ஜப்பானில் முஸ்லிம்கள்…

f-ramadan-a-20140704ஜப்பான் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ஹிரோஷிமா, நாகசாகி அழிவுகள் தான். வேறு எதுவும் நினைவிற்கு வருவதில்லை என்று சொல்லலாம். ஜப்பான் பொருளாதரத்தில் உலகளவில் முன்னணியில் உள்ள ஒரு நாடு. மக்களுக்கு அனைத்திலும் முழுமையான சுதந்திரம் வழங்கியுள்ள நாடு.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள், நெருக்கடிகள் இல்லாத, அமைதியான சூழலைக் கொண்ட நாடு. இங்கு அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுவதும் வேண்டப்படுவதும் கடின உழைப்பு ஒன்று மட்டுமே!
இஸ்லாத்தின் வருகை:
14 ஆவது நூற்றாண்டில் சீன முஸ்லிமான ’லான் யு’ என்பவருக்கும் (Lan Yu) வாள் தயாரிக்கும் ஜப்பானியர் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. லான் யு விடம் சுமார் 10.000 வாள்கள் காணப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
மிகச் சரியான பதிவுகளின் படி, 1555 ஆம் ஆண்டில் மலாக்காவிலிருந்து வந்த போர்த்துகீசிய கப்பல் பயணிகளில் ஒரு அரபியரும் இருந்துள்ளார். இவர் ஜப்பானில் இஸ்லாத்தைப் போதிப்பவராக இருந்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது.

1870 களின் பின்னாட்களில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஜப்பானிய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது ஜப்பானியர் மத்தியில் இஸ்லாம் பரவுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
மற்றொரு முக்கிய சம்பவம் என்னவென்றால், ஜப்பானிய இளவரசர் Komatsu Akihito வை இஸ்தான்புல்லுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து 1890 இல் உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்திலிருந்து ஒரு கப்பல் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கப்பல் 1890 செப்டம்பர் 16 ஆம் தேதி புயல் காற்றில் சிக்கி அழிந்தது.
Kotaro Yamaoka என்பவரே ஹஜ்ஜிற்கு சென்ற முதல் ஜப்பானியர். இவர் 1909 ஆம் ஆண்டு பம்பாயில் இஸ்லாத்தைத் தழுவினார். டோக்கியோவில் ஒரு பள்ளியைக் கட்டுவதற்காக உஸ்மானிய சாம்ராஜ்ஜிய சுல்தானாக இருந்த இரண்டாவது அப்துல் ஹமீதின் அனுமதியைப் பெறுவதற்காக பயணம் செய்தார். இதற்கான அங்கீகாரம் 1910 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது.
ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற மற்றொருவர்தான் Bunpachiro Aring. இவர் இந்தியாவிற்கு வியாபாரத்திற்காக வந்த போது அங்கே இஸ்லாத்தை ஏற்று, தனது பெயரை அஹ்மத் அரிகா என மாற்றிக் கொண்டார்.
அக்டோபர் புரட்சியின் போது ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து நூற்றுக் கணக்கானவர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து ஜப்பான் வந்துள்ளனர். இதன் பின்பே ஜப்பானில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு ஓரளவுக்கு சமூகக் கட்டமைப்பைப் பெற ஆரம்பித்துள்ளது. இவர்கள் ஜப்பானிலுள்ள முக்கிய நகரங்களில் குடியமர்ந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 600 ஐ விடக் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் தொடர்களின் மூலம் பல ஜப்பானியர்கள் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.
1900 களில் ரஷ்யாவிலிருந்து தப்பி ஜப்பானுக்கு வந்த தார்த்தாரியர்கள் வருகையோடுதான் ஜப்பானில் முஸ்லிம்களின் வரலாறு ஆரம்பிக்கிறது என சில வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுகின்றன., எவ்வாறாயினும், ஜப்பானிய முஸ்லிம்கள் ஒரு நூற்றாண்டைத் தாண்டிய வரலாற்றைக் கொண்டிருக்கிறனர்.
1909 ஆம் ஆண்டில் இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லிம் ஜப்பானியர் அப்துல் ராஷித் இப்றாஹீம் என்றும் 1935 ஆம் ஆண்டு முதலாவது பள்ளிவாசல் கட்டப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர் சீஸர் ஈபாராஹ், பதிவு செய்துள்ளார்.
