"குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன வழி"

மவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, பேரா, DUIHA கல்லூரி, தாராபுரம்.
மே-15 என்ற உடன் சட்டென நமது நினைவுக்கு வரவேண்டியது அன்று தான் சர்வதேச குடும்ப தினம்.ஐ நா. சபை இந்நாளை கடந்த 1994 முதல் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. குடும்பத்தில் நிதி, நீதி, நிம்மதி, சமத்துவம், நேர்மை, வன்முறையற்ற தன்மை போன்றவற்றை ஏற்படுத்துவதே இந்நாளின் முதன்மை நோக்கம். இன்றைக்கு இவையாவுமே மிகமிக அரிதாகவே இருக்கிறது. எனவே இது குறித்தும் நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பம் அது ஒரு பல்கலைக் கழகம் என்பது முற்றிலும் உண்மை. ஒரு கலைக்கல்லூரியில் பல்வகையான பாடத் திட்டங்கள் இருப்பது போல ஒரு குடும்பத்தில் பலவகையான குணம்கொண்டோர் இருப்பர். அவர்களை நாம்தான் ஒருவருக்கொருவர் அனுசரித்தும், ஆதரித்தும் செல்ல வேண்டும். எடுத்தேன்; கவிழ்த்தேன் என்றிருப்பது முற்றிலும் நமக்கு முரண்பட்ட ஒன்று. இன்றைக்கு அது தான் இல்லங்கள் தோறும் இனிதே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

புரிந்து கொள்ளுதல் : முதலில் ஒருவரையொருவர் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே பல்வேறு குணாம்சங்கள் இருக்கலாம். அவற்றை நாம் முதலில் நன்கு பழகி, கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் தான் நமது வாழ்வை நாம் மேம்படுத்தி, தீரா பிரச்னைகளையும் கூட சுமூகமாக பேசித் தீர்க்க முடியும். சும்மா பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித ஆக்கப் பலன்களும் இல்லை. அவைகளை அனுபவித்து அறியும் போது தான் நாம் நம்மையே நன்கு உணரமுடியும்.
வெகு எளிதில் எல்லா மனிதர்களையும் கற்றுக் கொள்ளவும் முடியும். யானையைக் கூட வெகு எளிதில் புரிந்து கொண்டு அடக்கிவிடலாம். ஆனால் இந்த மனிதனைப் புரிந்து கொண்டு நடப்பது என்பது முற்றும் குதிரைக் கொம்பு தான். நாம் கட்டிய மனைவியும், நாம் பெற்ற பிள்ளையும் திடீர் திடீரென மாறிவிடுகிற சூழலில் நமது குடும்பத்தார்களை புரிந்து நடப்பதென்பது காலத்தின் கட்டாயமே...! நம்மிடம் சரியான புரிதல் இருக்கும் வரை சரியான வாழ்தலும் இருக்கும்.

கூடி ஆலோசித்தல் : குடும்பப் பிரச்சினைகளில் முக்கியக் காரணங்களில் ஒன்று ஒருவருக்கொருவர் கூடி ஆலோசிக்காமல் அவரவர் தனிப்பட்ட முறையில் சுய முடிவுகளை எடுத்துக் கொள்வதே ஆகும். இது முற்றிலும் தவறான ஒரு வழிமுறையாகும். எந்த ஒரு சிறிய செயலையும் தம் குடும்பத்தாருடன் ஆலோசனை செய்து செய்யும் போது அது பெரும் நன்மைக்குரியதாய் மாறிவிடுகிறது. அதில் நமக்கு பயன்கள் பல நிச்சயம் உள்ளன. குறிப்பாக பெரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன இதுவே மிகப் பெரியதொரு நன்மைதானே...!

