நிற்க அதற்குத் தக - 04 அறிஞர்களின் பார்வையில் அறிவு

madsa

▪ கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு, கற்பவருக்கும், கற்பிப்பவருக்கும் உதவி புரிபவனாக இரு.
இந்த மூன்று நிலைகளையும் தாண்டி நான்காமவனாக இராதே!
அறிஞர் அலீ (ரளி)
ஃ அறிவு எவ்வளவு பெறுமதி வாய்ந்தது தெரியுமா?
ஒரு முட்டாள் தன்னை அறிவாளி என்றால் பெருமிதம் கொள்வான். அறிவிலி என்றால் கோபிப்பான்! இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
ஃ ஏதேனுமொரு அறிவு பெறாமல் ஒருநாள் கழிந்தது என்றால் அந்த நாளே எனக்கு பரக்கத் அற்ற நாள்.
ஃ செல்வத்தை விட அறிவு சிறந்தது. ஏனெனில், செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், அறிவு நம்மைப் பாதுகாக்கும்.
செலவு செய்யச் செய்ய செல்வம் குறைந்து கொண்டே போகும். ஆனால், அறிவு கூடிக் கொண்டே போகும்.
ஃ அறிவுத் துறையில் நீங்கள் எப்படியாவது வெற்றியடைந்து விடுங்கள். ஏனெனில், நீங்கள் அதைக் கொண்டே உலகில் இருக்கும் வரை வாழலாம்.
இதைத்தான் ஒரு புதுக் கவிஞன்
இப்படிப் பாடினான் :
வானில் பறந்திட ஆசை,
நீரில் நீந்திட ஆசை,
நெடுந்தூரம் பயணித்திட ஆசை,
கண்டதையும் கணக்கிட ஆசை,
அறிவியல் உணர்ந்திட ஆசை,
புவியியல் தெளிந்திட ஆசை,
உலகை ஆண்டிட ஆசை,
நோயின்றி வாழ்ந்திட ஆசை.
இவையனைத்தும் எனக்கு
தனித்தனியே வேண்டாம்;
கல்வி என்ற ஒன்றைக் கொடுங்கள்.
கடந்துவிடுவேன் காலங்கள் பல.
வென்றுவிடுவேன் தேவைகள் பல.
அடைந்திடுவேன் ஆசைகள் பல
என்பதாக.
இதை இன்னொரு அறிஞன்
இப்படிக் கூறினான் :
ஒருவனுக்கு அறிவு கிடைத்து விட்டால் வேறெதுவுமே கிடைக்க வேண்டியதில்லை. ஒருவனுக்கு அது கிடைக்கவில்லை என்றால், வேறு எது கிடைத்தாலும் பயனில்லை என்பதாக.
▪ இப்னு அப்பாஸ் (ரளி) கூறினார்கள் : அறிவு, பணம், ஆட்சி இந்த மூன்றில் உமக்கு எது வேண்டும் என்று இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களிடம் இறைவன் புறத்திலிருந்து வினவப்பட்டது.
அவர்கள் அறிவையே தேர்வு செய்தார்கள்.
எனவே, அவர்களுக்கு அறிவுடன் பணமும் ஆட்சியும் வழங்கப்பட்டன.
▪ முஆத் பின் ஜபல் (ரளி) கூறினார்கள் : அறிவை நீங்கள் அவசியம் தேடிக் கொள்ளுங்கள்!
ஏனெனில், கற்றல், (தக்வா) இறையச்சம், அறிவுத் தேடல் (இபாதத்) வழிபாடு; அதை மீளாய்வு செய்வது (தஸ்பீஹ்) இறைத்துதி, அது பற்றிய விவாதம் (ஜிஹாத்) போராட்டம். கல்லாதவருக்கு கற்பித்தல் (ஸதகா) தர்மம்; உரியவருக்கு அதை வழங்கல் (குர்பத்) நெருக்கம் பெற்றுத் தரும் செயல்.
▪ அறிஞர் ஷாஃபிஈ (ரஹ்) கூறினார்கள் : அகிலத்தை நீ விரும்பினாலும் அறிவைத் தேடிக்கொள்; ஆகிரத்தை நீ விரும்பினாலும் அறிவைத் தேடிக்கொள். ஏனெனில், இரண்டுக்குமே அறிவு இன்றியமையாதது.
▪ அறிஞர் ஹஸன் (ரஹ்) கூறினார்கள் : அறிஞர்கள் இல்லையென்றால், மனிதர்கள் இன்று கால்நடைகளாகவே இருப்பர். ஆக, கால்நடைப் பண்பிலிருந்து மானுடப் பண்புக்கு மனிதர்களை கைப்பிடித்துச் செல்பவர்கள் அறிஞர்களே.
▪ அறிஞர் யஹ்யா பின் முஆத் (ரஹ்) : பெற்றோரை விட, அறிஞர்கள் சமூகத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர்கள். எப்படி என்கிறீர்களா? பெற்றோர், பிள்ளைகளை உலக நெருப்பிலிருந்தே பாதுகாப்பார்கள். ஆனால், அறிஞர்களான ஆசிரியர்களோ, அவர்களை நாளை மறுமையில் நரக நெருப்பிலிருந்தும் பாதுகாப்பவர்கள்.
▪ அறிஞர் கஸ்ஸாலி (ரஹ்) கூறினார்கள் : மனிதனுக்கான மரியாதையும் கண்ணியமும், அவனது உடல் பலத்தால் கிடைப்பதல்ல. காரணம், ஒட்டகம் அவனை விடப் பல மடங்கு பலம் பெற்றது. அவனது மாண்பு உடல் பருமனாலும் கிடைப்பதல்ல. காரணம், யானை அவனை விட பருமனானது. அவனது வீரத்தால் கிடைத்ததுமல்ல. காரணம், காட்டு விலங்குகள் அவனை விட வீரியமிக்கவை. அவன் அதிகம் உண்பதாலுமல்ல. காரணம், எருமை அவனை விட அதிகம் உண்ணக்கூடியது. அவனது சந்ததிப் பெருக்கத்தாலும் அல்ல. காரணம், சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் ஒரே நேரத்தில் பல குஞ்சுகள் ஈனக்கூடியவை.

