கற்பதும் கசடும்

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்

நல்வழி எழுதிய அவ்வைக் கிழவி,
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.
என்று வாழ்விற்குப் பணத்தின் இன்றியமையாமையை விளக்குகிறாள். தந்தை மகனுக்கு செய்ய வேண்டியது அவன் வருவாய்க்கு வழி தேடித் தருவதுதான் அவரின் தலையாய கடமையாகிறது. நவீன வாழ்முறையில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை உற்பத்தியில் ஈடுபடுவோர் சமூக ஏணியின் கடைப்படிகளில் இருப்பதும், ஊடகம், நாடகம், அரசியல் போன்ற‌ பேசுவதற்கு மட்டுமே ஊதியம் பெரும் "அறிவுப்பணி" செய்வோர் ஏணியின் மேற்படியில் வைத்துக் கொண்டாடப்படுவதும் எக்கேள்வியும் கேட்கப்படாமல் நடக்கிறது. இல்லாத ஒரு கற்பனை ஏணியின் படிகளில் முண்டியடித்து ஏறுவதே வாழ்வாக மாறிவிட்ட மாந்த மனித இனம், இத்தகைய "அறிவுப்பணி" செய்யத் தம் குழந்தைகளுக்குக் கல்வி என்னும் பயிற்சி அளிக்கிறது. எனவே கல்வியின் நோக்கம் நல்ல வேலை பெற்றுத் தருவதுதான் என்று அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இதனால்தான் "புள்ள குட்டிகளப் படிக்க வெக்கறது" ஒரு பெற்றோரின் மிக முக்கிய கடமையாக இல்வாழ்வில் கருதப் படுகிறது.
பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தின் வெளியே வந்து, நம் வாழ்வின் மேல்பரப்பைக் கிளறி ஆய்ந்தோமானால், நாம் பிள்ளைகளுக்கு அளிக்கும் கல்வி இருவகைப்பட்டது என்று புரியும்: ஒன்று கடவுக் கல்வி இன்னொன்று அறம் சர்ந்த கல்வி. பல நாடுகளுக்கும் செல்வதற்கு நம் எல்லையைக் கடக்கும் கடவுச்சீட்டு (passport) வாங்குவதுபோல் பொருள்தேடும் வேலைகளுக்குக் கடவுச் சீட்டாக இருப்பதைக் கடவுக் கல்வி என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்திலே qualification என்று கூறுவார்கள். இது ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு நம்மைக் கொண்டு சென்றவுடன் மறக்கப்படும் குப்பைக் கல்வி.
இன்னொன்று அறம் சார்ந்த கல்வி - இதுவே இம்மைக்கும் மறுமைக்கும் நம் கூடவே வந்து பிணி அகற்றும் மருந்தாய்த் திகழும் பயனுள்ள வாழ்க்கைக் கல்வி. கடைக்கால் தூண்கள் போல் நம்மைத் தாங்குவது இக்கல்விதான். இதை edification என்று கூறலாம்.
அறம் சார்ந்த கல்வி மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நமது நிலம் மற்றும் கலை, கலாசாரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு பேணப்பட்டு வரும். அறம் என்பது ஆறு ஓடுவது போல உலக மக்களை அரவணைத்துக் கொண்டு ஓடுவது அறம். ஆறு மண்ணின் தன்மையை வாங்கிக் கொள்கிறது. மண்ணுக்கு உதவுகிறது. உயிரினங்களுக்கு உணவாகிறது. இப்படிச் சமூகத்துக்கு உழைப்பையும், உடைமையையும் பங்குபோட்டு உதவுவதுதான் அறம்.