ஆளுக்கொரு அபிப்பிராயங்களைச் சொல்லும் போதுதான் ஒரு இல்லத் தலைவரால் ஒரு தெளிவானதொரு முடிவை சட்டென எடுக்க முடியும். இதுதான் ஒரு குடும்ப உறுப்பினர்கள் நமக்குச் செய்யும் ஒரு பேருபகாரம். எனவே உறவுகளிடம் ஆலோசனை கேட்பதை ஒருபோதும் நாம் விட்டு விடக்கூடாது. உறவுகள் மேம்பட இதுவும் நமக்கு நல்வழிவகுக்கும். எனவே எவரையும் நாம் குறைவாக மதிப்பீடு செய்துவிடக்கூடாது. குறிப்பாக நமது குடும்பங்களில் என்பதை என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விட்டுக் கொடுத்தல் : விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப்போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்பது யாவரும் அறிந்த அனுபவமொழி.
எனவே நாம் எவரிடமும் விடாபிடியாய் இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். விட்டுக்கொடுப்பதால் நாம் ஒன்றும் தரம் தாழ்ந்து விடப் போவதில்லை. சொல்லப் போனால் நமது தரம் தான் மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு நம்முன்னுள்ள முக்கியப் பிரச்னையே நம்மில் ஒவ்வொருவரும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பது தான் என்றால் அது மிகையல்ல...!
உடல் வாதத்தைக் கூட வெகு சீக்கிரத்தில் நாம் சரி செய்து விடலாம் ஆனால், பிடிவாதத்தை நாம் அவ்வளவு சீக்கிரம் சரி செய்து விட முடியாது எனவேபிடிவாத குணத்தை முதலில் நாம் நம்மிலிருந்து முற்றும் மாற்ற முதலில் முயற்சியெடுக்க வேண்டும். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை. முடியாதது என்பது நமது முயலாமை மட்டும் தான். எனவே முதலில் நமது முயலாமையை இல்லாமையாக்குவோம்.
மன்னித்து விடுதல் : தவறு என்பது யாவரிடமும் வெளிப்படும் ஒன்றுதான். தவறு செய்யாதவர்கள் என்று எவருமே இவ்வுலகில் இல்லை. தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்; அவர்களின் காலமெல்லாம் நபி (ஸல்) அவர்களுடன் முடிந்து போய் விட்டது. இன்றைக்கு பாவத்தொட்டில் தான் நம் வீடுகளில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. வருவோர், போவோர் என்று எல்லோருமே அந்தத் தொட்டிலில் ஆடிப்பார்க்காமல் ஒருவர் கூட இல்லை. எனவே குற்றங்கள் கூடக் கூட நாம் நமது மன்னிப்பின் வாசலை திறந்து கொண்டே இருக்க வேண்டும். இன்றைய மன்னிப்பே நாளைய புன்னகை. மன்னிப்பு வழங்குவதில் நாம் முதல் மனிதராக இருக்கக் கூடாது...?
நாம் மன்னிக்க, மன்னிக்கத்தான் நாமும் நிச்சயம் பிறரால் மன்னிக்கப்படுவோம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதிக இரக்கமுள்ளவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கும் போது நாம் ஏன் நமது மன்னிப்பை நமது குடும்பத்தாரிடத்தில் வெளிப்படுத்தக் கூடாது...? நண்பர்களை உடனுக்குடன் மன்னிக்க முற்படுகிற நாம் நமது உறவினர்களை ஏன் முதலில் தாராளமாக மன்னிக்க முன்படக் கூடாது...? எனவே முதலில் நாம் பயன்படுத்தத் தொடங்கவேண்டிய முக்கிய ஆயுதமே இந்த மன்னிப்பு தான்.
அரவணைத்தல் : ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்லும் போதுதான் ஒரு குடும்பம் நிச்சயம் வலுவானதாக இருக்கும். யாரும் யாரையும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அந்தக் குடும்பம் எப்படி உருப்படும்..? எப்படி முன்னேறும்...? இன்றைய நம் இஸ்லாமியக் குடும்பங்களுக்கு அவசியத் தேவை அந்த அனுசரிப்பும், அரவணைப்பும்தான். அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்னைகள் ஒரு குடும்பத்தில் எழுவதுண்டு, அவற்றை பெரிதுபடுத்தாமல் நாம் தான் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
வீதி என்றால் இரைச்சல் இருக்கத்தான் செய்யும், அவ்வாறே வீடு என்றால் சண்டை, சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை நாம்தான் சீர்செய்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அதன் பாதிப்பு நமக்குத்தான் என்பதை என்றும் நாம் நம் மனதில் ஆழப்பதித்துக் கொள்ள வேண்டும். அட நம்மவூர்ஆலமரம் கூட அதைத்தானே சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. ஆனால் நாம் தான் அதன் விழுதுகளில் ஊஞ்சலாடி விட்டு கண்டும் காணாமல் சென்று விடுகிறோம்.
பாராட்டுதல் : இன்றைக்கு நம்மிடம் முற்றிலும் விடுபட்டுப் போன ஒருபண்பு தான் இது. யார் என்ன செய்தாலும் அது நமது குடும்பத்தினர்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் நிச்சயம் நாம் அதை மனம் விட்டுப் பாராட்ட வேண்டும்.
உறவுகளின் உண்மையான பாராட்டுதான் ஒருவருக்கு கிடைக்கும் முதல் சர்வதேசச் சான்றிதழ் என்பதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சிறு வாழ்த்தைக் கூற நாம் ஏன் தயங்க வேண்டும், அல்லது யோசிக்க வேண்டும்.? யார் யாரையோ வாழ்த்த முற்படுகிற நாம் முதலில் நமது குடும்பத்தினர்களை வாழ்த்தத் தயங்குவது ஏன்.?
குழந்தைகளை, சிறுவர்களைத் தான் பாராட்ட வேண்டும் என்பதல்ல...! நம் குடும்பத்தில் உள்ளவர்களையும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்ளலாம். அதை அவர்கள் எதிர்பார்க்கவும் செய்கிறார்கள். நீங்கள் ஒருமுறை
உங்கள் உறவுகளை மனப்பூர்வமாக பாரட்டிப் பாருங்கள். பிறகு சொல்வீர்கள் ஆஹா...! இவ்வளவு நாள் நான் இந்த அற்புத மந்திரத்தை தவறவிட்டு விட்டேனே… என்று. இதனால் தான் கூறுகிறோம் பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் பாராட்டப்படுவீர்கள்..!

