சிரியா - ஆயுத அதிகாரத்தின் விளையாட்டு மைதானம்

syriaa

ஷாம் தேசம் என்று வரலாறுகளில் நாம் படித்த இன்றைய சிரியா. மத்திய ஆசியாவின் வரலாற்றுப் பக்கங்களில் படிந்து போன தவிர்க்க முடியாத பூமி. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் அதன் தடயங்கள் இருக்கும். வளர்ந்து வாழ்ந்து செழித்து உதிர்ந்து போன வரலாற்று மனிதர்கள் வாழ்ந்த - ஆட்சி செய்த டமாஸ்கஸ், ஹலப், பல்மைரா போன்ற பழமை வாய்ந்த நவீன நகரங்களின் கூட்டுதான் ஷாம் தேசம் என்ற சிரியா.
அலெப்போ என்றழைக்கப்படும் ஹலப் இன்று மனிதர்கள் வாழ வழியில்லாத உருக்குலைந்த இடிந்த கட்டிடங்களின் குவியலாக காட்சி தருகிறது. ஊரெங்கும் உயிரற்ற பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்கள். இவர்கள் நாடுகள், இனங்கள், கொள்கைகளின் அதிகாரப் போட்டியில் பலிகடாக்கள்.
சிரியா போரின் புள்ளி
சிரியாவின் ஆட்சியாளராக ஷீயா பிரிவைச் சேர்ந்த பஸர் அல் அஸாதின் தந்தை ஹாபிஸ் அல் அஸாத் 1970 இல் இருந்து 2000 வரை இருந்தார். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரியணை ஏறினார் பஸர் அல் அஸாத். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் சிரியாவின் ஜனநாயக வீழ்ச்சியை வெளிக்காட்டியது. ஜனநாயக ஆட்சி முறையை மாற்றி குடும்ப ஆட்சி முறைக்கு சிரியாவை நகர்த்தினார். இது மக்களிடத்தில் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கியது.
2010 ஆம் ஆண்டு துனிஷியாவில் தொடங்கிய அரபு வசந்தத்தின் காரணமாக எகிப்து, லிபியா, யேமன், அல்ஜீரியா, மொராக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஆண்டு கொண்டிருந்த அராஜக ஆட்சியாளர்களை அகற்றும் போராட்டத்தில் அந்தந்த நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.
அதன் ஒரு பகுதியாக சிரியாவிலும் அஸாத் ஆட்சியின் மக்களுக்கு எதிரான போக்கு, ஜனநாயக உரிமை மறுப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அஸாதின் அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியே இன்றைய போர்.
போராட்டம் போரான வரலாறு
சிரியாவில் மக்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்த உரிமைப் போராட்டம் இன்று உலகப் பேரரசுகளின் ஆயுத விளையாட்டாக மாறி இருக்கிறது. காரணம் பஸர் அல் அஸாதின் அதிகாரப் பேராசை. அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அழிவின் அத்தனை வாசல்களையும் திறந்து விட்டுள்ளார் பஸர் அல் அஸாத். தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி வன்முறையை ஏவினார்.
உரிமை கேட்டுப் போராடியவர்கள் ஆயுதத் தாக்குதல் நடத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார். இதன் மூலம் ஆயுதம் தூக்கும் நிலைக்கு சிலரரை தள்ளினார். முதலில் ஒன்று அடுத்து ஒன்று என தொடர்ந்து ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்கள் அதிகரித்தன. 2012 ஆம் ஆண்டு சிரிய சுதந்திரப் படை என்ற அணி அலப்போவின் 70% பகுதிகளைக் கைப்பற்றியது. அரசுப் படைகள் தொடர்ந்து 2012 - 2014 வரை பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல் என கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. அரை மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.
