லலித் மோடி

Lalit-Modi-row-Sushma-Vasundhara-deepens-the-crisis-

ஊழலற்ற நிர்வாகம் என்பதையும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றாக மத்திய பாஜக அரசு மார்தட்டிக் கொள்கிறது. அரசியல் அகராதியிலிருந்து ஊழல் என்ற சொல்லையே ஒழித்துவிட்டதாக முழங்குகிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கள்ள முதலாளித்துவத்தின் வீழ்ச்சி - ஓராண்டு சீர்திருத்தம் (ஜிலீமீ திணீறீறீ ஷீயீ ஹிறிகி’s சிக்ஷீஷீஸீஹ் சிணீஜீவீtணீறீவீsனீ - கி சீமீணீக்ஷீ ஷீயீ ஸிமீயீஷீக்ஷீனீ) என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் அருண் ஜேட்லி, 2015 மே 19ஆம் நாள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், “இந்தியாவின் அரசியல் அகராதியிலிருந்து ஊழல் என்ற சொல் நீக்கப்பட்டுவிட்டது. முதலீட்டாளர்களை (புகார் பதிவு செய்து, வழக்கு தொடர்ந்து) சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் சூழல் முற்றாக மாற்றப்பட்டுள்ளது. சீர்திருத்தம், தாராளமயமாக்கலை நோக்கி உந்தப்பட்டாலும் கள்ள முதலாளித்துவம், (முதலீட்டாளர்களை) துன்புறுத்துதல் ஆகியவை இல்லை” என்கிறார் அருண் ஜேட்லி.
அதாவது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கள்ள முதலாளித்துவத்திற்கு ஆதரவான அரசு; ஆனால் பாஜக அரசோ அப்படி அல்ல, அதாவது நல்ல முதலாளித்துவத்திற்கான அரசு என்பது அவரது வாதம்.
ஆனால் “கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டு நாளைக்கு”என்பதற்கேற்ப, அருண் ஜேட்லி மார் தட்டிய முப்பது நாட்களுக்கு உள்ளாகவே, அரங்கத்திலிருந்த இருந்த லலித் மோடி விவகாரம் கனகச்சிதமாக அம்பலத்திற்கு வந்துவிட்டது. இதை சரிவரப் புரிந்துகொள்ள, கள்ள முதலாளித்துவம், நல்ல முதலாளித்துவம் என்று அருண் ஜேட்லி சொல்கிறாரே, அதுபற்றிய புரிதலும் அவசியம்.
“1991ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது, தொழில்முனைவு வர்க்கத்தின் நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்றல்களை அது கட்டவிழ்த்து விட்டது. முதன்மையாக அறிவு மற்றும் புதுமையைச் சார்ந்திருந்த மென்பொருள் மற்றும் மருந்தியல் துறைகள் செழித்தன. இது மிகுந்த படைப்புத்திறன் கொண்ட முதலாளித்துவம் (அதாவது நல்ல முதலாளித்துவம்); வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, நுகர்வோர் ரசனைகளை நிறைவு செய்கிறது, வள்ளல் தன்மையின் புதிய அலைகளுக்கு வித்திடுகிறது.
