ஆளும் வர்க்கங்களின் "பரவு காவலாளி" மோடி:

இந்த நிகழ்ச்சியின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குவது அதானி குழுமம்!
- ப.ரகுமான்
image galleryமக்கள் பங்கேற்பில், மக்கள் கண்காணிப்பில், மக்களுக்கு பதில் சொல்லும் வகையில் நடைபெறுவதுதான் ஜனநாயகம் என்றால், அதைச் சாதிக்க (அச்சு+காட்சி+இணைய) ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். இதன் அடிப்படையில்தான் பிரஸ்மீட், பிரஸ் கான்ஃபரன்ஸ் என்று சொல்லப்படும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஓர் அவப்பெயர் உண்டு. இருப்பினும் வெளிநாடு சென்று திரும்பும்போதெல்லாம், விமானத்திலேயே அவர் செய்தியாளர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவரை "மவுனமோகன் சிங்" என்றும், "சோனியாவின் அடிமை" (மன்மோகன் சிங் என்ற பெயரில் ஒரு இரவுக் காவலாளியை வைத்திருக்கிறது சோனியா குடும்பம்...பிரதமர் என்பவர் சோனியா காந்தி குடும்பம் ஆட்டுவிக்கும் பொம்மை தவிர வேறில்லை என்று பொருள்படும் வகையில், "They appointed a night watchman by naming Manmohan Singh as prime minister...the prime minister is nothing but a puppet of the Gandhi family") என்றும் பேசிய மோடி இப்போது எப்படி நடந்து கொள்கிறார்?
வெளிநாட்டுப் பயணம் முடித்து திரும்பும்போது அவர் மருந்துக்குக்கூட செய்தியாளர்களுடன் பேசுவதில்லை. சரி, ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் உள்நாட்டிலாவது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறாரா என்றால்...அண்மையில் டெல்லியில் அப்படி ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் வரலாற்றில், செய்தியாளர் சந்திப்பில் சொற்பொழிவாற்றிவிட்டு, எந்த கேள்விக்கும் இடம் கொடாமல், "டாட்டா" காட்டிவிட்டு ("அதானி" காட்டிவிட்டு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்...) சென்ற முதல் பிரதமர் மோடிதான். இதுவரை உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்வு இல்லை.
செய்தியாளர்கள் சந்திப்பு என்பதே செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதற்கும், அரசு, ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதற்கு பதில் சொல்வதற்காகவும்தான். அவ்வளவு ஏன் தனியார் நிறுவனங்களேகூட வணிக நோக்கத்துடன் நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி-பதில் அமர்வு உண்டு. மோடி இந்த நடைமுறையை மட்டும் முறியடிக்கவில்லை, உண்மையில் அவர் ஜனநாயகத்தையே முறியடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அபாயச் சங்கு.
மக்களாட்சியின் மூன்று தூண்களை மட்டுமல்ல, பெருமளவு கார்ப்பரேட் மயமாகிவிட்ட நான்காவது தூணையும் மோடி ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டார் என்பதற்கு, 10 நாள் வெளிநாட்டுப் பயணத்தில் மோடி பேசியது என்ன? செய்தது என்ன? ஆனால் அதுபற்றி ஊடகங்கள் ஏற்படுத்திய தோற்றம் என்ன? என்பதே மிகச்சிறந்த சான்று. இதை உற்றுக் கவனித்தால், ஏன் அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்பதையும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
வெளிநாட்டுப் பயணத்தின் முதல் கட்டமாக, இஸ்லாத்தை பின்பற்றும் ரோகிங்யா இனத்தவர், பௌத்த பேரினவாதத்தின் பெயரால் கொடூரமாக வேட்டையாடப்படும் மியான்மர் (பர்மா) நாட்டுக்குத்தான் முதலில் சென்றார், மோடி.
(சிங்கள பௌத்த பேரினாவதப் பிக்குகளும், மியான்மர் பௌத்த பேரினாவதப் பிக்குகளும் தத்தமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை நிகழ்த்துவதற்காக அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர் என்பது இந்த இடத்திற்கு பொருத்தமற்ற தகவல் அல்ல).
