மண்ணின் வரலாறு -3 பழவேற்காடு

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தின் உச்சியில் தமிழக கிழக்குக் கடற்கரை சாலையின் தொடக்கத்தில் பழவேற்காடு பரவிக் கிடக்கிறது.
பரவிக்கிடக்கக் காரணம், எங்கும் தண்ணீரின் தரிசனம். வடக்கே புலிகாட் ஏரி, கடலைத் தொட்டும் தொடாமலும், அதன் நீர் உப்பு நீரல்ல! ஒரு வகை கலப்பு நீர். அதனுள் ராலும் நண்டும் மீன்களும் அதன் மேலே காலம் காலமாக அமர்ந்து பயணிக்கும் ஆயிரமாயிரம் பறவைகள். அது ஒரு பறவைகள் சரணாலயம்.
அவற்றைப் பார்த்து ரசிக்கவும் ஏரியில் பயணித்து எழிலை ருசிக்கவும் வந்து குவியும் தமிழக ஆந்திர மக்கள்.
தாது வருடப் பஞ்சத்தைப் போக்க ஆங்கிலேயக் கவர்னர் தரையில் ஒரு கோடு போட வைத்தார். அது ஒரு நீர்க்கோடு. அது காக்கி நாடாவில் தொடங்கி புதுச்சேரியில் முடிகிறது. அதுதான் பக்கிங்காம் கால்வாய்.
அக் கால்வாய் பழவேற்காட்டைக் கடக்கும் போது ஆற்றைப் போல் தெரிகிறது. வங்காள விரிகுடாவின் கடற்கரை மணல்வெளி, அதற்கு இணையாகக் கிடக்கும் பக்கிங்காம் கால்வாய் புனல்வெளி. புனல்வெளியையும் மணல் வெளியையும் மிரட்டிக் கொண்டு கடல் வெளி.
அன்று கட்டு மரங்கொண்டு கடல்வெளியை வென்றவர்கள் இன்று மோட்டார் படகுகளோடு, அந்தப் படகுத்துறையை அக்கால தோணித் துறைமுகத்தை நினைவுபடுத்திக் கொண்டு இரு கண்களை மூடிக் கொண்டு பாருங்கள்.
கி.பி.1269 ஆம் ஆண்டு
அரபியக் கப்பல்கள் சில கரை சேர அவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கரையிறங்குகிறார்கள். எல்லோருமே அரபியர்கள். அவர்களை வரவேற்கும் பழவேற்காட்டைச் சேர்ந்த சிலர், அவர்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அரபுக்கள்.
யார் அவர்கள்?
கரையிறங்குபவர்கள் வணிகக் குழுவினராய்த் தெரியவில்லையே! அவர்கள் எல்லோரும் பல குடும்பத்தினராய்த் தெரிகின்றனரே! என்ன நேர்ந்தது அவர்களுக்கு? எதற்காக இந்தக் கடற்பயணம்?
அவர்கள் எல்லோரும் அரபகத்தின் மதீனாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்! அவர்கள் திடீரெனப் புறப்பட்டு வந்திருந்தாலும் அவர்களுள் சிலருக்கு சோழ மண்டல வாணிபத் தொடர்புகள் இருந்ததாலேயே பழவேற்காடு வர சாத்தியப்பட்டிருக்கிறது. அதுகாலாதி கால உறவு.
இஸ்லாமிய சூரியன் மேற்கில் உதிக்கும் முன்பே அரபியர்களுக்கு அரபுக் கடல் வங்கக் கடல் தொடர்புகள் வளர்ந்தோங்கியிருந்திருக்கிறது. இஸ்லாம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் உச்சநிலைக்கு வந்த போது அரபுக்கள் அனைவருமே முஸ்லிமாகவே வலம் வந்தார்கள்.