மிக அண்மையில் முதலாளித்துவத்தின் ஏற்க முடியாத முகங்களும் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. நிலம், தாதுக்கள், அலைக்கற்றைகள் ஆகிய மூன்று வளங்களின் மீதான கட்டுப்பாட்டையும் அரசு தக்கவைத்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம் விரிவடைய விரிவடைய இந்த மூலவளங்கள் பெரும் மதிப்புமிக்கவையாக மாறுகின்றன; அதனால் தனிப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் தனிப்பட்ட தொழில்முனைவோர்களுக்கும் இடையே முறைகேடான பரிவர்த்தனைகள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. நிலங்கள், தாது வளங்கள் அல்லது அலைக்கற்றைகள் சந்தை விலையைவிட மிகக் குறைந்த தொகைக்கும், (மிகப்பெரும்) ஆதாயத்திற்காகவும் கைமாறுகின்றன. சமூகம், சுற்றுச்சூழல், அரசு/பொது நிறுவனங்களுக்கு மிகமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், நல்ல முதலாளித்துவம் கள்ள முதலாளித்துவத்திற்கு வழிவிட்டு ஒதுங்குகிறது. எனவே 2ஜி ஊழல், சுரங்க நிறுவனங்களால் பழங்குடியினர் விரட்டப்படுவதால் மாவோயிஸ்ட் கிளர்ச்சி அதிகரித்தல், ஊழலை அம்பலப்படுத்துபவர்களை நிலப்பறிப்பு மாஃபியாக்கள் கொலை செய்தல் முதலியன நிகழ்கின்றன” என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளரும் வரலாற்றாய்வாளருமான ராமச்சந்திர குஹா. இவ்வாறு விவரித்துவிட்டு “ஐபிஎல் என்பது கள்ளமுதலாளித்துவம்“ என்று கூறும் குஹா, அது ஜனநாயகம், முதலாளித்துவம், கிரிக்கெட் மூன்றுக்குமே நல்லதல்ல என்பதை உரிய தரவுகள், தர்க்கத்தோடு முன்வைக்கிறார்.
நல்ல முதலாளித்துவம் மட்டுமே இருக்க முடியும் என்பது போன்ற சிந்தனையிலிருந்து அல்லது ஏக்கத்திலிருந்து விளையும் கருத்து இது. ஆனால், கள்ள முதலாளித்துவம் இன்றி நல்ல முதலாளித்துவம் இல்லை; நல்ல முதலாளித்துவத்திற்கு பக்க பலமாக இருப்பது கள்ள முதலாளித்துவம்தான். நல்ல முதலாளித்துவம் என்று சொல்லப்படுவது வீழ்ச்சியடையும்போது முதலாளித்துவமே வீழ்ந்துவிடாமல் முட்டுக்கொடுப்பதும் கள்ள முதலாளித்துவம்தான். தகவல் தொழில்நுட்பம் (ஐடி) போன்ற நல்ல முதலாளித்துவத்தால் வேலைவாய்ப்பினை பெற்று கைநிறைய ஊதியம் பெறுபவர்கள், ஐபிஎல் எனும் கள்ள முதலாளித்துவத்திற்கு கைகொடுக்கிறார்கள். ஐடி வேலைவாய்ப்பு போனாலும் ஐபிஎல் ஆறுதல் தருகிறது அல்லவா?
நல்ல முதலாளித்துவம் கள்ள முதலாளித்துவம் என்பதெல்லாம் நமது வசதிக்காக பகுத்துக்கொள்வது என்பதோடு, இந்த பகுப்பு அருண்ஜேட்லி போன்றவர்கள் தங்களது அடிவருடித்தன்மையை மறைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
அலைக்கற்றைகளை ஏல முறையில் அல்லாமல் குறைந்த விலைக்கு விற்றதும், நிலக்கரி சுரங்கங்களை அதுபோல ஒதுக்கீடு செய்ததும் கள்ள முதலாளித்துவம் என்கிறார் அருண்ஜேட்லி; ஆனால் தற்போது அதே கள்ளமுதலாளித்துவத்திற்கு, அதிலும் கள்ள முதலாளித்துவத்திற்கு வகைமாதிரியாகத் திகழும் ஐபிஎல் ஊழல்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார், அருண் ஜேட்லி.
“சுஷ்மா சுவராஜூக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை. சுஷ்மா சுவராஜ் என்ன செய்திருந்தாலும் நல்ல எண்ணத்தோடுதான் செய்திருக்கிறார். நேர்மையாகவே அவர் செயல்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த அரசும் பாஜகவும் அவர் பக்கம் உள்ளன. இதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை” என்கிறார் அருண்ஜேட்லி.
“அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிக்காய் கள்ளன்” என்று நம் நாட்டுப்புற பழமொழி சொல்வது இதைத்தான்.
