வாருங்கள்... சரிவுகளிலிருந்து மீண்டெழுவோம்...!

123

முழு ஆண்டுத் தேர்வுகளையெல்லாம் முழுமையாக நிறைவு செய்து விட்டு முழுமையான ஆனந்தத்தில் இருக்கும் மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்களது எதிர்காலத்திற்கு முழுதாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களது பெற்றோர்களுக்கும் உள்ள அடுத்த சிந்தனை, கவலை “என்ன படிப்புகளைப் படிக்க வைப்பது?” “எங்கே படிக்க வைப்பது?”

என்பதுதான்.

ஏனெனில் ஒரு மாணவனின் எதிர்காலத்தைச் சரியான, தரமான முறையில் நிர்ணயிக்கத் தவறுவதால்தான் நமது சமூகம் பல இடங்களில் பல நேரங்களில் சரிவுகளைச் சந்தித்து வருகிறது. மாணவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை தனிப்பட்ட ஒரு மாணவன் சார்ந்தது அல்ல! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதியும் சக்தியும் பெற்றது. சமூகத்தின், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் சரியான, தெளிவான முடிவை எடுக்கத் தவறுகிற போதுதான் உங்களது வாழ்க்கையும் உங்களை நம்பி இருக்கின்ற இந்த சமூகத்தின், இந்த நாட்டின் வளர்ச்சியும் (கசக்க ஆரம்பித்து விடுகிறது) முடங்கத் தொடங்குகிறது.

எந்த இடத்தில் நாம் தவறு செய்கிறோம்? தவறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன? அந்த தவறுகளை நாம் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்:

தவறு 1: விண்ணப்பப் படிவங்களை வாங்குவதில் அலட்சியம்.

+2 தேர்வு முடிவுகள் (ரிசல்ட்) வெளி வந்தவுடன் எல்லாக் கல்லூரிகளிலும் விண்ணப்பப் படிவங்கள் (Application) வழங்க ஆரம்பித்து விடுவார்கள். பெற்றோர்கள் நேரில் சென்றோ அல்லது தெரிந்த நபர்களைக் கொண்டோ விண்ணப்பப் படிவங்களை வாங்கி மாணவர்களிடம் கொடுத்து விடுகிறோம்.

விளைவுகள் :-

ஒரு மாணவன் கல்லூரிக்கு நேரடியாகச் செல்லாததால் அந்தக் கல்லூரியின் அறிமுகம், சூழல் என்ன என்பதை அடிப்படையில், ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ள முடியாமல் போகிறது. க(சு)டும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கிடந்து விண்ணப்பப் படிவங்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்காததால் ‘அந்த வலியின் உணர்வு’ மாணவர்களுக்குத் தெரியாமலே போய் விடுகிறது. என் தந்தை எனக்கு எல்லாவற்றையும் செய்து விடுவார் என்ற பொடு போக்குத் தன்மையும் சோம்பேறித்தனமும் மாணவர்களுக்குள் ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த அசாதாரணப் போக்கு செடியாகி மரமாகும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

என்ன செய்ய வேண்டும்...?

எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பப் படிவங்களை வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்தக் கல்லூரிகளுக்கு உங்கள் மகனோடு நீங்களும் செல்லுங்கள். படிக்கப் போகும் மாணவனை வரிசையில் நின்று விண்ணப்பப் படிவங்களை வாங்கச் சொல்லுங்கள். தயவு செய்து உங்களோடு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்! அவர்களோடு நீங்கள் செல்லுங்கள்.

தவறு 2: விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் அலட்சியம்.

கல்லூரிகளில் விண்ணப்பப் படிவங்களை வாங்கிய பின் அதை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பூர்த்தி செய்து விடுவீர்கள். திடீரென ஏதோ ஒரு ஞாபகத்தில் ஆஹா மாத்தி எழுதிட்டேனே என்று கையை பிசைந்து Whitener போட்டு விடுவீர்கள். இதனால் விண்ணப்பப் படிவம் பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சி தரும்.

