நெட் நியூட்ராலிட்டி

பாகுபாடற்ற, சார்புகளற்ற, சுதந்திர இணையம்!

net
- ப.ரகுமான்
இணையத்தை கட்டுப்படுத்துவது யார்? இது ஒரு பொது அறிவுக் கேள்வி. யாருமில்லை என்பதே இதற்கான விடை. அரசுகளோ நிறுவனங்களோ ஐ.நா. உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளோ அதைக் கட்டுப்படுத்துவதில்லை; அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் இந்த விடையை உரசிப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இணையம் என்பது சுதந்திரமானதாக, கட்டுப்பாடற்றதாக, கட்டுப்படுத்த முடியாததாக இறுதிப் பயனாளர் நிலையிலிருந்து பார்க்கும்போது தோற்றம் காட்டுகிறது. உண்மையில் இணையத்தின் கட்டமைப்பிற்கு முதுகெலும்பு போல செயல்படும் அமைப்புகள், தொழில்நுட்பங்கள் அல்லது நிறுவனங்கள் உள்ளன: ஐகான் (ICANN), ஐஏஎன்ஏ (Internet Assigned Numbers Authority), டிஎன்எஸ் (Domain Name Service or System or Server). இவை அமெரிக்க நிறுவனங்களால், மறைமுகமாக அமெரிக்க அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதை உடைக்க வேண்டும் என்றுதான் உலக நாடுகள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. ஏனெனில் முறைகேடுகள், ஆபாசங்களை வடிகட்டுவதில் உலக நாடுகள் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன. லகானை அமெரிக்கா கையில் வைத்திருப்பதால் பிற நாடுகளுக்கு கையறு நிலை. ஆனால் உலக நாடுகள் சொல்கிறபடி மாற்றினால் கருத்து சுதந்திரம் அல்லது கட்டற்ற சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடும் என்பது அமெரிக்காவின் வாதம். அது போலியான வாதம்.
உலக அளவில் அமெரிக்கா எதற்காககட்டற்ற சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறதோ அதே நோக்கத்திற்காகத்தான் இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தை பறிக்கும் வேலையில் இந்தியாவில் மத்திய அரசும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயும் (TRAI - Telecom Regulatory Authority of India) இறங்கியிருக்கின்றன. அதன் விளைவாக "நெட் நியூட்ராலிட்டி" தொடர்பான விவாதங்கள் மேலெழுந்துள்ளன.
மோடி தலைமையிலான பாஜக அரசு என்பது, பெரும் வணிக-தொழில் நிறுவனங்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக செயல்படும் "கூலிப்படை" என்பதும், ஒழுங்குமுறை ஆணையங்கள் என்பவை தனியார்மயமாக்கத்தை, தனியார்மயத்திற்கு சாதகமான நடவடிக்கைகளை மறைத்து நிற்கிற தொங்கு திரை என்பதும் மீண்டும் ஒருமுறை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இணையம் எப்படி செயல்படுகிறது?
பேருந்தை ஓட்டுவதற்கு அதன் பொறியமைப்பு, இயக்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணையத்தை பயன்படுத்துவதற்கும் அதன் இயக்கம் தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் தேவை இல்லை. இருப்பினும், "நெட் நியூட்ராலிட்டி" சிக்கலை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு இணையம் எப்படி செயல்படுகிறது என்பதுதொடர்பான சில அடிப்படை புரிதல்கள் நமக்கு உதவக்கூடும்.
இணையம் என்பது ஒரு உலகளாவிய, கருவிகளின் (கணினி, மொபைல்) வலைப் பின்னல். இதில் உங்கள் கணினி, அண்டை வீட்டுக்காரரின் கணினி, கூகுள் நிறுவன கணினிகள் என அனைத்தும் அடக்கம். இணையத்தி்ன் வரலாறு 1960கள் என்ற காலகட்டத்திற்கு பின்னோக்கி செல்கிறது. இருப்பினும், தற்போது நாம் பயன்படுத்தும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணைய தளங்களாக, வலைப் பக்கங்களாக (web pages) அமைக்கும் முறை 25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகும்.
