அன்பளிப்பு வழங்கு!

மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு சிறந்த சாதனம் என்பதை முன்பு பார்த்தோம்.
அன்பளிப்பு வழங்குவதும் பிறர் உள்ளத்தை கவர்வதற்கு ஒரு முக்கிய வழியாகும்.
அன்பளிப்பு என்ற வார்த்தைக்கு அன்பை வழங்குவதாக பொருள் வருகிறது, அல்லது அன்பினால் வழங்குவதாகவும் பொருள் கொள்ளலாம்.
அப்படியானால் நாம் ஒருவருக்கு அன்பளிப்பு கொடுக்கிறோம் என்றால் அதற்கான அடிப்படை காரணம். நாம் அவர் மீது வைத்துள்ள அன்புதான்! அதற்கு பிரதிபலனாக அவருடைய அன்பு கிடைப்பது நிச்சயம்.
“அன்பளிப்பு வழங்கிக் கொள்ளுங்கள்! நேசித்துக் கொள்வீர்கள்” என்பது நபிமொழி.
(அல் அதபுல் முஃப்ரத், முஅத்தா)
அன்பளிப்பை பெற்றவர் அன்பளிப்பு கொடுத்தவர் மீது பாசம் கொள்வது இயல்பு. அதன் காரணமாக அவருக்காக சில விசயங்களை விட்டுக் கொடுக்கவும் அவரிடம் அனுசரித்து போகவும் முன்வருவார்.
இத்தகைய பின் விளைவு இருப்பதனால்தான் சுலைமான் நபி அவர்கள் தமக்கு கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த அன்பளிப்புகளை ஏற்க மறுத்தார்கள்.
வலிமை மிக்க அரசராக இருந்த சுலைமான் நபியவர்கள் சபஉ நாட்டு அரசிக்கு நீங்கள் ஓரிறைவனை மட்டும் வணங்கி வழிபடும் முஸ்லிம்களாக ஆகுங்கள் என்று கடிதம் எழுதி சத்திய மார்க்கத்திற்கு அழைத்தார்கள்.
அந்த அழைப்புக்கு நேரடியாக பதிலளிக்காத சபஉ நாட்டு அரசி, சுலைமான் நபி அவர்களுக்கு மதிப்புமிக்க அன்பளிப்புக்களை அனுப்பி வைத்தார்.
அதைக் கண்ட சுலைமான் (அலை) உங்களின் அன்பளிப்புக்களை வைத்துக் கொண்டு நீங்களே சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.
(இந்த வரலாற்று நிகழ்வு திருக்குர்ஆன் 27வது அத்தியாயத்தில் 20-44 வசனங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிப்பதற்காக இப்னுல் உத்பிய்யா என்பவரை அனுப்பி வைத்தார்கள். ஜகாத் வசூலித்து வந்த அவர் ஜகாத் பொருட்களை நபியிடம் ஒப்படைத்து விட்டு தனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பொருளைக் காட்டி அதனை தான் எடுத்துக் கொள்வதாக கூறினார்.
அப்போது நபியவர்கள், இவர் தன் தகப்பன் வீட்டிலோ அல்லது தன் தாய் வீட்டிலோ இருந்து கொண்டு தனக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்க்கட்டுமே! என்று கண்டித்துப் பேசினார்கள்.
(நபிமொழிச் சுருக்கம் பார்க்க புகாரி 2597)
மேற்கண்ட இரண்டு சம்பவங்களில் முதலாவதில் தமது வழிகேட்டை அங்கீகரிப்பதற்காக அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது சுலைமான் நபியால் நிராகரிப்பட்முள்ளது.
இரண்டாவது சம்பவத்தில் சட்டத்தில் சலுகை காட்ட வேண்டும் என்பதற்காக அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது நபிகள் நாயகத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது.
இரு சம்பவங்கள் மூலமும் அன்பளிப்பை பெற்றவர், அதைக் கொடுத்தவர் மீது நேசம் கொண்டு அவர் செய்யும் தவறுக்கும் இணங்கிப் போகவேண்டிய நிலை ஏற்படும் என்பதை புரியமுடிகிறது.
அப்படியானால் தவறான நோக்கங்களை தவிர்த்துவிட்டு நேசத்தைப் பெறுதல் என்ற நன்னோக்கத்தில் அன்பளிப்பு வழங்கலாம் தானே!
அனுமதிக்கப்பட்ட சூனியம்!
அப்துல் மலிக் பின் ரிஃபாஆ கூறினார் அன்பளிப்பு அது வெளிப்படையாக நடைபெறும் சூனியம்.
(நூல் : ரவ்ளத்துல் உகலா) மறைமுகமாகச் செய்யப்படும் சூனியம் மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது ஆனால் அது அறவே கூடாது.
அன்பளிப்பும் மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வெளிப்படையானது. இது அங்கீகரிக்கப்பட்ட, ஆர்வமூட்டப்பட்ட சூனியம்!
