தொடங்கியது. அவர்களின் வீடுகள் நொறுக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டன. பின்னர் சிட்வீ (sittwe) என்ற ஊரில் தற்காலிக முகாம்களில் ஒரு லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டார்கள்.
ஆங்சாங் சூகியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி கட்சி 2015 தேர்தலில் வெற்றி பெற்றது. எனினும் ராணுவத்துடன் ஆட்சியில் பங்கெடுத்துள்ளது. சூகி, ஆட்சியின் பெரிய பொறுப்புக்கு வரும்போது ரோஹிங்கியர்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூகி, ராணுவ ஆட்சியின் அதிகாரத்தில் ஒரு பங்காளியாக இருந்தாலும் அரசின் கொள்கைகளில் ஆழமான செல்வாக்கு செலுத்தும் இடத்தில்தான் இருக்கிறார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த சூகி, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றிக் கூறும்போது, சக்தி வாய்ந்த ராணுவத்துடன் மோதி தேர்தலில் அவரது கட்சிக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பைக் கெடுக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
அதேநேரம், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது என்.எல்.டி. கட்சி சார்பில் முஸ்லிம்களில் இருந்து ஒருவரைக்கூட வேட்பாளராக சூகி நிறுத்தவில்லை. ரோஹிங்கியா பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தில் கவனம் செலுத்துவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
மியான்மரின் மேற்குப் பகுதியில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு குடியுரிமையும் இதர அடிப்படை உரிமைகளும் தரப்படவில்லை. பிரிட்டிஷ் காலனியாக கட்டுப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக முஸ்லிம்கள் மியான்மர் வந்தார்கள். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் ராஹினேவில் இருந்த மியான்மர்கள் அனைவரும் மியான்மரை ஆக்கிரமித்து வைத்திருந்த ஜப்பானை ஆதரித்த போது ரோஹிங்கியர்கள் இங்கிலாந்தை ஆதரித்தார்கள்.
2016, அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம், ரோஹிங்கிய இளைஞர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு 9 காவலர்களைக் கொலை செய்ததாக எழுந்த பிரச்சனையை ஒட்டித்தான் ராஹினேவில் புதிதாக வன்முறை வெடித்தது. ரோஹிங்கியர்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டு பொறுக்காத சிலர் வன்முறையில் இறங்க, பதிலுக்கு ராணுவம், ரோஹிங்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அவர்களின் ஊர்களை தீயிட்டுக் கொளுத்தியது. அந்த நாட்டின் அரசியல் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இனமாக ரோஹிங்கியர்கள் இருக்கிறார்கள். ராணுவம் இறுதியாக தாக்குதல் நடத்திய போதும் கூட ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். ஆயுதம் ஏதுமற்ற அந்த மக்களுக்கு உயரே மேகத்துண்டுகள் போல் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் எரிமலை துளிகளாக ஏவுகணைகளை வீசிக் கொன்றது.மியான்மர் ராணுவம் வெளிப்படையாகவே உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் பார்த்துக் கொண்டிருக்க இன அழிப்பில் ஈடுபட்டது.
மியான்மரை ஒட்டிய வங்கதேச எல்லையில் கட்டுப்பாடான பாதுகாப்பு இருந்தும் இந்தச் சம்பவத்தில் தப்பித்து 10 ஆயிரம் ரோஹிங்கியர்கள் வங்காளதேசத்துக்குள் ஓடினர். ரோஹிங்கியர்களுக்கு பிரச்சனை தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தே ஆயிரக் கணக்கானவர்களை வங்கதேசம் வரவேற்று வைத்திருக்கிறது.
ரோஹிங்கியர்கள் மீது குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு தாக்குதல் சம்பவம் மிகக் கடுமையாக 1978ஆம் ஆண்டில் நடந்த சமயம் சுமார் 2 லட்சம் பேர் வங்கதேசத்துக்கு புலம்பெயர்ந்தார்கள். மியான்மர் ராணுவம் ரோஹிங்கியர்களை மொத்தமாக வங்கதேசத்துக்கு அனுப்புவதைக் காட்டிலும் பெரிதாக வேறெதையும் விரும்பவில்லை என்பதும் வங்கதேச அரசுக்கு நன்றாகவே தெரியும்.
வங்கதேசத்தில் இவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் அகதிகள் முகாம்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐ.நா. நிறுவனத்தின் ஜான் மெக்கிஸ்ஸிக், வன்முறையில் ஊறப்போட்டு எடுத்த இவர்களின் கண்ணீர்க் கதைகளை நெஞ்சை உறையச் செய்யும்படி கூறுகிறார்.