ஒரு வரலாற்று சான்றின்படி ஒன்பதாம் நூற்றாண்டில் அரபுக்கள் பழவேற்காட்டில் வணிகர்களாக மட்டுமில்லை. கப்பல்களைக் கட்டும் ஓடாவிகளாகவும் விளங்கியிருக்கின்றனர். அவர்களின் நீண்ட தொடர்பிலேயே பதிமூன்றாம் நூற்றாண்டில் மதீனத்து அரபிகள் பழவேற்காட்டில் கால் பதித்திருக்கிறார்கள்.
அரபுக் கடலோரம் வணிகம் செய்த அரபுக்கள் கொள்முதலோடு கொள்வினையும் செய்து மாப்பிள்ளைகளாக மாறியிருக்கிறார்கள். ஆனால் சோழமண்டலக் கடலோரம் வணிகம் செய்தோர் குடும்பத்துடன் வாழ்ந்ததினால் தமக்குள்ளே மணம் முடித்து சோனகர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்று கூட தமக்குள்ளேயே மணம் முடித்துக் கொள்ளும் காயல்பட்டினம், கீழக்கரை, அதிராம்பட்டினம், நாகூர் மரைக்காயர்களைப் போலவே பழவேற்காடு மரைக்காயர்களும் தம் வட்டத்தைத் தாண்டுவதில்லை. அதேசமயம் சோனகர்கள் பெரும்பான்மையினராக வாழாத ஊர்களில் அவர்கள் மற்ற முஸ்லிம்களோடு கலந்து விட்டார்கள். தொடக்கத்தில் அரபி மட்டுமே பேசியவர்கள் உள்ளூர் மொழியான தமிழையும் துணை சேர்த்துக்கொண்டார்கள். இருமொழிகளும் கலந்த புதுமொழி ‘அரவி’ எனக் கூறப்பட்டது. காலப் போக்கில் தமிழ் அரபி மொழியில் எழுதப்பட அரபுத் தமிழ் தோன்றியது. காலம் கனிய சோனகர்கள் தமிழர்களாகவே மாறிப்போனார்கள்.
1970 களில் நான் ஒருமுறை பழவேற்காடு சென்று வந்தேன். அது ஒரு ரால் கொள்முதல் பயணம். அப்போது நாங்கள் கிழக்குக் கடற்கரையோரமாகவே சென்று வந்தோம். இப்போது அப்பாதை கடல் அரிப்புகளால் தடைபட்டுள்ளது. எனவே நானும் சகோதரர் வலியுல்லாஹ்வும் செங்குன்றம் - பொன்னேரி வழியாக பழவேற்காடு சென்று வந்தோம்.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பயணத்தில் முதன் முதலாக ‘மஸ்ஜிதே முசாரப்’ எனும் சின்னப் பள்ளிவாசலுக்கு சென்றோம். கி.பி. 1708 இல் கட்டப்பட்ட இப்பள்ளிக்குள்தான் நிழல்கடிகாரம் உள்ளது.
இப்பள்ளிவாசல் சுற்றுலாத்துறையால் பேணப்படுகிறது. மதரஸா பட்டினத்தைச் சேர்ந்த மூவர் நிழல்கடிகாரத்ததை அமைத்துக் கொடுத்துள்ளனர். முகம்மது பீர் சாகிப், முஹம்மது அலி நெய்னா சாகிப், முஹம்மது பீர் பக்கீர் சாகிப் எனும் மூவரே கடிகார அமைப்பாளர்கள். காலை மணி ஆறு முதல் மாலை ஆறு வரை இக்கடிகாரத்தின் மூலம் நேரத்தை தெரிந்து கொள்ளலாம். இது 1915 இல் அமைக்கப்பட்டிருக்கிறது.
சின்னப்பள்ளிக்குள் தொழுகைக்கு அழைப்பதற்கான மேடை அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் இடப்புறமாக எழில்மாடமாக “மதரஸா ரியாழுல் ஹூதா” எழுந்து நிற்கிறது. இதன் நிறுவனர் ஹாஜி அப்துல் ரஹ்மான். இவர் மண்ணடி மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலின் தலைமை இமாமாக பணியாற்றுவது மேலும் ஒரு சிறப்பு.