இணையத்தில் இணைந்துள்ள கோடிக் கணக்கான கணினிகள், முதன்மையாக கம்பிவடங்கள் (கேபிள்) மூலமே இணைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இணைக்கும் தொலைபேசி வயர்களில் தொடங்கி, மின்னல் வேகத்தில் தகவல்களை கடத்தும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள் வரை அனைத்து வகையான கம்பிவடங்களும் இதில் அடக்கம். இன்றைக்கு பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்துகிறோமே, அது ஏடிஎஸ்எல் (Asymmetric Digital Subscriber Line - ADSL) எனப்படுகிறது. அதாவது கணினியானது பிராட்பேண்ட் ரூட்டருடன் (broadband router) இணைக்கப்படுகிறது. பிராட்பேண்ட் இணைய இணைப்பு கொடுக்கும்போது, சிறிய பெட்டி வைக்கப்படுகிறதே அதில் ADSL+ router என குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்திருக்கலாம். இந்த பிராட்பேண்ட் ரூட்டரானது தொலைபேசியுடன், ஒரு சிறிய சாக்கெட் வழியாக இணைக்கப்படுகிறது.
அதிலிருந்து உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்திற்கு இணைக்கப்பட்டு, அங்கிருந்து இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் (internet service provider - ISP) சர்வர்களுடன் இணைக்கப்படுகிறது. இந்த சர்வர்கள் மூலமே இணையத்தின் எஞ்சிய பகுதிகளுடன் இணைப்பு கிடைக்கிறது. ஃபைபர்-ஆப்டிக் கேபி்ள்கள் கடல் கடந்து கண்டங்களை இணைக்கின்றன. இவை நொடிக்கு பல டிரில்லியன் கணக்கான தகவல்களை கடத்தும் திறன் கொண்டவை. இணைய தொடர்பு என்று வரும்போது செயற்கைக் கோள் இணைப்புகளும், மொபைல் மூலமான கம்பியில்லா தொடர்பு முறையும் முதன்மையான பங்கு வகிக்கின்றன.
பயனாளர்களைப் பொருத்தவரை வீட்டுக் கணினி அல்லது அலுவலகக் கணினிக்கு, இணைய தளங்களை வழங்குபவை சர்வர் கணினிகள் ஆகும். சர்வர்களை ஆற்றல்மிக்க கணினிகள் என்று கூறலாம். ஒரு இணைய தளத்திற்கு செல்லும்போது (சான்றாக www.google.com) என்ன நடக்கிறது என்றால், சர்வரானது தகவல்களை இணையத்தின் வழியாக பயனாளர் கணினிக்கு அனுப்பி வைக்கிறது.
சரி, கோடிக் கணக்கான இணைய பக்கங்கள் இருந்தாலும், பிரவுசரில் www.google.com என்று தட்டச்சு செய்யும்போது சரியாக அந்த இணைய தளம் எப்படி காட்டப்படுகிறது? இதற்கு விடைதான் ஐபி முகவரி (internet protocol address - IP address). இணையத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொரு கணினிக்கும் ஒரு ஐபி முகவரி உண்டு. சான்றாக 62.140.213.251 என்பது ஓர் ஐபி முகவரி. இதுபோன்ற எண்களை மனதில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால், இணைய தளங்கள் டிஎன்எஸ் எனப்படும் டொமைன் பெயர் முறையை (Domain Name System - DNS) முறையை பயன்படுத்துகின்றன. அதாவது எண்கள், www.bbc.com என்பது போன்ற பெயர்களாக மாற்றப்படும் முறை இது.