madrasa-007

வேறு எதனால் மனிதன் கண்ணியம் பெறுகிறான்? மரியாதை அடைகிறான்? அறிவே அதை அவனுக்குப் பெற்றுத் தருகிறது. ஆடு மாடுகளும் கால்களால்தான் நடக்கின்றன. மனிதனும் கால்களால்தான் நடக்கிறான். பிறகு ஏன், ஆடுமாடுகளை மட்டும் கால்நடைகள் என்கிறோம்? மனிதனை அவ்வாறு அழைப்பதில்லை?
ஏனெனில், அவை காலால் மட்டுமே நடக்கின்றன, நடக்கும். ஆனால், மனிதன் காலால் மட்டுமே நடப்பவன் அல்லன். அறிவால் நடப்பவன், அதன் வழி கிடைக்கிற சிந்தனையால் நடப்பவன். எனவேதான் இந்த வேறுபாடு.
▪ அறிஞர் முஸிலி (ரஹ்) கூறினார்கள் : ஒரு நோயாளி உணவோ, தண்ணீரோ, மருந்தோ தரப்படா விட்டால், இறந்து விடுவான். மனித உடல்நிலை போன்றதுதான் அவனது உள்ளமும். அதற்குத் தொடர்ந்து அறிவு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால், விரைவில் அது தனது ஆற்றல்களை இழந்து விடும்.
▪ அறிஞர் அபுல் அஸ்வத் ( ரஹ்) கூறினார்கள் : அறிவை விடச் சிறந்தது எதுவுமில்லை. ஏனெனில், அரசர்கள் மக்களை ஆள்கிறார்கள். அறிஞர்களோ அந்த அரசர்களையே ஆள்கிறார்கள்.
படிக்காத பெரிய கோடீஸ்வரனுக்கும் ஒரு படித்தவன்தான் நடைமுறையில் ஆலோசனை சொல்லும் பி. ஏ. வாக இருக்கிறான்.
அறிவு இன்னும் விரியும்...