விசா மறுப்பும், சிவப்புக் கம்பள விரிப்பும்:

unnamedஅமெரிக்காவின் "இயற்கையான கூட்டாளி" மோடி!
"இந்தியாவின் ரீகன் மோடி" என்று, மோடியை அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனுடன் ஒப்பீடு செய்யும் கட்டுரை, (நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு) 21.04.2014 தேதியிட்ட ஆங்கில 'தி இந்து' நாளிதழில் வெளியானது. அதை எழுதியவரும் ஒரு அமெரிக்கர்தான். ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில், உள்துறை, வெளியுறவுத்

துறைகளில் பொறுப்பு வகித்த அமெரிக்கர் அவர். அந்தக் கட்டுரை கிட்டத்தட்ட இந்தியர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட ஆலோசனை போன்று இருந்தது வேடிக்கையானதோ தற்செயலானதோ அல்ல.
"மோடியும், ரீகனைப் போல அடிமட்டத்திலிருந்து வந்தவர். இருவருமே புகழ்பெற்ற, வெற்றிகரமான மாநில நிர்வாகிகள். மோடியும் ரீகனைப் போலவே, சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளர்" எனத் தொடங்கும் அந்த கட்டுரை, "பெரும்பாலும் ஆங்கிலம் பேசாத, தேநீர் விற்ற ஒருவர் நாட்டை ஆள்வதா என, மோடியை மட்டமான ஒரு பார்வையில் பார்த்து, உடலை குலுக்கிக் கொள்கின்றனர் கலாச்சார மேட்டிமைத்தனம் கொண்ட இந்தியர்கள்" என மோடியை விமர்சிப்பவர்களை குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவிலும் ரீகனைப் பார்த்து அப்படித்தான் அங்குள்ள கலாச்சார மேட்டிமைத்தனம் கொண்டவர்கள் நடந்துகொண்டனராம். மோடி-ரீகனை இழிவுபடுத்துபவர்களுக்குள் இப்படி ஒரு பொதுத்தன்மை இருக்கிறதாம்.
சூதுவாதில்லாத, பேதமைகொண்ட ரீகன் அதிபராவது என்பதெல்லாம் அதீதமான விஷயம் என்று கருதிய மேட்டிமைத்தனம் கொண்ட அமெரிக்கர்கள், ரீகன் அதிகாரத்திற்கு வந்தால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து தேர்தலுக்கு முன்னர் கடுமையான எச்சரிக்கை விடுத்தனராம். மோடியை தற்போது இந்தியாவில் வசைபாடுவது போன்று கலாச்சார மேட்டிமைத்தனம் கொண்ட அமெரிக்கர்களும் ரீகன் ஒரு இனவெறியர் என்றனராம்.
"ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சியை முன்னெடுக்க, அரசதிகாரவர்க்கத்தைவிட, திடமான, வளரும் சந்தைப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைக்கும் யார் மீதும் இனவெறியர் என்ற பதத்தை கலாச்சார மேட்டிமைத்தனம் கொண்ட அமெரிக்கர்கள் பயன்படுத்துவார்களாம். உண்மைகளும் பகுத்தறிவும் தோற்கும்போது இதுபோல முத்திரை குத்தும் வேலைகளில் அவர்கள் இறங்குவார்களாம்" என்று கூறும் கட்டுரையாளர் அத்தோடு நிற்கவில்லை.
இங்கும்கூட விமர்சகர்கள் மோடியை மதவாதி என்று முத்திரைகுத்துகின்றனர். அமெரிக்காவில் இனவெறியர் என்று ஒருவரை ஒருவர் தூற்றுவது போன்றதுதான் இது. ரீகன் விஷயத்தில் போலவே மோடி மீதான குற்றச்சாட்டுகள் தகுதியை இழக்கும்போது, சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் எதிரிகள் இதுபோல (மோடி ஒரு மதவாதி என்ற குற்றச்சாட்டை) மூட்டிவிடுகிறார்களாம்.
"மோடியை விமர்சிப்பவர்கள் 2002 குஜராத் கலவரங்களுக்காக இன்னும் தொடர்ந்து அவரை குற்றம்சாட்டுகிறார்கள். அந்த கலவரங்களும் அதற்கு முன்னர் ரயில் எரிக்கப்பட்ட நிகழ்வும் பெரும் சோகங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உச்சநீதிமன்றமே நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் முடிவை நிராகரிக்கும் மோடியின் அரசியல் எதிரிகள் சந்தேகத்திற்குரியவர்கள். மோடி எந்த தவறும் செய்யவில்லை என்று சுத்திகரிக்கப்பட்டுள்ளதை ஏற்கும் அளவிற்கு அவர்களுக்கு ஊக்கமும் இல்லை. மோடியை கறைபடுத்துவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து அரசியல் லாபம் அடைகின்றனர். இனவாதம் என்ற துருப்புச்சீட்டை அமெரிக்க அரசியலில் பயன்படுத்துவதற்கு இணையானது இது" என்று கட்டுரையாளர் நீட்டி முழக்குகிறார்.
