கடமை உள்ள இடத்தில் அறிவு இருக்கும்

இக்வான்அமீர்

DUA
நெருப்பு கங்குகளைக் கொட்டுவது போல, சூரியன் வெப்பக் கதிர்களை செலுத்திக் கொண்டிருந்தான். அதனால் பாலைப் பெருவெளி அனலாய் தகித்தது. சிதறிய வர்ணம் போல ஆங்காங்கே பச்சையும் சாம்பலுமாய் புற்களும், புதர்களும் முளைத்திருந்தன. மேய்ச்சலுக்கு அவற்றைத் தேடிச் சென்ற ஆடுகள் வெப்பமிகுதியால் மேலோட்டமாய் மேய்ந்தன. பிறகு அடுத்த புல்பரப்புக்கு அவசரம்... அவசரமாய் விரைந்தன.
ஆட்டு மந்தையை ஒரு சிறுவன் காவல் காத்துக் கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த பாறையிலும் வெப்பம் கசிந்தது. அவனது பார்வை ஆட்டு மந்தையிலேயே இலயித்திருந்தது. ஓர் ஆடு காணாமல் போனாலும் அதன் உரிமையாளருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே! மந்தையிலிருந்து பிரிந்து செல்லும் ஆடுகளை விரட்டுவதும், ஒன்று சேர்ப்பதுமாய் அவன் இருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஓநாய் கவ்விச் சென்றுவிடும். தீவிரமான கண்காணிப்பின் காரணமாக வேறு சிந்தனையேதும் மனதில் எழவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் ஆட்டு மந்தையை நீர் நிலைக்கு ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கும். பாவம்! தாகம் தணித்துக் கொள்ளட்டுமே அந்த வாயில்லா பிராணிகள்.
பார்வையும் கவனமும் ஆட்டு மந்தையில் லயித்திருந்த அந்த நேரத்தில்தான், “தம்பி!” என்ற குரல் கேட்டது.
சிந்தனையிலிருந்து விடுபட்டுத் திரும்பியவனுக்கு பாறையின் மறுபக்கம் இருவர் நிற்பது தெரிந்தது. இருவரின் முகங்களிலும் களைப்பு வெளிப்பட்டது. அவர்கள் நெடுந் தொலைவு நடந்து வருகிறார்கள் போலும்! அந்த வழிப் போக்கர்கள் அருந்துவதற்கு நீராவது தரலாம் என்று நினைத்து தோல்பையை எடுத்தவன் அதில் நீர் இல்லாமலிருப்பதைக் கண்டான். உதடுகளை பிதுக்கிக் கொண்டான். “பெரியோரின் தாகம் தணிக்கவும் இயலாத துரதிஷ்டசாலியாகி விட்டேனே!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
நிலைமையை வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். “பரவாயில்லை தம்பி!” என்று சமாதானமும் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார்: “தம்பி! தாகம் உயிரைப் பறிக்கிறது. ஆட்டுப் பாலையாவது கறந்து குடிக்கிறோம். அதற்கு கொஞ்சம் அனுமதியேன்!”
வழிப்போக்கர்களின் நிலைமை சிறுவனை பெரிதும் வருத்தியது. அவர்களுக்கு உதவி செய்ய மனம் துடித்தது. ஆனால் இதை எப்படி அனுமதிப்பது? எஜமானரின் அனுமதியில்லாமல் ஆட்டுப்பால் கறக்க முடியாதே! சிறுவன் சங்கடத்துடன் தனது நிலையை வெளிப்படுத்தினான். “பெரியவர்களே! மன்னிக்க வேண்டும்! ஆட்டின் உரிமையாளர் அனுமதியின்றி பால் கறக்க இயலாது. உங்களுக்கு உதவி செய்ய முடியாமைக்கு மன்னிக்க வேண்டும்!”
“உரிமையாளர் தான் இங்கே இல்லையே தம்பி! பால் கறப்பதை அவர் பார்க்கவா போகிறார்?”
சட்டென்று நிமிர்ந்து நின்ற சிறுவனிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது: “உண்மைதானய்யா! ஆட்டு உரிமையாளர் இங்கில்லை; அவர் பார்க்கவும் முடியாது என்பது உண்மைதான்! ஆனால், எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றானே! நான் இந்தத் தவறை எப்படிச் செய்வேன்?”
சிறுவனின் தெளிவான பதிலைக் கேட்டதும் வழிப் போக்கர்களின் முகத்தில் புன்முறுவல் இழையோடியது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் ஏதோ சாடையாகச் சொல்லி தலையாட்டினர்.
கடைசியில், இருவரில் ஒருவர் சொன்னார்: “சரி! போகட்டும் தம்பி! குட்டிப் போடாத ஆட்டிலிருந்து பால்கறந்து குடிப்பதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே!”
“என்ன? குட்டிப் போடாத ஆட்டிலிருந்து பால்கறப்பதா? நடக்குமா இது? அப்படி நடக்குமானால்… எனக்கேதும் ஆட்சேபணையில்லை!”
வியப்பும் திகைப்புமாய் ஓர் ஆட்டை சிறுவன் பிடித்து வந்தான்.
வழிப் போக்கரில் ஒருவர் கண்களை மூடி பிரார்த்தித்தார். ஆட்டின் மடியில் கைவைத்தார். என்ன விந்தை! மடி பெருத்து பால் சுரக்கலாயிற்று. இருவரும் பாலை கறந்து வயிறு நிரம்பக் குடித்தனர். சிறுவனுக்கும் கொடுத்தனர். திரும்பவும் ஏதோ சொல்லி பிரார்த்திக்க பால் மடி பழையபடி வற்றிவிட்டது.
நடப்பதை நம்ப முடியாத விழிகளுடன் சிறுவன் பார்த்தான். சற்று நேரத்தில் வந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொண்டான். அவர்களைத் தேடிச் சென்று பணிவோடு சொன்னான்: ”இறைவனின்தூதரே! நான் தங்கள் திருச்சமூகத்தில் இருந்து எப்போதும் பணிவிடை செய்ய விரும்புகின்றேன். அதுபோலவே, தங்களோடு தங்கியிருந்து கல்வி அறிவு பெறவும் ஆசைப்படுகின்றேன். தாங்கள் இதற்கு அனுமதி தரவேண்டும்!”
“மகனே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்! தாராளமாக இருக்கலாம். நீர் கல்வி அறிவுகளில் சிறந்து விளங்குவீர் என்பதில் சந்தேகமேயில்லை! ஏனென்றால் கடமை தவறாத உணர்வு எங்கிருக்கிறதோ அங்கு அறிவும் தங்கு தடையின்றி இருக்கும்!” என்று நபிகளார் அந்த சிறுவரைக் கட்டியணைத்து வாழ்த்தினார். பின்னாளில் புகழ் வாய்ந்த நபித்தோழராக வளர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை தம்முடன் இருக்க அனுமதியும் தந்தார். பக்கத்திலிருந்த நபித்தோழர் அபூபக்கரும் அதை ஆமோதிப்பதைப்போல தலையசைத்தார்.