"தாய் மொழி போற்று....!"

மவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி, தாராபுரம்.

பிப்ரவரி-21 என்றவுடன் நம்நினைவுகளில் தவழவேண்டியது அன்றுதான் சர்வதேச தாய்மொழி தினம். உலகில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

அவற்றில் 3000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளனவாம். இவற்றை
பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யும் விதமாகவே யுனெஸ்கோ அமைப்பு 1999 முதல் இந்நாளை தாய்மொழி நாளாக கொண்டாடி வருகிறது. இந்நேரத்தில் நாமும் நமது தமிழ்மொழியான தாய்மொழியில் எப்படியிருக்கிறோம் என்று நம்மை நாமே நன்கு மறுபரிசீலனை செய்து

கொள்ளவேண்டிய தருணமிது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில்,பெரும்படை பலம் தேவை இல்லை; அந்நாட்டின் மொழிவளத் தை அழிக்கத் தொடங்கினாலே போதும் என்பார் ஐரிஸ் நாட்டறிஞர் டிவேலரா.
இன்றைக்கு நமது தாய்மொழியின் நிலை நம்மிடையே எப்படியுள்ளது..? தாய்மொழியில் ஒருவன் சிந்திக்கத் தொடங்காதவரை அவனது வாழ்வு வளம்பெறுவது என்பது தூரமானது தான் என்பார் மனநல ஆய்வாளர் சிக்மென்ட் ஃபிராய்டு.
ஆம்! உண்மையும் அதுதான் நாம் என்றைக்கு நமதுசொந்த மொழியில் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் செய்கிறோமோ அன்றுதான் முழுமையான விடிவுகாலம் பிறக்கும். இல்லையேல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது வெகு வேகமாகவே நடந்து விடும்.
இன்றைக்கு நம்மில் பலரின் வீட்டு மொழி இப்படித்தான் இருக்கிறது : மார்னிங் ஒரு சிக்ஸ் ஆர் செவனோ கிளாக் எந்துருச்சு பிரஷ்பண்ணி, ஃபேஸ் வாஷ் பண்ணி, ஒரு கிளாஸ் டீய்ய குடிச்சுட்டு, அப்படியே ஒரு மினி வாக்கிங் போயிட்டு, ஓசீல ஒருபேப்பர படுச்சுட்டு வந்தாத்தான் எனக்கு நிம்மதி என்பார் நம்ம வீட்டுப் பெரியவர். இதில் நம்ம வீட்டுப் பள்ளிப் பிள்ளைகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
சமீபத்தில் ஒரு தமிழ்ப் பள்ளிப் பிள்ளையிடம் ஸ்கூல் என்பதற்கு தமிழ்ச் சொல் என்ன என்றேன். உடன் சற்றும் யோசிக்காமல் அச்சிறுமி கூறினாள் : "அங்கிள்... அது டமிள் தான் போங்க.." என்றாள் தன் மழலை மொழியில்..!
இன்றைக்கு நமது பெற்றோர்களும் தன் பிள்ளை பெயர் சொல்லும் பிள்ளையாக இருக்க வேண்டுமென்றால் அப்பிள்ளை அடிக்கடி அது திட்டுவதாகக் கூட இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் திட்ட வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள். இந்நிலை மாறாதவரை நம் பிள்ளைகள் சுயமாக சிந்தித்துச் செயல்படுவ தென்பது தூரமான ஒன்றுதான். தாயைப் போல பிள்ளை என்பார்கள் அது நம் தாய்மொழிக்கும் நன்கு பொருந்தும்.
அருகே மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் உள்ள மொழிவெறி நமக்கு இல்லாவிட்டாலும் மொழிப்பற்றாவது சற்று நம்மிடம் இருப்பது நமக்கும், நம் சந்ததியினருக்கும் என்றைக்கும் நல்லது.
உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நாம் நமது இறைத்தூதர்களை அனுப்பி வைத்தோம் என்ற இறைவசனம் (14:04 ) வேண்டாம் மொழி வேற்றுமை...! எல்லாமே அந்த ஆதி இறைவனால் உண்டாக்கப்பட்டவை நமக்குள் ஏன் மொழிவெறி..? மொழிச் சண்டை..? மொழி மோதல்..? என்று
அவ்வசனம் நம்மை வசைபாடிவிட்டுச் செல்கிறது. நாம்தான் நமது திறவைக் காதுகளை கேட்காத காதுகளாக பெரும்பாலும் மூடி முத்திரையிட்டு வைத்துக் கொள்கிறோம். இந்நிலை நீடித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்...?