மியான்மரில் பல நாட்டு தலைவர்களைச் சந்தித்த மோடி, கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்றார்; அங்குதான், "மதத்தையும், பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தும் போக்கை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"மதரசாக்கள் பயங்கரவாத மையங்கள்" என்றும், "லவ் ஜிகாத்" என்றும் பாஜக எம்.பி.க்களே பேசுவதும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் முழுமூச்சாக இதேவேலையைச் செய்வதும் எந்த வகையைச் சேர்ந்தது என்ற கேள்வியை அவரிடம் யார் எழுப்புவது?
ஆஸ்திரேலியாவில் "கல்யாண"(த்தை மறைத்த)"ராமன்"!
மியான்மரிலிருந்து ஆஸ்திரேலியா போன மோடி, பிரிஸ்பேன் நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மத்தியில், "நாட்டில் சீர்திருத்தங்களைச் செய்தால் எதிர்ப்பு ஏற்படும்; எனவே அரசியல் நிர்ப்பந்தங்களிலிருந்து (பொருளாதார) சீர்திருத்தங்களுக்கு காப்பு அளிக்க வேண்டும். சீர்திருத்தங்கள் மக்களால் உந்தப்பட்டு செய்யப்பட வேண்டும்; அதை ரகசியமாக செய்ய முடியாது. செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்; அரசு செயல்படும் முறைகளும் சீர்திருத்தப்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
மோடி சீர்திருத்தம் என்று சொல்வது, நாட்டின் பெரும்பாலான மக்களின் நலன்களைச் சீரழிக்கும் கொள்கைகள்தானே தவிர வேறில்லை.
நிறுவனங்கள்/ தொழிற்சாலைகள்/ வர்த்தகங்கள் மீதான அரசினுடைய கண்காணிப்பை விலக்கிக் கொள்ளுதல், அவை சுயமாக சான்றளித்துக் கொள்ள அனுமதி வழங்குதல், தொழிலாளர்களின் உரிமைகளை முற்றாக நீக்குதல் (இதே காரணத்தைச் சுட்டிக்காட்டி, மத்திய பாஜக அரசை எதிர்த்து, பாஜகவின் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங் டிசம்பரில் போராட்டம் நடத்துகிறது), தொழில் பழகுநர்கள் என்ற பெயரில் வேலைக்கு ஆட்களை விருப்பம்போல் அமர்த்திக்கொண்டு அடிமாட்டுக் கூலி வழங்குவதற்கான சட்டத் திருத்தம், அதிலும் பெருநிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் பழகுநர்களுக்கு ஸ்டைபண்ட் என்ற பெயரில் வழங்கும் அடிமாட்டுக் கூலியில் பாதியை கஜானாவில் இருந்து அரசே தந்து விடுதல், ரேசன் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியங்களை படிப்படியாக வெட்டுதல், இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு குறைகிறதோ அந்தளவிற்கு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றுவிடல், பெருநிறுவனங்கள்/பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக நில கையகப்படுத்தல் சட்டத்தை திருத்துதல்...என மோடி அரசு திட்டமிட்டுள்ள சீர்திருத்தங்களின் பட்டியல் மிக நீளமானது.
அதே பிரிஸ்பேன் நகரில், பிரிக்ஸ் நாடுகள் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவர்கள் மத்தியில் பேசும்போது, தமது அரசு கறுப்புப் பணத்தை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருவதாகக் கூறினார் மோடி. கறுப்புப் பணம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் பாஜக அரசின் தலையில் குட்டிய கதையை புதினும், ஜேக்கப் ஜும்மாவும், தில்மா ரவுசெஃபும், ஜின்பிங்கும் எழுப்ப மாட்டார்கள் என்ற தைரியம்தான். ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டிலும் இதே கதையை அளந்த மோடி, அங்கு பேசும்போது, வரியைத் தவிர்ப்பதற்கு வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என அப்பாவியாய் கேள்வி எழுப்பினார் (The prime minister while flagging his concern over cross border tax avoidance and evasion also noted that increased mobility of capital and technology have created new opportunities for avoiding tax and profit sharing).