பாக்கெட் முறை பரிமாற்றம்
கணினி அல்லது இணையத்தின் வழி அல்லது டிஜிட்டல் முறையில் எல்லா தகவல்களும் 0, 1 என்ற வடிவிலேயே பரிமாறப்படுகின்றன. இவ்வாறு ஒரு தகவலை அனுப்பும்போது அது பல துண்டுகளாக பிரித்து அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு துண்டும் பாக்கெட் எனப்படுகிறது. தகவல் மூட்டைகளை பொட்டலங்களாக பிரித்து அனுப்பும் முறை இது. இந்த டேட்டா பாக்கெட்டுகள் வெவ்வேறு திசையி்ல் வெவ்வேறு கணினிகள் வழியாகக் கடத்தப்படும். ஏதாவது ஒரு (சர்வர்) கணினியில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது இணையம் ஒருபோதும் ஒட்டுமொத்தமாக முடங்கிவிடாது. இப்படிப்பட்ட நோக்கத்துடன்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் (U.S. Advanced Research Projects Agency - ARPA) இணையமே உருவாக்கப்பட்டது. இணையம் முடங்காவிட்டால் என்ன, முடக்கும் வேலைக்கு இணையத்தை பயன்படுத்தலாமே?
மின்வெளிப் போர்
உளவு அல்லது ஒற்றாடல் வேலைகள் என்பவை வரலாற்றுக் காலம் தொட்டு இருப்பவை. தற்போது இதற்கு உயரிய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. அந்த வகையில் இணைய ஒற்றாடல் என்பதும் புதிதல்ல. அதற்கென கணினி நச்சு நிரல்களும் உருவாக்கப்படுகின்றன.
ஈரானின் அணுத் திட்டங்களை சீர்குலைத்த ஸ்டக்ஸ்நெட் (Stuxnet), அதன் அடுத்த வடிவமான டீக்யூ (Duqu) ஆகிய இரண்டும் பாதுகாப்புத் துறையை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய கணினி நச்சு நிரல்களாகும். அந்த அளவிற்கு அவை நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை இரண்டையும் தொடக்கமாக வைத்து, அவற்றின் அடிப்படையில் மேலும் பல மேம்பட்ட கணினி நச்சுநிரல்கள் (மால்வேர்கள்) உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஸ்டக்ஸ்நெட் (Stuxnet) மற்றும் டீக்யூ (Duqu) ஆகியவற்றின் உருவாக்கத்தின் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் மின்வெளிப் போருக்கான (cyberwar) விதைகளை தூவின. (அரசியல் அல்லது ராணுவ உள்நோக்கங்களுடன் இத்தகைய அத்துமீறல்கள் நடைபெறுவதால், இவற்றை மின்வெளிப் போர் என்றும், மின்வெளி மோதல்கள் என்றும் சொல்கின்றனர்).
இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், அரசின் உடைமைகளை மின்வெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தேவையானால் பதிலடி கொடுக்கவும் சிறப்பு வல்லுநர் குழுக்களை உருவாக்கியுள்ளன.
இதன் விளைவாக, தகவல் பாதுகாப்பு பற்றிய பார்வையில் மாற்றம் தேவை என்பதுடன், தகவல் மூலங்களுக்கு அதிக கட்டு்ப்பாடு விதிக்கப்பட வேண்டும்; ஒரு கோப்பின் தன்மையை சோதித்து, அதன் பின்னர் கணினியில் செயல்பட அனுமதிக்கும் (கோப்பு அங்கீகாரம்) தொழில்நுட்பங்கள் மூலமே இணைய ஒற்றாடல்களை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. நெட் நியூட்ராலிட்டிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முதல் அம்சம் இதுதான்.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இணையத்தில் எல்லாம் டேட்டா பாக்கெட்டுகள்தான்.
இந்த டேட்டா பாக்கெட் எங்கிருந்து வருகிறது, யாருக்கு உரிமையானது, அதில் என்ன அடங்கியிருக்கிறது என்பது, இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தேவையற்றது. இந்த அடிப்படையில் டேட்டா பாக்கெட்டுகளை பாகுபடுத்தி பார்க்கவும் அவற்றிற்கு உரிமை இல்லை.