"மியான்மர் ராணுவத்தினர் இவர்களில் ஆண்களைக் கொலை செய்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள். குழந்தைகளைத் துண்டமாக வெட்டி வீசுகிறார்கள். வயது வந்த பெண்களை வல்லுறவு செய்கிறார்கள். வீடுகளில் பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். நதியைக் கடந்து வங்கதேசத்துக்குள் உயிர்தப்பி ஓடும்படி துரத்தியடிக்கிறார்கள்" என்கிறார். மியான்மரையும் வங்கதேசத்தையும் கூறாகப் பிரிக்கும் அந்த நதி அகதிகளாக உயிர்தப்பி ஓடும் ரோஹிங்கியர்கள் பலரையும் தனக்குள் பிடித்து வைத்துக் கொண்டு இறுதி நிம்மதி கொடுத்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு மியான்மர் விவகாரத்தில் சிறப்பு ஆலோசகராக இருப்பவர் சதீஷ் நம்பியார். இவர், ரோஹிங்கியர்கள் பாதிக்கப்பட்ட இடங்களைப் போய் பார்க்கும்படி ஆங்சாங் சூகிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கும்படியும் சூகிக்கு அறிவுறுத்தினார். ஆனால் தற்போது உலக நாடுகளும் மிகப்பெரிய அளவில் கவனம் எடுத்துக்கொண்டு கோரிக்கை வைத்தும்கூட, அமைதிக்கு நோபல் பரிசு பெற்ற சூகி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராணுவத்தை எதிர்த்துப் பேச மறுத்து வருகிறார்.
நெடுங்காலமாக உலக சமூகம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்புகளின் (Democratic Values) உதாரணமாக ஆங்காங் சூகியைப் பார்த்து வருகிறது. மதச் சிறுபான்மையினர் திட்டமிட்டு தாக்கப்படும் சம்பவத்தின் மீது இறுக்கமான மௌனத்தை சூகி காட்டுவதால் புத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அனைத்து மக்களின் மனித உரிமைகளையும் காக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பொதுச் சமூகமும் கேள்வி எழுப்புகிறது. அவர்கள் அன்னியர்கள் என்பதை உறுதிப்படுத்த, வெளிப்படையான முயற்சியாக ரோஹிங்கியர்களை வங்கதேசிகள் என்று கூற சூகி தயாராகி வருகிறார்.
மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக், தலைநகர் கோலாலம்பூரில் ரோஹிங்கியர்கள் படுகொலையைக் கண்டித்து 2016, டிசம்பர் முதல் வாரம் பெரிய கண்டனப் பேரணியை நடத்தி, மியான்மர் இனப்படுகொலை ஒன்றை நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார். மலேசியாவில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் 56,000 பேர் அகதிகளாக இருக்கிறார்கள். மலேசிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரோஹிங்கியர்கள் என்ற இனத்தை சுத்தமாக முடித்துவிட வேண்டும் என்ற மியான்மரின் செயலைத் தடுத்து நிறுத்தவும் ராஹினேயில் பாதுகாப்பும் அமைதியும் ஏற்பட உறுதியேற்கவும் மலேசியாவுக்கு கடமை உள்ளது" என்று கூறியிருந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (Association of South East Asian Nations) என்ற குழுவில் மலேசியாவும் மியான்மரும் உறுப்பு நாடுகள். இருவரும் மற்றவர் பிரச்சனையில் தலையிடுவதில்லை என்ற மரபை நீண்ட காலமாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். மியான்மரில் 2015ல் ஆங்சாங் சூகி தலைமையில் புதிய மக்களரசு பொறுப்பேற்ற பிறகு மியான்மர் நாட்டின் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளை மீட்டுக்கொண்டு வருவதற்காகவே அமெரிக்காவின் ஒபாமா அரசு 2016 செப்டம்பரில் மியான்மர் மீது ராணுவ ஆட்சிக் காலத்தில் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை நீக்கியது. ராணுவத்தால் மனித உரிமைகள்ஒடுக்கப்படும் போது அந்த அரசின் மீது பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா கொடுப்பது போன்ற துணிச்சலான செயலில் முஸ்லிம் நாடுகள் எதுவும் செய்யத் துணிவதில்லை என்பதை ஆழ்ந்த கவலையோடும் மிக்க கவனத்தோடும் நாம் சொல்லத் தேவை இருக்கிறது.
மியான்மர் அரசு சூகியின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லையென்றாலும் நிர்வாக நடப்புகளில் ராணுவத்துடன் சூகிக்கு ஒரு உடன்படிக்கை இருக்கிறது என்ற அபிப்ராயத்தை அவர் தோற்றுவித்திருக்கிறார். நாட்டின் உள்துறை, பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு என்னும் முக்கியமான துறைகள் ராணுவத்தின் கையில்தான் இருக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்த மூன்று அமைச்சகங்களும் கடுமையாகக் கண்காணிக்கின்றன.
