இதில் நமக்கென்ன இலாபம்?

இதில் நமக்கென்ன இலாபம்?

 

இந்த பூமியின் சுழற்சிப் பயணம் அழிவை நோக்கியது என்பதை மக்கள் அவரவர் வாழும் காலத்தில் வாழ்வின் பல நேரங்களில் பல கோணங்களில் அதைக் கண்ணால் கண்டு உணர்வதற்குப் பல முன்அறிவிப்புகளைச் செய்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் “ஒரு காலத்தைக் காட்டிலும் அடுத்து வரும் காலம் மிக மோசமானதாக இருக்கும்” என்ற சத்திய வார்த்தையை முத்தாய்ப்பாகக் கூறிச் சென்றுள்ளார்கள்.

உலக வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத வகையில் கடந்த 150 ஆண்டுகளாக “வளர்ச்சி” “முன்னேற்றம்” என்ற பசப்பு வார்த்தைகளைப்  பயன்படுத்தி அதிகார ஆதிக்க முதலாளித்துவ வர்க்கத்தினர் மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றி இந்த பூமியை சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகின்றனர்.

 அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வினால் 6 நாட்களில் மிக அழகாக, நேர்த்தியாக, மனித அறிவுக்கு எட்டாத பல்வேறு இரகசியங்களுடன் இந்த பூமி படைக்கப்பட்டு மனிதனுக்கு அமானிதமாக வழங்கப்பட்டுள்ளது.

 பேராசையுடன் பெரும் இலாபத்தையும் குறிக்கோளாகக் கொண்ட  ஈவு இரக்கமில்லாத பாவிகள் பூமியின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் சுரண்டி நாசம் செய்து வருகின்றனர்.

இதைத்தான் கியூபாவின் முன்னாள் அதிபர் புரட்சி வீரன் ஃபிடல் காஸ்ட்ரோ “இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வல்லரசுகள் என்ற வல்லூருகள் பூமிக்கு அடியில் உள்ள அனைத்தையும் தோண்டி எடுத்து விடுவார்கள்” என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

     நம்  கண் முன்னே நமது நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பேணிப்பாதுகாத்த, மனித இனத்தின் பசியைப் போக்கி உலகிற்கே உணவளித்த நமது வளமான நிலமெல்லாம் பாலை நிலமாக்கப்படுகின்றன. எதிர்கால சந்ததி நீரின்றி, உணவின்றி பஞ்சத்தில் மடிவதற்கான முன் வேலைகள் மிக விரைவாக நடந்து வருகின்றன.

   அல்லாஹ்வின் அமானிதம் அழிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் அதற்குப் பொறுப்புச் சாட்டப்பட்டவர்கள்ஆனால் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் அதுபற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டாமல் முஸ்லிம் சமூகமும் சேர்ந்தே சதியில் சிக்கிக் கிடக்கிறது.

   1653900 801893843161410 2002742787 n

 

GEECL  என்ற GREAT EASTERN ENERGY  COMPANY LIMITED என்ற தனியார் நிறுவனம் ONGCL, INDIAN OIL போன்ற பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 690 சதுர கி.மீ பரப்புக்கு பூமியின் அடியில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரி எடுத்திடும் வரைவுத் திட்டத்தைத் தயாரித்து முந்தைய தி.மு.க ஆட்சியில் ஒப்பந்தம் போட்டு ஆரம்பக் கட்டப் பணிகளையும் துவக்கி விட்டனர்.

   

எரிவாயுவாகப் பயன்படுத்தப்படும் மீத்தேன் வாயு 25 ஆண்டுகளுக்கும், பழுப்பு நிலக்கரி 75 ஆண்டுகளுக்கும் எடுக்கலாம் என்று மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கூறுகின்றன.

ஏறக்குறைய 2000 - 4000 அடி ஆழத்தில் புதைந்துள்ள இந்த மீத்தேன் மற்றும் நிலக்கரியை எடுப்பதற்கு மேல் தளத்தில் உள்ள நிலத்தடி நீரை வெளியேற்ற வேண்டும். இதற்காக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல், நீடாமங்களம் போன்ற ஊர்களில் ஏறக்குறைய 1700 அடி ஆழத்திற்கு குழாய் அமைத்து நிலத்தடி நீரை வெளியேற்றி அந்தப்பகுதியைப் பாலைவனமாக மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி டெல்டா என்றழைக்கப்படும் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகிற்கு உணவளித்த வளமான பகுதி. இந்தியாவிலேயே இப்படி ஒரு வளமான சமவெளிப் பகுதியை வேறு எங்கும் காண இயலாது.

    இந்த மாவட்டங்களிலும் அதைச் சுற்றிலும் 2½ கோடி மக்கள் மிக நெருக்கமாக வாழ்கின்றனர். வேளாண்மைதான் மக்களின் முதன்மைத் தொழில். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்கள் இவை.

1965 க்கு முன்பு, அரபு நாடுகளின் வாய்ப்புகள் பெருகுவதற்கு முன்பு வரையிலும் அந்தப் பகுதி முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் வேளாண்மைமற்றும் சார்புத் தொழிலில்தான் ஈடுபட்டு வந்தனர். சதவிகிதம் சற்றுக் குறைந்தாலும் இன்றும் வேளாண்மையோடு தொடர்புடைய மக்களாகத்தான் வாழ்கின்றனர்.

