சாதிக்க விரும்புகிறீர்களா..?

achievement

தோல்விகளை நிர்ணயுங்கள் :-
தவறாக எழுதி விட்டாரோ என்று உங்கள் சிந்தனையை மாற்ற வேண்டாம். சரியான செய்திதான்.
தோல்வி என்பது அழகானது; சுவராஸ்யமானது; நிறைய பாடங்களை கற்றுத் தரும்.
நம்மில் பலபேர் “நானும் அவரைப் போல் சாதிக்க வேண்டும்” என்று

சில சாதனையாளர்களை முன் மாதிரிகளாக எடுத்துக் கொள்துண்டு. உண்மையில் அப்படி தேர்ந்தெடுத்தவர்கள் எல்லாம் சாதித்திருக்கிறார்களா? என்றால் கேள்விக் குறிதான் விடையாக அமையும்.
ஒரு சாதனையாளரின் வெற்றியை மட்டுமே பார்த்து விட்டு நானும் அவரைப் போல உருவாக வேண்டும் என்று மட்டும் விரும்புவது தவறு. அவரின் வெற்றிக்குப் பின்னால் எத்தனை தோல்விகள், துன்பங்கள், துயரங்கள், அவமானம், படுதோல்வி, கேலி, கிண்டல்களை சந்தித்திருப்பார். அவர் சந்தித்த அந்த தோல்விகள் தான் அவரை பண்படுத்தியிருக்கிறது.
எனவே தோல்விகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். எப்படி யாரிடம் தோற்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களது தோல்விகள் அற்புதமான பெரும் தோல்விகளாக இருக்க ஆசைப்படுங்கள். அப்போதுதான் நீங்கள் தொட வேண்டிய வெற்றியின் இலக்கும் உச்சமும் பிரம்மாண்டமாக இருக்கும்.
மின்சாரத்தைக் கண்டுபிடித்த எடிசனிடம் எத்தனை முறை முயன்றீர்கள் எனக் கேட்கப்பட்ட போது 1000 முறை என்று பதில் சொன்னார். அப்படியெனில் 999 முறை எப்படி செய்யக்கூடாது எனக் கற்றுக் கொண்டேன் என்றார்.
1200 மதிப்பெண்களுக்கு 1150 மதிப்பெண் எடுத்த மாணவனை வெற்றி பெற்றவன் என்கிறோம். இன்னொரு மாணவன் 1165 மதிப்பெண் பெற்றால்...? இருவரில் வெற்றி பெற்றவன் யார்? இந்த வகையில் எல்லோரும் ஏதோ வகையில் தோற்றுப் போய்த்தான் நிற்போம்! எனவே தோல்வி என்பது நிரந்தரமில்லை, தோல்விகளை சந்தித்து வெற்றி பெறும்போது அந்த வெற்றி நிலையாய் நிறைவாய் பலரின் நினைவுகளை அலங்கரிக்கும். தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை என்பதை உணருங்கள்.
சென்ற தொடரில் மூன்றும் இந்த தொடரில் ஒன்றுமாக மேலே நாம் கண்ட நான்கு விசயங்களையும் நம்முடைய செயல்களில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
ஒரு மாணவனை அழைத்து இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை ஓடிவா என்றேன். அந்த மாணவனும் ஓடி வந்தான். பிறகு அந்த ‘A’ என்ற மாணவனையும், ‘B’ என்ற இன்னொரு மாணவனையும் அழைத்து உங்கள் இருவருக்கும் ஓட்டப் பந்தயம் வைக்கப் போகிறேன். வெற்றி பெறும் மாணவனுக்கு பரிசு என்றேன் ‘A’ என்ற மாணவன் வெற்றி பெற்றான்.
ஒரு சமயம் ‘A’ என்ற மாணவன் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாய் அவனை துரத்தியது. ஓட்டம் எடுக்கிறான் கல்லை மிதித்து முள்ளை மிதித்து பல சுவர்களைத் தாண்டி வெற்றுக் கால்களோடு சுமார் 1 கி.மீ ஓடி கீழே விழுந்து துரத்தி வந்த நாயைப் பார்க்கிறான். அங்கே ஒன்றுமில்லை; நிம்மதிப் பெருமூச்சு விட்டு தனது காலைப் பார்க்கிறான். ஆச்சர்யம்; அவனது காலில் கீறல், இரத்தம் வழிகிறது. இந்த சம்பவத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும்.
- முதலில் ஓடியது ‘A’ என்ற மாணவன்.