இதன் மூலமே, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடற்ற, நிறுவனங்கள் அல்லது நாடுகளின் சார்பற்ற, சுதந்திரமான கட்டுத்தளைகளற்ற, திறந்த இணையம் அதாவது நெட் நியூட்ராலிட்டி என்பது சாத்தியம். ஆனால் அது எல்லா நிலைகளிலும் தகரத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NSA - National Security Agency), தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஒட்டுமொத்த உலகத்தையுமே ஒற்றாடி வந்தது அம்பலமானதன் பிறகு இது ஐயத்திற்கிடமற்ற உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இணையம் என்பதே அமெரிக்காவின் உளவு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் சதிகார வலைப்பின்னல் என்று ரஷ்ய அதிபர் புதின் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறார். அவர் அரசின் முக்கிய கோப்புகளை கணினிகளில் தட்டச்சு செய்வதில்லை. பழைய தட்டச்சு எந்திரங்களையே பயன்படுத்துகிறார் என்பது பிரச்சினையின் பரிமாணத்தை நமக்கு உணர்த்துகிறது.
சவப்பெட்டிக்கான கடைசி ஆணி!
ஆக சமத்துவமற்ற உலகில், இணைய சமத்துவம் (Net Neutrality), இணைய சுதந்திரம் என்பதே அபத்தமானதுதான் என்றாலும் இப்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், லாப வெறியுடன், இணையவாசிகள் மீது மின்வெளிப்போர் தொடுத்துள்ளன. சவப்பெட்டியின் கடைசி ஆணி என்பார்களே, அதை அறைவதற்கு முயற்சி நடைபெறுகிறது. Internet.org எனப்படும், ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ், சாம்சங் உள்ளிட்ட 7 நிறுவனங்களின் கூட்டுமுயற்சியும், இதேபோன்ற ஏர்டெல் ஜீரோ திட்டமும் அப்படித்தான் விமர்சிக்கப்படுகின்றன. இதில் மிகமுக்கியமாக கவனிக்க வேண்டியது, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்று சொல்லப்படும் ட்ராய் இந்த வேலையை முன்னின்று செய்கிறது என்பதைத்தான்.
நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் உலகளவில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது எனினும் இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பு வழங்கும் (ISP - Internet Service Provider) நிறுவனமான ஏர்டெல், டிசம்பர் 2014ல் வெளியிட்ட அறிவிப்புதான் விவாதத்திற்கு வழிவகுத்தது. அதாவது, ஸ்கைப் மற்றும் வைபர் (viber) போன்ற இணைய வழி சேவைகளுக்கு (VoIP - Voice over Internet Protocol) கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிவித்த பிறகே, நெட் நியூட்ராலிட்டி பற்றிய விவாதம் இந்தியாவில் தூண்டப்பட்டது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI - Telecom Regulatory Authority of India) இந்த விவகாரம் தொடர்பாக கலந்தாய்வு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு, அதுதொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அறிவிப்பையும் வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் இந்த விவாதம் வேகம் பெற்றது. அண்மையில் அறிவிக்கப்பட்ட "ஏர்டெல் ஜீரோ" திட்டமும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பெருகி வரும் பெருந்தரவுகளும், அருகி வரும் அறவுணர்வுகளும்!
தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பயன்களை அனுபவித்து வரும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால் இதை தகவல் யுகம் என்றுகூட வர்ணிக்கிறோம். ஏனெனில் இன்று தரவுகளும் (DATA), தகவல்களும் (Information) மிகமுக்கியமான மூலவளங்களாக உள்ளன.
தரவுகள் வேறு; தகவல்கள் வேறு. (தரப்படும் விவரங்களைத் தான் தரவு என்கிறோம். டேட்டா என்ற லத்தீன் சொல்லும் அத்தகைய பொருள் கொண்டதே). தகவல்களை உருவாக்குவதற்கு தரவுகள் தேவை.