மகிழ்வித்தல் : எப்போதுமே நாம் நமது குடும்பத்தை மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் நமது குடும்பமும் இருக்கும். எனவே நமது குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
சின்னச் சின்ன குறும்புகள், தமாஷ் பேச்சுகள், விளையாட்டுகள் போன்றவை தான் ஒரு குடும்பம் கலகலப்பாக இருக்க உதவும். இறுக்கமான, சோகமான முகத்தை வைத்துக் கொண்டு நம்மால் என்ன செய்து விடமுடியும்..?
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் எந்த ஒரு காரியமும் மிகச்சரியாக நடைபெறும். அங்கு நிம்மதி நீடித்து நிலவும். ஒரு குடும்பத்திற்கு நிம்மதிதான் ஆணிவேர். அது இல்லாமல் அன்றாடம் அவதிப்படும் குடும்பங்கள் எத்தனை எத்தனை...?
அவையாவும் முற்றும் விலக, நமது புன்சிரிப்புகளும், புண்படுத்தாத கேலிகிண்டல்களும் தான் உதவும். சின்னச் சின்ன நையாண்டிகள் நல்லதுதானே அதை நாம் ஏன் செய்து மகிழக்கூடாது? குடும்பத்தைக் குறித்து இஸ்லாம் மிக
நிறையவே அதுவும் நிறைவாகவே பேசிச் சென்றிருக்கிறது இப்படி : இறைவிசுவாசிகளே ! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நீங்கள் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! (அல் குர்ஆன்-66:06)
உங்கள் குடும்பத்தில் சிறந்தவர்தான் உங்களில் சிறந்தவர்; நான் எனது குடும்பத்தில் சிறந்தவராக (பெயர் பெற்று) இருக்கிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்-புஹாரி,முஸ்லிம் )
இப்போதுசொல்லுங்கள் இன்றைக்கு நாம் எப்படியிருக்கிறோம்...? என்றும் நமது குடும்பம் எப்படியிருக்கிறது..? என்று நன்கு யோசிக்க வேண்டிய நேரமிது. அதற்கு மேற்கண்ட சிலவழிகள் நிச்சயம் நமக்கு கை கொடுக்கக் கூடும்.
வாருங்கள்...!
நல்ல குடும்பங்களை போற்றுவோம்!
தீய குடும்பங்களை மாற்றுவோம்..!