தமிழக, ஆந்திர மாணவர்கள் உண்டுறைப் பள்ளியின் மேலாளராக மௌலவி எ.முஹம்மது அலி மன்பயீ பணியாற்றுகிறார். அவர் பழவேற்காட்டைப் பற்றிய பல பழைய செய்திகளைச் சொன்னார்.
“தமிழகத்தின் வட எல்லையில் குடியேறிய உங்கள் மூதாதையர் என்ன தொழில் செய்தார்கள்?”

“வியாபாரம்தான் செய்தார்கள். அக்காலத்தில் சோழ மண்டலக் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகமாக பழவேற்காடு இருந்துள்ளது. வாசனைப் பொருட்கள், கைகலிகள் இங்கிருந்து ஏற்றுமதியாகிள்ளன.”
“எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?”
“நாங்கள் பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்தோம். முக்கியமாக தாய்லாந்து (சயாம்) எங்கள் கேந்திரமாக இருந்தது. அங்கேயே எங்கள் மூதாதையரில் சிலர் தங்கி வணிகம் செய்தனர். ஜப்பானுக்கு தங்கம் போனது. சைனாவிலிருந்து பட்டும் பீங்கான் பாத்திரங்களும் இறக்குமதி ஆயின.”
“உள்நாட்டுத் தொடர்பு. வணிகத் தொடர்பின்றி குடும்பத் தொடர்புகள்…?”
“உள்நாட்டுத் தொடர்பில் எங்கள் மூதாதையர் திருக்குர்ஆன் ஓதுவதற்காக கீழக்கரை மற்றும் தொண்டியோடு தொடர்பு வைத்திருந்தனர். சதகத்துல்லாஹ் அப்பாவின் மாணவர் முஹம்மது தீபி அவர்களிடம் கல்வி கற்க முஹம்மது ஜான் என்பார் தொண்டிக்கு சென்றிருக்கிறார்.”
“நீண்ட தூரமும் சரியான சாலைகளும் இல்லாத காலத்தில் சென்ற பயணங்கள் வியப்புக்குரிய செயலல்லவா?”
“நல்லாசிரியரைத் தேடுவதில் தூரமும் பயணமும் ஒரு தடையல்லவே. நாகூர், அதிரை, தொண்டி, கீழக்கரை, காயல் என எங்கள் மூதாதையர் பயணங்களின் போது ஆங்காங்கிருந்த அரபுக்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இக்காலத்தில் கூட எங்கள் காயல்பட்டின தொடர்பு தொடர்கிறது.”
“கொள்வினை… கொடுப்பினை எப்படி?”
நாங்கள் சம்பந்தங்களுக்காக பழவேற்காட்டைத் தாண்டுவதில்லை. ஜமீலாபாத், செம்பாசிப் பள்ளி, தோணிரேவு, மூஸா முனை எம்மைச் சேர்ந்த வடக்குப் பகுதிகள். அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்லர். நெசவுத் தொழிலோடு கைவினைப் பொருட்கள் செய்தல், மீன் பிடித்தல், படகுகள் கட்டியவர்கள் வியாபாரத்தையே முக்கியமாகக் கொண்டார்கள். இப்போதைய இளைய சமூகத்தினர் படித்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்” என்ற மதரஸா நிர்வாகி அலைபேசியில் ஒரு முக்கியப் புள்ளியை அழைத்து வரச் செய்து ஆற்றுப்படுத்தினார்.
அவரின் பெயர் ஹாஜி சலீமுத்தின் முஸ்ரபி, அரேபியர் முகமும் நிறமும் அவரிடம் தெரிந்தன. அவரின் வாய்மொழியும் மெய்மொழியும் அவரைத் தகவல் களஞ்சியம் என புரிய வைத்தன. அவர் சில காகிதக் கோவைகளோடு காணப்பட்டார்.
