யார் அழகானவர்? அழகுக் குறிப்புகள்

உண்மையான அழகு மன அமைதியினதும் மனமகிழ்ச்சியினதும் பிரகாசமாக வெளிவரும்.
அழகான மனிதர்கள்
• எப்பவும் சந்தோசமாகவே இருக்க ஆசைப்படுவார்கள்.
• அவர்கள் அதிகம் புண்ணகைப்பார்கள்.
• அமைதியாகவும் அழகாகவும் சிரிப்பார்கள்.
• அவர்களில் இருந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் வெளிவரும்.
• அவர்களின் புன்னகையில் அணைப்பு இருக்கும் அழைப்பும் இருக்கும்.
• அவர்களைப்பார்க்கும் போது நாம் அவர்கள் மீது இலகுவாகவே ஈர்க்கப்பட்டு விடுவோம்.
• அவர்களின் தோற்றம் மற்றவர்களை வரவேற்பது போல் இருக்கும்.
• அழகானவர்கள் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் எதுவாக இருப்பினும் அதை சளிக்கமாலும் முகம் சுலிக்காமலும் எதிர் கொள்வார்கள். அவர்களில் இருந்து எட்டிப்பாயும் உள்ளார்ந்த அமைதி அவர்களது மனநிலையை மட்டுமல்ல மற்றவர்களின் மனநிலையையும் சாந்தப்படுத்திவிடும்.
• உண்மையான அழகுடையவர்கள் நாம் யார் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். அதாவது அவர்களுக்கு அவர்களைத் தெரியும். அவர்கள் வேறு ஒருவராக வாழவே மாட்டார்கள். எதிர்பார்ப்புள்ளவர்களாகவும் இலட்சியம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது தகுதிகள், திறமைகள், பலம், பலவீனம் என்பன தெரியும்.
• உண்மையான அழகுடையவர்கள் அவர்களை நன்றாகத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருப்பார்கள். மற்றவர்களை தெரிந்தும் புரிந்தம் கொள்வதை விட தன்னைத் தெளிவாகத் தெரிந்து வைப்பதும் புரிந்துகொள்வதுமே ஒரு தரமான மனிதனின் மிகச்சிறந்த அடையாளமாக இருக்கும். நமக்கு நம்மைத் தெரியாவிட்டால் நாம் மற்றவர்களுக்கு பல வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஆகலாம். அழகானவர்கள். எப்பொழுதும் அவர்ளை தெரிந்து கொண்டவர்களாகவும் புரிந்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
• நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக பாடுபடுவது அழகான மனிதர்களின் பன்பாக இருக்கும். அவர்கள் ஒரு போதும் பிழையான தேர்வுகளை தேர்வு செய்ய மாட்டார்கள். மிகவும் உறுதியான உள்ளுணர்வுகளுடன்; தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள். எது சரி, எது பிழை என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் முட்டி மோதிக் கொண்டு, குற்ற உணர்வால் அவதிப்படாமல் வாழ இவை பலமான ஊன்றுகோள்களாக இருக்கும்.
• சரியை சரியாகப் புரிவது போன்று, பிழையையும் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டும் தான் சரியான தீர்மானம் எடுக்கவும், முன்னேறிச் செல்லவும், சவால்களை சந்தித்து சாதிக்கவும் முடியும். அழகானவர்களிடம் இந்தப்பண்பு நிறப்பமாகவே இருக்கும்.
'அழகான மனிதர்கள் வாழ்கையில் ஏற்படும் சவால்களை, சிரமங்களை எதிர் கொள்வர்கள். நோவுகளையும் தடைகளின் தன்மைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
இழப்புகளின் இயல்புகளை அறிந்து வைத்திருப்பார்கள்.
கடன்பட்டு கஷ்டப்படாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் அறிந்து வைத்திருப்பார்கள்.
அவர்களுக்கு பாராட்டுதல், அங்கீகாரம், கௌரவம் என்பன கிடைப்பதால் கருணையாளும் அமைதியாலும் ஆழமான அன்பாலும் அவர்களின் வாழ்வு அலங்காரமாகி இருக்கும்.
அழகானவர்கள் திடீரென தோன்றக்கூடியவர்கள் அல்ல'
என பிரபல மனோதத்துவ நிபுணர் எலிசபத் ரொபர் குறிப்பிடுவதிலிருந்து இதன் உண்மையை புரிந்துகொள்ளலாம்.
அழகான மனிதர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது கணிவும் கரிசனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதிலும் வாழவும் வளரவும் உதவி ஒத்துழைப்பதிலும் ஆர்வமாய் இருப்பார்கள். அவர்களது வார்த்தைகள் வளமானதாகவும், அவர்களது செயல்பாடுகள் தன்னலமற்றதாகவும் இருக்கும். அவர்களது ஒவ்வொரு வார்த்தையின் வெளிப்பாட்டிலும் அவர்களது குணத்தின் அழகைக் காணலாம்.
அழகான மனிதர்கள் ஒருபோதும் அவசரப்படமாட்டார்கள். ஆவேசப்படவும் மாட்டார்கள். அமைதியும் நிதானமும் அவர்களில் நிறம்பியிருக்கும். அழகான மனிதர்கள் எப்பொழுதும் அழகானவர்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். அழகாகவும் அளவாகவும் உண்பார்கள். உடற்பயிற்சசிகளில் ஈடுபடுவார்கள். போதுமான அளவு உறங்குவார்கள். அவர்களது உடலுக்குப் பொருத்தமான ஆடைகளையே அணிவார்கள்.
அழகான மனிதர்கள் எப்பொழுதும் இறைவனின் உறவில் நாட்டம் கொண்டவர்களாகவும் நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள் பிழைத்துப்போக மாட்டார்கள்.
உண்மையான அழகு உறுதியானது. அது ஆண்மாவின் அடித்தளத்தில் இருந்தும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்பப்பட்டதாக இருக்கும். உண்மையான அழகுக்குப் பின்னால் அறிவும் இருக்கும். ஆற்றலும் இருக்கும். அனுபவமும் இருக்கும். அர்ப்பனமும் இருக்கும்.
அழகானவர்கள் எப்பொழுதும் சங்கடங்களை சந்தித்து அவற்றை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்வார்கள். அவர்கள் தான் அழகானவர்கள். அவர்கள் தான் வாழ்வின் பொருளை உணர்ந்துகொண்டவர்கள்.
நாமும் இப்படியான அழகின் மூலம் மனநிறைவு பெற்றவர்களாக, உண்மையான அழகிற்கு சொந்தக்காரர்களாக நம்மை ஆக்கிக்கொள்ளவே ஆசைப்படுவோம். இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற குணங்கள் நம்மை நாம் உண்மையான அழகானவர்களாக மாற்றியமைத்துக்கொள்ள துணைபுரியும் அழகான குணங்களாக அமையலாம்.
அஸ்ஹர் அன்ஸார், மனநல ஆலோசகர், இலங்கை