விளைவுகள்:-
விண்ணப்பப் படிவங்களில் இதையெல்லாம் பார்ப்பார்களா? என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் அதை பார்க்கிறார்கள் அல்லது பார்க்கவில்லை என்பது வேறு விசயம். அதில் ஒரு மாணவனின் தகுதியும் தரமும் அடங்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு விண்ணப்பப் படிவத்தை அவசர அவசரமாக நிரப்பும் (வேண்டும் என்ற தன்மை நிதானத்தை இழக்கச் செய்வதற்கு காரணமாகி விடுகிறது) தன்மை நாம் நிதானம் இழந்தவர்கள் என்பதற்கு அடையாளமாகி விடுகிறது.

என்ன செய்ய வேண்டும்…?

விண்ணப்பப் படிவங்களை வாங்கி வந்தவுடன் அதை நகல் எடுத்து (Xerox) எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பென்சிலால் அந்தப் படிவங்களை நிரப்ப வேண்டும். அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் இரப்பரை (eraser) பயன்படுத்தி அழித்து விட்டு மீண்டும் சரியாக நிரப்பலாம். விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு முன் அதில் என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை நிதானித்து, யோசித்து படிவங்களை நிரப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நீங்கள் சரி பார்த்த பின் உங்கள் பெற்றோர்களிடம் காண்பித்து அவர்கள் சரி என்று சொன்ன பின் பேனாவால் நிரப்ப வேண்டும்.

தவறு 3 :- பெற்றோர் – மாணவர் உறவில் அலட்சியம்

விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளோடு அமர்ந்து அடுத்து நீ என்ன படிக்க விரும்புகிறாய்…? எதற்காக குறிப்பிட்ட அந்த கோர்ஸை எடுத்துப் படிக்க விரும்புகிறாய்...? அந்த கோர்ஸைப் படிப்பதால் எதிர்காலத்தில் என்ன பலன்? என்பதை எல்லாம் மனம் விட்டுப் பேச வேண்டும். பெரும்பாலும், பெற்றோர்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்துவதாலும், வெளிநாடுகளில் வசிப்பதாலும் பெற்றோர்கள் – மாணவர்களிடம் மனம் விட்டுப் பேச முடியாத சூழல் ஏற்படுகிறது.


விளைவுகள் :-

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசாத தாலும், தான் சொல்வதை மட்டுமே பிள்ளைகள் கேட்க வேண்டும் என்ற வைராக்கியமும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது. வேலை வேலை என்று சம்பாதிக்கச் செல்லும் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளோடு அவர்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு ஒரு நாளை ஒதுக்குவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்...?

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் உள்ள மனக்குமுறலைப் பாருங்கள்.

குழந்தைகளாகப் பிறந்த நாங்கள் இளமைப் பருவத்தை அடைந்து சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெற்றோர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் எங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

குழந்தைகளாகிய நாங்கள் எங்கள் தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த போது முழு கவனத்தையும் எங்கள் மீது வைத்து அன்போடும், பாசத்தோடும் கவனித்து வந்த எங்கள் அன்பிற்கினிய பெற்றோர்களே! பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எங்களைச் சேர்த்து விட்ட பின் எங்கள் மீது கவனமற்றுப் போவது நியாயமா? உங்களது கவனமற்ற இந்த நிலைதான் எங்களின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என்பதை நீங்கள் அறியாதது உங்கள் குற்றமா? எங்கள் குற்றமா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

பள்ளிகளில் படிக்கின்ற காலங்களில் காலை 7.30 மணிக்கு அழுது கொண்டே எழுந்து, அவசரமாக பல் துலக்கி, அரை குறையாக குளித்து, கிடைத்ததை வாயில் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடம் சென்று அதன் பின் டியூஷன் சென்று “படி... இல்லன்னா... அடி..” எனும் சொல்லை மீண்டும் மீண்டும் கேட்டு இரவு வந்தவுடன் சாப்பிட்டு படுக்கப்போகும் எங்களது நிலைக்கும் இயந்திரங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது...?

உங்களுக்கு மனக்கஷ்டம் வரும் போது உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நீங்கள், எங்களது மனக்கஷ்டங்களை பெற்றோர்களாகிய உங்களிடம் சொல்ல வரும் போது அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்?...

