நீதிபதியின் இலட்சணங்கள்

justice

நீதிபதியின் இலட்சணங்கள் - 01 –
■ தலைமைப் பதவிக்கு ஆசைப்படாதீர்கள்
மறுமையில் உலகில் நீதிபதியாக இருந்தவர் இறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு, கடும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
அதன் கடுமை கண்டு, உலக வாழ்வில் எந்த இருவருக்கிடையிலும் நான் தீர்ப்பளிக்காமல் இருந்திருக்க வேண்டுமே என்று [கைசேதத்துடன்] கூறுவார். - இப்னு ஹிப்பான், ஆயிஷா (ரளி)
உலக நீதிமன்றத்தில் நடு நாயகமாக

அமர்ந்து, மக்கள் படை சூழ, இரு தரப்பு வக்கீல்கள் வாதாட, இடை இடையே குறுக்கு விசாரணை செய்து கொண்டு, கருப்பு சிகப்பு அங்கியை கம்பீரமாக அணிந்து தீர்ப்பு சொல்லும் நாட்டாமையாக இருப்பது சுகமானதுதான்.
ஆனால், நாளை இறை நீதிமன்றத்தில் இறைவனின் குறுக்கு விசாரணை கண்டு கலங்கிப் போய் நிற்கும் காட்சியைத்தான் நபியவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 02 –
பதவியைத் தேடிப் போகாதீர்கள்
நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கூறினார்கள் : பதவிக்கு நீ ஆசைப்படாதே. அதை நீ கேட்டுப் பெற்றால், அதனிடமே நீ சாட்டப்படுவாய். கேளாமலேயே அது உனக்குக் கிடைத்தால், அதன் பொறுப்புகளை நிறைவேற்ற (இறைவன் மூலம்) உனக்கு உதவி செய்யப்படும்.
- புகாரி, முஸ்லிம், அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரளி)
தலைமை, ஆட்சி, அதிகாரம், நீதிப் பொறுப்புகள் மிகவும் பாரதூரமானவை. எதார்த்தத்தில் வாய்மையான, தலைமைப் பொறுப்பின் விளைவுகளை உணர்ந்த ஒருவர் அதன் சுமையைத் தாங்கிக் கொள்ள தாமாகவே முன்வர மாட்டார்.
பொதுவாக இஸ்லாமிய வாழ்வியல் விரும்புவது இதைத்தான் : ஒருவர் பொறுப்புமிக்க பதவிகளை அடைய தாமாகவே எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. அது இறையச்சத்துக்கு மாற்றமானது.
அதேசமயம், பேராசை மற்றும் மனோஇச்சைக்கு ஆட்படாமல் ஒருவர் இவ்வாறு எதிர்பார்க்கிறார் என்றால், தாமாக முன்வந்து பதவியைப் பெறுவதன் மூலம் நீதி நியாயத்தை நிலை நாட்ட முடியும் என்றால், குழப்பம் விளைவிப்போரின் சதிகளை முறியடிக்க முடியும் என்றால், இது போன்ற தருணங்களில் பதவியைத் தேடிப் பெறுவது விதிவிலக்கான ஒன்றாகும். அதேசமயம், சமூகத்தில் தம்மை விடத் தகுதி வாய்ந்த, நற்பண்புகள் நிரம்பப்பெற்ற வேறெந்த மனிதரும் அங்கே இல்லை எனும் நிலையும் இருத்தல் வேண்டும்.
எப்படி இருந்தாலும், இந்தச் சோதனைகளிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், நீதிபதியாக நியமிக்கப்பட்டவன் கத்தியின்றி அறுக்கப்பட்டவன் போன்றவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூ தாவூது, அபூஹுரைரா (ரளி)
நீதிபதியின் இலட்சணங்கள் - 03 -
நீங்கள் விரும்பினால் தலைமைப் பதவி என்றால் என்ன என்று நான் உங்களுக்குச் சொல்லட்டுமா.?
அதன் துவக்கம் சபிக்கப்பட்டது, அடுத்த கட்டம் வெட்கப் பட வேண்டியது, இறுதி நிலையோ [நாளை மறுமையில்] வேதனை பெற்றுத் தரப்போவது. ஆனால், நீதவான்களைத்தவிர. - தப்றானீ.