எதைக் கொடுப்பது
அன்பளிப்பாக கொடுக்கப்படுவது மிக மதிப்புக்குரியதாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. மதிப்பில் சிறியது என்றாலும் நாம், அன்பினால் அதை கொடுக்க வேண்டும். அன்புடன் கொடுக்கும் போது சிறியது என்றாலும் அது மதிப்புக்குரியதுதான்!.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை (கொடுப்பதையும் பெறுவதையும்) இழிவாகக் கருத வேண்டாம்!
நூல் : புகாரி
ஆட்டின் பாதமாகிய குளம்புடன் அதன் காலின் சிறு பகுதியும் சேர்ந்தவாறு கொடுப்பதற்கு இருக்கிறதென்றால் அதையும் கொடுக்கலாம்.
பலன் மிகக் குறைந்ததாக உள்ளதே என்று பார்க்க வேண்டியதில்லை, குறைவாக இருந்தாலும் பலன் இருக்குமென்றால் தாராளமாக அதனை அன்பளிப்பாக கொடுக்கலாம், வாங்கலாம்! சாதாரண உணவை விருந்துண்ண அழைக்கப்பட்டாலும் அல்லது சாதாரண உணவு அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நடைமுறை கொண்டவராகவே நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார்கள்.
ஒருமுறை இவ்வாறு கூறினார்கள் : ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை (விருந்துணவாக ஆக்கி அதனை) உண்பதற்கு நான் அழைக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்! (நூல் : புகாரி 2568)
உண்மையான நேசமும் பாசமும் இருக்குமென்றால் கொடுக்கும் பொருள் எத்தனை சிறிதானாலும் குறையில்லை என்பதை இந்த நபிமொழி நமக்கு விளக்குகிறது.
நாம் சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டு ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அவருக்கு முக்கியமனாதாக இருந்து விடலாம்.
புதிதாக பேனா பிடித்து எழுத ஆரம்பித்திருக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு நாம் வாங்கிக் கொடுக்கும் ஒரு சாதாரண பேனா அவனைப் பொறுத்த வரை மிக மதிப்பிற்குரியதாக இருக்கும். பிறரிடம் அதனைக் காட்டி மகிழ்ச்சியடைவான்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டும் பையனுக்கு நாம் ஒரு மட்டையை (பேட்டை) வாங்கிக் கொடுத்தால் குதூகலிப்பான். அதனை ஒரு பெரிய அன்பளிப்பாக அவன் கருதுவான்.
நம்மைப் பொறுத்த வரை இந்தப் பொருட்களை வாங்குவதற்கு நாம் செலவழித்த காசு மிகச் சாதாரணமானதாயிருக்கும்.
பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதும் அவர்களின் மனதில் இடம் பிடிப்பதும் நமக்கு முக்கியமல்லவா? அன்பளிப்புகள் நம்மை வெறுப்போரையும் நம்மை நேசிப்போராக மாற்றும் வல்லமை பெற்றவையாகும்.
இது தொடர்பாக அபூ ஹாதிம் அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு சம்பவம் : ஹசன் பின் உமாரா அவர்கள், தம்மைப் பற்றி அஃமஷ் குறை பேசுகிறார் என்ற செய்தியை செவியுற்றதும் அஃமஷ§க்கு ஒரு புத்தாடையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.
இதன் பின் அஃமஷ் ஹசன் பின் உமாராவை பாராட்டிப் பேச ஆரம்பித்தார். அப்போது அவரிடம் முன்பு அவரை பழித்துப் பேசிக் கொண்டிருந்தீர்கள். இப்போது பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே இது எப்படி? என்று வினவப்பட்டது. அதற்கு அஃமஷ், அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் கீழ்வரும் கூற்றை எடுத்துக் கூறினார் : “தமக்கு நன்மை செய்தவரை நேசிப்பதும் தமக்கு தீங்கிழைத்தவரை வெறுப்பதும் இதயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இயற்கைத் தன்மையாகும்!”
(நூல் : ரவ்ளத்துல் உகலா)
“அப்ரஷ்’ என்பவரின் அரபுப்பாடலின் சில வரிகள் :
மக்கள் தங்களுக்குள் பரிமாறும் அன்பளிப்புக்கள் அவர்களின் இதயங்களில் இணைப்பை உருவாக்குகின்றன.
மனதில் அன்பையும் ஆசையையும் விளைவிக்கின்றன. கம்பீரத்தையும் மதிப்பையும் உனக்கு அணிவிக்கின்றன.
அவை எளிதாக இதயங்களை வேட்டையாடும் கருவிகள், பிரியத்தையும் எழிலையும் உனக்கு வழங்குகின்றன.
(நூல்: ரவ்ளத்துல் உகலா)
இந்த அரபுப் பாடல் வரிகள் சொல்வது நடைமுறை உண்மையாகும். ஈருலக நன்மைக்காக மக்களின் நேசத்தைப் பெற விரும்பும் நாம் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமல்லவா?
(தொடர்வோம் இன்ஷாஅல்லாஹ்)