“உயர்வு தரும் உழவு”

m
“தர்க்கம், முரண், கருத்து மோதல் போன்ற எதிர்மறை குணங்கள் இந்தியர்களின் மரபணுக்களில் இருக்கின்றன.”
- அமர்த்தியா சென்
சூரியனையே சுட்டெரிக்கும் பூமியான சவூதி அரேபியாவிற்கு போய் வந்தவர்களுக்குத் தெரியும் அது வறண்ட பாலைவன பூமியென்று... ஊர் எல்லைக்கு வெளியே எந்த ஒரு புற் பூண்டையும் பார்த்து விட முடியாது. பச்சை பசேலென்ற... “பசுமை” என்ற சொல் அங்கெல்லாம் அகராதியில் மட்டும் தான் இருக்கிறது. இதற்கான முழு விளக்கத்தை இந்தியக் கிராமங்களில்தான் கண்டுகளிக்க முடியும்.
உலகப் பொதுமறையான குர் ஆன் பாலைவன மணற்பரப்பில் நின்று கொண்டு விதை, கொட்டை, செடி, கொடி, மரம், விவசாயம், கதிர், அறுவடை, கூளம், திராட்சை, மாதுளை என்று விவசாயப் பொருட்கள் சுமார் முந்நூறு வசனங்களில் உரையாற்றுவது நம்மைப் பிரமிக்க வைக்கிறது (பேரீச்சை, அத்தி, ஜைத்தூன் எனும் ஆலிவ் குறித்தும் குர்ஆன் பேசாமலில்லை) ஒரு வேளாண் விஞ்ஞானி ஆய்வு செய்தால் நிச்சயம் அவர் அதிசயித்துப்போவார்.
இப்போது சொல்லுங்கள் குர்ஆன் இறைவேதமா இல்லையா...? நிகழ்கால இஸ்லாமியர்கள் இத்துறையில் போதிய கவனம் செலுத்தாதது பெரும் துரதிஷ்டமான ஒன்றே!
குர்ஆனிய விளக்கம் என்பது அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளில் மட்டும் இல்லை. அன்றாடம் பூத்துக் குலுங்கும் பூக்களிலும், படர்ந்து விரியும் கொடிகளிலும், செழித்து வளரும் செடிகளிலும் இருக்கவே செய்கிறது. இனிதான “இறை இருப்பு”க்கான விளக்கம்.
“வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனித உயிர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வதுதான்” என்பார் ஃபுகோகா. எதையும் தாங்கும் இதயம், வறுமையிலும் செழுமை, சூழ்நிலைகளுக்கேற்ப சுதாரித்துக் கொள்ளும் தன்மை, மண்ணையும், விண்ணையும் மாசுபடுத்தாதிருத்தல், மற்றவைகளுக்காகவே தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தல் என்று பக்கம் பக்கமாய் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நமக்கான தாவரங்களின் மாவறங்களை(மாபெரும் அறங்களை)...? இவையாவும் நாம் அன்றாடம் அவற்றிடமிருந்து கற்கவேண்டிய கட்டாயப் பண்புகள்தானே...!
1978 இல் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ எனும் நூல் மூலம் பிரபலமானார் ஜப்பானிய வேளாண் விஞ்ஞானி “மசானபு ஃபுகோகா” (1913 - 2008). இவர்தான் முதன் முதலாக இயற்கை வேளாண்மையை அறிமுகம் செய்தார். முன்னதாக சுமார் எழுபது ஆண்டுகளாக தமது தந்தையின் ஷிகோகு தீவில் இருந்த ஆரஞ்சுத் தோட்டத்தில் இதை செயல் முறைப்படுத்திப் பார்த்தார் கைமேல் பலனும், பழமும் கிடைத்தது.
அதிர வைக்கும் ஆங்கில மருந்துகளால் மனித உடல்கள் மரத்துப்போய் விட்டது போல… நவீன உரங்களால் மண் வளம் கிட்டத்தட்ட மலட்டுத்தனமாகி விட்டது. வேளாண்மையின் நிலவளம் தவறான மேலாண்மையால் விளை நிலங்கள் விலை நிலங்களாகிப் போய் கண்கவர் கலைக் கட்டிடங்களாக நிலை மாறிப் போய் விட்டன. அதன் வாசல்களில் “வாட்ச் மேன்” என்ற அழகிய ஆங்கிலப் பெயரில் சொந்த நிலத்தை இழந்த தமிழ் விவசாயிகள். காலம்தான் எவ்வளவு வெகு வேகமாக மாறிப்போய் விட்டது.
