சிறு விசயங்கள்தான் என்றாலும், ...!

   Hilda Dokubo crying 1  மனித வாழ்க்கை மற்றவர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்ட ஒன்று. அது நெருங்கிய உறவுகளாக இருக்கலாம், தொலைவிலான உறவுகளாக இருக்கலாம், அல்லது உறவுகளாகவே இல்லாமலும் இருக்கலாம். இரத்த உறவு இல்லாமல் இருந்தாலும் மனித உறவு என்பது இல்லாமலாகிவிடாது. பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையின் சுழற்சி இப்படித்தான் சுழன்று கொண்டிருக்கும். சுவனமோ

நரகமோ அங்கும் சக மனித உறவுகள் இருக்கத்தான் செய்யும்.
வாழ்க்கை மற்றவர்களுடன் சங்கமிக்கும் போதுதான் அர்த்தம் பெறுகின்றது. மனிதம் மலருவது மற்றவர்களுடனான ஊடாட்டத்தின் (நெருங்கிய தொடர்புகள்)மூலமாகத்தான். மற்றவர்கள் மாத்திரமல்ல மற்றவைகளும் மனிதம் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பவைதான். இதன் கருத்து உயர்திணைகள் மாத்திரம் அல்ல, அஃறிணைகளும் மனித வாழ்வுடன் இணைந்தவை என்பதே. இன்றைய நாகரிக உலகம் உயர்திணைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை அஃறிணைகளுக்கு கொடுத்து விட்டன. மனிதம் என்பதை அஃறிணைகளுடன் அதிகம் இணைத்துப் பார்க்கின்றதே ஒழிய உயர்திணைகளுடன் குறைவாகத்தான் இணைத்துப் பார்க்கின்றது.
சக மனிதர்களுடன் தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு, தனக்குள் மாத்திரம் முடங்கிப் போகும் மனிதர்கள் இந்த வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், பூமி மீதான ஜனனத்தின் யதார்த்தத்தை அர்த்தமற்றதாக்கியவர்கள். இவை எப்படிப் போனாலும் இந்த மனித வாழ்க்கைக்கென இறைவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நியதிகளை சரியாக உள்வாங்கிக் கொள்ளாதவர்கள். மனித வாழ்வின் வெற்றிக்கான மூலங்களை சரியாக விளங்காதவர்கள். ஆக மொத்தத்தில் மனித வாழ்வின் தோல்வியை தனதாக்கிக் கொண்டவர்கள்.
மனிதர்கள்; நிறத்தில், இயல்பில், உணர்வில், புரிதலில், குலம்கோத்திரத்தில், அனைத்திலும் வேறுபட்டவர்கள். காரணம் முரண்பாட்டை அனுபவிப்பதற்காக அல்ல. இணக்கப்பாடு கொடி கட்டிப்பறப்பதற்காக. இப்படியான வேறுபாட்டை அல்லாஹ் இணக்கப்பாட்டுக்கான அடையாளமாக அறிமுகப்படுத்துகின்றான்.
“உங்களை நாம் குழுக்களாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் பரஸ்பரம் அறிமுகம் ஆகிக்கொள்வதற்காக” ( சூரா ஹுஜ்ராத்)
எனவே, உலக வாழ்க்கை சேர்ந்து வாழ்வதற்கானது பிரிந்து முரன்படுவதற்கானதல்ல என்பதை இந்த வசனம் (சூசகமாகக்) கூறுகிறது.
நபியவர்கள் உருவாக்கிய சமூகம் தமக்குள் இந்தக் கருத்துக்களை கனகச்சிதமாக செயற்படுத்திக் காட்டிய சமூகம். முடியுமானளவுக்கு முரண்பாடுகள் களையப்பட்டன. முரண்பாடுகள் பிரிவுக்கான காரணங்களாக அங்கு அமையவில்லை. மாறாக அதுவே சகோதரத்துவத்தை அறிவதற்கான முறைமைகளாக மாறின.