அண்டை வீடுகளுக்கும் உறவுகளின் இல்லங்களுக்கும் செல்லும் போது அங்கிருக்கும் குழந்தைகளிடம் கொஞ்சிக் குழாவி முத்தம் கொடுத்து மகிழுகின்ற நீங்கள், உங்கள் குழந்தைகளான எங்களிடம் அன்பைப் பரிமாற ஏன் தயங்குகிறீர்கள்...?

சிறு வயதில் எங்களை நீங்கள் தள்ளி, ஒதுக்கி வைப்பதுதானே... நாங்கள் பெரியவர்களாகும் போது உங்களை ஒதுக்கி வைப்பதற்கு காரணமாகி விடுகிறது என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்...?

பெற்றோர்களாகிய நீங்கள் எங்களை நண்பர்களாக பார்க்கத் தவறிய காரணத்தால் கூடா நட்பிற்குச் செல்கிறோம்.

பெற்றோர்களாகிய நீங்கள் எங்களுக்கு முழுமையான முன் மாதிரியாக இல்லாததினால்தான் யார் யாரையோ பின் பற்றும் அவலம் எங்களுக்கு ஏற்படுகிறது.

எந்தத் தவறுகளையும் செய்யாத, செய்யத் தெரியாத எங்களை எங்களது பெற்றோர்களாகிய நீங்களே எங்களிடம் ‘மனம் விட்டுப் பேசாத’ நிலைக்குத் தள்ளும் அளவுக்கு நாங்கள் அப்படி என்ன தவறுகளைச் செய்து விட்டோம்!

உலகில் குழந்தையாகப் பிறந்ததுதான் தவறு என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்...? இது போன்ற ஏராளமான எண்ணக் குமுறல்கள் ஒவ்வொரு குழந்தைகள், மாணவர்களிடமும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்...?

பெற்றோர்கள் தங்களுடைய வேலைகளை எல்லாம் 2 நாட்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச முன் வர வேண்டும். +2 முடிக்கின்ற போது உங்கள் மகனுக்கு ஏறக்குறைய 18 வயது நிரம்பி இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின் (அதாவது அவனது 28 வயதில்) அவன் எப்படி, என்னவாக இருக்க வேண்டும் என்பதை இப்போதே நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அப்படி பெற்றோர்களால் தீர்மானிக்க முடியவில்லை என்றால் படித்தவர்களிடமோ கல்வியாளர்களிடமோ ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கின்ற முடிவுகள் இரண்டோ, மூன்றோ, நான்காக கூட இருக்கலாம். ஆனால் அதில் தெளிவாக உறுதியாக இருக்க வேண்டும். இந்த விசயத்தில் நீங்கள் தெளிவான பின் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்குத் தயாராகுங்கள். குறிப்பாக உங்கள் மகன் கேட்கிற அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்வதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். +2 படிக்கின்ற போது உங்களது மகனின் வயது எதிர்காலம் என்ன என்பதை அவன் அறியாத வயது. விளையாட்டுப் பருவம்! அறிவுரைகளையும் உபதேசங்களையும் ஏற்றுக் கொள்ள மனம் வ(ள)ராத பருவம்! இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு உங்களின் தொழில், குடும்பப் பொறுப்புச் சுமைகளை அவர்கள் மீது திணிக்காமல் குழந்தைகளின் வயதிற்கும் குணத்திற்கும் தரத்திற்கும் நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டு உங்கள் குழந்தைகளோடு பேசத் தயாராகுங்கள்.

எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் தெரியமா...?

உங்கள் பிள்ளையை அழைத்து நமது முன்னோர்கள் செய்த தியாகங்கள், அவர்களைப் போல அர்ப்பணிப்புடன் வாழ, தலை சிறந்த தலைவர்களாக, நிர்வாகிகளாகத் திகழ, ஒரு பொருளாதார நிறுவனத்தை உருவாக்க ஊக்கப்படுத்துவது, அல்லது ஒரு பல்கலைக் கழகத்தையோ, அல்லது உயர்ந்த அதிகாரம் மிக்க அரசு, கல்வி சார்ந்த துறைகளையோ காண்பித்து அதன் பாரம்பர்யம், அங்கு வேலை பார்க்கும் உயர் பதவியில் இருப்பவர்களையும் அவர்களின் சிறப்புகளையும் எடுத்துச் சொல்லுங்கள்.

