மறைந்து வரும் மாண்புகள்

right
நம் நாட்டின் ஆக்கப்பூர்வமான பிரதமராக விளங்கியபண்டித ஜவஹர்லால் நேரு காலத்தில்தான் நம் இலக்கிய பண்புகளை, அது வளர்ந்த பன்முக படைப்பிலக்கியங்களை, படைப்பாளர்களை, மதிக்கத் தெரிந்த நாடாக நம் நாட்டை மாற்றிட பிரதமர் நேரு அவர்களே தலைமை தாங்கி நாட்டின் 27 மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த படைப்பிலக்கியங்களை உருவாக்கும் படைப்பாளர்களுக்கு நாட்டின் உயர்ந்த விருதான சாகித்ய அகாடமி விருதினை வழங்கிட சாகித்ய அகாடமி 1955 இல் நேருவால் தோற்றுவிக்கப்பட்டது.
படைப்புகளை படைப்பாளர்களை ஏன் நேரு போற்றினார் என்றால் அவரும் ஒரு சிறந்த படைப்பாளர், என்பதால் அவர்களை மதித்தார். யாரோ எழுதித் தருவதை பேசுபவர்களுக்கு படைப்பின் உன்னதம் விளங்காது.
யாரெல்லாம் எழுதத் தொடங்குகிறார்களோ அவர்கள் தங்கள் எழுத்திற்கு ஒரு சமூக அங்கீகாரம் பெற விழைவது இயல்பானது. அந்த அங்கீகாரம் பெற வேண்டி அவர்களின் சமகாலம் அல்லது அதற்கு முந்தைய காலம் அவர்களின் எதிர்காலம் என தங்கள் சிந்தனையை முன்னும் பின்னும் நகர்த்தி மனிதனின் உயர்நிலைப் பண்புகளை வாழும் சமூகம் பின்பற்றிட அதை உணர்த்திட வேண்டிய கற்பனை கவிதை நயம் சுமந்து தங்கள் உள்ளத்தின் உணர்வுகளை இலக்கியமாக வடிப்பார்கள்.
இந்திய சமூகத்தின் ஆன்மாவாக, மனசாட்சியாக இலக்கியங்கள் உள்ளன.
மனிதர்களை அவர்களின் உள்ளுணர்வை சுய ஆளுமையை மாற்றும் வல்லமை இலக்கியத்திற்கு உண்டு.
செவி வழிக் கதைகள் பலவும் ஆவண இலக்கியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மனிதர்களை மாற்றும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு.
இன்றும் கிரேக்க நாட்டு இலக்கியங்களை விஞ்ச வேறெந்த இலக்கியமும் உருவாகவில்லை. அரபு நாட்டின் 1001 இரவு அரபுக் கதையின் கற்பனை வளத்திற்கு நிகரானவை இன்னமும் வரவில்லை. அவை காலங்களை கடந்தவை.
எந்த சமூகம் கற்றவர்களை மதிக்காமல் அறிவுள்ளவர்களை உதாசீனப்படுத்துகிறதோ அந்த சமூகம் விளங்கவே விளங்காது.modi-1-copy
ஒரு நாட்டின் உண்மையான மதிப்பு எது?
அங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் அல்ல!
அந்நாட்டு வங்கியின் இருப்பு அல்ல!
தங்க சேமிப்பு அல்ல! அறிவாளிகள் எத்தனை பேர், சிந்தனையாளர்களின் எண்ணிக்கை என்ன என்பதே ஒரு நாட்டின் மதிப்புமிக்க செல்வம்.
அறிஞர்களின் கருத்துக்களில் முரண் இருக்கலாம். அவர்களை முடக்குவது தவறு. இறையாண்மை உள்ள ஒரு நாட்டில் இவ்விதம் நடக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் வரலாறு மன்னிக்காது.
ஜெர்மனியின் ஹிட்லர் பாசிசத்தை நிலை நிறுத்த எழுத்தாளர்களை, கவிஞர்களை சிறை பிடித்து வதைத்தான். வதைக்கப்பட்டவர்கள் வரலாறானார்கள். வதைத்த ஹிட்லரும் தன் புகழை நிலை நிறுத்த மெய்ன் கேம்ப் என்ற நூலைத் தான் எழுத முடிந்தது.
இந்தியாவின் இலக்கிய ஆன்மாவாகத் திகழும் எழுத்தாளர்கள் நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளனர். அந்த கோபம் அவர்களின் படைப்புகளில் நிச்சயம் வெளியாகும்.
