நாம் எதை அருந்துகிறோம்?

   அ. முஹம்மது நயீம், காட்டுபாவா மேல்நிலைப் பள்ளி, தென்காசி.
லிண்டேன், டி,டி,டி, மாலதியான் இவை என்ன தெரியுமா? பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களாகும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பலர் அருந்தும் பெப்சி, கோக் போன்ற

பானங்களில் குறிப்பிட்ட இந்த ரசாயனங்கள் மேலை நாடுகளில் கலக்கப்படுவதைவிட 36 மடங்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா, சத்தீஸ்கர் போன்ற மாநில விவசாயிகள் பருத்திச் செடியின் பூச்சிகளைக் கொல்ல இந்த பானத்தை பூச்சிக் கொல்லி மருந்தாக பயன்படுத்துகிறார்கள் என்று பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது.
இவ்வளவு ஏன்? இந்த பானத்தைப் பயன்படுத்தி கழிவரைகளில் கறைகளை எளிதில் அகற்றிவிட முடியுமாம்? இந்த பானத்தில் மனிதனின் பல்லைப் போட்டால் சிலமணி நேரங்களில் கரைந்து விடுமாம்? அது எந்த பானம் தெரியுமா?
அதுதான் “கோக்” தனது லாபத்தில் 70 சதவிகிதத்தை இருநூருக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுரண்டுகிறது “கோக்” நிறுவனம்.
ஒவ்வொரு நொடியும் “கோக்”கின் ஏதாவது ஒரு பானம் உலகெங்கிலும் 13000 பேர்களால் அருந்தப்படுகிறது.
குனிந்தே கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளும் அளவுக்கு வளமிக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராம மக்கள் இன்று தண்ணீரைத் தேடி 5மைல் தூரம் நடந்து செல்கின்றனர். உபயம் “கோக்” நிறுவனம்தான்.
ஆம் ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான நீரை ஒரு லிட்டர் வெறும் 10 பைசாவிற்கு அரசிடமிருந்து வாங்கி அதை பதினாறு ரூபாய்க்கு நம்மிடம் விற்று கொள்ளை லாபம் பார்க்கும் அந்நிய அமெரிக்க நிறுவனம் “கோக்”தான் இத்திருப் பணியைச் செய்திருக்கிறது.
இந்தியாவின் வளமிக்க பல கிராமங்களில் விவசாயத்தின் உயிர் நாடியான தண்ணீரை உறிஞ்சி விவசாயத்துக்கு கல்லறை கட்டும் மோசமான ஒரு நிறுவனத்தின் ஆரோக்கியமற்ற கேடு பயக்கும் குளிர்பானத்தைத்தான் நாம் கொஞ்சம் குடி! கலாட்டா பண்ணு என அருந்திக் கொண்டிருக்கிறோம்.
காலனியாதிக்க நாடுகளில் (உ.ம் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் பங்களாதேஷ்) கிரிக்கெட்டை பிரபலப்படுத்தி அதில் விளையாடும் வீரர்களை விளம்பரதாரர்களாக்கி, அவர்கள் அருந்தும் கோலா பானங்களை ஏதோ ஹீரோக்களின் பானம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எளிதில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த இளநீரும், ருசிமிக்க மோரும், குளிர்ச்சி நிறைந்த எழுமிச்சை சாறும், புத்துணர்ச்சி அளிக்கும் நீராகரமும் இந்த மண்ணின், தமிழனின் பானமாக இருந்தது என்று வருங்காலத்தில் எழுதப்படும் நிலையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். யோசியுப்போம்! குளிர்பானம் என்ற பெயரில் நாம் எதை அருந்துகிறோம்? விஷக்கழிவை! வேதனையை!