தலைமைப்பதவியை எல்லாப் பக்கமும் இனிக்கிற பலாச்சுளை எனப் பலரும் நினைக்கின்றனர். ஆனால், மேலே இருக்கிற முட்களை மறந்து விடுகின்றனர்.
தலைமைப் பதவியின் எதார்த்தத்தை விளக்குகிற மேற்கண்ட நபிமொழியின் இறுதியில் "நீதவான்களைத் தவிர" என்ற விதிவிலக்கான சொற்றொடரைப் பயன்படுத்தி உள்ளார்கள் நபியவர்கள்.
● யார் அந்த நீதவான்கள்?
● அவர்களின் தகுதிகள் எவை?
● இலட்சணங்கள் என்னென்ன?
இவற்றையும் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திக் கூறியுள்ளார்கள். அதற்கு முன்பு நீதவான்களின் சிறப்புகள் குறித்துப் பார்ப்போம்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 04 –
■ நீதவான்களின் சிறப்பு
இறைவன் நீதியாளர்களை விரும்புகிறான். [அல்குர்ஆன் - 16 : 90]
நீதவான்கள் நாளை மறுமையில் ஆற்றலும் மேன்மையும் மிகைத்த வல்ல றஹ்மானின் வலது புறத்தில் ஒளியினிலான மேடைகளில் வீற்றிருப்பார்கள். - முஸ்லிம்.
இப்னு ஜவ்ஸி ( ரஹ் ) குறிப்பிடுகிறார் : இரவெல்லாம் நின்று வணங்குபவரை விட, பகலெல்லாம் நோன்பிருந்து பசித்திருப்பவரை விட நீதவான் பன்மடங்கு உயர்ந்தவர்.
ஏனெனில், மேற்கண்ட வழிபாடுகளில் ஈடுபடுவோரால் தனிப்பட்ட வகையில் அவரவருக்கு நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், ஒரு நீதமான ஆட்சியாளரின் கண்காணிப்பில் இறையடியார்கள் பலர் வழிபாடுகள் செய்ய முடியும். வணிகர்கள் பாதுகாப்போடு பயணம் செய்ய முடியும். மாணவர்கள் கல்வி கற்க இயலும்.
மேலும், நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். நீதமான ஆட்சியாளருக்கு அடிபணிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். [இதேபோல] நீதமான ஆட்சியாளருக்கு அடிபணிந்தவர் எனக்கு அடிபணிந்தவர் ஆவார். நீதமான ஆட்சியாளருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார். - புகாரி, முஸ்லிம்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 05 –
■ ஆட்சி அதிகாரம் நீதி மன்றப் பொறுப்பில் உள்ளோர் நீதவான்களாக இருப்பதன் அவசியம்.
ஆட்சி, அதிகாரம், நீதிமன்றம் போன்றவற்றில் இருப்போர் நீதவான்களாக இருந்தால்தான் மக்களிடையே நேர்மை செழித்து வளரும்.
கலீஃபா ஹாரூன் ரஷீதைச் சந்திக்க லைஸ் பின் ஸஃத் வந்தார். உங்கள் ஊர்நிலை எப்படி உள்ளது? என்று கலீஃபா விசாரித்தார். எங்கள் ஊர்நிலை நைல் நதியையும் ஆளுநரையும் சார்ந்துள்ளது. கசடுகள் நதி மூலத்திலிருந்து வருகின்றன. எனவே, நதிமூலம் தூய்மையாகி விட்டால், நதிக்கரையும் தூய்மை பெற்று விடும் என்று பதில் அளித்தார் லைஸ் பின் ஸஃத்.
சரியாகச் சொன்னீர் அபுல் ஹாரிஸ் அவர்களே என்றார் கலீஃபா. [ஹுல்யத்துல் அவ்லியா ]
அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) கூறுவார் : எனது ஒரே ஒரு பிரார்த்தனை மறுக்கப்படாது ஏற்கப்படும் என்றிருந்தால், அதை ஆட்சித்தலைவருக்காக [நீதிபதிக்காக] செய்வேன். ஏனெனில், அவர் சீராக இருந்தால், முழு சமூகமும் சீராக இருக்கும்.
அஸ் ஸவ்ரி கூறுவார் : சமூகத்தில் இரு குழுவினர் சீரானால் முழு சமூகமும் சீர் பெற்றுவிடும். அவர்கள் சீர்கெட்டால், மொத்த சமூகமும் சீர் கெட்டு விடும். முதல் குழுவினர் ஆட்சியாளர்கள், இரண்டாம் குழுவினர், உலமாக்கள்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 06 –
■ நெறிமிக்க தலைவர் இலட்சணங்கள் - 01
இறைநம்பிக்கையாளர்களே...! நீங்கள் நீதியைக் கடைப் பிடிப்பவராகவும் இறைவனுக்கு சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்.
நீங்கள் செலுத்தும் நீதியும் வழங்கும் சாட்சியும் உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே.
அவர் செல்வந்தராகவோ ஏழையாகவோ இருந்தாலும் சரியே.
அல்லாஹ் அவர்களின் நலனில் மற்றவர்களை விட அக்கறை உள்ளவனாக இருக்கிறான்.
எனவே, மனஇச்சைக்கு அடிபணிந்து நீதி தவறி விடாதீர்கள். நீங்கள் உண்மைக்கு மாற்றமாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகிச் சென்றாலோ நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். - அல்குர்ஆன் - 04 : 135
நீதிபதியின் இலட்சணங்கள் - 07
■ அத்லு [நீதம்] என்றால் என்ன?
அத்லு என்பதன் வேர்ச்சொல் இதுலத் என்பதாகும். இதுலத் என்றால், ஒட்டகத்தின் முதுகுச்சுமை எனப் பொருள். அதாவது, ஒட்டகத்தின் மீது ஏற்றப்பட்ட பாரம் ஒரு புறமாகச்சாயும்போது அதனைச் சரி செய்து, அதை ஏற்றி இறக்கி சுமையை மட்டுப்படுத்தி நேராக்குவதற்கு அதாலத் எனப்படும்.
ஆக, ஒட்டகத்தின் இருபக்கச் சுமைகளையும் சரி செய்து, பாரத்தை மட்டுப்படுத்தி சமப்படுத்துவது போல, இருதரப்பு வாதங்களையும் தெளிவாகக் கேட்டு விசாரித்து தெளிவான தீர்ப்பை வழங்குவதற்கு 'அதாலத்' நீதி என்றும் அவ்வாறு வழங்குகின்றவருக்கு 'இமாமுன் ஆதிலுன்' நீதமான தலைவர் என்றும் கூறப்படும்.
ஒருசார்பு நிலை எடுக்காமல் இறைக் கட்டளைக் கிணங்க ஒரு பொருளை அதற்குரிய மிகச் சரி சரியான இடத்தில் வைப்பவரே, நீதிமான் ஆவார் என்கிறார் அறிஞர் இப்னு ஹஜர்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 08
■ நீதிக்கு முன் பாகுபாடு பார்க்கக் கூடாது
ஒருவனின் நீதி நேர்மையை உரசிப் பார்க்க அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா என்பது முக்கியமான உரைகல்லாகும்.
தான் கூறும் தீர்ப்பு தனக்கோ தனது பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் அதன்படியே தீர்ப்பு வழங்கிட வேண்டும்.
இதே போல தீர்ப்பு சொல்பவனின் கண்களுக்கு செல்வாக்கு மிக்க டாடா பிர்லாவும் சாமான்யமான குப்பனும் சுப்பனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதாக இருந்தால், ஏழை எளியோர், பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஒருமுறை குறைஷிக்குல உட்பிரிவான மக்ஸூமியா குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா என்ற பெண் திருட்டுக் குற்றம் செய்து விட்டார். இது கு‌றைஷிக் குலத்தவருக்கு பெரும் கவலையைத் தந்தது. அதோடு தமது குலத்துப் பெண் செய்த திருட்டு குற்றத்துக்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு அவமானமாகத் தெரிந்தது.
எனவே இதுபற்றி நபியவர்களிடம் பேசி தண்டனை இல்லாமல் பண்ண யாரை வைத்து சிபாரிசு செய்வது என அவர்கள் யோசித்த போது, நபிகளின் அன்புக்குப் பாத்திரமான, வளர்ப்பு மகன் ஸைதின் மகன் உஸாமா பொருத்தமானவர் என முடிவு செய்து அவரை நபியவர்களிடம் அனுப்பி வைத்தனர். நபிகளிடம் இதுபற்றி உஸாமா பேசினார். அப்போது நபியவர்கள், இறைவனின் வரம்புகளிலா என்னிடம் பரிந்துரை பேச வந்தாய்...? என்று அவரிடம் கோபமாகக் கேட்டார்கள்.
பின்னர் மக்களைத் திரட்டி பின் வருமாறு பிரகடனம் செய்தார்கள் : மக்களே...! உங்களுக்கு முன் சென்ற சமூகத்தார் அழிந்து நாசமாய்ப் போனதற்கு காரணம், அவர்களில் பலவீனன் ஒருவன் திருடினால், சட்டத்தை அமுல்படுத்தி தண்டிப்பார்கள். பணபலம் செல்வாக்குள்ளவன் திருடினால், கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, எனது மகள் ஃபாத்திமாவே திருடினாலும் அவர் கைகளை வெட்டத் தயங்க மாட்டேன். - புகாரி 3475
நீதிபதியின் இலட்சணங்கள் - 09 –
■ ஏழை எளியோர் நலன் காக்க வேண்டும்
மனிதர்களின் விவகாரங்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளவர், அவர்களில் தேவையுடையோர், மற்றும் ஏழை எளியோர் தேவையை நிறை வேற்றத் தடையாக இருந்தால், அவருடைய தேவையை நிறை வேற்ற விடாமல் இறைவன் தடுத்து விடுவான். - அபூ தாவூது, அபூமர்யம் அல் அஸ்தீ (ரளி)
ஒரு சமூகத்தின் பொறுப்பாளர், அல்லது தலைவர் தன்னைச் சந்திக்க வரும் தேவையுடையோர், ஏழை எளியோர் போன்றோருக்கு தனது வாசலை சாத்தி வைத்திருந்தால், அல்லாஹ் அவனது நெருக்கடி நேரத்தில் வானத்துக் கதவுகளை திறக்காமல் சாத்தி விடுவான். - திர்மிதி, அஹ்மது.
நீதிபதியின் இலட்சணங்கள் - 10 -
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு சமூகத்தில் உள்ள வலியவர்களிடமிருந்து எளியவர்களுக்கான உரிமைகள் பெற்றுத் தரப்படவில்லையானால் அந்தச் சமூகம் எப்படி தூய சமூகமாக முடியும்? - இப்னு ஹிப்பான், ஜாபிர் (ரளி)
அபூபக்ர் (ரளி) அவர்கள் ஜனாதிபதி பொறுப் பேற்றவுடன் செய்த முதல் பிரகடனம் வரலாற்றில் பதிவாகியுள்ளது : உங்களில் யார் வலுவற்றவரோ அவரே என்னிடம் வலுவானவர். அவருக்குச் சேர வேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தரும் வரை ஓயமாட்டேன். உங்களில் யார் வலுவுள்ளவரோ அவரே என்னிடம் வலுவில்லாதவர். அவரிடமிருந்து பெற வேண்டியதைப் பெறும் வரை ஓயமாட்டேன்.
இதனால்தான், நபியவர்கள், அபூபக்ரும் உமரும் (ரளி) எனது பார்வையும் செவியும் போன்றவர்கள் என்றார்கள். - ஸுன்ன் திர்மிதி.
நீதிபதியின் இலட்சணங்கள் - 11 -
உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது, ஒரு ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குமாறு ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதற்கு அவர்கள் இவ்வாறு பதில் கடிதம் எழுதினார்கள் :
■ அமீருல் முஃமினீன் அவர்களே! நெறிமிக்க தலைவர், தனது ஆடுகளை பாசத்தோடு மேய்க்கின்ற இடையனைப் போன்றவர். அவற்றை அவர் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிக் கொண்டு போகிறார். ஓநாய் மற்றும் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாக்கிறார். வெயில் குளிரிலிருந்தும் பாதுகாக்கிறார். அதுபோல தமக்குக் கீழ் உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
■ அமீருல் முஃமினீன் அவர்களே! நெறிமிக்க தலைவர் அன்பு மிக்க தாயைப்போன்றவர். சிரமத்துக்கு மேல் சிரமப்பட்டு பிள்ளையைச் சுமக்கிறாள். கஷ்டப்பட்டு பெற்றெடுக்கிறாள். அக்கறையோடு வளர்க்கிறாள். இரவெல்லாம் விழித்திருக்கிறாள். பாலூட்டுகிறாள். பிள்ளை நலமோடு இருந்தால் சந்தோஷப்படுகிறாள். அதற்கு ஏதாவதென்றால் பதறிப் போய் விடுகிறாள். அது சரியாகும் வரை எதன் பக்கமும் கவனம் போவதில்லை. அத்தகைய தாயைப்போல ஒரு தலைவன் தனது சமூகத்தின் மீது அக்கறை உள்ளவனாக இருக்க வேண்டும்.