முஸ்லிம்கள் தங்கள் வணக்க வழிபாடுகளை, மார்க்க நடை முறைகளைச் செயல் படுத்துவதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அரசின் பெள்தீக, பொருளாதார உதவிகள் குறைவு அல்லது இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் ஜப்பானின் மத நம்பிக்கையாக ‘அஷ்ஷூன்ஆ’ காணப்படுகிறது. அதாவது பிரபஞ்சப் பொருட்கள், சடப் பொருட்களை வணங்குகின்ற ஒரு நம்பிக்கையாகும். இவர்களில் கணிசமானவர்கள் விவசாயிகளாவர். ஒரு பிரிவினர் சூரியனையும் மற்றும் சிலர் மாட்டையும் வணங்கி வருகின்றனர்.
ஜப்பானில் பல்வேறு வழிகளில் தஃவா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பானியர்களிடத்தில் இஸ்லாமிய மாற்றத்தை ஏற்படுத்துவது சற்று கால அவகாசம் கோரும் பணியாகும் என்று ஜப்பானிய முஸ்லிம்களுக்கான அமைப்பின் தலைவரும், தஃவா பணிகளில் மிக நீண்ட காலமாக செயல் பட்டு வருபவருமான அல் அஸ்ஹர் பட்டதாரியான அமீன் கிமியாகீ துகுமாஸூ குறிப்பிடுகின்றார்.musque-japan2
எதிர் நோக்கும் பிரச்சனைகள்:
ஜப்பானிய மொழியில் இஸ்லாத்தை, தஃவா வை முன் வைக்கக்கூடிய தாயிக்களின் போதாமைதான் மிக முக்கியப் பிரச்சனை. ஜப்பானிய கலாச்சாரப் பாரம்பரியங்களை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு, மக்களோடு மக்களாக இணைந்து, இடைவிடாது பணியாற்றுகின்ற போது சில நல்ல விளைவுகளைக் காண முடியும் என்கிறார் அமீன் கிமியாகீ துகுமாஸூ.
பள்ளிவாசல்களையும் தஃவா நிலையங்களையும் அமைப்பதில் ஜப்பான் முஸ்லிம்கள் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றார்கள். குறிப்பாக அவற்றுக்காக அந்நிலத்தைப் பெறுவது, வாங்குவது மிகக் கடினம். ஏனெனில் ஜப்பானில் நிலங்களுக்கான விலை மிக அதிகம். தலை நகர் டோக்கியோவில் ஒரு மீட்டர் நிலத்தின் விலை 10,000 டாலரை விட அதிகமாகும்.
தலை நகரில் ஒரு பள்ளியை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமீன் அஸ்ஹரி குறிப்பிடுகிறார். ஜப்பானிய மக்களின் மொழியில் அவர்களின் உணர்வுகளை, மனோநிலையை, சிந்திக்கும் போக்கினை விளங்கி அவர்களின் அறிவுத் தரத்திற்கேற்ப இஸ்லாமியத் தூதை, சிந்தனையை முன் வைக்கிற போது கணிசமான மாற்றங்களைக் காணலாம். ஏனெனில் ஜப்பானிய மக்கள் நல்லவர்கள். அமைதியான் இயல்புடையவர்கள். எப்போதும் பாதுகாப்பையும் அமைதியையும் சந்தோசத்தையும் விரும்புபவர்கள். இதனை இஸ்லாத்தில் கண்டு கொள்வார்களானால் அவர்கள் நிச்சயம் இஸ்லாத்தை விரும்புவார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.
கணிசமான ஜப்பானியர்கள் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவறான புரிதல்களுடனே இருக்கிறார்கள். உண்மையில் ஜப்பானியர்கள் நல்லவர்கள். எனினும் ஊடகங்கள் வழியாக இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் ஒளிபரப்பப்படும் செய்திகளே அவர்களின் மனப்பதிவுகளாக உள்ளது.
ஜப்பானின் பிரபல விளையாட்டு செய்திப் பத்திரிகையாளரான மயோக்கோ என்ற கிறிஸ்துவ பெண் ணிடம் இஸ்லாத்தைப் பற்றி ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று கேட்ட போது அவர் சொன்னார்:
இதைச் சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. ஜப்பானியர்கள் இஸ்லாத்தைப்பற்றி அதீத அச்சமும் தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். காரணம் மேற்கத்திய செய்தி ஊடங்கள் இஸ்லாத்தைப்பற்றிய தவறான செய்திகளைத்தான் மக்களுக்கு தந்துகொண்டிருக்கிறன...
