இணையதள சுவாசிகளுக்கு சுதந்திரம்!

singa
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு கைது செய்ய அதிகாரம் அளிக்கும் தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ, வை ரத்துச் செய்து உச்சநீதிமன்றம் 24.3.2015 அன்று தீர்ப்பளித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இச்சட்டப் பிரிவில் சில திருத்தங்கள் 2009 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. பிறரை புண்படுத்தினார், பகை உணர்வைத் தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.
2012 செப்டம்பரில் கார்டூனிஸ்ட் திரிவேதி, 2012 நவம்பரில் சிவசேனா

தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என்று முகநூலில் எழுதியதற்காகவும் அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையைச் சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு ஆகியோரும், மோடி பதவியேற்பதற்கும் முன்னதாகவே கோவா மாநிலத்தில் ஒருவரும், பெங்களூருவில் ஒருவருமாக பலரை தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர்.
“அப்போது இந்தச் சட்டப் பிரிவில் இரண்டு மாதத்திற்குள் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். புதுச்சேரியிலிருந்து ஒரு தொழிலதிபர், ஒரு கார்ட்டூனிஸ்ட், மகாராஷ்டிராவில் இரு மாணவிகள். அதில் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைக் செய்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன். இணையத்தில் கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காக இப்படி கைது செய்கிறார்கள் என்பதாலேயே உடனே வழக்குப் போட முயற்சி செய்தேன் என்கிறார் ஷ்ரேயா ஷிங்கால். இது போல பலரும் தாக்கல் செய்திருந்தனர். 2013 இல் இந்த வழக்கை விசாரித்து வந்த காலத்தில் உச்சநீதிமன்றம் “போலிஸ் உயர் அதிகாரிகள் டி.ஜி.பி, ஐ.ஜி போன்றோரின் உத்தரவு இன்றி 66 ஏ பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக்கூடாது” என்று உத்தரவு போட்டது. இதன் தொடர்ச்சியாக இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நரிமன் அடங்கிய அமர்வு மேற்கண்ட பிரிவு 66 ஏ-வை ரத்துச் செய்து தற்போது தீர்ப்பளித்திருக்கிறது.
வழக்குத் தொடுத்த ஷ்ரேயா ஷிங்கால் 23 வயது இளம் பெண். தாயார் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர். பாட்டி நீதிபதி… என வழக்கறிஞர் குடும்பத்தைச் சார்ந்த இவர், டில்லியில் பள்ளிப் படிப்பு முடித்து இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆஸ்ட்ரோ பிசிக்சில் பட்டம் பெற்றவர். தற்போது டில்லி சட்டப் பல்கலைக் கழகத்தில் மாணவியாக உள்ளார்.
சட்டம் படித்தால் சாட்டையைச் சொடுக்கலாம் என்பதை உண்மையாக்கி இருக்கிறார்! தடா போனால் போடா என்று சட்டம் கொண்டு வந்தது போல அதிகார வெறி பிடித்தவர்கள் ஐ டி 66 ஏ போனால் இ டி77 பி என்று ஒரு சட்டம் கொண்டு வருவார்கள். அதை எதிர் கொள்ளவும், ஓரளவுக்காவது சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக உச்ச நீதி மன்றத்தில் உயர்த்தி குரல் கொடுக்கவும் வழக்கறிஞர்கள் நம்முடைய சமூகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 800 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாங்கள் என்று பெருமை பேசுவதில் பொருள் இல்லை. அநீதி எங்கே நடந்தாலும் அதற்கெதிராக துணிந்து குரல் கொடுப்பதில்தான் இருக்கிறது நமது பெருமை! நமது பிரச்சனைகளுக்கே ஈனஸ்வரத்தில் குரல் கொடுத்தால் எங்கே விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பது...? உலகச் சட்டத்தைக் கரைத்துக் குடித்து இந்தியச் சட்டங்களை விரல் நுனியில் வைத்துப் பேசுகின்ற, அல்லாஹ்வை அறிந்த வழக்கறிஞர்கள் ஒட்டு மொத்த இந்தியச் சமூகத்துக்கே தேவை. அவர்களை யார் உருவாக்குவது?
அந்த வகையில் ஷ்ரேயா சிங்காலுக்கு வாழ்த்துக்கள்! முக்கியமான செய்தி. இணையதள சுவாசிகளுக்கு ’சுதந்திரம்’ பெற்றுத் தந்த ஷ்ரேயா சிங்கால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள கிரகத்தில் வசிப்பவர் இல்லையாம் ! ஒரு சமூகத்துக்கு இன்னொரு சமூகம்தான் குரல் கொடுக்குமோ...?