என்னுடைய வம்சாவளியினரின் பெயர்களைக் கேட்டார். தந்தை பாட்டனாரைத் தாண்டி என்னால் வம்சாவளியினரின் பெயரைக் கூறமுடியவில்லை அவரோ பாட்டனரைத் தாண்டியும் பல பெயர்களைச் சொன்னார்.
அவர் கொண்டு வந்திருந்த காகிதக் கோவையிலுள்ள தன் பாவா வம்சாவளியினரின் பல தலைமுறைப் பெயர்களைக் காட்டினார். பாவா வம்சாவளிபோல் 98 வகையறாக்கள் பழவேற்காட்டில் வாழ்வதாகவும் அவர்களுடைய பட்டியல் தனித்தனி காகிதக் கோவைகளாக உள்ளதாகவும் சொன்னார்.
உலகிலுள்ள இனங்களில் தலைமுறைகளின் பெயர்களை அரபுக்கள்தான் தம் நினைவில் பதித்து உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதேமுறையில் பழவேற்காட்டு முஸ்லிம்கள்…!
கீழக்கரை மரைக்காயர்கள் கூட அபூபக்கர்(ரழி) வகையறா எனக் கூறி தற்போதைய தலைமுறை வரை பதிவு செய்து வைத்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
கீழக்கரை - பழவேற்காடு தலைமுறைச் சங்கிலிகளை பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்றால் ஏதாவது ஓரிடத்தில் அவர்கள் ஒரு கண்ணியில் இணையலாம்! முக்கிய காரணம் அவர்கள் இருவரும் மதீனாவாசிகள்.
ஹாஜி சலீமுத்தீன் முஸ்ரபி தான் வைத்திருந்த பழவேற்காட்டைப் பற்றிய பல செய்தித் தாள்களைக் காட்டினார். அன்பர் பழவேற்காட்டில் வணிகம் செய்வதோடு பரக்கத் நகர் பள்ளிவாசல் இமாமாகவும் பணிபுரிந்து வருகிறார்.
சூரிய நிழற்கடிகாரம் பற்றிய விளக்கத்தைத் தந்த அன்பர் பெரிய பள்ளிவாசலையும் முஸ்லிம்களின் பழைய கட்டிடங்களையும் காட்டி ஐரோப்பியர் காலத்தைக் கண்முன் கொண்டு வந்தார். முந்தைய காலத்தில் தாய்லாந்தோடு வியாபாரம் செய்த போது வந்திறங்கிய மிகப் பெரும் சீனக்களிமண் தாழிகளையும் பளிங்குக் குழி தாழிகளையும் காட்டி வியக்கும்படி செய்தார். ஒவ்வொரு ஏனமும் 200 லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
“எங்களில் பலர் ஆலிம்கள், அவர்கள் அரபிஇலக்கியத்தில் பாண்டித்தியம்மிக்கவர்கள். பல்வேறு அரபு நூல்களை எழுதியவர்கள். ஹம்சியா மவுலீது மட்டும் பன்னிரெண்டு பகுதிகளைக் கொண்டது” என அன்பர் சொல்லச் சொல்ல ஆனந்த பூங்காற்று வீசியது. அதில் கறி ஆனத்தின் வாசனையும் பொறித்த மீனின் வாசனையும் போட்டி போட்டன.
கடல் படு பொருட்களுக்குப் பெயர் பெற்ற ஊரில் அவற்றின் வாசனைக்குப் பஞ்சமிருக்குமா?
அன்று யாரோ ஒரு பெருமகனாரின் பிள்ளைக்குப் பிறந்த நாள் அதற்காக மதரஸா பிள்ளைகளுக்கு கறியோடு மீனும் நெய்ச்சோறுமாய் விருந்து. அதில் எங்களுக்கும் பங்கு கிடைத்தது.
இயற்கையழகு, மனதை மயக்கும் நீர்ப்பரப்பு, பாரம்பரிய கட்டிடங்கள், வளமையான வரலாறு, கலாச்சார கருவூலங்கள் நிறைந்த பழவேற்காட்டின் கதை மிக நீண்டது.
ஊர்வலம் தொடரும்…