தரவுகள் கச்சாத்தன்மை கொண்டவை; ஒழுங்கமைக்கப்படாத விவரங்கள். ஒழுங்கமைக்கப்படும்போது பயனுள்ளவை ஆகின்றன. அப்படி தரவுகளை செயல்படுத்தி, ஒழுங்கமைக்கும்போது, அவற்றை ஒரு வடிவஒழுங்குடன் முன்வைக்கும்போது தகவல்களாக பயனளிக்கின்றன.
இணையத்தில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் ஒருவரின் பெயர், வயது, பால், படிப்பு இன்னபிற விவரங்களை அதாவது "தரவுகளை" திரட்டி வைத்துக் கொண்டு, அவரது விருப்பம், வாங்கும் திறன், ரசனை என பயனுள்ள "தகவல்களை" நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அதன் மூலம் விளம்பரம் செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
தரவுகளின் வகைகள், தரவுகளின் அளவு, தரவு உருவாக்கத்திற்கான வேட்கை, தரவுகள் வளர்ந்து செல்லும் வேகம், தரவுகளின் மதிப்பு எனும் ஐந்து காரணிகளை வைத்துப் பார்க்கும்போது, பெருந்தரவுகளின் (Big Data) பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் என்பது பெட்ரோலியப் பொருளாதாரத்திற்கு நிகரானதாக இருக்கும் என்கின்றனர் அத்துறை சார்ந்த வல்லுநர்கள். மொபைல் சாதனங்களின் பெருக்கம் ஏற்கெனவே உலகளவில் பெருந்தகவலை இயக்கும் முதன்மையான காரணியாக உள்ளது என்பதை அதற்கு சான்றாகக் காட்டுகிறார்கள்.
கூகுள் என்பது என்ன? ஒரு இணைய நிறுவனம், தேடு பொறி நிறுவனம், மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கும் நிறுவனம், ஏன் கூகுள் கண்ணாடி போன்ற அணிமணி கணினிகளை உருவாக்கும் நிறுவனம், இணையச் சேவை வழங்கும் நிறுவனம் என இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால் இதில் எந்த வரையறையும் தனியே கூகுள் நிறுவனத்திற்குப் பொருந்தாது. சுருக்கமான அதேநேரத்தில் முழுமையான வரையறையை கூகுள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமானால் அது ஒரு "பெருந் தரவு நிறுவனம்". தரவுகளை திரட்டுவதற்கான வேட்கையே கூகுள் நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அடிப்படை. ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சியின் பின்னே இருப்பதும் தரவுகளின் தேவையே.
சமூக வலைத் தளங்கள்:
எதிர்காலத்தை தீர்மானிக்கும் போட்டி!
தொடக்கத்தில் தனிக் கணினிகள் இருந்தன. பின்னர் அவை நெட்ஒர்க்கில் ஒன்றோடு ஒனறு இணைக்கப்பட்டு, இணையம், வைய விரி வலை (World Wide Web) என வளர்ந்தது. வைய விரி வலை என்பது பிரவுசர் எனப்படும் வலை உலாவிகள் ஆட்சி செலுத்திய காலகட்டம். இதைத் தொடர்ந்து சர்ச் எஞ்சின் எனப்படும் தேடல் பொறிகள் வந்தன. கூகுள் காலகட்டம் என்று சொல்லுமளவிற்கு கூகுளின் தேடுபொறி இன்று கோலோச்சுகிறது. இதையும் தாண்டி இப்போது மூன்றாவது காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளோம். இது சோஷியல் நெட்ஒர்க் எனப்படும் சமூகப் பிணைப்புத் தளங்களின் காலகட்டம். இதில், தலைமையைக் கைப்பற்றி முன்னணியில் இருப்பது ஃபேஸ்புக்.
இணைய வலையின் சமூகப் பரிமாணம் என்பது புதிதல்ல. தொடக்கத்தில் இருந்தே சமூகப் பரிமாணத்துடன் கூடியதாகவே அது உள்ளது. இருப்பினும் சமூகத் தன்மையை முதன்மை