“நல்ல எண்ணத்தோடு” சுஷ்மா சுவராஜ் செய்தது என்ன, அவரது “நேர்மையான செயலின்” மூலம் பலனடைந்தவர் யார் என்பதைப் பார்த்தாலே எல்லாம் எளிதாக விளங்கிவிடும்.
அகப்பட்டுக் கொண்ட தும்மட்டிக்காய் கள்ளன் :
இந்திய வம்சாவளியை சேர்ந்த கெய்த் வாஸ் என்பவர் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்; தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். அமைச்சராகவும் இருந்தவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் உள்துறை குழுவுக்கு (நம்மூர் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு போன்றது) தலைவர். அண்மையில் தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். இவரது மின்னஞ்சல் பரிமாற்றங்களை இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டது. அதில், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செல்வாக்கிற்கு உட்பட்டு, இங்கிலாந்து குடிபெயர்வுத்துறை தலைமை அதிகாரியை வலியுறுத்தி, லலித் மோடிக்கு பயண ஆவணங்களை கெய்த் வாஸ் பெற்றுத்தந்த விவகாரமும் வெளியே கசிந்தது. உடனடியாக (ஜூன் 14, 2015) சுஷ்மா சுவராஜ் ட்விட்டர் மூலம் பின்வருமாறு விளக்கம் அளித்தார்:
“2014 ஜூலையில் லலித் மோடி என்னிடம் பேசினார்; தன்னுடைய மனைவி புற்றுநோயால் வாடுவதாகவும், போர்ச்சுகலில் ஆகஸ்ட் 4ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும், தாம் மருத்துவமனைக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார். இதற்கான பயண ஆவணங்கள் கோரி லண்டனில் விண்ணப்பித்திருப்பதாகவும் இங்கிலாந்து அரசும் தரத் தயாராக இருந்தபோதிலும், முந்தைய காங்கிரஸ் மத்திய அரசு தம்மைப் பற்றி அளித்திருக்கும் தகவலால், இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டு விடுமோ எனத் தயங்குவதாகவும் லலித் மோடி என்னிடம் தெரிவித்தார். இங்கிலாந்து விதிகளின் அடிப்படையில் லலித் மோடியின் வேண்டுகோளை இங்கிலாந்து அரசு பரிசீலிக்கலாம் என்றும், இங்கிலாந்து அரசு பயண ஆவணங்களை வழங்கினால் அது இருதரப்பு உறவை பாதிக்காது என்றும், இங்கிலாந்து துணைத்தூதருக்கு மனிதநேய அடிப்படையில் நான் தெரியப்படுத்தினேன். கெய்த் வாஸிடம் பேசும்போதும் இதையே தெரிவித்தேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்தியக் குடிமகன் ஒருவருக்கு அவசரகால பயண ஆவணங்களை வழங்குவது இருதரப்பு உறவுகளை பாதிக்கக்கூடாது, பாதிக்க முடியாது என நான் உறுதியாக நம்பினேன். அதற்கு சில நாட்களுக்குப் பிறகு லலித் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்கிவைக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உத்தரவு, அடிப்படை உரிமைகளை மீறிய வகையில் அரசமைப்புச்சட்டத்திற்கு மாறானது என்ற அடிப்படையில், டெல்லி உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, லலித் மோடி தம்முடைய பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றார். இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தில் என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிர்மயி கௌசல் சட்டப்படிப்பில் சேர்வதற்கு கெய்த் வாஸ் உதவி செய்யவில்லை ; நான் அமைச்சராவதற்கு ஓராண்டுக்கு முன்னரே 2013 இல் வழக்கமான நடைமுறைகளின் அடிப்படையிலேயே அவருக்கு சேர்க்கை கிடைத்தது” என்று சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார்.