இந்திய தேசத்தை அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேயர்களின் தாய்மொழி ஆங்கிலம் என்பதாலேயே அவர்களின் மொழியை படிப்பது ஹராம் - அது அந்நிய மொழியென்று ஃபத்வா கொடுக்கப்பட்ட காலம் ஒன்று இத்தேசத்தின் ஆரம்ப விடுதலைச் சுதந்திர வேட்கை காலங்களில் இருந்தது. அது நம்மில் பலருக்கும் நன்கு நினைவிருக்கலாம். உண்மையிலேயே அப்படியொரு ஃபத்வாத் தீர்ப்பு இப்போதுதான் இங்கு மிகவும் தேவைப்படுகிறது.
காரணம் நம்மில் பலர் வெளிநாட்டு வாழ் தமிழர்களைப் போலவே இந்த தங்கத் தமிழகத்தில் "தமிங்கலம்" பேசிக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களது சிந்தனை யாவும் ஆங்கில மயமாகத்தானே இருக்க முடியும்..? இதில் மாற்றுக் கருத்தொன்றும் இல்லையே, நாம் நமது தாய்மொழியின் மீது அதிக அக்கறையை எப்போது எடுக்கப் போகிறோம்.? நாம் நினைப்பது போல் மொழி என்பது அவ்வளவு சர்வசாதாரணமான ஒன்றல்ல..! ஒரு நாட்டின் வளர்ச்சியும், ஒரு வீட்டின் வளர்ச்சியும் அவரவர்களின் மொழி வளர்ச்சியை வைத்துத்தான் கணக்கீடு செய்யப்படுகிறது என்றால் அது மிகையல்ல !
ஸ்பெயின் தளர்ச்சியடைந்ததும், லிபியா வளர்ச்சியடைந்ததும் மொழியினால் தான் என்பது வரலாறு கூறும் உண்மை. மனிதவளம், தேசியவளம் என்பதெல்லாம் ஒரு மொழியின் பின்னணியில்தான் செயல்படுகிறது என்பது கூராய்வாளர்களுக்கு நன்கு புலப்படவே செய்யும்.
மொழி என்பது கண்ணாடிபோன்றது அதில் தாய்மொழி கண் போன்றது
என்பார் எழுத்தாளர் திரு அசோக மித்ரன். மிகச் சரியாகத்தான் அவர் கூறியிருக்கிறார். இன்றைக்கு நம்மிடம் கண் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்ணாடிகள் நிறையவேயிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்று தான். அதில் தான் நமக்கு பெருமையும் கூட...! கண் அது எப்படியிருந்தாலென்ன... நமது கண்ணாடி நமக்கு நன்கு அழகாய், கச்சிதமாய் இருக்க வேண்டும் அவ்வளவுதான். இதைத் தவிர வேறொன்றும் நமக்குத் தேவைஇல்லை.
இதனால்தான் உலகிலேயே ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள்கொள்ளை இலாபம் சம்பாதிப்பது நம் தங்கத்தமிழகத்தில் மட்டும் தான். ஆங்கில மொழிமீது அவர்கள்காட்டிய ஆர்வத்தில் பத்தில் ஒருபங்கை தம் தாய்மொழியின் மீது காட்டியிருந்தால் என்றைக்கோ அவர்கள் தமது வாழ்வில் வளமான வெற்றிகள் பலபெற்றிருக்கக் கூடும். அனைவரின் கவனக்குவிப்பும் "நாம இங்லீஷ் பேசனும், நம்ம புள்ள இங்லீஷ் பேசனும், நம்ம பேரன்கள் இங்லீஷ் பேசனும் " என்பதாகத்தான் இருக்கிறது. யாரும் நாம நம்ம தாய்மொழியில் பேச வேண்டும் என்று நினைப்பதேயில்லை. பிறகு எப்படி தாய்மொழி தமிழ் வளரும்...?
அழியா ஆதிமொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. இது எல்லாக் காலத்திலும் ஏற்றத் தாழ்வுகளை ஏகமனதுடன் ஏற்றுக் கொண்டு செவ்வனே செயல்படும் செம்மொழியாகும். குறிப்பாக அறிவியல் தமிழும், மருத்துவத் தமிழும் மறுக்க முடியாத ஒன்று. துறை எதுவாக இருப்பினும் அத்துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் நிறையவே உண்டு. எனினும் நாம்தான் ஆங்கில மோகத்திற்கு அடிமைப்பட்டு அவைகளை முற்றிலுமாக ஓரங்கட்டி விடுகிறோம். இதனாலேயே இதர துறை சார்ந்த தமிழ்ச் சொற்கள் வளர்ச்சி அடையாமலேயே போய்விட்டன.