- இரண்டாவதாக போட்டியில் ஓடி வெற்றி பெற்றவனும் அவன்தான்.
- மூன்றாவதாக நாய் துரத்தும் போது ஓடிய மாணவனும் ‘A’ என்ற மாணவன்தான்.
இந்த நிலை ‘கி’ என்ற மாணவனுக்கு மட்டுமல்ல! எல்லோருக்கும் அல்லது பெரும்பாலும் 3 நிலைகளும் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படலாம்.
நாய் துரத்தும் போது ஓடிய ஓட்டத்தை எல்லோராலும் எப்போதும் ஓட முடியுமா...? ஆனால் அப்படி ஓடக்கூடிய சக்தி எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது!
இப்படித்தான் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஏராளமான திறமைகள் ஒழிந்து கிடக்கின்றன. அதை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு வாழ்வில் ஓரிருமுறை நமக்கும் கிடைக்கும். அந்த வாய்ப்பை சரியாக கண்டுபிடித்து பயன்படுத்தினால் நமது நிலை முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும்.
ஆனால் நமது திறமையைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வர முயற்சி செய்யாமல் எனக்கு எந்த திறமையும் இல்லை என்று புலம்புவது மடத்தனம்!
வெற்றி என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா...?
ஒரு பெரிய மைதானம்; ஓட்டப்பந்தயம் நடைபெறப் போகிறது யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் விரலின் நுனியைக் கடித்துக் கொண்டு ஆரவாரமாக ஆயிரமாயிரம் ஆடியன்ஸ். போட்டியாளர்கள் எல்லாம் போட்டிக் கோட்டில் நிற்கிறார்கள். நடுவர் விசிலை ஊதி ஆரம்பம் செய்கிறார். போட்டியாளர்கள் ஓடுகிறார்கள். ஆடியன்ஸ்களின் கரகோஷத்திற்கு இடையில் ஒருவர் முதலில் வருகிறார்; அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.
ஆயிரமாயிரம் ஆடியன்ஸ்களுக்கு மத்தியில் நடுவர்களிடம் பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மேடையை விட்டு கீழே இறங்கி வரும் போது ஒரு பெரியவர் வெற்றி பெற்ற இளைஞரிடம் “இது என்னப்பா தம்பினு...” கேட்டார்!
“என்ன தாத்தா! இந்தக் கூட்டத்தில் தானே இருந்தீங்க... இத்தன பேருக்கு முன்னால ஆரவார கரகோஷத்தோடு ஓட்டப்பந்தயத்தில் வெற்றிவாகை சூடி வருகிறேன்” என்றான் அந்த வெற்றியாளன்.
அதைக் கேட்ட முதியவர் “நீ தோற்றுப் போய் விட்டாய்” என்றார். அதைக் கேட்ட அந்த இளைஞன் திடுக்கிட்டான். மீண்டும் கேட்க அதே பதிலைச் சொன்னார் அந்த முதியவர்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை; நடப்பது நிஜமா? கனவா என தன்னையே கிள்ளிப் பார்த்து சோதித்துக் கொண்டான்.
இத்தனை ஆடியன்ஸ்களுக்கு முன் வாங்கிய வெற்றி ஒரு புறம், வயதானவர் இத்தனை பேருக்கு முன் நம்மை அசிங்கப்படுத்தி விட்டாரே என்ற அவமானம் மறுபுறம். அது அவனுக்கு ‘தன்மான’ விசயமாக மாறிப் போனது.
“முதியவரே! நான் தோற்று விட்டேன் என்று சொல்கிறீர்களே அது எப்படி” எனக் கேட்டான்.
“நான் ஒரு பந்தயம் வைக்கிறேன் அதில் ஓடி ஜெயித்து வாகை சூடி வா! உன்னை வெற்றியாளன் என்று ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் அந்த முதியவர்.
சரி போட்டியாளரை அழையுங்கள். இரண்டு நபர்களை அழைத்தார் அந்த முதியவர்.
ஒருவன் : கண் இல்லாதவன்.
மற்றொருவன் : கால் இல்லாதவன்.
“இளைஞனே! இந்த இரண்டு போட்டியாளர்களிடமும் ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து விட்டு வா!” என்றார்.
ஆச்சரியம் இன்னும் அதிகரித்தது. இது எப்படி சாத்தியமாகும்...? இது நிஜமா... கனவா...
இது போன்ற பல கேள்விகள் அவனது மூளையை குடைந்தெடுத்தன!