இயற்கை முறையிலான விவசாயம் என்பது என்ன... இவற்றையெல்லாம் நினைவில் கொண்டுதான் “இருப்பது இருந்தபடியே இருக்கட்டும்” என்ற அடிப்படையில் எவ்விதக் களையும் எடுக்காமல் விவசாயம் செய்வதே கலைக்கே “இயற்கை வேளாண்மையியல்” என்று சொல்லப்படுகிறது. “உழைப்பை எதிர்க்கவில்லை தேவையற்ற உழைப்பையே எதிர்க்கிறேன்.” என்கிறார் ஃபுகோகா. ஆதி மூலங்களின் ஆதிவழி இயற்கை வேளாண் வழி அன்றி வெறென்ன...?
நூறு சதவீதம் இயற்கை வேளாண்மையில் சிக்கிம் முதலிடத்திலும் நாகலாந்தும் மிசோரமும் அடுத்தடுத்த இடத்திலுமிருக்கிறது. நமது தஞ்சை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (1938 - 2013) ஆற்றிய உரைகளும், ஏற்றிய போராட்டங்களும் சாதாரணமானவையல்ல! “மண்ணின் வளமே மக்கள் வளம்” என்பதில் உறுதியாய் இருந்தவர் சொல்லால் மட்டுமல்ல செயலாலும்...!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் இன்றைக்கு விவசாயிகளின் கல்லறைத் தோட்டமாக காட்சியளிக்கவில்லையா...? பயிர்களை அறுவடை செய்ய வேண்டியவர்கள் தங்களது உயிர்களையே அறுவடை செய்பவர்களாக ஆகிவிட்டார்களே... இதற்கிடையில் “மீத்தேன் வாயு தூதன்” வேறு வெகு விரைவில் வருகைதர இருக்கின்றான். இவன் ஒரு மகா “நீருறுஞ்சி” என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்...? “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்பார் வள்ளுவர். ஆனால் இந்திய விவசாயிகள் அழுது கொண்டல்லவா கஞ்சித் தொட்டிகளில் எலிவறுவலைத் தின்று நோன்பு திறந்து கொண்டிருக்கின்றனர்.
தோன்றிய காலம் தொட்டே மனித நேயம் பேணுபவர்கள் தமிழர்கள்.
தமிழர் திருநாள் “தை” முதல் நாள். அதுதான் உழவர்களின் உன்னதப் பெருநாள். மார்கழி மாதக் கடைசி நாளன்று நோன்பு நோற்று தை முதல் நாள் பொங்கலிட்டு கொண்டாடுவது தமிழர் மரபு. கி.மு 200 லிருந்து தொடங்குகிறது தமிழர் மரபு வரலாற்றுச் சுவடுகள்.
1921 இல் திரு மறைமலை அடிகளின் (1876 - 1950) தலைமையில் 500 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து “தை” தான் முதல்நாள் என முடிவு செய்தது. தையா அல்லது சித்திரையா எது முதல் மாதம் என்பதில் “சதுரங்க அரசியல்” மாறிமாறி காய்களை நகர்த்துவதுண்டு, வெட்டுவாங்குவது என்னவோ விவசாயிகள்தான்.
தமிழர்கள் பருவ காலங்களை நான்கு வகையாக பகுத்திருந்தனர். அவை (ஜன - மார்ச்) வசந்தகாலம், (ஏப்ரல் - ஜூன்) கோடைகாலம், (ஜூலை - செப்) மழைகாலம், (அக் - டிசம்) குளிர்காலம் இவற்றில் உழவர் திருநாள் வசந்த காலத்தில் வருகிறது என்னமோ உண்மைதான் ஆனால் கூடவே இலவச இணைப்பாக வறுமையும் வந்து விடுகிறதே…
“அறுவடை நாளில் அதற்கான உரிமையை கொடுத்து விடுங்கள்” என்கிறது (6 : 141) வான்மறைக் குர்ஆன். பண்டைய அரபு மக்களிடம் தமது அறுவடையிலிருந்து எதையும் ஏழை எளியவருக்கு கொடுக்காதவர்களாக இருந்தனர். அதை கண்டித்துத்தான் இவ்வசனம் இறங்கிற்று.