சமீபத்தில் இலங்கை சென்று வந்த குர்ஆனிய நவீன ஒப்பீட்டு அறிவியல்
ஆய்வாளர் ரஹ்மத் ராஜகுமாரன் கூறுவார்: "தமிழகத்தில் தமிழ் இருக்கிறது; இலங்கையில் தான் அது வாழ்கிறது" என்று எவ்வளவு அற்புதமான வைரவரிகள் இன்றைக்கு உண்மை நிலை அவர் கூறுவது போல் தானே இருக்கிறது..!
குறிப்பாக இஸ்லாமியர்களின் தமிழ் சற்று அரபுமொழியுடன் கலந்து பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும் இஸ்லாம் ஒருபோதும் தித்திக்கும் திண்மைத் தமிழுக்கு தடைவிதிக்கவில்லை. எனவே இஸ்லாமிய மார்க்கத்தின் கேந்திரங்களான மத்ரசா மற்றும் பள்ளிவாசல் தமிழ் இன்னும் சற்று மேம்படவேண்டும். வௌ்ளிமேடை உரை என்பது ஆலிம்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்ற பெரும்பாக்கியம், அதை மிகச்சரியாக பயன்படுத்தி தங்கள் மொழிவளத்தை மெருகூட்டி அவற்றை பொன்னுரைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறே இஸ்லாமிய இதழ்களும் தங்களது தமிழ்நடையில் ஜனரஞ்சகத்தன்மை வெளிப்படும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் நம் தாய் மொழி வளரும்; நாமும் வளர்வோம்.
முஸ்லிம்களுக்கு தாய்மொழி தமிழ் என்றால் தந்தைமொழி அரபி என்று அடித்துச் சொல்லலாம். சுவனத்தின் மொழி, குர்ஆனின் மொழி, நபிகள் நாயகத்தின் மொழி அரபுமொழியே! எனவே நாம் தமிழுடன் அரபு மொழிக்கும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில் அது தந்தை மொழி.
வேறு எந்தமொழிக்கும் இல்லாத ஒற்றுமைச் சிறப்புகள் இவ்விரண்டிற்கும் இடையே உண்டு. உதாரணமாக தமிழிலுள்ள மூன்று ல,ழ,ள வைப் போல் அரபியிலும் மூன்றுண்டு. அரபுகள் மொழிவளத்திற்கென்று அதிக கவனம் எடுத்துக் கொள்வதுண்டு. எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தெரியாவிட்டால், குறிப்பாக "ளாத்" என்று சொல்லை அதற்கான தொனியில் உச்சரிக்காவிட்டால் மனைவியை விவாகரத்துச் செய்யக்கூட அவர்கள் தயங்கமாட்டார்களாம். அதனால்தான் அரபியர்களுக்கு "அஹ்லுல் ளாத்-ளாத் உடையவர்கள்"என்று பெயர்.
இரு மொழி தெரிந்தவர் இருவருக்குச் சமம் என்பது சீனப்பழமொழி. நாம் எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் எப்படி அம்மொழிகளை பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிகமிக முக்கியம். உலக மொழிகள் யாவுமே உயர்வு, தாழ்வு இல்லாதவை. எனவே
அவற்றில் நாம் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று நமது சுய கருத்துச் சிந்தனைகளை மெல்லப் பூசுவது மிகவும் கொடியது. சமஸ்கிருதம் அது தேவமொழி, அதை உயர்குலத்தோர் தான் கற்கவேண்டும் என்று அந்த மொழியின் மீது புனிதம் பூசப்பட்டவுடன் அம்மொழி தன் வளர்ச்சியை சட்டென நிறுத்திக் கொண்டது. பிறகு அது இன்றுவரை எழுச்சி பெறவே இல்லை என்பது நமக்கு ஒருவகையில் வருத்தமே! காரணம், பல்வேறு இஸ்லாமியச் செய்திகளும் சமஸ்கிருதத்தில் இருந்ததேயாகும். குறிப்பாக வானியல் கணக்குகளை குறித்தும் இந்திய இஸ்லாமிய ஆய்வாளர்கள் இம்மொழியில் எழுதி வைத்திருந்தார்கள் என்பது கூடுதல் தகவல். இதையும்நாம் இன்று இழக்க வேண்டியதாயிற்றே என்ற வருத்தத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.
வாருங்கள் !
தாய் மொழியை நேசிப்போம்..!
தந்தை மொழியை வாசிப்போம்...!