"அமெரிக்காவில் ரீகன் விரும்பத்தகாதவராக பார்க்கப்பட்ட அதே வட்டாரங்களில்தான் மோடியும் விரும்பத்தகாதவராக பார்க்கப்படுகிறார். இடதுசாரி சார்பு கொண்ட கலாச்சார மேட்டிமைத்தனம் கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க வெளியுறவுத் துறை மோடிக்கு விசா மறுத்தது.
சிறுபான்மை மதங்களை தடைசெய்த, பிற மதங்கள் மீது வெறுப்பைக் கற்பிப்பதையே தேசிய கொள்கையாகக் கொண்டுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு விசா தருவதை அமெரிக்கா வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது மோடியை தனிமைப்படுத்தி நிராகரிப்பது, அதுவும் உச்சநீதிமன்ற புலனாய்வுக்குப் பிறகு அப்படிச் செய்வது வெட்கக் கேடானது" என அமெரிக்காவையும் கண்டிக்கத் தவறவில்லை அந்த அமெரிக்கர்.
"பொருளாதாரத்தில் அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவதற்கும், ஊழலுக்கும் எதிரான கடும் எதிர்ப்பு என்ற அடிப்படையில் பார்க்கும்போது, தேநீர் விற்றவரான மோடி, (அமெரிக்க பிற்போக்கு இயக்கமான) தேநீர் கட்சியுடன் பெருமளவு ஒத்துப்போகிறார்.
இந்தியா தனது ரீகனை மோடியின் உருவில் கண்டுணர்ந்துவிட்டது. அமெரிக்கா தனது மோடியை எப்போது கண்டுணரும்?" என அமெரிக்காவிற்கு ஒரு மோடி கிடைக்க மாட்டாரா என ஏக்கத்துடன் முடிக்கிறார் கட்டுரையாளர்.
இதுதவிர பாகிஸ்தான், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை பற்றி கட்டுரையில் இடம்பெற்றுள்ள வேறு பல விவரங்கள், ஆர்எஸ்எஸ் சிந்தனைகளுக்கோ அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மடத்தனத்திற்கோ சற்றும்குறைந்தவை அல்ல! எனினும் நமக்கு மோடியைப் பற்றி கட்டுரையாளர் வழங்கும் சித்திரம் மிகவும் முக்கியமானது. அது, மோடியை தங்களது இயற்கையான கூட்டாளியாகக் கருதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின், அதன் ஒடுக்குமுறைக் கருவியான அமெரிக்க அரசின் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அமெரிக்காவின் 40ஆவது அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் பதவிக்கு வந்த காலகட்டம் எப்படிப்பட்டது?, அதிபராக அவர் எத்தகைய பாத்திரத்தை ஆற்றினார்? அமெரிக்க அரசும் ஆளும் வர்க்கமும் அங்குள்ள சிறுபான்மையினரை, ஒடுக்கப்பட்டவர்களை ஒருபுறம் எப்படி நடத்துகின்றது? மற்றொரு புறம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அமெரிக்க மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதோடு, நிதிமூலதனம், பெருநிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு மோடி எப்படியெல்லாம் சேவை செய்யக்கூடியவர் என்பதையும் புரிந்துகொள்ளாமல், மோடி அமெரிக்காவின் இயற்கையான கூட்டாளி என்பதையும் புரிந்துகொள்ள முடியாது.
ரீகனும் மோடியும்!
ரீகன் அமெரிக்க அதிபராக ஆற்றிய பாத்திரத்தைத்தான் மோடி இந்தியப் பிரதமராக ஆற்றப்போகிறார், ஆற்றி வருகிறார் என்பதுதான் அபாயங்களில் எல்லாம் தலையாய அபாயம்.
சினிமா நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி, கலிஃபோர்னியா மாநில ஆளுநராக பதவி வகித்து, குடியரசுக் கட்சி சார்பில் 1981 முதல் 1989வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் ரீகன். (இவருடைய துணை அதிபராக இருந்த அப்பன் புஷ்தான் அதன் பிறகு அதிபர். பின்னர் அமெரிக்க அதிபராக பதவி வகித்த மகன் புஷ் ஒரு மாங்காய் மடையன் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான்).
அமெரிக்க பொருளாதாரத்தின் திசைவழியை மாற்றியது ரொனால்ட் ரீகன்தான். அவர் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை வலதுசாரிகளும், பெரு நிறுவனங்களும் இன்றளவும் கொண்டாடுகின்றனர். (மோடியையும் பெரு நிறுவனங்களும், வலதுசாரிகளும் ஒருசேரக் கொண்டாடுகின்றனர்). காரணம் ரீகனது கொள்கைகளால் பெருநிறுவனங்கள் கொழித்து வளர்ந்தன. ஆனால் சராசரி அமெரிக்கர்களின் நிலையோ பரிதாபத்திற்குரியதாய் மாறிப்போனது. ஏழை-பணக்காரர் இடைவெளி மிகத்தீவிரமாக அதிகரித்தது.