இங்கு உரிமை என்பது ஜகாத் எனும் கட்டாயக் கொடையையும், ஸதகா எனும் கருணைக் கொடையயும் குறிக்கும். இரு வழிமுறையிலும் கொடுத்து வாழ வேண்டும் என்று விவசாயத்திற்கும் விதிமுறை ஏற்படுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
சுமார் 50 நாடுகளில் வியாபித்திருக்கும் உழவர்கள் இந்த அறுவடைத் திருநாளை பல்வேறு பெயர்களில் வெவ்வேறு நாட்களில் பெருவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். (பார்க்க அட்டவணை) இவ்விடத்தில் ஒன்றை நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அறுவடைத் திருநாளான பொங்கல் இந்து மதத்தின் பண்டிகையல்ல! அது தமிழர்களின் நன்றித் திருவிழா. அது மண் சார்ந்து விளங்குவதால் நாளடைவில் மண்பானை தன் வயிற்றில் “நாமம்” போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. வீட்டு முற்றத்திலும், தோட்ட வெளியிலும் கொண்டாடப்பட்ட பொங்கல் நாளடைவில் வழி பாட்டுத் தளங்களுக்கு நகர்ந்தது. பிறகு பொங்கல் இறைவழிபாடுகளில் ஒன்றாக இணைந்து உருமாற்றம் பெற்றுவிட்டது. செம்மொழித் தழிழர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று இது.
நபிமார்களில் பலரும் விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் சொற்களுள் “மகசூல்” என்பதும் ஒன்று. இது முற்றிலும் அரபுச் சொல்லாகும். இது மாதிரியான எண்ணற்ற சொற்கள் மாறியும் மாறாமலும் வேளான்மை மொழியில் செழித்து வளர்ந்திருக்கின்றன என்பது ஆய்விற்குரியறு.
உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள் (போன்றவர்கள்). அல்குர்ஆன் 02 : 223.
தினமும் கவனிக்கப்படாத நிலம் கவனிக்கப்படாத மனைவியைப் போல என திருவள்ளுவர் (குறள் - 1039) சொல்வதும் இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கதாகும். பெண் & மண் இவ்விரண்டின் ஒப்பீடு இங்கு விரிவஞ்சி விட்டு விடுவது சாலச் சிறந்தது.
“ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு” என்பது நியூட்டன் விதி. அது நம் நீள் நி்லத்திற்கும் பொருந்தும். “ஒரு மனிதனின் உடலையும், உள்ளத்தையும் முழுமையாக செழுமைப்படுத்துவது வேளாண்மை மட்டுமே” என்பது சீன தத்துவம். இன்றைக்கு நமது விவசாயம் எப்படி இருக்கிறது, ஒரு கணம் நின்று யோசிக்க வேண்டிய ஒன்று.
விவசாயத்தை “தோட்டக்கலை” என்பார்கள். உண்மையிலேயே இது ஒரு கலைதான். களை எடுப்பதும், நாற்று நாடுவதும், பூப்பறிப்பதும், காய்பிடுங்குவதும், காய் கொய்வதும், வரப்பு கட்டுவதும், தண்ணீர் பாய்ச்சுவதும் என எல்லாவற்றிலும் கலைத்திறன் மிளிரவே செய்கிறது.
மஸ்ஜித்களும், மதரஸாக்களும் மரங்களை மறந்து வாழ்ந்து விடமுடியாது. எனவே “வேளாண்மையும், அதன் மேலாண்மையும்” குறித்து சிறு அளவிலாவது அரபுக் கல்லூரிகள், நிஸ்வான் மதரஸாக்கள், அன்வாருஸ் சுஃபாக்கள், இமாம்ஸ் கவுன்சில், இஸ்லாமிய இயக்கங்கள், இளைஞர் பேரவைகள், ஜமாஅத்துல் உலமா, மஜ்லிஸ் மாதாரிஸ்கள் போன்றவை முன்னெடுத்துச் செல்லலாம்.
