அவனும் உன்னைப் போன்றவனே!

Photo0032
அரபு : கலாநிதி ஸல்மான் அல் அவ்தா

மனிதன் மற்ற மனிதனது சகோதரன். அவனுடன் உறவாடும் தேவை இருக்கிறது. தனிமைப்பட்டு வாழமுடியாது. உலகுடன் தொடர்பு கொண்டவன்தான் அவன்.
தொழில், வியாபரம், திருமணம், பயணம்... என்று அவனுக்கு உலகியல் தேவை இருக்கின்றது.
அதுபோல, தொழுகை, நோன்பு என்ற ஆன்மீகத் தேவைகளுடனும் தொடர்பு பட்டவன்.
இந்த மனித தொடர்புகளில்

இருவகை உண்டு.
1. நீடித்த தொடர்புகள் : குடும்பத்தொடர்பு, திருமணம்...
2. குறுந் தொடர்புகள் : சந்தையில் அல்லது விமானத்தில் ஒருவரைச் சந்தித்தல். இந்தத் தொடர்பு சந்திப்புக்கான காரணம் முடிவதுடன் முடிந்துவிடும்.
இன்னும், மனித தொடர்புகளை இப்படியும் வகையாக்கலாம்.
1. நேசதொடர்புகள்: இதில் பரஸ்பர உதவிகள் இருக்கும்.
2. முரண்பட்ட தொடர்புகள் : இதில் குரோதம், பகைமை தொடர்புபடும்.
இந்த அனைத்து நிலைமைகளின் போதும் அடுத்த தரப்பைப் பற்றிய அறிவு வேண்டும்; அது எப்படிச் சிந்திக்கிறது, அதனுடன் எப்படி உறவாடுவது... போன்ற தொடர்புகள் இன்றியமையாதவை. நீ சந்திப்பதும் உன்னைப் போன்ற மனிதன்தான் என்பதை நீ புரிந்து கொண்டால் உன்னுடன் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படியே நீயும் அவனுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற யதார்த்தம் விளங்கும். மனித இயல்பினைப் புரிந்து கொள்வது, மற்றவர்களும் உன்னைப் போன்ற மனிதர்களே என்ற உண்மையை உனக்கு உணர்த்தும்.

மனிதர்கள், தம்மைப் பார்த்துப் புன்னகை செய்வோரை விரும்புவார்கள். தமக்கு மரியாதை செய்வோருக்கு மரியாதை செய்வார்கள்.
தமது பிரச்சினைகளுடன் இரண்டறக் கலந்து வாழ்வோருடன் அன்புடன் இருப்பார்கள். தமதுசாதனைகளை, அடைவுகளைப் பாராட்டுவோரை நேசிப்பார்கள். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் அமைதியான, அன்புள்ள, மென்மையானவர்களை மனிதர்கள் விரும்புவார்கள். கடினமானவர்களை வெறுப்பார்கள்.
தமது உணர்வுகளை மதிக்காத, தமது கடமைகளைச் சரியாக நிறைவேற்றாமல் உரிமைகளை மாத்திரம் அளவுக்கதிகமாகக் கேட்டு முரண்டு பிடிப்போரை விரும்பவே மாட்டார்கள். நீ சிறு வயது முதல் அலாதியான முறையில் வளர்ந்திருக்கலாம். உனக்கும் சிரமங்கள் இருந்திருக்கும். உனது பாடசாலை, வீடு... இப்படியான சூழல் வித்தியாசமானவையாக இருக்கலாம். உனது விருப்பு வெறுப்புக்கள் வித்தியாசமானவை. ஆக மொத்தத்தில் நீ வித்தியாசமான உலகம். இது போலத்தான் மற்றவர்களும். இதனை நீ சரியாகப் புரிந்து கொண்டால் மற்றவர்களது செயல்களின்போது உனக்குத் தோன்றும் ஆச்சர்ய நிலை இயல்பாகவே நீங்கிவிடும்.

அனைத்து மனிதர்களுடனும் ஒரே அச்சில் பழகுபவர், ஒவ்வொருவருக்குமுடைய தனிப் பண்பை மறப்பவர் வெற்றியாளராக இருக்க முடியாது. இப்படியானவர் அவர்களுக்கும் தனக்கும் அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கிறார்.
அல்குர்ஆனில்“ நன்மை”, “ நல்ல வார்த்தை”, “ நளினம்” , “சிறந்த உபதேசம்” போன்ற வார்த்தைகளை நோக்கிய அழைப்பு அதிகம் இருக்கின்றன. அதுபோல, “கடினம்”, “மோசமான எண்ணம்”, “நோவினை” போன்றவற்றை விட்டும் தவிர்க்கும் வசனங்களும் அதிகமதிகம் இருக்கின்றன. நபியவர்களது வாழ்க்கை வெறும் தத்துவமாக, கற்பனையாக இருக்கவில்லை. யதார்த்தமாக இருந்தது. அவரது பண்புகள் அல்குர்ஆனாக இருந்தது. மனிதர்களுடனான நடத்தைக் கலையானது நபியவர்களிடம் சாத்தியமான ஒன்றாகவே இருந்தது.

வறண்ட பூமியில் வாழ்ந்தவர், குழுமுறை சூழலுக்குள் வளர்ந்தவர், பாலைவனச் சூழலை நன்குஅனுபவித்தவர்.... ஆனால், பொறுமை, சகிப்புத் தன்மைக்கு முன்னுதாரணமாக இருந்தவர். தூரநோக்கு, திட்டமிடலில் சாதித்துக் காட்டியவர், தன்னைச் சூழ இருப்போரை எதிரிகளையும் கூட சரியாகப் புரிந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
எனவே தனது இறுக்கமான போக்கிற்கு, தனது கோபத்திற்கு, தனது சூழல், தான் வளர்ந்த முறைமை என்று யாரும் எதனையும் காரணம் காட்ட முடியாமல் ஆகிவிடுகிறது. மற்றவனும் உன்னைப் போன்றவன்தான்.

தமிழில் : மௌலவி யாஷாமிலா இம்தியாஸ்
தென் கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை.