ஊடக ஆயுதம்?!

மத, இன, நிற, சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்திலும் பக்கசார்பு, பாகுபாடில்லாத சமநீதியுடன் உண்மையாக நேர்மையாக இருப்பது சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய அவசியமான மனிதப் பண்பு.
ஒட்டுமொத்த சமூகம், நாடு சார்ந்த விவகாரங்களில் வெகுஜன மக்களிடம் பொதுக் கருத்தை ஏற்படுத்துவதில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும்

ஊடகங்களுக்கு, குறிப்பாக பிரதான ஊடகமாக கருதப்படும் தொலைக் காட்சி ஊடகங்கங்களுக்கு நடுநிலைப் பார்வையும், சமநீதியுடன் நடக்கும் பண்பும் இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களுக்கு கால் பிடித்து, வால் பிடித்து, ஆள் பிடித்து சமூகத்தின் பாமரர்களின் முதுகில் சவாரி செய்யும் நடவடிக்கைகள் முற்றிலும் கேடானது கேவலமானது.
நான் பிறந்தேன் என் தாத்தா செத்துப்போனார், என் மகன் பிறந்தான் என் அப்பா செத்துப்போனார், என் பேரன் பிறப்பான் நான் மட்டும் சாக மாட்டேன். நான் சாக வாரம் பெற்றவன் என்று ஒருவன் சொன்னால் அவன் சுத்தப் பைத்தியம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அறிவுப் பூர்வமான செய்தியில்லை. பிறப்பு போல இறப்பு போல ஆட்சியும் அதிகாரமும் மாறி வரும். கை மீறியும் வரும். ஹிட்லரையும், முஸோலினியையும், இடி அமீனையும் உலகம் பார்த்திருக்கிறது. தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மக்களை பாடுபடுத்திய அவர்களால் தங்களையே தக்கவைக்க இயலவில்லை.
செயல்கள் பதிவு செய்யப்படும். செய்தவர் இருக்க மாட்டார் ஆனால் பிறரால் படிக்கப்படுவார் செயல்கள் பிழையானால் பழிக்கப்படுவார். உலகம் உள்ளவரை மனிதர்கள் வருவார்கள் மதங்கள் இருக்கும், இனங்கள் இருக்கும். வரலாறு மீண்டும் மீண்டு வரும். வரலாறு வாசிக்கப்படும் என்பதை மறவாதீர்கள். வரலாறு படிக்காதவன், படித்த வரலாற்றை மறந்தவன் பின் வரும் மனிதர்கள் தன்னை காறித் துப்பும் வரலாற்றை மீண்டும் எழுதுகிறான்.
இந்தியாவில் அப்படி ஒரு கறை படிந்த வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது. அதற்கு “மை” ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் சமூக கேவலர்கள். சுய மரியாதை தமிழகத்து ஊடகங்கள் அதற்கு சந்தை விரித்திருக்கிறது.
மனித சமூகத்துப் பொறுப்பை துறந்து. சமூக கேவலர்கள் கட்டமைக்கும் சமயத்தில் விழுந்திருக்கின்றன ஊடகங்கள் அதன் விளைவு :-
மனிதர்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தும் பிற்போக்குத்தனமான சிந்தனையுடையவர்களை அறிமுகப்படுத்துவது, பிறப்பால் பிறரை சிறுமைப்படுத்தும் மனப் பிறழ்வு கொண்டவர்களை கருத்தாளர்களாக களம் இறக்குவது, அடக்குமுறைகள் அடாவடித்தனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களை அங்கீகரிப்பது என சமநீதியை சாகடிப்போர்களை முக்கியமானவர்கள் போல அடையாளப்படுத்தி பிரபலமாக்கும் போக்கும் நடைமுறையும் இன்று தமிழகத்தில் பிரதான ஊடகங்களில் நடந்து வருகிறது.
சமூகத்தை பிளக்க விரும்பும் சதிகாரர்களுக்கு ஊடகங்கள் குறிப்பாக தழிக ஊடகங்கள் கோயபல்ஸ்களாக கோரஸ் பாடுகின்றனர். இதன் மூலம் தவறான தகவல்கள், பிழையான மனப்பதிவுகள், அபிப்பிராய பேதங்கள், சரியான தரவுகளைக் கண்டு கொள்ளாமல் உண்மையை இருட்டடிப்புச் செய்து தகவல்களை திரித்துக் கூறும் கடும் போக்கு நிலவி வருகிறது. இது அத்தனையும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
உண்மையாக கல்வியில், பண்பாட்டில், கலாச்சாரத்தில் நாகரீக வளர்ச்சியில் சமூகத்தை முன் நகர்த்தும் அறிவுஜீவிகள், முற்போக்கு சிந்தனை கொண்டோர் ஆபத்து வளையத்தில் நிறுத்தப்படிருக்கிறார்கள்!
தங்களின் முற்போக்கு கருத்துக்களுக்காக சிலர் செத்திருக்கிறார்கள், சிலர் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் விஷயத்தில் கருத்துச் சுதந்திரம் ? கருவறுக்கப்பட்டிருக்கிறது.
மின்னூடகம் மட்டுமின்றி பதிப்பு ஊடகங்களும் மனச்சாட்சியை விலை பேசுகின்ற ஊடகப் பிழைப்பை வெட்கமில்லாமல் செய்து வருகின்றனர்.
தற்கால சந்ததிகள் படிக்கிறார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் சந்தோஷத்தை கொண்டாடுகிறார்கள். அறம் சார்ந்த மனிதத்தை மையப்படுத்திய ஒழுக்க மாண்புகள் அவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. அவர்கள் படித்த கல்வி நிறுவனங்கள் பண்பாடு குறித்த பார்வையில்லாமல் மனித நேயம் பற்றிய நடைமுறை வாழ்க்கையை பயிற்றுவிக்காமல் இயந்திரங்களை கையாளுவதை மிகச் சிறப்பாக பயிற்றுவிக்கின்றன. இன்னும் பல கல்வி நிறுவனங்கள் தங்கள் மதம் சார்ந்து, இனம் சார்ந்து மட்டும் வாழும் மத, இன பாதுகாப்பாளர்களாக உருவாக்கி குறுகிய மனம் படைத்தவர்களாக வளர்த்தெடுத்திருக்கிறது. இந்த மத, இன பாதுகாப்பாளர்கள் அதிகாரமட்டங்கள், மின்னனு ஊடகங்களிலும் உலாவி வருகிறார்கள் விஷ விதைகளை தூவி விடுகிறார்கள். இதைப் பார்க்கும் படித்த பட்டம் பெறாதவர்களின் எதிர் வினைகள் சமூக வலைதங்களில் நாமெல்லாம் நாகரீக உலகத்தில் அறிவு பெற்றவர்களோடு வாழ்கிறோம் ர்ன்கிற எண்ணத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. மின்னூடகம், பதிப்பூடகம், சமூக ஊடகம் எங்கெங்கு காணினும் தன் மதம், தன் இனம், தன் சாதிப் பெருமை பீற்றி மற்றவர்களை வேறுப்பேத்தி வெறியேற்றும் வேலைகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
ஊடகம் வலிமையான ஆயுதம் தான் யாருக்கு?