முறிக்கப்படும் முதுகெலும்பு

tamilsmsjoke vivasayiநில அபகரிப்புச் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதரமான விளை நிலங்களை, வெளிநாட்டுக் கம்பெனிகளின் லாபத்திற்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் மா பாதகச் செயலுக்கு, நாடு முழுவதும் கட்சி பாகுபாடின்றி கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஆனால் தாம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை நிறைவேற்று
வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முரண்டு பிடிக்கும் மோடி மறுபக்கம் “கடின உழைபாளியான விவசாயி எந்த ஒரு தருணத்திலும் தான் தனித்து விடப்பட்டதாக கருதக்கூடாது. இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதில் நாமனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம்.” என்று விவசாயிகளின் முதுகை வருடிக் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் முதலாளிகளின் விசுவாசியான உத்தமர் மோடி.
கதை ஒன்று சொல்வார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் ரோம சாம்ராஜ்யத்தில் நீரோ என்ற பேரரசன் அதிகாரமிக்கவனாக இருந்தான். அதே நேரத்தில் கலை, கவிதை, குடி என்று வாழ்க்கை முழுவதும் கேளிக்கையாகவே சென்றது. ஒரு முறை அவன் மிகப் பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து சமுதாயத்திலுள்ள கவிஞர்கள், ஓவியர்கள், அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான். ஒவ்வொருவரும் உண்டு, கழித்து, குடி போதையில் ஆனந்தத்தில் மிதந்தார்கள். நேரம் ஆக ஆக கேளிக்கை உச்சத்தை அடைந்து இரவும் வந்தது. கேளிக்கையை தொடர விரும்பிய நீரோ மன்னன் சிறையிலிருந்த அனைத்துக் குற்றவாளிகளையும் அவன் தோட்டத்தை சுற்றி நிற்க வைத்து அனைவரையும் தீயிலிட்டுக் கொளுத்தினான். அது விருந்தினர்கள் கேளிக்கையை தொடர்வதற்குத் தேவையான வெளிச்சத்தை கொடுத்ததாம். அது விருந்தினர்களுக்கு மகிழ்ச்சியான நேரம்தான். ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட மனித உயிர்களின் விலை குறித்து அவர்களுக்குத் தெரியுமா? அந்த விருந்தினர்களுக்கு என்ன நிலையான மனசாட்சி இருந்திருக்கும். இன்று இந்தியாவிலும் பணப்பேய்களின் ஆனந்தத்திற்காக விவசாயிகளின் உடல்கள் தங்கள் உயிர்களை பலி கொடுப்பது தொடர் கதையாகி வருகிறது.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பேரணியில் ராஜஸ்தானில் 7 ஏக்கர் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயி கஜேந்திர சிங் தன்னை தூக்கிலியேற்றிய போது இந்தியாவின் மானம் தூக்கில் செத்துத் தொங்கியது. தாங்களெல்லாம் யோக்கியசிகாமணிகள் போல காங்கிரஸும், பாரதீய ஜனதாவும் ரத்தம் வடியும் தங்கள் கைகளை நீட்டி ஆம் ஆத்மி கஜேந்திர சிங்கை கொலை செய்த கட்சி என்று குற்றம் சாட்டுகின்றன.
அதுவரை இறந்து போன விவசாயிகளின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்திருந்தால் காங்கிரஸ், ப.ஜ.கா, கட்சிகளின் முகங்களில் காறி உமிழ்ந்திருக்கும்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று 27-04-2015 அன்று உச்ச நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி.எல்.மணி பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் இந்தியாவில், ஒவ்வொரு நாளும் 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு 13,574 விவசாயிகள் தற்கொலை
செய்து கொண்டதாகவும், 1995-ஆம் ஆண்டிலி
ருந்து 2013-ஆம் ஆண்டு வரை 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக
வும் அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறன.
விவசாயிகளைக் காப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்குப் போதுமான நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1960 - 69 பத்தாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் எதுவும் இல்லை. அன்றும் விவசாயிகளுக்கு கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
தாராளவாதம், உலகமயம் என்ற பெயரில் இந்தியாவிற்குள் மறுகாலனியாதிக்கத்துக்கான பாதை திறந்து விடப்பட்ட பின்புதான் விவசாயிகளின் தற்கொலைக்கான விதை போடப்பட்டது. அதன் மூலம் இன்று விவசாயிகளின் உயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தாராளவாதமும், உலகமயமும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் விவசாயத்தில் ஏற்படுத்திய அழிவுகள் அவர்களுக்கு இலேசனதாக இருக்கலாம். இந்தியர்களாகிய நமக்கு அப்படியில்லை. ஏனெனில் இந்தியாவில் விவசாயம் என்பது வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம்.
