இளமையில் வெல்! இளமையை வெல்!

மவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி பேரா. ANI கல்லூரி, திண்டுக்கல்
ஜனவரி – 12 தேசிய இளைஞர் தினமாக நமது இந்திய நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி நமது இளமையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஒன்றுக்கு ஒன்பது முறை மறு பரிசீலனை செய்துகொள்வது அவ்வப்போது அவசியமான ஒன்று!
35 வயதிற்குட்பட்டவர்களே “இளைஞர்கள்” என்ற வரையறைக்குள் வருவார்கள். இளமை குறித்து தெளிவான புரிதல்கள் நமக்குள்ளும், நம்மிடையேயும் இல்லாததன் காரணமாக மழை நீரைப் போல் நமது இளமையும் ஆங்காங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன. “ஒரு நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் ஒரு அற்புதமான நாட்டை நான் கட்டமைத்துத் தருகிறேன்.” என்றார் விவேகானந்தர்.
மனித வாழ்வின் முப்பருவங்களில் இடைப்பருவமான “வாலிபம்” அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாத ஒன்று. வாலிப வயதில் நாம் செய்யாத சேட்டைகளா... சுற்றாத ஊர்களா... உண்ணாத உணவுகளா... உடுத்தாத உடைகளா... இருக்காத இடங்களா... ஆஹா... ஆஹா... அது ஒரு அற்புதமான நிலாக்கலாம். அதை அவ்வளவு சீக்கிரம் எவரால் மறக்கமுடியும்?
இளமையில் கல்! என்று சும்மாவா சொன்னார்கள். கல் என்றால் கல்லூரியில் சென்று படிப்பது மட்டுமல்ல வாழ்க்கைப் பள்ளியில் படிக்க வேண்டிய பாடங்களும், படிப்பினைகளும் நிறையவே இருக்கின்றன. அவைகளை முறைப்படி கற்பதே “கல்” என்பதன் பொருள்.
ஆனால் இன்றைக்கு அச்சொல் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு “கள்”ளெனும் “மது” இன்று இளைஞர்களின் இளங்கைகளில் மரணத்தின் சின்னங்களாக உலா வருகிறது. மது அது நோய்களின் தாய் என்கிறது அறிவியல் இல்லை அது பாவங்களின் பாய், குற்றங்களின் கூட்டு என்கிறது ஆன்மீகம்.
யார் எப்படிச் சொன்னாலும் சென்னை மட்டுமல்ல தமிழகமே குறிப்பாக இளைஞர்கள் (இளைஞிகளும்... ) தண்ணீரில் தான் மிதக்கிறார்கள். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற வாசகங்களெல்லாம் இன்றைக்கு மது புட்டிகளின் மாயஜால அல்லது அக்மார்க் முத்திரைச் சொற்களில் ஒன்றாக மாறிப் போய் விட்டது. அரசும் அப்படித்தானே அசுர வேகத்தில் விற்பனை செய்கிறது. டாஸ்மாக் இல்லாமல் பாஸ்மார்க் பெற முடியுமா என்ன...
இதைத் தவறாக விளங்கிக் கொண்டதால்தான் என்னவோ கல்விக்குப் பெயர் போன திருச்செங்கோட்டுப் பிள்ளைகள் “அதுவும் பிளஸ் ஒன் பெண் பிள்ளைகள்” மதுவருந்தி விட்டு வந்து “தேர்வு” எழுத எழுத மயங்கி விழுந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையெத்தனை ஆண்டுகாலம் இம்மதுவின் கோரப்பிடியிலிருந்து பூரண விடுதலை பெறாமலேயே இருப்பது? இதுவும் கூட ‘மதுவரசியல்’ என்று மறு எழுச்சி பெறுகிறது என்றால் இதன் எதிர்காலத்தை, வரவிருக்கும் தேர்தல் களத்தை நன்கு நாம் எடை போட்டுப் பார்த்துக் கொள்ளமுடியும்.
இளமையும், மதுவும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அலைக் கழிக்கச் செய்கிறது. இப்போது அதில் அரசியலும். எதார்த்தத்தில் எந்த ஒரு மனிதனும் நல்ல மனிதனே! அவனைச் சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளால்தான் அவன் பெருமாற்றம் பெறுகிறான். குறிப்பாக இளமைச் சூழலில் அவனை சுற்றுச் சூழல் பாடாய் படுத்தியெடுக்கிறது, கூடவே அவனது சிற்றின்ப வேட்கைகளும் , வேட்டைகளும்...
இளமை துடுப்பில்லாத படகு போன்றது; அங்கேயிங்கே அலைபாயத்தான் செய்யும். பெற்றோர்களும், பேராசிரியர்களும் குறிப்பாக சக சகோதரர்களும் தான். கலங்கரை விளக்கொளி வீசி, தீய இருட்டுகளை விட்டும் விரட்டி தூய வெளிச்சக் கரைகளுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இல்லையேல் இறுதி வரை அவ்விளைஞர்களின் “கலை வாழ்க்கை” கவலை வாழ்க்கையாகவே கறைபடிந்து போய் விடும். கரை நல்லதுதான் கடலுக்கு, ஆனால் அது எல்லை தாண்டாமல் இருக்க வேண்டுமல்லவா? நமக்குள் நல்லக்கறை இல்லாத வரை எந்தக்கரையும், கறையும் நமக்கு புரியாத புதிர்தான் கூடவே நமது வாழ்க்கையும்...