இந்திய அரசு பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருந்த, இந்தியாவில் விசாரணைக்கு ஆஜராக மறுத்து இங்கிலாந்து ஓடிவிட்ட ஒருவருக்கு, பயண ஆவணங்களை வழங்கலாம் என பரிந்துரை செய்த வெளியுறவு அமைச்சர், தன்னுடைய செயலுக்கு ஒரு சில நாட்களிலேயே உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் நியாயம் கிடைத்துவிட்டதாகவும் விளக்கமளிக்கிறார். சரி யார் இந்த லலித் மோடி, அவர் ஏன் இங்கிலாந்து ஓட வேண்டும், அவரது பாஸ்போர்ட் ஏன் முடக்கப்பட வேண்டும், வெளிநாட்டுக்கு ஓடிப் பதுங்கியவர்களுக்கெல்லாம் வெளியுறவு அமைச்சரின் மனிதநேயம் இறங்குமா, இல்லை வெளியுறவு அமைச்சரை நேரடியாகத் தொடர்புகொண்டு அவரது மனிநேயத்திற்குத்தான் விண்ணப்பிக்க முடியுமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு ஏன் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை?
கதைக்குள் கதை: யார் இந்த லலித் மோடி?
பண்பாட்டை அழிக்க வந்த, எஃப் டிவியின் ஒளிபரப்பு உரிமையை இந்தியாவில் பெற்றிருந்த தொழிலதிபரான லலித்மோடி, விளையாட்டுகளை ஒளிபரப்பும்இ.எஸ்.பி.என். சேனலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் வாரியங்களில் உறுப்பினராகும் முயற்சிகளில் இறங்கினார்.
2004-ல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்து, விரைவில் அதன் தலைவராகி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்குள்ளும் (பி.சி.சி.ஐ.) நுழைந்தார். விரைவிலேயே அதன் துணைத் தலைவரானார். மூன்றே ஆண்டுகளில் பி.சி.சி.ஐ-யின் வருமானத்தை ஏழு மடங்கு உயர்த்திக்காட்டினார்.
2003-2008 காலகட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியாவுடனான நெருக்கத்தை பயன்படுத்தித்தான் பிசிசிஐ-யில் அசைக்க முடியாத ஆளாக உயர்ந்தார் லலித் மோடி. அதற்குத் தொடக்கமாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை ஆட்டிப்படைத்து வந்த ரங்தா குடும்பத்திடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றினார் மோடி. சங்க தேர்தலில் மோடி வெற்றி பெறுவதற்காகவே புதிய சட்டத்தை கொண்டுவந்தார் வசுந்தரா (இதுவும் மனிதநேய உதவிதானா என்று சுஷ்மா சுவராஜும், நேர்மையான நல்லெண்ண நடவடிக்கையா என்று அருண் ஜேட்லியும்தான் சொல்ல வேண்டும்).
ஜீ குழுமம், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் மூலம், இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) என்னும் பெயரில் 20 ஓவர் கிரிக்கட் போட்டித் தொடரை தொடங்கியது. இதை முடக்குவதற்காக, ஐ.சி.எல்லில் ஆடும் ஆட்டக்காரர்களுக்கு இந்திய அணியில் ஆடத் தடை விதிக்கப்பட்டது. பிறகு பிசிசிஐ ஐ.பி.எல்.லை தொடங்கியது. இவ்வாறு ஐ.பி.எல்.லை உருவாக்கி வளர்த்ததில் லலித் மோடியின் பங்கு முக்கியமானது.
இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்பு சிக்கல்கள் கருதி ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்கலாம் என மத்திய அரசு கூறியபோது, அந்த போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்தினார் மோடி. 2009-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின்போது ஆஸ்திரேலிய முன்னணி வீரர் உட்பட 27 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டனர்; ஐ.சி.சி-யின் ஊழல் தடுப்புப் பிரிவைப் பயன்படுத்தி முறைகேடுகளைத் தடுக்கும் வாய்ப்பு இருந்தும் லலித் மோடி அதைச் செய்யவில்லை. இப்போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்கியதிலும் முறைகேடு. (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒப்பந்தத்தில் சுமார் ரூ. 500 கோடி முறைகேடு நடந்திருப்பதா கச் சொல்லப்படுகிறது).