இதில் பொருள் ஈட்டக் கடவுக் கல்வியும், நல்வாழ்வு வாழ கடைக்கால் கல்வியும் தேவையாய் இருக்கின்றன. இப்போது எல்லோரும் மயங்கி விழும் மையப் பொருளாதாரத்தில், பெருநிறுவனங்களில் வேலை செய்வது அதிகப் பொருள் ஈட்டுவதால், அதை நோக்கியே கல்வித் திட்டம் செலுத்தப்படுகிறது. ஆனால் பெருநிறுவனங்களின் வடிவமைப்பினால் அதில் மனிதர்கள் மற்றும் அவர்களின் தனித்தன்மை ஒதுக்கப்பட்டு, விதிமுறைகளுக்கே (process) முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த விதிமுறைகள் சமூக உயர்வுக்கான விதிமுறைகள் அல்ல! ஒரு நிறுவனத்தை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்தவே அந்த விதிமுறைகள் உதவும். மனிதனை மனிதனாக வாழவிடாமல், சுயமாக சிந்திக்க விடாமல் அவனையும் அந்த நிறுனத்தின் இன்னொரு கருவியாக, இயந்திரமாக இருப்பதையே நிறுனங்கள் விரும்புகின்றன. பணத்தை அள்ளித் தரும் நிறுனங்கள் விரும்பும் இயந்திர மனிதனாக மாணவர்களை மாற்றவே கல்வி நிறுனங்கள் உழைக்கின்றன. பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் இயந்திரமாக இருப்பதையே எதிர்பார்க்கின்றனர். குழந்தைகள் சுயமாக, குழந்தையாக இருந்தால் அது பெற்றோர்களுக்கு ஆதிரத்தை, கவலையை எரிச்சலை ஏற்படுத்துகிறது.
"நாலு வயதுக் குழந்தைக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?”
நாலு வயசாச்சு, ஒண்ணுமே தெரியல இவளுக்கு! அலுத்துக் கொண்டார் ஒரு தாய். நாலு வயசு குழந்தைக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் என்ற அவரது கேள்விக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில்கள் எனக்கு கவலையையும் எரிச்சலையும் தருகின்றன.
ஒரு தாய் மிகப் பெருமையாக கொடுத்த பட்டியலில், நூறு எண்ணத் தெரியும், பெயர் எழுதத் தெரியும், ஒன்பது கோள்களின் பெயர்கள் என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்னும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு பல விஷயங்கள் மூன்று வயதிலிருந்தே தெரியும் என்று வெறுப்பு ஏற்றினார்கள். மிகச் சில பேர் ஒவ்வொரு குழந்தையும் அதனது வேகத்தில் கற்றுக் கொள்ளும், கவலைப்படத் தேவையில்லை என்றார்கள்.
ஏற்கனவே நொந்து போய் கேள்வி கேட்ட அந்த தாய், மற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு தெரியுமா என்று இன்னும் அதிகமாக கவலைப்பட ஆரம்பித்துவிட்டார். பெற்ற பிள்ளைகளையே வெறும் பரிசுப் பொருளாக மதிக்கும் "போட்டிக் கலாசாரம்" நமது சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்டது. இவர்கள் குழந்தைகளா இல்லை பந்தயக் குதிரைகளா?
என்னுடைய கருத்தில், ஒரு நாலு வயது குழந்தைக்கு தெரிய வேண்டியது:
1. தான் முழுக்க முழுக்க நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு.
2. பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு பொது இடங்களில் பாதுகாப்புடன் இருக்கும் அறிவு, தன் சுதந்திரம் மற்றும் அதை எப்போதும் தன் குடும்பத்தினர் காப்பார்கள் என்ற நம்பிக்கை.
3. மனம்விட்டு சிரிக்க, உற்சாகமாக இருக்க , பயமில்லாமல் தனது கற்பனையை வெளிப்படுத்த ; முயலுக்கு மூனு கால் போட்டாலும், ஆகாயத்திற்கு பச்சை சாயமடித்தாலும் திட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கை.
4. தன்னுடைய ஈடுபாடு எதில் என்பதை பெற்றோர் அறிதல்; அதில் கவனம் செலுத்த பெற்றோரின் உற்சாகமான ஆதரவு. கணக்கு போட மறுத்தால் கவலைப்படாதீர்கள், அவளாகவே ஒரு நாள் எண்களைப் பற்றி கேட்க ஆரம்பிப்பாள். இப்போது அவள் ராக்கெட் விடட்டும், மணலில் விளையாடட்டும், ஓவியம் போடட்டும், மகிழ்ச்சியாக இருக்கட்டும்!

5. உலகமும் குழந்தைகளும் ஆச்சரியமானவை என்று உணரட்டும். குழந்தைக்குத் தெரியட்டும் தான் மிக அருமையானவன் என்று, களங்கமில்லா அறிவுடையவன் என்று, கற்பனை வளமிக்க படைப்பாளி என்று. பாடம் படிப்பதைப் போல், வெளியில் சென்று விளையாடுவதும் முக்கியமானது தான் என்று பழகட்டும்.
பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
1. ஒவ்வொரு குழந்தையும் அதனதன் வேகத்தில் நடக்க, பேச, படிக்க, கணக்கு போட நன்றாகவே கற்றுக் கொள்ளும். எப்போது ஆரம்பிக்கிறது என்பதற்கும் எவ்வளவு நன்றாக செய்கிறது என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் ஒரு இன்றியமையாத செயல் பெற்றோர் கையில் தான் இருக்கிறது - சின்னஞ் சிறு வயதில் பள்ளியில் கொண்டு தள்ளுவது அல்ல, விலை உயர்ந்த புத்தகமோ, பொம்மையோ அல்ல. ஆனால் அம்மாவோ அப்பாவோ (இருவரும் என்றால் உத்தமம்) குழந்தையோடு தினமும் உட்கார்ந்து ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்பது அந்த குழந்தையை ஒரு நல்ல அறிவாளியாக பண்பாளராக உருவாக்கும்.
3. வகுப்பிலே முதலிடம், எந்தப் போட்டியிலும் வெற்றி, எல்லாத் துறைகளிலும் வெற்றி என்று எல்லா நேரமும் நெருக்கப்படும் குழந்தைகள், தங்கள் இனிமையான, மீண்டும் பெற முடியாத குழந்தைப் பருவத்தையே இழக்கிறார்கள். மகிழ்ச்சிகரமான, கவலையற்ற குழந்தைப் பருவத்தை கெடுக்காதீர்கள்.
4, நல்ல புத்தகங்கள், கலை சாதனங்கள் வாங்கிக் கொடுங்கள். இயற்கையான சூழல் ஏற்படுத்திக் கொடுத்து இவற்றை எந்த தடையுமில்லாமல் பயன்படுத்தும் உரிமையும் கொடுங்கள். வீட்டுக்கு வெளியே விளையாட அனுமதியுங்கள்.
5. நமது குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் வேண்டாம், பள்ளி முடிந்தவுடன் நேராக ட்யூஷன் வேண்டாம், கிரிக்கெட் கோச்சிங் வேண்டாம்; அவர்களுக்கு நாம், பெற்றோர், கூட இருக்க வேண்டும். அருகில் உட்கார்ந்து தோழமை பேசும் தந்தை வேண்டும்; படம் வரையும் போது , கப்பல் செய்யும் போது அம்மா அருகில் இருக்க வேண்டும்; கும்மாளம் போடும் குட்டிகளாய் பெற்றோர் மாற வேண்டும்; மாலைப் பொழுதில் எல்லோரும் அந்தப் பிஞ்சுக் கால்கள் நடக்கும் வேகத்தில் நடக்கலாம்; இரண்டு பங்கு நேரமானாலும், குழந்தையோடு சேர்ந்து சமையல் செய்யலாம்; அவர்கள் தான் நமது வாழ்வின் ஒளி விளக்கு என்பதை வெளிப்படுத்தலாம்.
சமீபத்தில் ஒரு நண்பர் தயங்கித் தயங்கி கேட்டார், " பையனுக்கு நாலு வயசாச்சு, கையெழுத்துப் பயிற்சின்னாலே ஓடுறான். புத்தகம் படிக்க மாட்டேங்கிறான். என்ன செய்யறதுன்னு தெரியல." இன்னொரு நண்பர் சொன்னார், " இடது கையில தான் எழுதுவேன்னு அடம் பிடிக்கிறான். கையிலேயே அடிச்சுப் பாத்துட்டேன், மாற மாட்டேங்கிறான் ". எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நான் அவர்களுக்குச் சொன்னேன், " அந்தப் பிஞ்சு விரல்கள் எழுதுவதற்காக படைக்கப் படவில்லை. மண்ணில் விளையாட, பொருட்களை தொட்டு உணர்ந்து கொள்ள, சித்திரம் வரைய ஏற்றவை. எழுதச் சொல்லி அவற்றை உடைத்து விடாதீர்கள். இடது கைப் பழக்கம் உள்ளவர்க்கு வலது மூளை வலுவாக வேலை செய்கிறது - நல்ல படைப்பாற்றல் பெற்றிருப்பார்கள். கட்டாயப்படுத்தி இந்த அறிய படைப்புத்திறனை அழித்து விடாதீர்கள். குழந்தை படிக்க வேண்டுமென்றால் நீங்களும் கூட உட்கார்ந்து கொண்டு தினமும் படியுங்கள்."
அடுத்த முறை குழந்தையை அடிக்க குச்சியை எடுக்குமுன் இவற்றை எல்லாம் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்."