ரீகன் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கையை கீழ்நோக்கி ஒழுகும் பொருளாதாரம் (Trickle down Economics) என்ற பெயரால் அழைக்கிறார்கள்.unnamed 1

அது என்ன கீழ்நோக்கி ஒழுகும் பொருளாதாரம்? தொழில்-வணிகத்திற்கும், உயர்வகுப்பினருக்கும் வரிச்சலுகைகள் உள்ளிட்ட பிற பொருளாதார ஆதாயங்களை அளிப்பதன் மூலம், ஒட்டுமொத்தமாக பொருளாதாரம் மேம்பட்டு ஏழைகளும் பயனடைவார்கள் என்பதுதான் இதன் அடிப்படை. அதாவது, மேலே நிறைய தேங்கினால் அது கீழ்நோக்கி ஒழுகுமாம்.

தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் முதலீடுகள் அதிகரித்து, பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பயன்கள் தனியார் நிறுவனங்கள் - முதலாளிகளிடமிருந்து (மேலிருந்து) சாமானிய மக்களை (கீழ்நோக்கி) வந்தடையும் என்பது அந்த கொள்கை. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பதுதான் இந்த கொள்கை. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி கண்ணை மறைத்த பிறகு கொக்கை பிடிக்கும் கதை.

ரீகன் தனியார் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியதோடு தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்தினார். (மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இதற்கான வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். நிறுவனங்கள் தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொள்ள அனுமதித்தால் என்ன என்று கேட்கிறார், மோடியின் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்).

அரசாங்கம் என்பது எந்த வகையிலும் பொருளாதார சுதந்திரத்தில் தலையிடக் கூடாது, தனியார் நிறுவனங்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்க வேண்டும், அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம், தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும், அரசு முடிந்தவரை சிறியதாக இருக்க வேண்டும் (Less Government) என்பதெல்லாம் ரீகனின் கொள்கைகள்.