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் 1955 தொடங்கி இன்றுவரை 650 க்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களில் இன்று உயிருடன் உள்ள படைப்பாளர்கள் 500க்கும் மேல். இவர்களில் 61 பேர் (இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை) தாங்கள் பெற்ற விருதினை திருப்பித் தந்துள்ளனர். அவர்கள் வகிக்கும் பல்வேறு பொறுப்புகளை பலர் துறந்துள்ளனர். இலக்கியவாதிகள், படைப்பாளர்களுக்கு அரசின் சாகித்ய அகாடமி மீது ஏன் இத்தனை வன்மம், ஆத்திரம்!
படைப்பாளன் என்பவன் சாதாரண பிரஜைகளை விட முற்றிலும் வேறுபட்டவன். பிரஜைகள் சதா சர்வகாலம் தங்கள் மேன்மை வாழ்க்கை பற்றி மட்டுமே யோசிப்பவர்கள். ஆனால்! படைப்பாளர்கள் தங்கள் வாழும் சமூகத்தின் நலன், வாழ்க்கை, வளம், பண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆன்மாவாக விளங்குபவர்கள். அவர்கள் சாதி, மதம், மொழி, இனம், நிறம், பொருள் என அனைத்தையும் கடந்தவர்கள் சமய நல்லிணக்கம், அமைதி, மரபுசார் பண்பாட்டை மறந்து போன மக்களுக்கு நினைவூட்டத் தவறாதவர்கள்.
மனித நேய மாண்புகளை சிதைக்கும் பல்லாயிரக்கணக்கான செயல்பாடுகள் சமீப காலத்தில் நிகழ்வதைக் கண்டு மனம் பொறுக்காமல், தங்களின் கருத்துக்களை பதிவு செய்தவர்களில் ஒருவர் கன்னடப் படைப்பாளர் கல்புர்கி. அவர் பட்டப் பகலில் இரு கொலைகாரர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார், ஆதிக்க வாதிகள் தங்கள் அடக்குமுறைகளை, சமூகத்தை ஏமாற்றும் தங்களது பித்தலாட்டங்களை சமூகத்துக்கு தோலுரித்துக் காட்டினார் என்ற ஆத்திரத்தில், மும்பை நகரில் தன் சீர் திருத்த கருத்துக்களால் பலரை வசீகரித்த கோவிந்த் பன்சாரேவை சுட்டுக் கொன்றனர். இவரைப் போலவே முற்போக்கு சிந்தனையாளரான நரேந்திர தபோல்கரையும் கொன்றனர்.
இவர்கள் ஆயுதங்கள் தாங்கி போராடியதாலோ, கலகம் செய்ததாலோ கொல்லப்படவில்லை. இவர்கள் தங்கள் அறிவால், சிந்தனையால் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய படைப்பாளர்கள். இவர்கள் கொல்லப்பட்ட போது அரசு தீவிரமான அணுகுமுறைகளை பின்பற்றி கொலைகாரர்களை தண்டிக்கவில்லை. மாறாக கொலைகாரர்களின் செயல்களை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பொது வெளியில் எந்தவித தடையுமின்றி வெளியாகியது. அந்த நச்சுக் கருத்துக்கள் வெளியாக அரசு தன் ஊடக வலுவை பயன்படுத்தியது.
சாகித்ய அகாடமி இதுவரை ஆயிரக்கணக்கான நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இவைகளில் பொதிந்துள்ள புரட்சிகரமான முற்போக்கான கருத்துக்களால் கவரப்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர். கருத்தை மாற்றுக் கருத்தால் எதிர்க்கத் துப்பில்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் போலவே கொன்றனர். (மன்னிக்கவும். கட்டுமிராண்டிகள், பழங்குடிகள் அவர்கள் உணவுக்காக விலங்கைக் கொல்பவர்கள் தவிர ஆயுதமற்றவர்களை கொல்ல மாட்டார்கள்.)
அரசு அப்பாவிகளான படைப்பாளர்களைக் கொல்வதை கண்டிக்கவில்லை.
