தீர்வை நோக்கி…..

sen

தீர்வை நோக்கி….. சக்திவேல்.

அமர்த்தியா சென் வங்கப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் புழுக்களைப்போல, பூச்சிகளைப்போல மடிவதை நேரில் கண்டவர், அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியும் செய்தவர். அவரின் பொருளாதார ஆய்வுகள் வறுமையையும், பஞ்சத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வறுமையிலிருந்து மக்களை மீட்பதே அவரின் லட்சியமாகக்கூட இருந்தது. அவர் தன்னுடைய சுயசரிதையில் இளம் வயதில் தன் மனதை ஆழமாக

பாதித்த ஒரு நிகழ்வை பதிவு செய்கிறார்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு உடல் முழுவதும் குருதியுடன் ஓடிவரும் ஒருவனைப் பார்க்கிறார். அவன் ஒரு இஸ்லாமியன். பெயர் காதர்பாய். இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு வேலைக்குச் சென்றிருக்கிறான். அவன் ஒரு இஸ்லாமியன் என்று அறிந்த இந்து வெறியன் கத்தியால் குத்தியிருக்கிறான். சென்னின் அப்பா அவனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறார். அவன் சென்னின் அப்பாவிடம் என் மனைவி வீட்டில் இருந்து கிளம்பும் போதே இந்துக்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் சாப்பாடு இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கெஞ்சினாள். நான் அவள் சொன்னதை கேட்கவில்லை. எங்கேயாவது வேலை கிடைத்தால் குடும்பம் சாப்பிட கொஞ்சம் பணம் கிடைக்கும் என்றுதான் இங்கு வந்தேன். எல்லாமே தவறாகி விட்டது என்று நொந்து கொண்டே இருந்தான் என்கிறார் சென்.

இந்த நிகழ்வு சென்னை மிகவும் பாதித்திருக்கிறது. மதவெறி ஒருபக்கம் இருந்தாலும் காதர் பாயின் குடும்பத்திற்கு சரியாக உணவு கிடைத்திருந்தால் இந்த மாதிரியான இடத்திற்கு வேலைக்கு வந்திருக்க மாட்டான். அவனின் வறுமையும், குடும்பத்தின் பசியும் அவனின் இந்த நிலைக்கு மூல காரணம் என்கிறார்.

இதன் வழியாக ஆராய்ந்து பார்த்தால் வறுமையில் சுழல்பவர்கள்தான் எல்லா வெறிகளுக்கும், அவமானங்களுக்கும் பலியாகிறார்கள். இதே நிலை பணக்காரர்களுக்கு ஏற்பட்டால் வெளியில் தெரிவதே இல்லை...
மனித வாழ்க்கை கடினமானது. மிக மிகக் கடினமானது வறுமையால் பீடிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவரின் வாழ்க்கையுமே மிகவும் சிக்கலானது. வறுமையால் பல்வேறு அலைக்கழிப்புக்கு உள்ளானவனின் வாழ்க்கையை செய்யாத குற்றத்திற்குக்  கிடைத்த தண்டனை என்றே கருத முடியும். வறுமை மிகவும் வலிமையானது. மனிதனுக்குள் மிஞ்சிய எல்லா நல்லவற்றையும் அடியோடு அழித்துவிடும்... ஒரு கட்டத்தில் அவன் திருடுவான்... கற்பழிப்பான்... பெண்களை மிரட்டி பணத்தை, நகையைப் பறிப்பான்... கொலை செய்வான்... எதற்கும் தயங்க மாட்டான்... அதிகப் பணமும், சொகுசான வாழ்வும் கூட மனிதனுக்குள் மிஞ்சிய எல்லா நல்லவற்றையும் அடியோடு அழித்துவிடும்
ஒரு மனிதனை எது மிருகமாக மாற்றியிருக்கிறது என்பதைப் பற்றி அந்த மனிதனிடமே உளவியல் ரீதியாக ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அவன் சார்பாகவும் இயங்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாக ஒருவனைப் பற்றி மதிப்பிடும் நம் பொதுப்புத்தியை, உணர்வெழுச்சியை சிந்தனையை நோக்கி நகர்த்த வேண்டும். எந்தக் காலத்திலும் உண்மையை நம்மால் பரிசுத்தமான வடிவில் எதிர்கொள்ள முடிவதில்லை. இந்த மாதிரி விசயங்களில் உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறோமா என்று முதலில் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

இங்கே வறுமையை ஒழிக்காமல் எந்த குற்றத்தையும் தடுக்க முடியாது....