இப்படியான எதிரிடையான மனப்பதிவுகளை மாற்றுவதற்கு பரந்த அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனினும் இதனை மிகச் சரியாக மேற்கொள்வதில் நாம் எதிர் கொள்கின்ற மிகப் பெரும் சவால் என்னவென்றால் தற்போதுள்ள வளங்கள், வசதிகள் வரையறுக்கப்பட்டவையாக உள்ளன. மேலும் நாங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம் என்கிறார் அமீன் அஸ்ஹரி.
இஸ்லாத்திற்கெதிரான ஊடகத்தின் போக்கை எதிர் கொள்வதில் இன்னும் நிறைவான நிலையை நாங்கள் அடையவில்லை. அனால் அதே சமயம் மக்கள் மத்தியிலான தொடர்புகள், உறவுகளைப் பொறுத்தவரை அவர்களிடம் பரஸ்பரம் ஒத்துழைப்பு தரும் மனோ நிலை காணப்படுகிறது. குறிப்பாக பெளதீக ரீதியிலான உதவிகளைச் செய்வதற்கு ஜப்பானிய மக்கள் எப்போதும் மதத்தை ஒரு அளவீடாக கருத மாட்டார்கள் என்கிறார் அமீன்.
இஸ்லாமிய நிலையங்கள்:
ஜப்பானில் முஸ்லிம் அமைப்பு 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் குறிப்பாக ஜப்பானில் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்லாத்தை ஆக்கப்பூர்வமாகவும் அழகான முறையிலும் முன் வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மட்டுமின்றி அரபு மொழியைக் கற்பித்தல், அரபு மொழியில் மார்க்க விரிவுரைகளை ஏற்பாடு செய்தல், ஜப்பானிய மொழியில் இஸ்லாமிய நூல்களை வெளியிடுதல் போன்ற முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் குர்ஆன் மற்றும் புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களை மொழி மாற்றம் செய்து வெளியிட்டது மிக முக்கிய காரியமாக குறிப்பிடப்படுகின்றது.
ஆரம்ப நாட்களில் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாசல்களிலும் தொழும் இடங்களிலும் மட்டுமே நிறை வேற்றப்பட்டு வந்தது. தற்போது பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக பொது இடங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் திறந்த வெளிகளிலும் தொழுவதற்கான அனுமதி பெறப்பட்டு திறந்த வெளிகளில் பெருநாள் தொழுகைகள் நடத்தப்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் ஜப்பானியர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் நல்ல எண்ணங்கள் தோன்ற வழியாக அமையும்.
எல்லா வகையிலும் ஜப்பானில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையினர் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.
குர்ஆனையும் இஸ்லாமிய நூல்களையும் வாசிப்பவர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது.
கிரேட்டர் ஜப்பான் முஸ்லிம் லீக் அமைப்பு, 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதுவே ஜப்பானில் அமைக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய அமைப்பு. இக்காலப் பிரிவில் இஸ்லாம் தொடர்பான சுமார் 100 க்கும் அதிகமான புத்தகங்கள், இதழ்கள் வெளியிடப்பட்டன.
ஜப்பானில் தற்போது சுமார் 100 க்கும் மேற்பட்ட பெரிய பள்ளிகளும், 100 க்கும் அதிகமான சிறிய பள்ளிகளும் தொழும் இடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில தகவல்களின் படி 1982 ஆம் ஆண்டில் முஸ்லிம் சனத்தொகை 30.000. ஆகவும் தற்போது 100.000 எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
மைக்கேல் பென் குறிப்பிடுகையில், மொத்த சனத் தொகையில் 90 சதவீதம் வெளிநாட்டினர். 10 சதவீதத்தினரே உள் நாட்டினர். மேலும் அவர் கூறும் போது “ஜப்பானிய அரசிடம் ஜப்பானிய முஸ்லிம்கள் குறித்த எத்தகைய பிரத்தியேக புள்ளி விவரங்களும் இல்லை. ஜப்பானிய அரசு நிறுவனங்கள், அலுவலகங்களில் பணி புரியும் வெளிநாட்டினரிடமோ, ஜப்பானியர்களிடமோ மதம் குறித்து எதுவும் கேட்கப்படுவதில்லை. ” என்கிறார். இன்று உலகப் பொருளாதாரத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஜப்பான், எதிர்காலத்தில் இஸ்லாத்தின் மூலம் மறுமையிலும் வெற்றியடையும் என்பதையே அங்கு நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.