இடைப்பட்ட காலத்தில் பஸர் அல் அஸாதை எதிர்ப்போருக்கும் ஆதரிப்போருக்குமான போராட்டம் ஷியா சன்னிகளின் எதிர் போராட்டமாக திருப்பப்பட்டது. மக்கள் மதக் குழுக்களாக பிரிக்கப்பட்டார்கள். போராட்டம் போராக மாறியது. நாளாக நாளாக போராட்டத்தின் திசை கூர்மையடைந்தது. ஷியா ஆதரவாளர்கள் அஸாதுக்கு முட்டுக் கொடுக்க சன்னிகளுக்கு ஆதரவாக பல குழுக்கள் உருவாகின. அவர்களுக்கு சில நாடுகள் உதவின.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போரில் ஈடுபடும் குழுக்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்கா, முஸ்லிம்கள் அவர்களாகவே அடித்துக் கொண்டு சாகட்டும் ஆட்டம் முடிந்ததும் நாம் நமது வேலையைப் பார்ப்போம் என்று ஒதுங்கி நின்றது.

syria 2
சிரிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் சில அணிகள் களம் இறங்கின. குறிப்பாக ஐரோப்பா மற்றும் போஸ்னியா பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள். இவர்களது வருகைக்குப் பின்னர் போரின் திசை மாறியது.
சிரியா அரசின் ராணுவ தளவாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வந்த.
நிலையில் 2015 ஆம் ஆண்டில் ரஷ்யா பஸர் அல் அஸாதுக்கு ஆதரவாக ஆயுதம் தூக்கியது. ஒரு பக்கம் அமெரிக்கா இன்னொரு பக்கம் ரஷியா மூன்றாவதாக அரபு நாடுகளை உள்ளடக்கிய அகன்ற பாரசீக ஷியா சாம்ராஜ்ஜியத்தை அமைக்கும் கனவில் இருக்கும் ஈரான். இந்த மூன்று அணு ஆயுத, ஆயுத பலம்மிக்க நாடுகளின் அதிகாரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது ஒட்டு மொத்த சிரியாவும் இப்போது ஹலப் நகரம். மூன்று ஆயுத வலிமைமிக்க அரசுகளையும் போராட்டக் குழுக்கள் இன்று சமாளித்து வருகிறது. மக்கள் உரிமைகளைக் கேட்டு தொடங்கிய போராட்டம் அதிகார வெறி பிடித்தவர்களின் அகங்காரத்தினால் நாடுபிடிக்கும் போராக மாறி சிரியாவின் சமகால வரலாறு பொதுமக்களின் குழந்தைகளின் ரத்தத்தத்தால் எழுதப்படுகிறது.
விளையாட்டில் மனிதர்களை மோதவிட்டு ரத்தம் சொட்டச் சொட்ட செத்து விழுந்த மனிதர்களின் உடல்களைப் பார்த்து மகிழ்ந்த மனிதர்களை விட மோசமானவர்கள் இவர்கள். போரை விளையாட்டாக நினைத்து செத்து விழும் மனிதர்களின் உடல்கள் மேல் சாம்ராஜ்ஜியக் கனவை நனவாக்க நினைக்கிறார்கள்.
இப்போது அலப்போ நகர் முற்றுகையிடப்பட்டு மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். தாக்குதல் தொடுக்கப்பட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் போர் பல்லாயிரம் சிறுவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துள்ளது; சொந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு விரண்டோடும் அப்பாவி மக்கள் கூட்டத்தினை உருவாக்கியுள்ளது; சமீபத்திய நாட்களில் மட்டும் 25.000 க்கும் மேற்பட்டோர் ஹலப் நகரை விட்டு வெளியேற்றப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை தருகிறது.