■ அமீருல் முஃமினீன் அவர்களே! நெறிமிக்க தலைவர் உடல் உறுப்புகளுக்கிடையே இருக்கின்ற இதயம் போன்றவர். இதயம் சரியாக இயங்கினால் உடலின் ஏனைய உறுப்புகள் அனைத்தும் சரியாக இருக்கும். அந்த இதயம்போல ஒரு தலைவர் சீராக இயங்க வேண்டும்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 12 -
மக்களின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஓர் அதிகாரி, தனக்காக எவ்வித நலன் நாடுகிறாரோ, எப்படி அதற்காக உடலை வருத்தி உழைக்கிறாரோ அதுபோல பிற மக்களுக்காக உடல் வருத்தி உழைக்கவில்லை என்றால், இறைவன் நாளை மறுமையில் அவரை நரகத்தில் முகம் குப்புற வீழ்த்திவிடுவான். - தப்றானீ அல் முஃஜ முஸ்ஸஙீர், மஃகல் பின் யஸார் (ரளி)
சமூக மக்களின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், தன்னையும் தனது குடும்பத்தாரையும் பாதுகாப்பது போல பிறமக்களை பாதுகாக்கத் தவறினால், அவர் சுவனத்தில் நுழைவதல்ல அதன் வாசனையைக் கூட நுகர மாட்டார். - தப்றானீ அல் முஃஜமுஸ்ஸஙீர், இப்னு அப்பாஸ் (ரளி)
நீதிபதியின் இலட்சணங்கள் - 13 –
■ தீர்க்க ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கல்
தீர்ப்பளிப்பவர் நன்கு ஆய்வு செய்து, சரியான தீர்ப்பு வழங்கினால், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. நன்கு ஆய்வு செய்து தீர்ப்பளித்தும் அதில் தவறு நிகழ்ந்துவிட்டால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. - புகாரி, அம்ர் பின் ஆஸ் (ரளி)
நீதிபதியின் இலட்சணங்கள் - 14 -
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். அதில் இருவர் நரகத்தில் நுழைவர். ஒருவர் சுவனத்தில் நுழைவார். வழக்கின் உண்மை நிலையை அறிந்து, தீர ஆய்வுசெய்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனத்தில் நுழைவார்.
