“மனித மனங்களை வெல்லுதல்”

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

“மனித மனங்களை வெல்லுதல்” இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகளும், ஆன்மீக பயிற்சிகளும், வணக்க வழிபாடுகளும் மனிதனை புனிதனாக மாற்றுகிறது, உயரிய மானுட விழுமியங்களை ஒவ்வொரு தனி மனித வாழ்வினதும் அணிகலன்களாக போதித்து விடுகிறது.

“நான் உயரிய குணாதிசியங்களை பரிபூரணப்படுத்துவதற்காகவே

அனுப்பப் பட்டுள்ளேன்” என மனித குல மாணிக்கம் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் சிறந்த முன்மாதிரிகள் இருக்கின்றன” என அல்-குர்ஆன் கூறுகிறது.

பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற நாடுகளிலும் பார்க்க சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடுகளில் உயரிய இஸ்லாமிய விழுமியங்களால் பண்பாட்டு பாரம்பரியங்களால் மனித குலத்திற்கான தெளிவான ஒரு செய்தியை முன்வைக்கின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

இஸ்லாமிய வழிகாட்டல்கள் அறிவுப் பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான இயற்கையோடு இயைந்து செல்கின்ற தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியமான மென்பொருட்களாக மாத்திரம் இருக்கிறது. துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உலகம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கோரமான, அகோரமான வியாக்கியானங்களை உலகின் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு விசுவாசியும் தனது சுற்றுச் சூழலில் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களினாலும், உயரிய மானுட விழுமியங்களினாலும் நேர்மறையான கதிர்வீச்சை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடை முறை வியாக்கியானமாக மாறுவதே இஸ்லாமிய தஃவாவின் முதலாவது படியாகும்.

மனித குல விமோஷனத்திற்காக கருணையின் வடிவாக அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அருளாகவும் மனித குல பிணிகளுக்கான நிவாரணியாகவும் அல்குர்ஆனை அறிமுகம் செய்த மாதம் புனித ரமழான் மாதம். அது இப்போது நம்மை கடந்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் ரமளான் நம்மில் ஏற்படுத்திய உண்மையான மாற்றத்தை வாழ்வாக கொண்டு இறைவனின் அன்பை பெற்று பயணிப்போம்.

“நபியவர்களது வாழ்வு குர்ஆனாகவே இருந்தது” என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டதுபோல் இந்த புனிதமிகு மாதத்தில் நாம் பெறுகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களும் உயரிய மனித விழுமியங்களும் நமது வாழ்வில் பிரதிபலிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக..!