உங்கள் பிள்ளைகள் பத்திரம்

  Muslim Festivals in India10 அல்லாஹ் நமக்கு அள்ளிக்கொடுத்த செல்வங்களில் மிக முக்கியமான ஒன்று பிள்ளைச் செல்வம். எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திறமைமிக்க பிள்ளைகளாக வளர்ந்து சமூகத்தில் நல்ல நிலைமையை அடைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனாலும் சில பிள்ளைகள் வழிதவறி தவறான வழிகாட்டுதலில் சென்று சமூகத்திற்கும் மார்க்கத்திற்கும் மாறான பாதையில் சென்று விடுகிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்கள் என்று மட்டும் சொல்லி விட முடியாது. வளரும் சூழ்நிலை, சமுதாயத்தில் நடக்கும் விஷயங்கள், தொழில்நுட்பம், பிறரைப் பார்த்து பழகுவது என நிறைய காரணங்கள் உள்ளன. உலக விஷயங்களை நொடிப் பொழுதில் கைக்கு கொண்டு வரும் இந்த நவீன உலகத்தில் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்ப்பது என்பது பெற்றோர்க்கு மிக கடுமையான சவால். அதிலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலைமை போரில் சண்டையிட்டு அதில் வெற்றி காண்பது போல ஆகிவிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளரும் பிள்ளைகளுக்கு நண்பனாக இருப்பது செல்போன், கம்ப்யூட்டர். ஆகிய இரண்டும் தான் பெற்றோர்க்கு வில்லனாக நிற்கிறது. தங்கள் பிள்ளைகள் நாளும் கற்று அறிவாளியாக வர வேண்டும் என்றுதான் இவற்றை வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் வயது வரம்பு இருக்கிறது. அதன்படிதான் வாங்கி கொடுக்க வேண்டும். 4 வயது குழந்தைக்கு வீட்டில் தனியாக ஒரு போன், 5 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு ஆன்ட்ராய்ட் போன், 8 ஆவது படிக்கும் போதே கம்ப்யூட்டர், இண்டர்நெட் கனெக்சன். இந்த வயதில் இதெல்லாம் கிடைத்தால் ஒன்று கேம் விளையாடுவார்கள் அல்லது சினிமா படம் பார்ப்பார்கள். முக்கால்வாசி பிள்ளைகள் இதைத்தான் செய்கிறார்கள். இன்று பெரும்பாலான பிள்ளைகள் தெருக்களில் ஓடி விளையாடுவதைப் பார்க்க முடிவதில்லை. கணினி மற்றும் செல்போன் கேம்களில் உள்ள கதாப்பாத்திரங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதை ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஓட வைக்கிறார்கள் நம் பிள்ளைகள். தினமும் ஆயிரக்கணக்கான புதுவித கேம்களை கொடுத்து அடிமையாக்கி விட்டன ஆன்ட்ராய்ட் ஃபோன்கள். பொதுவாக இதில் அதிகமாக மூழ்குவது 8 முதல் 15 வயதுடைய பிள்ளைகள் தான். பெற்றோர்களை விட குழந்தைகள் செல்ஃபோன்களை மிகத்திறமையாக கையாளுகிறார்கள். சொல்லப்போனால் பெற்றோர்களுக்கு குழந்தைகள் கற்றுத்தரும் சூழ்நிலை வந்துவிட்டது. இதை பெற்றோர்களும் பெருமையாகக் கருதுகிறார்கள். அனைத்து வீடியோ கேம்களிலும் வன்முறைகள்தான் அதிகம் புகுந்துள்ளது. வாளை எடுத்து வெட்டுவது, துப்பாக்கியால் சுட்டு சாகவைப்பது, கால்களால் உதைத்து சாகடிப்பது, எதிராளியை வீழ்த்துவது என எல்லா வகையான வன்முறைகளும் உள்ளன. நிறைய விளையாட்டுகளில் எதிரியை வீழ்த்திவிட்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது மாதிரியான வகையில்தான் செட் செய்திருப்பார்கள். கேம்களை பொறுத்தமட்டில் தோல்வி என்பதே கிடையாது. இது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். இதன் பிரதிபலிப்பாக அவர்களால் ஒரு சின்ன தோல்வியைக்கூட தாங்க முடியாது. நண்பர்களிடையே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள், ஆசிரியர்கள் மூலம் வரக்கூடிய பிரச்சனைகள், மதிப்பெண்களை வீட்டில் காட்ட முடியாத நிலை போன்ற சூழ்நிலைகளைச் சந்திக்கும் போது மனதில் பதிந்துள்ள வன்முறைகளின் வெளிப்பாடாக தற்கொலைவரை சென்று விடுகிறார்கள் என பல சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக விளையாடும் போது வீட்டிற்கு உறவினர் வந்தால் விளையாட்டிற்கு இடையூறு ஏற்பட்டதாக எரிச்சலடைவது, பெற்றோர்களோடு பேச்சுக்கள் குறைவது, குடும்பத்திற்குள் பாசம் குறைதல், பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவது, மார்க்க விஷயங்களை வெறுப்பது என பல