நமது வாழ்க்கைக்காக அதுவும் இளமைக் கால “ஊஞ்சல் வாழ்க்கை”யில் வழிகாட்டிகளும், ஒளிகாட்டிகளும் இல்லாத வேளைகளில் அவனது கல்விதான் கட்டாயம் கைகொடுக்கும். எனவே இளைமைக் காலங்களில் அதிகமதிகம் அவன் கல்வித்துறையில் கால் பதிக்க முன் முயற்சிகளையும், பயிற்சிகளையும் அவசியம் நழுவாதுவழுவாது கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் ஏதோ ஒரு தெருவோரம் “கடை” பிடிக்க வேண்டிய அதுவும் பெட்டிக் கடை ஒன்றை பேரம் பேசிப் படிக்க வேண்டிய நிலையொன்று வரக் கூடும். இதற்காகவா நாம் இவ்வளவு சிரமப்பட்டோம்?
சிரமப்பட வேண்டிய வயதில், வாலிபத்தில் சிரமப்படாமல் போனால், நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில், வயோதிகத்தில் நிச்சயம் சிரமப்பட வேண்டியதே ஏற்படும் என்பது அனுபவசாலிகளின் வாழ்க்கை மொழி. இன்றைக்கு நாம் நமது இளமைக்காலங்களில் , வாலிப வயசில் எப்படி இருக்கிறோம் என்று ஒருமுறை நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டிய நல்லநேரமிது..
வாலிபத்தில் உடலும், உள்ளமும் ஒரு சேர அதி ஆரோக்கியத்தோடு, மிளிர வேண்டிய, ஒளிர வேண்டிய வயது அது. துரதிஷ்டவசமாக இன்றைக்கு இவ்விரண்டுமே பாழ்பட்டுக்கிடப்பது பெரும் துயரத்திகுரியதே! இதன் கணிசமான பங்கு மதிப்பிற்குரிய மீடியாக்களையே சாரும். உணவு, உடை, மருந்து, அழகு சாதனங்கள், உடல் எடை கூட்டும் கருவிகள், மனமயக்கிகள், ஆசையூட்டிகள், சுவை கூட்டிகள் என்று அப்பப்பா அத்தனையெத்தனை நுகர்வியல் விளம்பரங்கள்... அத்தனையுமே இளம் பட்டாளங்களை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன.
இன்றைக்கு சிறார் குற்றங்கள் பல்கிப் பெருகி போனதற்கு காரணம் அவையாவுமே இளைஞர்களின் வழியேதான் விரைந்து வீரியம் பெற்று விளைந்தெழுகின்றன. அப்படியானால் இளைய தலைமுறையினரின் அதீத தாக்கம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை வெகு எளிதாக நீங்கள் புரிந்துணர்ந்து கொள்ள முடியும். இளமையென்பது சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பி போன்றது அதை நாம் எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைத்துக் கொள்ள முடியும். ஆனால் சூடு ஆறிவிட்டால் பிறகு ஒன்றுமே செய்ய முடியாது. அவ்வாறுதான் நமது இளமையை பரிபக்குவமாய் பதப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் முன்னிட்டுத்தான் இஸ்லாம் வாலிபம் குறித்து நிறையவே பேசியிருக்கிறது. மறுமையில் கேட்கப்படும் விசாரணைக் கேள்விகளில் இளமை குறித்தும் கேட்கப்படும் என்றார்கள். வாலிப வயதில் எவர் பள்ளிவாசலோடு அதிகமதிகம் தொடர்புடையவராக இருப்பாரோ அவர் அர்ஷ் எனும் இறை சிம்மாசன நிழலின் கீழ் நின்றிப்பார் என்று நபிகளார் ஒருமுறை சொன்னது ஆழிய அர்த்தமுள்ளது.
இளைஞர்கள் தமது வாழ்க்கையை எப்படி கழிக்க வேண்டும் என்பதற்கு இந்த நபிமொழி நல்வழிகாட்டுகிறதல்லவா? பள்ளிவாசல் என்பது நல்லொழுக்கங்களைக் கற்றுத் தரும் ஒரு கல்விக் கூடம் தானே தவிர தீவிரவாதங்களையும், பயங்கரவாதங்களையும் போதிக்கும் கொலைக் கூடங்களல்ல அவை! ஒப்படி ஒரு திட்டமும் இஸ்லாமில் இல்லவே இல்லை. எனவேதான் இளைஞர்களை அதிகமதிகம் பள்ளிவாசல் தொடர்போடு இருக்கும் படி அண்ணலார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அண்ணலார் சொன்னதோடு மட்டுமல்ல தனது இளமைக் காலத்தில் “ஹிஸ்புல் ஃபுழூல்” என்ற பொதுச் சேவை மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செவ்வனே சேவை செய்து வந்தார்கள். அவர்களது இந்த வாழ்வியல் வரலாறு நாமும் இளமையிலிருந்தே கட்டாயம் சேவை பணியை செய்திட வேண்டும் என்பதையே நமக்கு புலப்படுத்துகிறது. ஆக, இளமை என்பது ஒரு அற்புதமான, ஆனந்தமான ஓர் உலகம்.
சாத்தான்களும், இப்லீஸ்களும் இருக்கிறார்கள். நம்மோடு கூடவே நம்மைக் கண்காணித்து இறைவழியில் இணைத்து வைக்கும் மலக்குகளும் இருக்கிறார்கள். அவர்களைத்தான் நாம் அறவே கண்டு கொள்வதே இல்லையே... வாருங்கள்
தூய இளமையைப் போற்றுவோம்         தீய வழமையை மாற்றுவோம்.