ஒரு சிவசேனாக்காரன் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றான். இறந்தவர்கள் கேலி செய்யப்பட்டனர். படைப்பாளர் சமூகம் பொறுமை காத்தது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் பெரியவர் அக்லாக் என்பவர் தன் வீட்டுக்குள் வழக்கம் போல் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவர் மட்டிறைச்சியை சாப்பிட்டார் என்று சொல்லிச் சொல்லி அவரை கைகளாலும் உருட்டுக் கட்டையாலும் உயிர் பிரியும் வரை அடித்தே கொன்றனர். இந்த சம்பவம் படைப்பாளர்களை யோசிக்க வைத்தது. பேசுகிறவர் சுடப்படுகிறார். எழுதுகிறவர் எச்சரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். சாப்பிடுகிறவர் சாகடிக்கப்படுகிறார். இவை இறையாண்மை உள்ள ஒரு நாட்டின் பண்பாட்டுச் சிதைவாகி ஒரு கூட்டம் ஆர்ப்பரித்து தன்னை ஒரு மிலேச்சனாக காட்டிக் கொள்ளும் போது அவர்களை அதிகாரம் உள்ள அரசு கண்டும் காணாமல் விடுவது சமூக நல்லிணக்கத்திற்கு அரசு கூட்டுச் சதியாக மிலேச்சக்கூட்டத்தை வளர்த்து வருவதாக படைப்பாளர்கள் மனம் கொதித்தனர். மட்டரகமான அரசு வழங்கிய விருதை நெஞ்சில் சுமந்து அரசின் செயல்பாடுகளுக்கு துணை போகிறவர்களாக தங்களை நினைத்து வெட்கப்பட்டு தகவல் பறிமாறிக் கொண்டனர். அதன் விளைவாக நேருவின் சகோதரி விஜயட்சுமி பண்டிட்டின் மகள் நயன்தாரா செகல் முதன் முதலாக தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளித்தார். இது ஊடகத்தில் பரபரப்பானது. அது அடங்கும் முன்பே தலிப் கவுர் திவானா, அஜ்மீர் சிங் அவ்லக், சுர்ஜித் பதார், ரஹ்மத்தரி கிரி என வரிசையாக பலரும் தங்களுக்கு தங்களுடைய மிகச் சிறந்த படைப்புகளுக்காக இந்திய குடியரசுத் தலைவரால் கவுரமாக வழங்கப்பட்ட விருதுகளை சான்றுகளை பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். அதாவது இதை கோபத்தில் குழந்தைகள் தூக்கி எறிவது போல் விருதுகளை எறிந்தனர்.
சமூக அநீதி தொடர்பான நிகழ்வுகள், மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த கடந்த எல்லா காலக்கட்டங்களிலும் அந்தச் சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்குகிற கலைஞர்களும் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் அது குறித்த தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்துதான் வந்திருக்கிறார்கள்.
இங்கே தற்போது சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளர் மத வன்முறையின் காரணமாக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டும் அந்த அமைப்பானது எந்த எதிர்வினையும் ஆற்றாமல் மெளனம் காக்கும் போது அந்த அமைப்பின் மூலம் விருது வாங்கிய சக எழுத்தாளர்கள் தங்களின் விருதுகளை திருப்பியளிப்பதின் மூலம் தங்களின் எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் பதிவு செய்வது உணர்வுபூர்வமாகவும் அறவுணர்வு நோக்கில் புரிந்து கொள்ளக்கூடியது. இதுவும் ஒருவகை போராட்ட வடிவமே.
'கடந்த கால அல்லது வேறு அரசுகளின் ஆட்சியின் போது ஏன் இந்த விருதுகள் திருப்பித்தரப்படவில்லை?' என்கிற கேள்வி முட்டாள்தனமானது மட்டுமல்லாது, பிரச்சினையின் மையத்தை திசைதிருப்பும் அரசியல் நோக்கம் கொண்டதும் ஆகும்.

Rationalists and secularists lives under threat in India just like fresspeech and bloggers killed in Bangladesh
நாட்டின் இன்றைய நடப்பை படைப்பாளிகள் அரசியல் கட்சி போல் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய இயலாது. தங்களை இதரர்கள் தொடர வேண்டும் என்ற விருப்ப ஆர்வம் காரணமாக விருதுகளை தூக்கி எறிந்துள்ளனர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் உலகப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குனர், ஆனந்த பட்வர்தன் “நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது எங்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.” இப்போதே இதற்கு எதிராக போராடவில்லையென்றால் நாட்டின் பன்முகத்தன்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
இப்போது ஆனந்த பட்வர்தன் உட்பட திரைப்பட இயக்குனர்களும் தாங்கள் பெற்ற தேசிய விருதை தூக்கி எறிந்துள்ளனர்.
எரிவதை விட
எரிப்பதற்கு உதவிய தீக்குச்சியாக இருப்பது உயர்வுதான் என்றார் தமிழ் இலக்கிய மேதை புதுமைப் பித்தன். அவர் கூற்றைப் போலவே நம் இலக்கியவாதிகள் எரிக்க உதவும் தீக்குச்சியாக மாறியுள்ளனர். புரிய வேண்டியவர்களுக்கு இந்த நிகழ்வு காட்டும் சமிக்ஞை தெரிந்தால் சரி!
க.குணசேகரன்