உண்மை நிலை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல் அநீதமான முறையில் தீர்ப்பளித்தவர், உண்மை நிலை புரியாமல் அறியாமையுடனே தீர்ப்பு வழங்கியவர் இவ்விருவரும் நரகில் நுழைவர். - அபூ தாவூது, புரைதா (ரளி)
நீதிபதியின் இலட்சணங்கள் - 15 -
தீர்க்கமான அறிவும் சிறந்த ஆளுமையுமுள்ள அறிஞர் பெருமக்களை நெறிமிக்க தலைவர் தனது அவையை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உலக விஷயமோ மார்க்க விஷயமோ இரண்டிலும் அவர்களது ஆலோசனைகளைப் பெறாமல் அவர் செயல்படக்கூடாது. - அறிஞர் இப்னுல் ஜவ்ஸி
நீதிபதியின் இலட்சணங்கள் - 16 –
■ பகைவனிடமும் நீதி தவறக்கூடாது
இறைநம்பிக்கையாளர்களே...! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது. நீதியோடு நடங்கள். இதுவே இறையச்சத்துக்கு மிகநெருக்கமானது. இறைவனை அஞ்சி செயல்புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை முழுமையாக இறைவன் அறிந்தவனாக இருக்கிறான். - அல்குர்ஆன் - 05 : 08
நீதிபதியின் இலட்சணங்கள் - 17 –
■ இலஞ்சம் வாங்கக் கூடாது
[நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக] இலஞ்சம் வாங்குபவன், இலஞ்சம் கொடுப்பவன் இருவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். - அபூ தாவூது, அபூஹுரைரா (ரளி)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எந்தச் சமூகத்தில் விபச்சாரம் அதிகரித்து விடுகிறதோ, அந்தச் சமூகம் பஞ்சத்தால் பீடிக்கப்படும்.எந்தச் சமூகத்தில் இலஞ்சம் பெருகி விடுகிறதோ, அந்தச் சமூகத்தை அச்சமும் பீதியும் சூழ்ந்து நிற்கும். - அஹ்மது, அம்ர் பின் ஆஸ் (ரளி)
எந்தச்சமூகத்தில் மோசடி அதிகரித்து விடுகிறதோ அந்தச் சமூகத்திற்கிடையில் எதிரிகள் பற்றிய அச்சத்தையும் திகிலையும் அல்லாஹ் பரப்பிவிடுவான். எந்தச் சமூகத்தில் அளவை நிறுவையில் மோசடி செய்யும் தீய குணம் குடிகொண்டு விடுகிறதோ அந்தச் சமூகம் பரக்கத் என்ற இறைவளத்தை இழந்து விடும். எந்தச் சமூகத்தில் அநீதமான தீர்ப்பு வழங்கப்படுகிறதோ, அந்தச் சமூகத்தில் கொலைகளும் இரத்த சிதறல்களும் அவசியம் ஏற்பட்டே தீரும். எந்தச்சமூகத்தில் உடன்படிக்கை முறிக்கப்படுகிறதோ, அந்தச் சமூகத்தின் மீது பகைவர்கள் திணிக்கப்படுவார்கள். - அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரளி) நூல் : மிஷ்காத். எவ்வளவு தீர்க்க தரிசனமாக சொல்லப்பட்ட வரிகள்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 18 –
■ வாதி பிரதிவாதி இருவர் வாக்குமூலம் கேட்டல்
உன்னிடம் ஒருவர் வழக்கு கொண்டு வந்தால், பிரதிவாதியின் வாக்கு மூலத்தை முழுமையாகக் கேளாமல் தீர்ப்பளித்து விடாதே. ஏனெனில், அப்போதுதான் எவ்வாறு தீர்ப்பு வழங்குது என்பதை உன்னால் சரியாகக் கணிக்க முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதன் பிறகு நான் அவ்வாறே தீர்ப்பளித்து வந்தேன் என அலீ (ரளி) அறிவிக்கிறார். - அபூ தாவூது, அலீ (ரளி)
உமர் (ரளி) அவர்கள் குறிப்பிடுவார்கள் : தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து, நீதி கேட்டு நின்றாலும், அவனது எதிரி வரும் வரை நீதி வழங்கிவிட வேண்டாம். ஏன் தெரியுமா? அவனது எதிரி இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 19 -
■ வாதங்கள் மட்டுமே கவனிக்கப்படாது மனசாட்சிக்கும் இடமளிக்க வேண்டும்.
மக்களின் வழக்குரிமைகளில் வாதங்கள் மட்டுமே கவனிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமானால், அப்புறம் ஒவ்வொரு மனிதருக்கிடையேயும் உயிர், உடைமைகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்கள் உருவாகி விடுவார்கள். [அதனால், எவருடைய உயிர் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விடும்.]
எனவே, எவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படுகிறதோ அவருக்கு சத்தியம் செய்வதற்கான வாய்ப்பு அவசியம் அளிக்கப்பட வேண்டும். - முஸ்லிம், இப்னு அப்பாஸ் (ரளி)
இன்னொரு அறிவிப்பில், வாதி தனது வாதத்தை நிரூபிக்க ஆதாரம், சாட்சி சமர்ப்பிக்க வேண்டும். அவரால் அதைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால், பிரதிவாதி தான் நிரபராதி என்று சத்தியம் செய்து தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்திலிருந்து விடுபட அங்கே அனுமதிக்க வேண்டும்.