வான்வெளித் தாக்குதல்களில் கண் முன்னாலேயே பெற்றோர்களின், பிள்ளைகளின், உறவுகளின் மரண ஓலக்காட்சிகளைக் கண்டும் கேட்டும் ஹலப் நகரை விட்டு தப்பி வந்த உறவுகளின் ரணங்கள் யாருடைய கற்பனையிலும் கூட வரக்கூடாதவை. அலப்போ நகரின் கட்டிடங்களின், மனித உடல்களின் சீரழிவுகளைப் பார்த்த அதிர்ச்சி காரணமாக அழுவதையே மறந்து அமர்ந்திருக்கும் சிறுவர்களின் படங்கள் நமது கண்ணீருக்கு வழியமைத்து உள்ளங்களை உருக்குலைக்கிறது. தற்போது அலப்போவிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரம் குழந்தைகளின் எதிர்காலம்? அவர்களது மன உளைச்சல்? அவர்களுக்கான வாழ்வாதாரம்? என எல்லாமே கேள்விகளாக மட்டுமே நம்முன் தொக்கி நிற்கிறது.
ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக வெளிவந்த சிரிய மக்களின், சிறுவர் சிறுமியர்களின் வேண்டுகோள்கள் ஹலப் நகரின் நெருக்கடிகளை, தீவிரமான அழிவை நமக்குக் காட்டின. நேரடி நிலவரத்தின் தன்மை எத்தகையது என்பது எவ்வளவு மோசமானது என்பதை யூகிக்க முடியவில்லை. போருக்குப் பின் சிரிய அரசின் கூட்டுப் படைகளால் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் கூட்டுப்படுகொலை, வன்கொடுமைகள் பற்றிய உண்மைத் தகவல்கள் நமது பார்வைக்கு வராதவை. போர் எப்போதும் மனம் உருக்குலைந்த மனிதர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சி தரும். எப்போதுமே போரும் போர்ச் சூழலும் ரணமானவை. அது குறித்து சிந்திக்கக்கூட விருப்பமில்லாதவர்கள் சாதாரண மனிதர்கள்.
சிரியா போரில் இதுவரை 4.50.000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போர் ஆரம்பித்த நாட்களிலிருந்து 4.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளான லெபனான், ஜோர்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். மிக அண்மைக்கால வரலாற்றில் பதிவான மிகப் பெரும் இடப்பெயர்வு இது.
சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய கைத்தொழில், வர்த்தக நகரமான அலப்போ இன்று கட்டிட இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ளது.

syria 3
ஐ.நா. விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், துன்புறுத்தல்கள், கற்பழிப்பு மற்றும் காணாமல் போகுதல் உள்ளிட்ட துயரமான போர்க் குற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதேவேளை, முற்றுகையில் அகப்பட்டுள்ள சிவிலியன்கள் உணவு, குடிநீர், சுகாதார சேவைகளைப் பெறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் ஐ.நா. சபையானது சிரிய போரில் ஒரு பார்வையாளராக அன்றி, ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. 2013இல் அஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்தபோதும் கூட சிரியா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஐநாவின் கையால் ஆகாத தனத்தையும் மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டையும் அரபு, முஸ்லிம் நாடுகளின் தேசியவாத, சுயநலப் போக்கையும் அலப்போ உலகத்துக்கு பறைசாற்றி நிற்கின்றது.
முஸ்லிம் நாடுகள் ஒவ்வொன்றாக தொடர்ந்து சிதைக்கப்பட்டு அந்த நாடுகளின் நகரங்கள் மக்களற்ற இடிபாடுகளான கட்டிடங்களால் நிரப்பப்படுகிறது. முஸ்லிமின் ஒரு நகரின் ஓலம் ஓயவில்லை. அந்த அழுகை ஓய்வதற்குள்ளேயே இன்னொரு நகரின் ஓலம் தொடங்குவது பெரும் சோகத்தையும், அவலத்தையும் மனித உயிர்கள் அழிவதின் மீதான அச்சத்தை நமக்குத் தருகிறது.
இவ்வளவு பெரிய அழிவு நடந்து கொண்டிருக்க உலக நாடுகளின் குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் பெருத்த மௌனம் நம்மை நிலை தடுமாறச் செய்கிறது. நமது மனச்சாட்சி எங்கே சென்று விட்டது!