ஐ.பி.எல். போட்டிகளில் புதிதாகச் சேர்க்கப்பட இருந்த கொச்சி ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் தொடர்பாக, ட்விட்டரில் லலித் மோடி எழுதிய விவகாரத்தில், சசி தரூர், சுனந்தா புஷ்கர் போன்ற பெயர்கள் அடிபட்டன. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் இழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடு செய்த லலித் மோடி, ஒளிபரப்பு மற்றும் இணைய உரிமையிலும் முறைகேட்டில் ஈடுபட்டார்.
2010 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை, (3-வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்து, முடியும் வரை) மும்பையில் உள்ள ஃபோர் சீஸன்ஸ் ஓட்டலில் வசுந்தரா ராஜே, சசி தரூர், ராஜிவ் சுக்லா, சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் குஷால் போன்றோரை மோடி தங்க வைத்ததற்கான செலவு மட்டும் ரூ. 1.56 கோடி.
2010 ஜூலையில் அருண் ஜேட்லி, ஜோதிராதித்யா சிந்தியாவைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை பி.சி.சி.ஐ. அமைத்தது. ஜூலை, 2013-ல் 134 பக்க அறிக்கையை அக்குழு அளித்தது. அதில் ஊழல், முறைகேடு, பி.சி.சி.ஐ-க்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்துகொண்டது உட்பட மோடி மீது 8 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. கடுமையான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. 2013 செப்டம்பர் 25-ல், லலித் மோடிக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடை விதித்தது.
லலித் மோடி மீது அமலாக்கத் துறை 16 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறது. அத்தனையும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்குகள்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவின் மகனுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு, லலித் மோடியின் நிறுவனம் ரூ11.63 கோடி கொடுத்திருப்பது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்திவருகிறது. லலித் மோடிக்கு சொந்தமான ஆனந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மொரீஷியஸ் நாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ21 கோடி கைமாறியது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, 2010 ஆகஸ்ட் 10ம் தேதி அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஆஜராக மறுத்து இந்தியாவை விட்டு வெளியேறினார் மோடி. இதையடுத்து மும்பை பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் 2010 மார்ச் 3ல் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் (இங்கிலாந்தில் இருந்தவாறே) வழக்கு தொடர்ந்தார் மோடி. 2013 ஜனவரியில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மோடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு, பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நடவடிக்கை சரியானது என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மோடி தப்பி ஓடிஒளிந்தவராக, இங்கிலாந்தில் சிக்கிக் கொண்டார். இந்தியாவில் வழக்குகளை சந்திக்க வேண்டியவர் என்ற வகையில், லைட் புளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும் வெளிர் நீல அறிக்கையும் அவருக்கு எதிராக விடப்பட்டது. பிசிசிஐ-யிலோ மத்திய அரசிலோ அவருக்கு மனிதநேய உதவி செய்வார் யாருமில்லை. ஆனாலும் லண்டனில் பதுங்கியிருந்தபடியே, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 2013 டிசம்பரில் போட்டியிட்டு மிக எளிதாக வெற்றி பெறுகிறார், மோடி. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் மோடியின் நண்பர் வசுந்தரா மீண்டும் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார்.
2014 ஜூலையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுடன் இங்கிலாந்து அரசின் பயண ஆவணங்களை பெற்று உலகம் சுற்றத் தொடங்கினார். இந்த விவகாரம் வெளிவந்தவுடன் தம்மை பழிவாங்க, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் முயற்சி செய்வதாகவும், தம்மிடம் இருக்கும் ஆவணங்களை வெளியிட்டால் அவர்கள் அனைவரும் சிக்க நேரிடும் என்றார். ஆனால் அவர் ஆவணங்களை வெளியிட்ட பிறகு சிக்கியதென்னவோ ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராதான். ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோடி இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்காக, அவருக்கு சாதகமாக ரகசிய சாட்சியம் அளிக்க வசுந்தரா முன்வந்ததும், இதை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கக்கூடாது என அவர் முன்நிபந்தனை விதித்தையும் லலித் மோடி வெளியிட்ட ஆவணங்களே அம்பலப்படுத்தின.