நபி யூசுஃப் (அலை) அவர்களின் கனவு விளக்கம் பிரசித்தி பெற்றது. அன்றைய எகிப்திய மன்னர் அஜீஸ் திடீரென்று ஒருநாள் ஏழு இளைத்த மாடுகள் ஏழு கொழுத்த மாடுகளை அடித்துத் தின்று விடுகிறது, இதற்கு விளக்கம் கேட்டு யூசுஃப் (அலை) அவர்களிடம் வந்த போது “நம் தேசம் ஏழாண்டு பஞ்சத்தின் பிடியில் இருக்கும், பிறகு ஏழாண்டு செழிப்பின் மடியில் இருக்கும்” என்று விளக்கம் சொன்னார்கள். ஏழாண்டு பஞ்சத்தை சரிகட்டுவது எப்படி... முதல் ஏழாண்டின் சாகுபடியைப் பெருக்கி சேமித்து வைத்து அடுத்த ஏழாண்டுக்கு செலவு செய்வதுதான் ஒரே வழி. இதை யூசுஃப் (அலை) அவர்கள் செய்து காட்டினார்கள். இம்மேலாண்மைக்காகவே உணவுத்துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெற்றார்கள் என்கிறது உலகப் பொதுமறை குர்ஆன் 12 : 43 – 55.
கனவின் வழியாகக் கூட விவசாயம் குறித்து அல்லாஹ் பேசுகிறான் என்றால் அம்மேலாண்மைக்காக ஒரு தீர்க்க தரிசையையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான் என்றால் மன்னரின் மண்ணிய சிக்கல் இறைத் தீர்ப்பின் வழியே இனிதே சீரானது.
மனித வாழ்க்கையில் மரம்.
விண்ணகத்தில் பூத்துக் குலுங்கும் பூங்காவனமான சொர்க்கபுரியிலிருந்து ஆதம் ஹவ்வா (அலை) அவர்களை மண்ணகத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு தடை செய்யப்பட்ட அந்த மரம்தானே மூல காரணம்...?
இருவர் வெவ்வேறு மண்ணறைகளில் வேதனை செய்யப்பட்ட போது ஒரு மரக் கிளையை உடைத்து இரண்டு கப்றுகளில் நட்டு வைத்து இது காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்காக துஆ செய்து கொண்டே இருக்கும். அதன் காரணமாக அவர்கள் சுவனம் புகக்கூடும் என்றார்களே... இங்கு அவர்களை மண்ணறையிலிருந்து விண்ணறைக்கு கொண்டு சேர்ப்பது ஒரு மரம்தானே!
இப்படியாக மனிதனின் தாவரத் தொடர்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். விசயம் ஒன்றே ஒன்றுதான். வேளாண்மையை வெளிப்படுத்துங்கள், காடுகளை காப்பாற்றுங்கள், வனங்களை வாழ்வியுங்கள், உழவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள், விவசாயிகளை விரக்திப்படுத்தாதீர்கள், தோட்டக்கலைஞர்களை தொலைத்து விடாதீர்கள். நமக்கு இருப்பதென்னவோ ஒரே ஒரு பூமிதான் அது செழித்தால்தான் எதுவும் செழிக்கும். அது அழிந்தால் யாவும் அழிந்து போகும்.
கண்ணைக் கவரும் குட்டை போன்சாய் மரங்கள், விதை நீக்கம் செய்யப்பட்ட மரபணு மாற்றங்கள், உருண்டையை உருட்டி விட்டு தன்னை சதுரமாக்கிக் கொள்ளும் அதிசய தர்பூசணி, சாப்பிடாத பிள்ளைகளையும் சாப்பிட வைக்கும் கலர் ரைஸ், இலையே விதையாகும் மாய மந்திரமற்ற லீஃப் கல்ச்சர், காலத்தை கவனித்து பயிர் செய்யும் பயோ டைனமிக் அக்ரி, வீண் செலவில்லாத ஜீரோ பட்ஜெட் அக்ரி, மண்ணே இல்லாமல் மரத்தூள், மரநார் போன்றவற்றைக் கொண்டு பயிர்ப்பிக்கும் ஹைட்ரோ போனிக்ஸ் அக்ரி, நேனோ அக்ரி என நாளுக்கு நாள் புதுப்புது டெக்னாலஜி விரிவாகிக் கொண்டே வருகிறது.