நீதிபதியின் இலட்சணங்கள் - 20 –
■ வாதி பிரதிவாதி சமமாக நடத்தப்பட வேண்டும்
நீதி மன்றத்தில் விசாரணையின் போது, வாதியும் பிரதிவாதியும் நீதிபதிக்கு முன் சரிசமமாக அமர வேண்டும். - அபூ தாவூது, அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரளி)
ஒரு வழக்கு என்றால், நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் வாதி பிரதிவாதி இருவரும் ஆஜராக வேண்டும். இருவரில் யாருக்காவது செல்வாக்கு, பதவி இருக்குமானால் அவருக்கு நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படக் கூடாது.
நீதிபதியின் இலட்சணங்கள் - 21 –
■ கோப நிலையில் தீர்ப்பு வழங்கக் கூடாது
கோபமாக இருக்கும் எவரும் அந்த நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம். - புகாரி, அபூபக்ரா (ரளி)
கோபம் ஒரு பைத்திய நிலை என்பார்கள். அந்த நிலையில் ஒருவன் தீர்ப்புச் சொன்னால், அது பைத்தியக்கார நிலையில்தான் இருக்கும். நீதியின் அடிப்படையில் அமையாது. இதேபோல, அவசரப்பட்டும் தீர்ப்பு வழங்கி விடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மக்களின் மீது இஸ்லாமிய ஷரீஅத் சட்ட தண்டனைகளை அமுல்படுத்துவதை முடிந்த வரை தாமதப்படுத்துங்கள். குற்றம் சுமத்தப்பட்டவர் அதிலிருந்து விடுபட சாத்தியக்கூறு இருந்தால், அதற்காக அவருக்கு வழிவிடுங்கள்.
ஏனெனில், ஒரு நீதிபதி குற்றவாளியை தவறுதலாக விடுவிப்பது என்பது, ஒரு நிரபராதியைத் தண்டனைக்கு இலக்காக்கி விடுவதை விடவு‌ம் சிறந்தது. - திர்மிதி, ஆயிஷா (ரளி)
நபிமொழி தரும் செய்தி : நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் குற்றம் நிரூபணம் ஆவதில் சிறிதளவாவது சந்தேகத்திற்கு இடமிருந்தால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது.
நீதிபதியின் இலட்சணங்கள் - 23 –
■ மறுமை நம்பிக்கை அவசியம்
இந்த பூவுலகில் நீதி நேர்மை நிலை பெற வேண்டும் என்றால், அது படைத்த இறைவனையும் பதில் சொல்ல வேண்டிய மறுமையையும் மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொண்டுள்ள ஒரு தலைவரால்தான் முடியும்.
வரலாற்றில் எங்கெல்லாம் நீதியும் நேர்மையும் செழித்தோங்கி இருந்துள்ளது என்பதை நாம் ஆய்வு செய்தால், இது உண்மை என்பதை எதார்த்தமாக உணர்ந்து கொள்ளலாம்.
அதோடு இன்னொரு விஷயமும் இங்கே தெளிவாகிறது. அதாவது, வழக்கு எதுவும் தொடுக்காமல் பதிவு செய்யாமல், யாரையும் கைது செய்வதோ வேறு ஏதேனும் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதோ இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் படி நீதி நேர்மைக்கு முற்றிலும் புறம்பானது.
நீதிபதியின் இலட்சணங்கள் - 24 –
■ வாதி பிரதிவாதிகளுக்கு மறுமைச் சிந்தனையை ஊட்ட வேண்டும்
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வழக்காடுவதில் திறமையானவராக இருக்கலாம். எனவே, அவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டு அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பு வழங்கி விடுகிறேன்.
இது போன்ற நிலையில், [மனிதன் என்ற வகையில்] ஒருவருக்கு உரிமை இல்லாத ஒன்றை இன்னொருவருக்கு நான் வழங்கி விடலாம். ஆனால், அவ்வாறு வழங்கப்பட்டவர் உணர்ந்து கொள்ளட்டும், அவருக்கு நான் வழங்கியதை (தமக்குக் கிடைத்த அல்வாத் துண்டாக எண்ண வேண்டாம்) நரக நெருப்பின் ஒரு துண்டையே நான் துண்டித்துக் கொடுக்கிறேன். - புகாரி, உம்மு ஸலமா (ரளி)