பிரச்சனைகள் தலைதூக்கும். எதிர்காலத்தில் திருமணம் ஆகி கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு தலாக் சொல்வது வரை சென்றுவிடுகிறது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் குழுவிளையாட்டுகள் என்ற வீட்டிற்கு பக்கத்தில் உள்ள பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் கில்லி, பம்பரம், கோலி, குச்சி விளையாட்டு போன்ற விதிமுறைகளே இல்லாத பிள்ளைகள் தாங்களாகவே உருவாக்கி விளையாடும் விளையாட்டுக்கள் மறைந்து போனதுதான் காரணம். “ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் மேக்கரன்க்கோ என்பவர்தான் பள்ளிகூடங்களில் விளையாட்டு பீரியட் என்பதை அறிமுகப்படுத்தினார்”. அதாவது எந்த விதிகளும் இல்லாமல் 1.30 மணி நேரம் இஷ்டப்படி விளையாட வேண்டும், அதை ஒருவர் கண்காணிக்க மட்டுமே செய்ய வேண்டுமே தவிர கட்டுப்படுத்த கூடாது என்பதே அவர் சொன்ன முறை. இப்படி பள்ளி மைதானத்திலோ அல்லது தெருவிலோ பல பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து வியர்வை வெளியேறும் வரை விளையாடும் போது புத்துணர்ச்சி ஏற்படும். அவரவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பள்ளியில் நடந்தவை, வீட்டில் நடந்தவை என ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பெண் பிள்ளைகள் பூப்பெய்தலுக்குப் பிறகு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை கற்றுக்கொள்கிறார்கள். இதுவே ஒரு அனுபவ பள்ளிக்கூடம். மேலும் விட்டுக்கொடுத்தல், குழு நண்பர்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வது, தோல்விகளைத் தாங்கும் மனப்பான்மை மற்றும் புதுவித சிந்தனைகளை உருவாக்கும். இந்த அனுபவம்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் திறனை வளர்க்க உதவுகிறது. ஆனால் இன்று பல பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளை என்பது வெறும் அட்டவணையில் மட்டுமே உள்ளது என்று ஆதங்கப்படுகிறார்கள் பல கல்வி ஆராய்ச்சியாளர்கள்.
இது ஒரு புறம் இருக்க இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் போது உடல் ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக கணினி மற்றும் ஃபோன்களை பயன்படுத்துபவர்கள் முதலில் சந்திக்கும் பிரச்சனை பார்வை கோளாறுகள். இது குழந்தைகளுக்கு மட்டும் இல்லை பெரியவர்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து அந்த திரையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண் எரிச்சல், தலைவலி உண்டாகக்கூடும். மேலும் வெளியில் போய் ஓடி, ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடும் போது கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலன் குறைந்து எலும்பு தேய்மானம் மற்றும் முதுகு வலி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிக்காற்றை சுவாசிக்காமல் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்போது மன இறுக்கம், கவலைகள் ஏற்படும். ஒரு விஷயத்தின் மீது வெறுப்பு, கவனமின்மை, கோபம், எந்தச் செயல்களையும் முழுமையாக செய்யாமல் மேலோட்டமாக செய்வது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். இப்படி இருப்பவர்கள் பொருளாதாரக் கல்வி, மார்க்கக் கல்வி என இரண்டையுமே கோட்டை விட்டு விடுகிறார்கள்.
பெற்றோர்களே எத்தனையோ பேர் குழந்தை செல்வம் இல்லாமல் ஏங்கி தவிக்கும் இந்த உலகத்தில் அல்லாஹ் உங்களுக்கு தாய்-தந்தை என்ற உயரிய பதவியைக் கொடுத்திருக்கிறான். சின்ன பையன் தானே போக போக சரி ஆகிடுவான் என்று மட்டும் அசட்டை செய்து விடாதீர்கள். 10 வயதுக்கு மேல் தொழுகைக்கு செல்லவில்லை என்றால் அடித்து அனுப்புங்கள் என மார்க்கமே வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில் பள்ளியில் படிக்கும் போதே பலாத்காரம், கத்தியால் குத்துவது, ஆசிரியரைத் தாக்குவது, ஓரின சேர்க்கை, தகராறு என நாளுக்கு நாள் நடந்து கொண்டிருக்கும் வக்கிரம் நிறைந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். கண்டிப்போடு சேர்ந்த அன்பை கடைபிடியுங்கள்..!!!
ஹெச். ராசிக் ராஜா.