இந்தியாவின் விவசாய அமைச்சகம் விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு எப்போதும் இது போன்ற நிகழ்வுகளை குறைத்து மதிப்பிட்டுத்தான் வந்திருக்கிறது என்றாலும் அது கூறும் எண்ணிக்கையே வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மஹாராஷ்ட்ராவில் 10.269 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கடுத்த நிலையில் 6000, 5,378, 3,588 மற்றும் 2,883 என ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இடம் பிடித்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் மொத்தம் 39,553 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேலும் 1995 லிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
1947 தொடங்கி 2004 முடிய, ஏறக்குறைய 2.5 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகமயமாக்களுக்கு முன் 1990 - களில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தான் உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இப்பொழுது 46 கோடீஸ்வர புதுப் பணக்காரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ஆர்சிலர் ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர் லட்சுமி மிட்டல், சன் ஃபார்மா அதிபர் திலிப் சாங்வி, விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் நிறுவனப் பங்குதாரர் பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி ஆகிய ஐந்து பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 5,23,897 கோடி ரூபாயாகும். இந்த பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் ஆஸ்திரேலியாவில் சம்பாதிக்க, இந்தியாவின் ஸ்டேட் பேங்கிலிருந்து ரூ.6,200 கோடி கடன் பெற்ற பெரும் பணக்காரர் அதானி. 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், வெறும் 5 பேர் அடைந்திருக்கும் ‘வளர்ச்சி’ மலைக்கத்தக்கதாக இருக்கும்பொழுது கோடிக்கணக்கான ஏழை
களின் வாழ்க்கையோ பேரழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் கோடிகளில் கடன் வாங்குபவன் முதலாளி. ஆயிரக்கணக்கில் கடன் வாங்கும் விவசாயி கடன்காரன்.
இந்திய விவசாயிகளில் 49 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. இந்தக் குடும்பங்க
ளின் சராசரி கடன் சுமை தலா வெறும் 25,891
ரூபாய் மட்டும்தான். கடந்த இருபது ஆண்டுக
ளில் கடனை அடைக்க வழியின்றித் தற்கொலை
செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையோ 2,70,490. ஆயிரம் கோடிக
ளில் கடன் வாங்கிய எவனும் இதுவரை தூக்கில் தொங்கிய ஒரு செய்தி கூட இல்லை.
தாராளமயம், தனியார்மயம் வந்த பிறகு, இந்தியாவைச் சேர்ந்த பெருநிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகளின் ஆண்டு வருமானம் 30,000 மடங்கு அதிகரித்திருக்கும்பொழுது, இந்தியத் தொழிலாளர்களின் கூலி 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படும் வேகம் 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
விவசாயக் கடன் என்ற பெயரிலும் பெரு நிறுவனங்கள் நிதியை ஒதுக்கிக் கொள்கின்றன. அமிதாப் பச்சன் தன்னை விவசாயியாக அங்கீகரிக்கும் படி போராடிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய விவசாயி முகேஷ் அம்பானிதான்.
விவசாயக் கடன்களில் 53% நகர்ப்புற வங்கிக் கிளைகளில் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்குவதற்கு ரூ 66 கோடி கடனுக்கான வட்டி வீதம் 7%. கடன் வழங்கிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. அதே வங்கிக் கிளையில் டிராக்டர் வாங்க 12 - 14% வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஒராண்டுக்கு முன்பு, ஹசாரிபாக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ - “வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி” என்ற கோஷத்தை “மார் ஜவான், மார் கிசான்’ “சாகட்டும் போர்வீரன்! சாகட்டும் விவசாயி” என்று காங்கிரஸ் மாற்றி விட்டதாக காங்கிரசை குற்றம்சாட்டினார். இவர் குஜராத்தில் இருந்த போது கிஜ்தாத் கிரமத்தை சேர்ந்த அனிருத் ஜடேஜா எனும் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “கிராமத்தில் போதுமான மழை இல்லை, விவசாயத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை, 11,000 ரூபாய் கடன் கொடுத்த வங்கி தரப் போகும் அழுத்தத்தை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று தெளிவாக எழுதி வைத்து விட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டார். இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தவர்தான் மோடி.