இந்தியாவில் விசாரணைக்குப் பயந்து பதுங்கியிருக்கும் ஒருவருக்காக வெளியுறவு அமைச்சரின் மனமிறங்குகிறது; அதற்காக இருநாட்டு உறவைக்கூட அவர் பணயம் வைக்கத் துணிகிறார். மோடி என்ற தனிமனிதருக்காக, அதுவும் மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்தையே இயற்றிய ராஜஸ்தான் முதலமைச்சர் அவருக்காக ரகசிய வாக்குமூலம் அளிக்கத் தயாராகிறார்; மும்பை காவல் ஆணையரோ லண்டனுக்கு சென்று சந்தித்து திரும்புகிறார் (அவரை தன்னை வந்து சந்திக்குமாறு ஏவுவதற்கு லலித் மோடியால் முடிகிறது); 14 ஆண்டுகள் சர்வதேச போலீஸான இண்டர்போலின் தலைவராக இருந்தவர் மோடிக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசரே அவருடன் விருந்துண்டு மகிழ்கிறார்; இங்கிலாந்து எம்.பி., முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் குடியுரிமைத் துறை அதிகாரியை நிர்ப்பந்தித்து அவருக்கு பயண ஆவணங்களை பெற்றுத் தருகிறார்.
இத்தனைக்குப் பிறகும் சுஷ்மா மனிதநேய அடிப்படையில்தான் உதவி செய்தார், வசுந்தரா வெள்ளை மனம் படைத்தவர் என்று ஆர்எஸ்எஸ் - பாஜக.வும் அருண்ஜேட்லியும் சொல்வார்களேயானால், மனிதநேயம் என்பதற்கு அவர்களது அகராதியில் கள்ள முதலாளித்துவம் என்றுதானே பொருள்; இவ்வளவுக்குப் பிறகும் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறாரே அதற்கு கள்ள மவுனம் என்றுதானே பொருள்!
இந்த கள்ள மவுனத்திற்கு பின் மறைந்திருக்கும் “சிதம்பர ரகசியங்களை” மனதில் வைத்தே பின்வரும் கேள்விகளை எழுப்பினார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்:
திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டும், முந்தைய அரசுக்கும் இங்கிலாந்து அரசுக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதேன்?
லலித் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட பின்னரும் அவர் இங்கிலாந்திலேயே எப்படி தங்கியிருக்க முடிந்தது? அவர் ஏன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை?
இந்திய குடிமகனான லலித் மோடி, இந்தியாவின் பயண ஆவணங்களை பெறுவதைவிட, இங்கிலாந்தின் பயண ஆவணங்களை பெறவேண்டும் என சுஷ்மா கருதியது ஏன்?
மனிதநேய அடிப்படையில் உதவி செய்யப் புகுந்தார் எனில், தற்காலிக பயண ஆவணங்களை கேட்டு இந்திய துணைத் தூதரகத்திற்கு விண்ணப்பிக்குமாறு மோடிக்கு ஏன் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தவில்லை?
லலித் மோடி மீதுள்ள 16 வழக்குகளில் 15 வழக்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அருண் ஜேட்லி உறுதிப்படுத்தியுள்ளாரே, அப்படியானால் பாஜக அரசு அவரை துன்புறுத்துவதாக அர்த்தமா?
லலித் மோடியின் பாஸ்போர்ட்டை விடுவிக்கலாம் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்ற முடிவை எடுத்தது யார்?
லலித் மோடிக்கு புதிதாக பாஸ்போர்ட் வழங்கலாம் என்ற முடிவை எடுத்தது யார்?
அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மன்களை அமலாக்குவதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
இத்தனை கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கேனும் மத்திய பாஜக அரசு விடையளித்திருக்கும் என நினைத்தால் ஏமாற்றம்தான். இந்த கேள்விகளை அனைத்தும் நிராகரிப்பதாக ஒரேயொரு பதிலை மட்டுமே பாஜக அளித்துள்ளது.