அப்படி உயர் பதவியில் இருந்து இந்தச் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எப்படிப் பணியாற்றலாம் என்பதை தெளிவாக சொல்லி விட்டு “இது போன்ற உயர் பதவிக்கு நீயும் வர விரும்புகிறாயா?” என்று கேட்டுப் பாருங்களேன்... உங்கள் மகனின் முகத்தில் ஏற்படும் பூரிப்பை! நீங்களும் உணர்வீர்கள்.

இது போன்ற உயர் பதவிக்கு நீ வர வேண்டும் என்று ஆசைப்பட்டால், 10th +2 முடித்த பின் நீ இந்தப் படிப்பை படிக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வில் வெற்றி பெற்றால் நீ இந்த உயர் பதவிக்கு வர முடியும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் ஊட்டி விடுங்கள். அவன் மனதில் ‘நான் இப்படித்தான் உருவாகுவேன்’ என்ற வைராக்கியம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடும். அந்த வைராக்கியமும் மனதைரியமும் இந்தச் சமூகத்திற்கு சிறந்த கல்வியாளரை வார்த்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை!

மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், நீ என்னவாக விரும்புகிறாய்? என்று ஆசிரியர்கள் மாணவர்களிடம் கேட்கும் போது சில மாணவர்கள் கையைப் பிசைந்து நிற்கின்ற சமயத்தில்... சில மாணவர்கள் “I Want to become a leader, businessman, professor, Teacher, doctor… என்று மன தைரியத்தோடு சொல்வதன் பின்னணி, பெற்றோர் – மாணவர்களின் கலந்துரையாடல் என்பதை மறந்து விடாதீர்கள்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பக்குவப்படுத்தி, பண்படுத்தி வளர்க்கப்படுகின்ற போது, எனது தந்தை எனது எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்; அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வும் ஆசையும் ஆனந்தமும் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இயல்பாகவே ஏற்படுகிறது. எனவே எல்லா விசயங்களிலும் தனது பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான். அவர்களின் எதிர்காலமும் சிறந்து விளங்குகிறது.

தனது எதிர்கால நிர்ணயித்தலுக்கு பெற்றோர்களின் பொறுப்பு எதுவும் இல்லாமல் தானே முடிவெடுத்து, அவனாகவே அனைத்தையும் செய்து, “பணம் வாங்குவதற்கு மட்டுமே” பெற்றோர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு எப்படி கட்டுப்பட்டு, மரியாதையோடு நடப்பார்கள் என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கோடீஸ்வரராக, லட்சாதிபதியாக, தொழிலதிபராக இருந்து விட்டுப் போங்கள். அதற்கு முன் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக / தாயாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பக்குவப்படுத்தும்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிட வேண்டும் என்பதை ஒரு மாதிரி அட்டவணையுடன் இங்கு தருகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள விசயங்கள் உதாரணத்திற்கு தரப்பட்டுள்ளது. நீங்கள் என்னென்ன கோர்ஸை தேர்ந்தெடுக்கிறீர்ளோ அதற்கு தகுந்தவாறு இதை மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.

ஆண்டு

வயது

படிப்பு

 

2015

19

இளங்கலை முதல் வருடம்  

2016

20

இளங்கலை 2ஆம் வருடம்  

2017

21

இளங்கலை 3ஆம் வருடம்  

2018

22

முதுகலை முதல் வருடம்  

2019

23

முதுகலை 2ஆம் வருடம்  

2020

24

M.Phil

 

2021

25

M.Phil

 

2022

26

Ph.D.,

 

2023

27

Ph.D.,

சொந்தத் தொழில் நிறுவனம் /

உயர் பதவி

2024

28

Ph.D.,

2025

29

Ph.D.,

2026

30

Ph.D.,


-முனைவர் அல் ஹாஃபில் M.ஃபக்கீர் இஸ்மாயில் பிலாலி.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.