அவரது கட்சி எம்.பி. சஞ்சய் தோத்ரே , மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் 72 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு “விவசாயிகள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். பயிர்களினால் விளைச்சல் தோல்வியடைந்தால் என்ன செய்வதென்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
அவர்கள் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள் என்றால் அப்படியே செய்யட்டும்” என்று விவசாயிகள் மாநாட்டிலேயே கூறியவர்.
கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருக்கிறது. மேலும் மோடியின் “நிலம் கையகப்படுத்தும் சட்டம்“ விவசாயிகளை கடுமையாக பாதித்திருக்கிறது....இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்தான் கஜேந்திர சிங் தற்கொலை செய்திருக்கிறார்...இதில் கேஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு என்று ஏன் விசயத்தை திசை திருப்ப வேண்டும்?
நாடு ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு வருகிறது. விவசாயத்தின் அழிவு என்பது இந்தியாவின் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் முறிக்கப்பட்டு நுடமாக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிந்து போகும் நிலையை அடைந்திருக்கிறது.
மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (மிஸீstவீtutமீ ஷீயீ கிஜீஜீறீவீமீபீ விணீஸீஜீஷீஷ்மீக்ஷீ க்ஷீமீsமீணீக்ஷீநீலீ) ஆய்வில் தெரிய வந்துள்ளது.farmer-suicide
1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர்.
இந்த அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒரு ‘விவசாயி தற்கொலை’ என்பதை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்? குறைந்த
பட்சம் நிலம் வைத்து நேரடியான பயிர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலை
களை மட்டுமே விவசாய தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையம் கணக்குக் காட்டுகிறது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. இந்த வகையான மோசடிகளின் மூலம் 2006 - 2010 காலகட்டத்தில் 7,500 விவசாய தற்கொலைகள் பதிவான சட்டீஸ்கர் மாநிலம் கடந்தாண்டு விவசாய தற்கொலைகள் நிகழாத மாநிலமாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.
விவசாயத்தின் அழிவு நாட்டை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி
மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்
திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோ
கமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் ஆளும் கும்பலான எட்டப்பர்களை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்த
மாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.
கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நம்ப முடிகிறதா?
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார காரணங்களால் மருத்துவ சேவையை தவிர்ப்பவர்களின் வீதம் 1000-க்கு 180 லிருந்து 284 ஆக உயர்ந்திருக்கிறது. மருத்துவச் செலவால், குடும்பமே நடுத்தெரு
வுக்கு வருவது அதிகரித்து வருகிறது. நாட்டில் 18 கோடி மக்களுக்கு எந்த மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை
ஆந்திராவில் ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். நண்பர்கள் ஒரு கட்டிலை திருப்பிப் போட்டு அவரைத் தூக்கிக் கொண்டு 2 கிலோமீட்டர் ஓடி, நெடுஞ்சாலைக்குப் போய் வண்டி பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றினார்கள். ஆனால் உயிர் பிழைத்த அவர் அவர்களை திட்டுகிறார். “4 ஆண்டுகள் விவசாயம் செய்து ஏற்பட்ட ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். அதிலிருந்து காப்பாற்ற 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்” என்று திட்டுகிறார்.
ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூரில் ஒரு துயருற்ற விவசாய பெண்மணி அரசு நடத்தும் விதைக் கடையில் கடனுக்கு பூச்சி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டு உயிரை விட்டார். வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்தவள், இறந்த பின்னும் கடனை விட்டுச் செல்ல வேண்டிய பரிதாப நிலை. இப்படி ஆயிரமல்ல சொல்வதற்கு லட்சம் விவசாயிகள் கதைகள் இருக்கிறது. பணத்தை உயிராகக் கொண்ட உணர்வற்ற சொகுசான உடல்களுக்கு அந்தக் கதைகள் எந்தக் கவலையையும் தராது.
நீரில்லாமல் விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்ட போக வாழ வழி தெரியாது வாழ்நாட்களின் வரவை முடித்துக் கொள்ளும் விவசாயிகள் ஒரு பக்கம் நாதியற்று தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும், விலையும் இல்லாமல் நட்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.
இங்கு விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், “விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது”.
ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர்.
எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.