இந்த கொள்கைகளால் பங்குச்சந்தை சூதாட்டம், பெரு நிறுவனங்களின் ஏகபோகம், விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்கள், நிதிமூலதனத்தின் ஆதிக்கம் ஒருபுறமும், எந்த நேரமும் தெருவில் வீசியெறியப்படக் காத்திருக்கும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கே பெரும் கடனாளிகளாகவும் மாறிப்போன பெரும்பான்மை அமெரிக்கர்கள் மறுபுறமும் என சீரழிந்திருக்கிறது அமெரிக்கா.
Occupy Wall Street என்ற பெயரில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்களின்போது, நாங்கள் (வேலை இன்மை, தனி நபர் கடன் சுமை, வீட்டுக் கடன் கட்ட முடியாமல் தெருவில் விடப்படுதல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள்) 99%, நீங்கள் (பெருநிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள்) 1% என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது அதனால்தான். உலகை அடித்து உலையில் போடும் அமெரிக்காவிற்கே இதுதான் கதி என்றால் இந்தியா போன்ற நாடுகளை எண்ணிப் பாருங்கள்.
சிறிய அரசும், வரிப் பயங்கரவாதமும்!
பாஜக-மோடியின் இரண்டு முக்கிய முழக்கங்கள்: சிறிய அரசு, பெரிய நிர்வாகம் (Less government, More governanace ); மற்றொன்று வரி பயங்கரவாதத்திற்கு (Tax terrorism) முடிவு கட்டுதல். இரண்டுமே பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
சிறிய அரசு என்பதும், வரிப் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுதல் என்பதும் ஏதோ மோடியே கண்டுபிடித்த புரட்சிகர முழக்கம் என்பது போல ஊதிப்பெருக்கப்பட்டது. உண்மையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரிக் குழுவான தேநீர்க் கட்சியின் (Tea party) நீண்ட கால முழக்கம்தான் இவையிரண்டும். அவற்றை இரவல் பெற்றுதான் மோடி முழங்கினார். அந்த வழியில்தான் மோடியும், அவரது அரசும் செயல்பட்டு வருகின்றன.
(தேநீர்க்கட்சி (Tea Party) என்பது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு பகுதி. அமெரிக்க தேர்தல்களில் இந்தக் குழுவின் ஆதரவாளர்கள் வெற்றி பெறுகின்றனர். அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்படும் அமைப்பு என்றும் இதைச் சொல்லலாம். தனியார்மயப் பொருளாதாரம், பெரு நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை தடுப்பது, அரசின் செலவினங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய முழக்கங்கள்).
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லியில் ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்ற மாநில சுற்றுலா அமைச்சர்களின் மாநாட்டில் பின்வருமாறு பேசினார்: "எங்களுடைய அரசாங்கம், குறைவான வரிவிதிப்பு அரசாங்கம்; அதிக வரி விதிக்கக்கூடிய அரசு அல்ல. வரி செலுத்துவோரின் கையில் அதிக பணத்தை விட்டு வைத்தால், அவர்கள் அதிகம் செலவழிப்பார்கள். பொருளாதாரமும் விரிவடையும். குறைவான வரி விதிக்கும்போது பொருள்களின் விலை மலிந்து, விற்பனைத்திறன் அதிகரிக்கும்".
வரிச்சலுகைகளை வாரி வழங்கும்போது, வரி விதிப்பு குறையும்போது, அரசின் வருவாய் குறையும். இந்த வருவாய்க் குறைவை அரசு எப்படி ஈடுகட்டும்? மானியங்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் வெட்டுவதன் மூலமாகத்தான். இதற்கேற்ப அரசு சிறிய அரசாக இருந்தால்போதாதா? அப்புறம் திட்டக் குழுவெல்லாம் எதற்கு? மூடிவிட வேண்டியதுதானே. அமெரிக்காவில் ஏது திட்டக்குழு. எலி ஏன் அம்மணத்தோடு ஓடுகிறது என்று இப்பொழுது புரிகிறதா?
விசா மறுப்பும், சிவப்புக் கம்பள விரிப்பும்
மோடி, அமெரிக்காவின் இயற்கையான கூட்டாளி. ஆனால், மோடிக்கு அமெரிக்க விசா வழங்க மறுக்கப்பட்ட விவகாரம், இதையெல்லாம் மறைக்கும் தொங்கு திரையாக கண்ணை மறைக்கிறது. அதை சற்றே விலக்கிப் பார்த்துவிடலாம்.
அமெரிக்கா இவ்வளவு நாளாக மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது பொருட்படுத்தத் தக்கது அல்ல. அது அறநெறி சார்ந்த நடவடிக்கை அல்ல. அத்தகைய நடவடிக்கை பற்றிய மயக்கங்களும் தேவையில்லை. ஏனெனில், அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமலேயே மோடிக்கு விசா வழங்குவது அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டே அல்ல. அதனால்தான் மோடியின் தண்டுவடம் கூசும் அளவிற்கு அமெரிக்கா தற்போது அவரைப் புகழ்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், வர்த்தக அமைச்சர் என வரிசை கட்டி வந்து புகழ்ந்துவிட்டுச் செல்கின்றனர். அதனால்தான், "மோடி அரசை புகழ்வதில் தாராளம் காட்டுகிறீர்கள்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம் நாசூக்காக கிண்டலடித்தார், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.                                unnamed 2
இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார் மோடி. அங்கு அவருக்கு தடபுடலாக வரவேற்பு காத்திருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுவது பற்றியெல்லாம் பேசப்படுகிறது. அதேசமயம், இவ்வளவு காலம் விசா மறுத்ததற்காக அமெரிக்கா மீது தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்டப்போவதில்லை என்பதுதான் மோடியே அறிவித்திருக்கும் வெளியுறவுக் கொள்கை. பகைமை பாராட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், அமெரிக்க அரசை மகிழ்விக்கும் வேலைகளில் மோடி இறங்கியிருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
காப்பீட்டுத் துறையிலும், பாதுகாப்புத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை 49 விழுக்காடாக அதிகரித்திருப்பது, அதை நூறு விழுக்காடாக உயர்த்துவதற்கு திட்டம் வைத்திருப்பது, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இந்தியாவில் உள்ள அணுஉலைகளை சோதனையிட அனுமதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பது (Ratification of IAEA Additional protocol), அமெரிக்க நிறுவனங்களிடம் வாங்கி அணுஉலை அமைக்கும் திட்டங்களை விரைவுபடுத்துவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பதற்கு தருணம் பார்த்திருப்பது, திட்டக்குழு ஒழிப்பு என பட்டியல் நீள்கிறது. உலகமயமாக்கலின் கொடுங்கரங்களும் இன்னும் அதிவேகமாக நம்மை நோக்கி நீள்கின்றன.
                                                                                                                                                                                          -ப.ரகுமான்