லலித்மோடி என்ற ஒற்றை விவகாரம் மட்டுமே இதில் உள்ளது என்பது மட்டுமல்ல; தமிழகத்தில் அதிமுகவினருக்கு எப்படி ஜெயலலிதா அம்மாவோ, அப்படி கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்களுக்கு சுஷ்மா சுவராஜ் அம்மா. பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து சுஷ்மா போட்டியிட்டபோது அத்தொகுதியில் அம்மாவுக்காக பணத்தை ஆறாக ஓடவிட்டனர் ரெட்டி சகோதரர்கள். கர்நாடகத்தின் இரும்புத்தாது வளத்தை கொள்ளையடித்து ஆயிரக் கணக்கான கோடிகளை ரெட்டி சகோதரர்கள் எப்படி சுருட்டினார்கள், அதற்கு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எப்படி துணைபோனது என்பதெல்லாம் வரலாறு.
இன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்களை மட்டுமல்ல, எல்லா தாது வளங்களையும் ஒதுக்கீடு செய்வதற்கு புதிய சட்டங்களை கொண்டுவந்துள்ளது; அலைக்கற்றைகளை ஏல முறையிலேயே ஒதுக்கீடு செய்து கல்லா கட்டியிருப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறது. சரி இதன் நிகர விளைவுதான் என்ன?
இதுவரை தேச உடமையாக இருந்த தாது வளங்கள் தனியார் மயம், அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் வசமாக சட்டபூர்வமாக வழிகோலப்பட்டுள்ளது. கள்ள முதலாளித்துவம் என்று அருண்ஜேட்லி வர்ணிக்கும் பாதையிலிருந்து எந்த வகையில் இது நாட்டு மக்களுக்கு மாறுதலை தந்துவிட்டது? நாடே முதலாளித்துவத்தின் லாப வெறிக்கான வேட்டைக்காடு என்ற நிலை தீவிரப்படுத்தப்பட்டதுதானே கண்ட பலன்? நாடே எதிர்த்தாலும் நில கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை 3 முறை இயற்றியிருக்கிறார்களே, அதை எப்பாடுபட்டேனும் சட்டமாக இயற்றுவோம் என்று கொக்கரிக்கிறார்களே அது நல்ல முதலாளித்துவமா? நிலத்தில் மட்டுமல்ல வரி விதிப்பு, தொழிலாளர் சட்டங்களிலும் சீர்திருத்தங்கள் அவசியம் என்கிறாரே அருண் ஜேட்லி, அது கள்ள முதலாளித்துவத்திற்கு துணைபோவதற்கல்லாமல் வேறெதற்கு?
லலித் மோடி, அவருக்கு உதவிய சுஷ்மா சுவராஜ் + வசுந்தரா ராஜே சிந்தியா, ஐபிஎல் ஆகிய மூன்றும் தொடர்பான செய்திகளை கூறுபோட்டும், கூறு கூறாகக் கிடைக்கும் செய்திகளை தொகுத்தும் பார்க்கும்போது நமக்கு பளிச்சென தெரிவது எது?
1) ஊழல் (சிஷீக்ஷீக்ஷீuஜீtவீஷீஸீ),
2) 2) கள்ள முதலாளித்துவம் (சிக்ஷீஷீஸீஹ் சிணீஜீவீtணீறீவீsனீ),
3) 3) ஊழலையும் கள்ள முதலாளித்துவத்தையும் பக்கபலமாகக் கொண்டு வளர்ந்த பாஜகவும், அதன் தலமையிலான மத்திய - மாநில அரசுகளும் எப்படி ஊழலுக்கும் கள்ள முதலாளித்துவத்திற்கும் பக்கபலமாக நிற்கின்றன என்பதும்தான்!
ஆனால் ஊடகங்களிலும் அறிவாளிகள் மத்தியிலும் இப்பிரச்சினை அலசப்படும் முறையோ யானை பார்த்த குருடர்கள் கதையைத்தான் நினைவூட்டுகிறது.