உலக வர்த்தகக் கழகம் இறுதி செய்திருந்த வர்த்தக வசதி ஒப்பந்தத்தில் (TFA -Trade Facilitation Agreement) இந்தியா கையெழுத்திடும் என்றும், இதுதொடர்பாக முன்னர் ஏற்பட்ட சர்ச்சைக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாகப் பேசி தீர்வு கண்டுவிட்டதாகவும் மோடி ஆஸ்திரேலியாவில் இருந்தபோதுதான் அறிவிக்கப்பட்டது.

தாம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடவில்லை, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகவும் பாடுபட்டு வருவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறினார் மோடி. குடும்ப நல அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்களும், பச்சிளங் குழந்தைகள் கொத்து கொத்தாக மரணமடைந்த சம்பவங்களும் இந்தியாவை உலுக்கிக் கொண்டிருந்தபோதுதான் மோடி அங்கு இவ்வாறு முழங்கிக் கொண்டிருந்தார்.

அரசு பராமரித்து வரும், பொது மருத்துவக் கட்டமைப்பு ஏற்கெனவே பாழ்பட்டுள்ள நிலையில், அதை மேலும் சீரழிக்கும் வகையில், தனியார் மருத்துவ மற்றும் மருந்துக் கொள்ளைக்கு சாதகமாக, (மருத்துவக்) காப்பீட்டு துறையில் அந்நிய முதலீ்ட்டுக்கு அனுமதி, மருந்துகளின் விலை நிர்ணயத்தின் மீதான அரசின் கட்டுப்பாடு தளர்வு, வேதிப் பெயரில் மலிவு விலையில் மருந்து தயாரிப்பதற்கு வேட்டு வைக்கும் வகையில் காப்புரிமைச் சட்டங்களை கடுமையாக்குவது என மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதை யார்தான் கேள்விக்குள்ளாக்குவது?

இவை அனைத்திலும் ஒளிந்திருக்கும் உண்மையைச் சுருக்கமாக சொல்வதென்றால், தன்னைப் பிரதமராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு அல்லது பாஜகவை மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திய மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவராக மோடி தெரியவில்லை; மாறாக தன்னை ஜனநாயகத்தின் கதாநாயகனாக "ஸ்பான்சர்" செய்திருக்கும் முதலாளி வர்க்கத்திற்கு கைம்மாறு செய்வதிலேயே கவனமாக இருக்கிறார் என்பதுதான்.

அதற்கு உரைகல் போல உரசிப் பார்க்கக் கிடைத்திருக்கும் சான்றுதான், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டி, அதிலிருந்து நிலக்கரியை அகழ்ந்தெடுத்து, துறைமுகங்களுக்கு அதை கொண்டு செல்வதற்கான ரயில் பாதை கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு கௌதம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம். இந்தத் திட்டத்தை அதானி குழுமம் செயல்படுத்தும்போது ஆஸ்திரேலியாவில் 28 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; நிலக்கரியையும் இந்தியாவே விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை (ரூ.6,200 கோடி) அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு முதல்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. ("மேக் இன் இந்தியா" அதாவது "இந்தியாவில் தயாரியுங்கள்" என்ற திட்டத்தை எவ்வளவு அற்புதமாகச் செயல்படுத்துகிறார் நமது பிரதமர் என நீங்கள் வியக்காமல் இருக்க முடியாது!).130811satish

இதைச் சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மோடி முன்னிலையில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட், "திட்டமிட்டபடி எல்லாம் நடைபெற்றால், இந்திய நிறுவனமானது ஆஸ்திரேலியாவில் மிகப்பெரும் அளவில் நிலக்கரியை அகழ்ந்தெடுத்து, அடுத்த அரை நூற்றாண்டுக்கு, கோடிக் கணக்கான இந்தியர்களின் வாழ்வுக்கு ஒளியூட்டும்" என்றார். அதாவது 50 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதியாகும் என்கிறார்.

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே அதிக நிலக்கரி வளம் கொண்ட நாடுகளில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. அதுமட்டுமல்ல, நிலக்கரி வளத்தை தனியார் அகழ்ந்தெடுப்பதற்கு வாய்ப்பான கொள்கைகள் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனி ஆஸ்திரேலியாவில் இருந்தும் நிலக்கரி இறக்குமதியாகப் போகிறது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை சுட்டிக்காட்டி, காங்கிரஸின் கையில் கரி படிந்துவிட்டது என்று கேலி பேசியது பாஜக; ஆனால் அவர்களோ தற்போது இந்திய மக்களின் முகத்திலேயே கரியைப் பூசியிருக்கிறார்கள்.

இது குறித்தெல்லாம் வினா எழுப்புவதற்கு மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என ஏதுமில்லை. ஆளுங்கட்சியோ பதில் சொல்வதற்கு அவசியமே ஏற்படாத வகையில் மிருக பலத்துடன் இருக்கிறது. கேள்வி கேட்பதற்கு வாய்ப்புள்ள சில ஊடகங்களுக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே வாய்ப்பூட்டு. அதனால்தான் மோடி வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் மத்தியில் போய் விலாவாரியாகப் பேசிக் கொண்டிருக்கிறார். இதற்குப் பெயர்தான் எடுப்பார் "கைப்புள்ள" ஜனநாயகம்.
- ப.ரகுமான்