  பருவ மழை பொய்த்துப் போனதும், காவிரி வரண்டு போனதும், மிச்ச சொச்சம் உள்ள காவிரியில் விஷக் கழிவுகள் கலப்பதும், இவையல்லாமல் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் பயன்பாடு காரணமாக நசிந்து வரும் வேளாண்மைத் தொழிலை விட்டு  மக்கள் வெளியேறி வருகின்றனர்.

 

telta

தமிழகத்தில் கடன் தொல்லையால் உழவர்கள் தற்கொலை செய்வதும், பசி பட்டினியால் எலிக்கறி தின்ற வரலாறும் இந்த மண்ணின் சமீபத்திய வரலாறுகள்.

      தமிழர்களின் கலாசாரமும் பண்பாடும் செழித்து வளர்ந்துள்ள இந்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களிடம் வறுமை கிடையாது, வேலையின்மை கிடையாது, கூடவே கல்வியும் கிடையாது, விழிப்புணர்வும் கிடையாது.

  மார்க்கத் தெளிவும், சமூக விழிப்புணர்வும் இருந்திருந்தால் தாங்கள் வாழும் நிலப்பகுதி அடுத்த சில ஆண்டுகளில் வரண்டு சுடுகாடாக மாற்றப்படும் அவலத்தை அறியாமல் இருப்பார்களா....?

   இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இந்தக் கொடும் செயலை எதிர்த்து மன்னார்குடிப் பகுதியில் மக்களைத் திரட்டி போராடி, போராட்டச் சூழலிலேயே உயிர் நீத்தார்.

ஜனவரி 25 அன்று மன்னார்குடியில் மிகப் பெரும் போரட்டத்தை அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் அறிவித்திருந்தனர். ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. முஸ்லிம் சமூகம் அதில் பெருமளவு கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதால் பல முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு மீத்தேன் திட்டத்தின் ஆபத்தையும், அதன் பின்புலத்தில் உள்ள சூழ்ச்சிகளையும், இப்போராட்டத்தின் அவசியத்தையும் எடுத்துக் கூறினேன்.

வழக்கம் போல கவனம் செலுத்தப்படவில்லை.

       போராட்ட நாள் முடிந்து அடுத்த நாள் மன்னார்குடி அருகில் உள்ள பொதக்குடி மற்றும் மயிலாடுதுறை அருகில் உள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் மீலாது விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இந்த ஆபத்துகளை எடுத்துக் கூறியபோது மக்கள் கவலையுடன் உள்வாங்கினார்கள். மக்கள் விழிப்புணர்வு பெறத்தயார், அவர்களை பொதுப் பிரச்சனைகளுக்கு பயிற்றுவிக்க சமூகத் தலைமை தயாராக இல்லை.

    மீத்தேன் எடுக்கும் திட்டம் தொடர்ந்தால் 15 இலட்சம் ஏக்கர் நிலம், ஆண்டிற்கு 34 இலட்சம் டன் உணவு உற்பத்தி, குடிநீர், காற்று, மரம், செடி எல்லாம் அழிந்து போகும். 100 ஆண்டுகளுக்குக் கிடைக்கப் போகும் மீத்தேன் மற்றும் நிலக்கரிக்கு ஆயிரக்கணக்கான ஆண்டு உழவு மற்றும் உணவுப் பாரம்பரியத்தை அது உருவாக்கிய தமிழர் பண்பாட்டை சீரழிக்க நினைக்கிறது முதலாளித்துவத்திற்கு விலை போன மத்திய, மாநில அரசுகள்.

மாநில அரசு இதற்கு தற்காலிகத் தடை விதித்திருக்கிறது என்றாலும் இலாபம் ஒன்றே குறிக்கோள் என்று திரியும் வல்லூருகள் விடமாட்டார்கள்.  

   மேற்கே கெயில் நிறுவனம் கொங்கு மண்டலத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கிறது. தெற்கே  கூடங்குளமும் மற்றும் நியூட்ரினோ ஆய்வும் சுற்றி வளைத்துவிட்டது. வடக்கே சென்னை வாழத் தகுதியற்ற நரகமாக மாறிவிட்டது. இப்போது கிழக்கே பொன் விளையும் பூமியை முழு பாலைவனமாக மாற்றும் முயற்சி நடக்கிறது.

                    இன்ஷா அல்லாஹ் இனியாவது ஜமாஅத் நிர்வாகம், உலமா பெருமக்கள், சமூக ஆர்வலர்கள் நம் வாழும் சூழலை அறிந்து மனிதனுக்கும், பூமிக்கும் தீங்கு இழைக்கும் மீத்தேன் திட்டம் போன்ற எந்த நாசகார திட்டம் வந்தாலும் அதை சட்டரீதியாக தொடக்கத்திலேய தடுத்து நிறுத்திட வேண்டும்.

இல்லையென்றால் பொதுப்பிரச்சனைகள் எதிலும் முஸ்லிம்கள் அக்கறை இல்லாதவர்கள்  என்ற பழிச்சொல் தொடரும். அது நாளை இறைவன் முன்னாள் தீராத இழிச்சொல்லாக  உருவெடுத்து நிற்கும்.