“ (அநியாயம்இழைத்த) காபிர்களுடன் அவர்கள் மிகக் கடுமையாகவும் தமக்கிடையில் மிகவும் அன்புடையோறாகவும் இருப்பார்கள்” (சூரா பத்ஹ்)
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் : ‘நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறேன். இன்னும் அபூபக்கர், உமர் ஆகியோரையும் நேசிக்கிறேன். நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். அவர்களைப் போன்று நான் அமல்கள் செய்யாவிட்டாலும்’ (முஸ்லிம்)
உள்ளங்கள் மிகவும் மெலிதானவை. அதிர்வுகள் அதிகம் கொண்டவை. அவற்றில் ஏற்படும் சிறு கீறல்களும் காலப்போக்கில் வளர்ந்து இணைவு (இணைப்பு)களையும் பிரித்துவிடக்கூடியவை. உள்ளங்கள்தான் மனிதம் சேர்ந்து வாழ்வதற்கு பிரதானமானவை. ஒருவரை நேசிப்பதாக இருக்கலாம் அல்லது வெறுப்பதாக இருக்கலாம் அது உள்ளத்தின் தன்மையைப் பொருத்தது.
நபியவர்கள் ஒரு முஸ்லிம் அவனது சகோதரனுக்கு ஒரு கண்ணாடியைப் போன்றவன் என்றார்கள். அவனது உள்ளமும் கண்ணாடிதான் மிக விரைவாக உடைந்து விடும். உடைந்ததை மீண்டும் ஒட்டிவிடலாம். ஆனால் பழைய நிலைக்கு கொண்டு வருவது கஷ்டம். மனித ஒற்றுமையை ஆசிப்போர் இந்த விசயத்தை அழுத்தம் கொடுத்துப்பார்க்க வேண்டும்.
அதிக மனிதர்களுக்கிடையிலான பிரிவுகளுக்கு பொருளாதாரம், போர், அரசியல் போன்ற பிரமாண்டமான விசயங்களை பார்க்கத் தெரிந்த இந்த உலகுக்கு வார்த்தைகளை சரியாக கையாளாமை, மற்றவர்களது குறைகளை தேடித் தேடிதிரிவது ... போன்ற சிறு சிறு விசயங்களைப் பார்க்கத் தெரியவில்லை. தொழுகை, நோன்பு, சகாத் போன்றவற்றை ஆன்மீகமாக பார்க்கத் தெரிந்த நம்மில் சிலருக்கு மனித உள்ளங்களுடன் நோகாமல் நடப்பதும் ஆன்மிகம் என்பது மறந்து போகிறது.
சூறா ஹுஜ்ராத் நபியவர்களது மரணத்துக்கு சில காலங்களுக்கு முன் இறங்கிய சூறா. அதாவது நபியவர்களது பணி முடிவடைய சிறு காலத்துக்கு முன்பு. ஆனால் அந்த சூறா நமது பார்வையில் இலேசானதாகப்படும் கோள்சொல்லல், குறைகளை துருவித் துருவித்தேடுதல், மோசமான பெயர்களைச் சொல்லி அழைத்தல் போன்ற விசயங்களைப் பற்றி பேசுகிறது. இவைகளுக்கும் மனிதத்துக்கும் என்ன தொடர்பு? சமூகம் கட்டி எழுப்பப்படும்போது இப்படியான விசயங்களை அசிரத்தையாக (கவனக்குறைவாக) விட்டு விடமுடியாது, இவற்றை கவனிக்காது விட்டால் முழுக் கட்டிடமும் இடிந்து விழுந்து விடும் என்பதுதான்.
உள்ளங்களைப் புரிந்து நடந்து கொள்ளாமல் எதைத்தான் சாதிக்க முயன்றாலும் அவை அனைத்தும் வீணானவைதான். நாம் கூறுவது முஸ்லிம்களை மாத்திரமல்ல மாற்று மதத்தவர்களையும்தான் . அவர்களும் மனிதர்கள்தான். அவர்களது உள்ளங்களும் கண்ணாடிதான்.
நமது மிகப்பெரும் தவறு என்ன வென்றால் சிறியவைகளை பெரிதாக்குகிறோம், பெரிதாகப் பார்க்க வேண்டியவைகளை செல்லாக்காசாக ஆக்கி விடுகின்றோம்.
உள்ளமும் கண்ணாடிதான். அதுவும் உடையும் ஆனால் சத்தம் வெளியில் கேட்காது, வலி தொடர்ந்து கொண்டேயிருக்கும்.