சமீப காலங்களாக வெகுஜன பத்திரிக்கைகளைப் போல பத்துக்கும் மேற்பட்ட வேளாண்மை இதழ்கள் விரும்பி வாசிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கதே. நிலமும் நீரும் மாசுபடுவதற்கு ஆலைகளிலிருந்து வெளிப்படும் “சாயக் கழிவுகள்” மிக முக்கியமான காரணியாகும். ஒரு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கெமிக்கல்களே பின்னர் மனித குலத்திற்கு எமனாக மாறிவிடுகிறது என்பது அவ்வப்போது நாமறிந்து வந்த மெய்ஞானமே!
தற்போது இன்னொரு புதுப் புரட்சி வெகு விரைவில் வெளி வரப்போகிறது. அது சமூகத்தில் நிச்சயம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரவே செய்யும். பல ஏழைக் கூலிகள் வேலையிழக்கக்கூடும். “பிளக்ஸ் பிரிண்டிங்” வந்த போது எத்தனை கையெழுத்து ஓவியர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள். டிஜிட்டல் புரட்சி என்பது யாரைத்தான் சும்மா விட்டது. என்ன செய்வது, மாறிக் கொண்டே இருப்பதுதானே இங்கு மாறாத நிலை.
வரப்போவது “காட்டன் எவல்யூஷன் எனும் பருத்திப் புரட்சி” ஆகும். அதாவது பருத்தி விளையும் போதே அப்பஞ்சு வண்ணங்களோடு இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்...?அதேவேளை எத்தனை ஆயிரம் சாயத் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும்...? கூர்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று. இதற்கான அதிரடி ஆய்வுதான் தற்போது வெகு வேகமாக ஜப்பானில் நடைபெற்று வருகிறது. “சுவனத்தில் அவரவர்களுக்கான ஆடை மரங்களில் காய்த்துக் குலுங்கும்” என்ற நபிமொழியை நிகழ்கால விஞ்ஞானம் நிஜப்படுத்திக் காட்டும் நேரம் வெகு தூரத்திலில்லை.
இஸ்லாமிய இதழ்களும் இது விசயத்தில் கவனம் செலுத்தலாம். இணைய இதழ்கள் எண்ணிலடங்காதவை அவையும் வரவேற்கத்தக்கதே என்றாலும் கடப்பாறைக் கரங்களில்கம்யூட்டரை தொடுவது என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. வாருங்கள்...
இயற்கை ஊண் உழவைப் போற்றுவோம் செயற்கை வீண் உலகை மாற்றுவோம்
அறுவடைத் திருநாள்
நாடு ஊர் பெயர் காலம்
தமிழ்நாடு பொங்கல் ஜனவரி 14
கேரளா ஓணம் ஆகஸ் – செப்
ஆந்திரா யுகாதி
கர்நாடகா
அஸ்ஸாம் போகாலி பிகு
பஞ்சாப் பைசாகி
குஜராத்/ பீஹார் மகர் சங்கராந்தி
வட இந்தியா லகோரி
மலேஷியா ஜூன் 2
ஆஸ்திரேலியா கிரேப்ஸ் ஏப்ரல் கடைசி
இங்கிலாந்து ஹெர்வெஸ்ட் ஹோம் செப்டம்பர்
ஜெர்மன் அக்டோபர் பெஸ்டிவல் அக்டோபர் முதல் ஞாயிறு
ரோம் செரிலியா அக்டோபர் 4
இஸ்ரேல் சுக்கோத்
அமெரிக்கா நவ 4 வியா
கனடா அக்டோ 2 வது திங்கள்
ஜப்பான் டோரினோ இக்சி நவம்பர்
சைனா மூன் கேக்
கொரியா சூசாக்
பிரன்ஸ் ஜனவரி-22
ஆஃப்ரிக்கா யாம்