ரோஹிங்கியர்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் ராணுவத் தாக்குதல்களைப் பற்றி பேசவிடாமல் சூகியை ராணுவம் கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக அவரது செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையான உண்மை இல்லையென்று சூகியின் அலுவலகம் நிராகரித்து விட்டது. பிரச்சனை உள்ள பகுதிகளில் உதவும் நிறுவனங்கள் செல்வதற்கான பயண உரிமம் கொடுக்க சூகியின் பொறுப்புக்கு கீழிருக்கும் அமைச்சகம் தான் மறுப்பு தெரிவித்திருக்கிறது. பெண்களும் குழந்தைகளுமாக இருக்கும் 30,000 ரோஹிங்கியர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது.
ராஹினே மாநிலத்தில் நடந்துவரும் துயரச் சம்பவங்களைக் கண்காணிப்பதற்கான ஐ.நா. பிரதிநிதி யாங்கீ லீ (Yanghee Lee) "ராஹினேயில் கொலைகளும், வல்லுறவுகளும், வதைகளும், வீடுகள் மஸ்ஜித்கள் மீதான தாக்குதல்களுமான செய்திகள் நம்பக்கூடியதாக வெளிவந்து கொண்டிருக்கும் போது, மியான்மர் அரசு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல தடை போடுவது ஏற்புடையதல்ல" என்று கூறியுள்ளார்.
சூகி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராஹினே மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு சட்ட விதிமுறைகள்படி தான் அரசு நடந்தகொள்ளும் என்று கூறியிருந்தார். அதனால் பாதிப்புள்ள பகுதிகளுக்கு செல்ல சூகி உதவுவார் என்ற நம்பிக்கையை லீ இழந்துவிட்டார். "மனித உரிமைகள் நசுக்கப்பட்டதாக வந்துள்ள குற்றச்சாட்டுகள் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை" என்று கூறுகிறார் லீ.
இதனிடையே ‘ராஹினே ஆக்ஷன் பிளான்’ என்ற திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் மியான்மர் அரசு இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, மியான்மர்கள் இயற்கையான குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற அரசின் தேவையை நிறைவேற்றவே முடியாத அல்லது வங்காளதேசத்தவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட ரோஹிங்கியர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சன்னம் சன்னமாக வங்கதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.
2016ஆம் ஆண்டு மியான்மர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ரோஹிங்கியர்கள் சேர்வதை அரசு தடுத்துவிட்டது. ரோஹிங்கியர்கள் தேர்தலில் வாக்களிப்பதைத் தடை செய்ய ஒரு சட்டமும் தயாராகி இருக்கிறது. ரோஹிங்கியர்கள் வேறு மதத்தவர்களை மணம் முடிப்பதை தடை செய்யும் மற்றொரு சட்டம் கொண்டுவரவும் தீவிர முயற்சியில் இருக்கிறது. மத அடிப்படையில் மியான்மரை இரு கூறாகப் பிரிக்கும் முயற்சி இது. இன அழிப்பு செயலை நியாயப்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளைக் கூர்தீட்டும் முயற்சியும் அரசு செய்கிறது.
பெரும்பான்மை புத்த மதத்தினருக்கு அச்சம் ஏற்படும் அளவில் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் இருக்கிறது. அதனால் அரசின் ஆக்ஷன் பிளான் எனும் செயல் திட்டம் மிகவும் அவசியம் என்கிறார் ராஹினே மாநிலத்தின் அரசு செய்தித் தொடர்பாளர்.
2015ஆம் ஆண்டு, படகு நிரம்ப, மியான்மரை விட்டு வெளியேறிய ரோஹிங்கிய முஸ்லிம்கள் பக்கத்து நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு கெஞ்சினார்கள். அந்த வெளியேற்றம் தான் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்போது மற்றுமொரு வெளியேற்றத்துக்கு அநாதையாக்கப்பட்ட ரோஹிங்கியா இனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வெளியேற்றத்தை மியான்மர் அரசே ஊக்கப்படுத்துகிறது, உடந்தையாகவும் இருக்கிறது.
இந்த வெளியேற்றத்தின் ஊடுபாவாக தாய்லாந்து கப்பல் படையும் பின்னணியில் இருந்து செயல்படுகிறது. மியான்மரில் இருந்து உடமைகளைப் பறிகொடுத்துவிட்டு உயிரோடும் உறவுகளோடும் தப்பித்து நாடு கடக்கும் இந்த அப்பாவி முஸ்லிம் மக்களை தாய்லாந்து தனது கடல் தொழிலில் ஈடுபடுத்துகிறது. அங்கு அவர்கள் உண்மையில் கொத்தடிமை தொழிலாளிகளாக உருமாறி வருகிறார்கள். இவர்களுக்காக கண்ணீர் சிந்தும் கண்கள் இன்னும் திறக்கப்படவே இல்லை.