என்ன செய்வது போட்டிக்கு ரெடி என்றான் அந்த இளைஞன்! போட்டி ஆரம்பமாகப் போகிறது. மூன்று நபர்களும் கோட்டின் மேல் நிற்கிறார்கள்.
நடுவர் விசிலை எடுத்து 1... 2... 3... என்று சொல்லி விட்டார்.
3 பேரும் ஓட ஆரம்பித்தார்கள். கூட்டம் - ஆரவாரம் - கைதட்டல்களுடன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் நமக்குத்தான் கை தட்டுகிறார்கள் என்று மக்களைப் பார்த்த அந்த இளைஞனுக்கு ஆச்சர்யம்.
கை தட்டல்களும், கரகோஷங்களும் கண் இல்லாமலும், கால் இல்லாமலும் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்குத்தான் கிடைத்தது. அதிர்ந்து போனான்.
மீண்டும் அந்த முதியவரிடம் சென்று “யோவ்! பெரியவரே! என்னதான் நினைக்கிறீர்? இத்தனை மக்களுக்கு முன் அசிங்கப்பட வைத்து விட்டீரே!” என்று தனது மனக்குமுறலை சொல்லிய பின் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு “வெற்றினா... என்னதான் பெரியவரே” என்று கேட்க அப்படி வா வழிக்கு என்று முதியவர் கூறினார்.
அந்த இளைஞனை அழைத்து நடுவில் நிற்க வைத்து அவனது வலப்புறத்தில் கால் இல்லாதவனையும், இடப்புறத்தில் கை இல்லாதவனையும் நிற்க வைத்து அந்த இளைஞனிடம் வலது கையை கால் இல்லாதவன் தோள் மீதும், இடது கையை கண் இல்லாதவன் தோள் மீதும் வைத்து விட்டு இப்போது “ஓடு” என்றார் அந்த முதியவர்.
மூன்று பேரும் சரி சமமாக ஓட ஆச்சரியத்துடன் ஆனந்தக் கண்ணீர் ஆடியன்ஸ்களின் ஆரவாரம் கைதட்டல்கள் விண்ணைப் பிளக்கும் வகையில் அளவில்லாமல் தொடர... அந்த இளைஞன் கண்களில் ஆனந்தத்தால் நீர்த் துளிகள்...
அப்போது அந்த முதியவர் அந்த இளைஞரைப் பார்த்துச் சொன்னார்.
“தம்பி! முதலில் நீ ஓடி வெற்றி பெற்றது வெற்றி அல்ல! வெறி! காரணம் முதலில் நீ ஓடிய போது மற்றவனை தோற்கடிக்க வேண்டும் என்ற பொறாமை மனப்பான்மையில் ஓடினாய்! ‘மற்றவன்’ என்பவனும் உனது சகோதரன் தானே! உனது சகோதரனைப் போட்டி மூலம் வெற்றி பெற்றதை ‘வெற்றி’ என்று எப்படி சொல்ல முடியும்..? உண்மையில் அது வெற்றி அல்ல ‘வெறி.’
ஆனால் இப்போது கண் இல்லாதவனையும், கால் இல்லாதவனையும் சேர்த்து அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உனது நல்ல எண்ணத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
உலகில் தகுதிகள் இல்லாமல் சில பேர், திறமைகளைத் தெரிந்து கொள்ளாமல் சிலபேர் அவர்களையும் உன்னோடு சேர்த்துக் கொண்டு சென்று உனது வெற்றியை பகிர்ந்து கொடுத்தால் அனைவரும் வெற்றி பெறலாம் என்றார்! அந்த இளைஞன் அப்போதுதான் உண்மையான வெற்றி அடைந்ததாக ஆனந்தப்பட்டான்.
எனதருமை இளைஞர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே செதுக்குங்கள். கஷ்டம் வரும்போது கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்; அது உங்களைக் கொன்று விடும்; கண்களைத் திறந்து பாருங்கள்; நீங்கள் அதை வென்று விடலாம்!
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உன்னால் முடியும் என்று முதலில் நீ நம்பு, பிறகு அனைவருக்கும் நம்பிக்கைக்குரியவனாக உருவாகுவாய்!
தாழ்வு மனப்பான்மை எனும் கதவை உடைத்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு வெளியே வா! உலகம் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கிறது.
எதையும் சாதிக்கலாம் “உன்னால் முடியும்” என்ற வார்த்தைகள் “தன்னம்பிக்கையின் உச்சமும் கூட”..!

முனைவர் எம்.ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி