ஜீன்ஸ் பேண்ட் ஆபத்து

JEANS-facebookஇறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம் அமர்ந்திருப்பதால் கால்களுக்கான இரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு ஏற்படும், அத்துடன் கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.‘ஜர்னல் ஆப் நியூராலஜி, நியூரோ சர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவப் பத்திரிக்கையில் இது குறித்த மருத்துவர்களின் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்றைய நாகரீகத் தலைமுறை தங்களில் உடலுக்கு கவர்ச்சி தரும் உடையாக நினைத்து அணியும் ஜீன்ஸ் ஆசைக்கான ஆடையாக இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கிற எச்சரிக்கைகள் தொடர்ந்து மருத்துவர்களால் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
ஏற்கனவே இறுக்கமான, லொ கட் ஜீன்ஸ்களை அணிபவர்களுக்கு தொடைகளில் வலியும், எரிச்சலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
அதிலும் குறிப்பாக ஆண்கள் இப்படியான இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிந்தால் அவர்களின் விதைப்பைகளின் அமைப்பே மாறிவிடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் ஆண்களின் விந்தணு உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
அதனால் தான் குழந்தை பெற விரும்பும் ஆண்கள் இறுக்கமில்லாத உள்ளாடைகள் மற்றும் கால் சட்டைகளை அணியும்படி தாங்கள் பரிந்துரைப்பதாக தெரிவிக்கிறார் மருத்துவர் சாரா ஜார்விஸ்.
காரணம் இறுக்கமான உடைகள் அணியும்போது ஆணின் விதைப்பைகள் தொடர்ந்து உடலோடு அழுத்தி இறுக்கிவைக்கப்படுகின்றன. அது விதைப்பைகளின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்கிறார் சாரா. எனவே குழந்தை பெற விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு உதவும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும் என்கிறார் அவர்.
மேலும் சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பவர்களும் கூட இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். காரணம் இறுக்கமான உடைகள் அவர்களின் சிறுநீர்ப்பாதை தொற்றை அதிகரிக்கச் செய்யும் என்றும் மோசமடையச் செய்யும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்களும் இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் இறுக்கமான ஜீன்ஸ்கள், அடிவயிற்றில் கூடுதலான அழுத்தத்தை செலுத்துவதால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல்நோக்கி உந்தப்பட்டு ஏற்கனவே இருக்கும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் கால்களை மடக்கி அமர்ந்திருந்ததால் அவரது கால்கள் உணர்விழந்து மயங்கி விழுந்துவிட்டார். அவரது கால்களின் கீழ்ப்பகுதி பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸை கழற்ற முடியாமல் வெட்டி எடுக்கப்பட்டது. பிறகு அவருக்கு நான்கு நாட்களுக்கு நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ், அவரது கால்களுக்கான இரத்த ஓட்டத்தை தடுத்து பாதிப்பு ஏற்படுத்தி, அவரது கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம் உண்டாக்கியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்தே ஜீன்ஸ் பற்றிய இந்த எச்சரிக்கை மீண்டும் விடப்பட்டிருக்கிறது.
ரமளானுக்கும் ஆடைகளை வாங்கும் இளம் வயதினர் மற்றும் பெற்றோர் இதை கவனத்தில் கொள்ளட்டும்.
இல்லையேல் உடலுக்கு கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது.