மாண்புமிகு மாணவர்கள்...

நவம்பர்-17 என்றதும்நமதுநினைவுகளில் தவழ வேண்டியது அன்று தான் “சர்வதேச மாணவர் எழுச்சி நாள்”. 1939ம் ஆண்டு இதே தினத்தில் தான் செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகரிலுள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் ஒன்று ஏற்பட்டபோது அம்மாணவர்கள் நாஜிப்படையினரால் நசுக்கப்பட்டு இறுதியாக அதில் 10 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். இதை நினைவில் கொண்டே உலகமெங்கும் இந்நாள் மாணவர் எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாமும் ஒருசில செய்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நமக்கு நல்லது.
மாணவப் பருவம் என்பது உண்மையிலேயே ஒரு எழுச்சிமிக்க பருவம்தான். உண்மைக்காக போராடும் ஒருபருவம் தான். அதை தடுத்து நிறுத்துவது என்பது ஆரோக்கியமானதுதானா என்று யோசிக்க வேண்டிய நேரமிது. அவர்களது குரல்வளைகள் நசுக்கப்படுகிற போது தம் நாட்டுக்கு உழைக்கும் நல்லதலைவர்கள் எப்படி உருவாகுவார்கள் என்றும் யோசிக்க வேண்டிய காலமிது.
மெரினா எழுச்சி இதற்கு நல்லதொரு உதாரணம். அது காலவௌ்ளத்தால் மறக்க முடியாத ஒன்று. மாணவர்களின் போராட்டம் என்பது வேறு, அரசியல் போராட்டம் என்பது வேறு. இன்றைக்கு இரண்டுமே ஒரே புள்ளியில் நிறுத்தப்பட்டு “மாணவர்அரசியல்” என்ற பெயரில் கல்லூரி மாணவ, மாணவிகள் கைது செய்யப்படுவதும்,அவர்கள் மீதுகடும் குண்டர் சட்டம் பாய்வதும் கவலையளிக்கிறது.
மாணவர்களின் தன் எழுச்சி என்பது எவராலும் அதை அவ்வளவு சீக்கிரம் தடுத்து நிறுத்திவிட முடியாது. எனினும் அந்தஎழுச்சியை நாம் நமது நற்பணிகளுக்காக திசை திருப்பிக் கொள்ள வேண்டும். இல்லையேல், சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் பாதை மாறிச் செல்லக்கூடும். பிறகு அவர்களை நாம் நேர்வழிக்கு கொண்டு வருவதென்பது குதிரைக்கொம்பு தான்.
மாணவப்பருவம் மகத்தான பருவம், அதை பக்குவமாகத்தான் கையாள வேண்டும். எதிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற எழுச்சிதீபம் நன்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கிற பருவமது.
அதில் தான் பெற்றோர்களும், பேராசிரியர்களும் பெருங்கவனத்தோடு இருக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்கிற வயதில் இதையும் செய்ய முடியும் என்று சொல்லி நல்ல பல சேவைப்பணிகளை அவர்களிடம் அன்போடு ஒப்படைக்க வேண்டும். பிறகு பாருங்கள் அவர்களது பணிகள் எப்படி ஏற்றமும் நல்ல மாற்றமும் பெறுகின்றன என்று...!
மாணவர் உலகம் உண்மையிலேயே மதிக்கத்தக்க ஓருலகம். மாபெரும் புரட்சிகள் பல இம்மாணவப் பருவத்தில் தான் மனதில் குடிகொள்ளத் தொடங்குகின்றன. அதைஇலட்சமாகவும், இலட்சியமாகவும் ஆக்குவது இப்பருவத்தில் தான் சாத்திமான ஒன்று. எப்படியும் வாழலாம் என்பதும், நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்படுகிற பருவமும் இந்த மாணவப்பருவம் தான். எனவே இப்பருவம் மிகவும் கவனத்திற்குரிய ஒரு பருவம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக கல்வியும், ஒழுக்கமும் சீர் செய்யப்பட வேண்டிய காலகட்டமும் இதுதான். இளமையில் கல் என்று சும்மாவா சொன்னார்கள்...?
ஆனால் இன்றைக்கு அந்தக்கல் “கள்” என்று மிகத்தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இளம்மாணவர்களிடையே குடிப்பழக்கம் சர்வசாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது. அதுவும்கல்லூரி மாணவர்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. சொல்லப் போனால் குடிப்பழக்கம் இல்லையெனில் அவன் கல்லூரி மாணவனே அல்ல என்று கூறும் அளவுக்கு தமிழக நிலை தரம் தாழ்ந்து வருவது அதிர்ச்சிக்குரியது.
சேவை மனப்பான்மையில் சிறந்து விளங்குவதும் இம்மாணவப் பருவத்தில் தான் என்பதையும் நாம் மறுப்ப தற்கில்லை. இளைஞர்களின் சேவை இணையற்ற சேவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல..!
திசை எட்டும் நம் கண்களுக்கு எட்டிய தூரமெல்லாம் தென்படுபவர்கள் நம் மாணவக்கண்மணிகள் தான் என்றால் அது மிகையும் அல்ல. நம் நகரத்தின் தூய்மையை பேணுதல், மரம் நட்டு வைத்தல், விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல், குளம் தூர் வாருதல், இரத்த தானம் செய்தல், சாலைகளை பராமரித்தல் என்று என்னென்ன சேவைப்பணிகள் இருக்கிறதோ அவற்றிலெல்லாம் முதன்மையாக கால் பதிப்பவர்கள் இந்த மாணவக் கண்மணிகள் தான். உண்மையில் இந்தக் கூட்டுறவுதான் நமது நாட்டின் உயர்வுஎன்பதை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர்கள் இம்மாணவர்கள் தான் என்றால் அது மிகையல்ல..! நட்பு வட்டத்தை பலப்படுத்திக் கொண்ட அளவுக்கு அவர்கள் தமது பெற்றோர், உற்றார், உறவினர்களை ஆதரிக்கிறார்களா என்றால் அதில் என்னவோ நமக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
நாளுக்கு நாள் அவரவரது குடும்பங்களுக்குள் விரிசல் விடுவது விரிந்து கொண்டே செல்வது நல்லது தானா..? தனிக்குடித்தனங்கள் பல்கிப் பெருகி விட்டதின் மறுக்க முடியாத மறுசாட்சி யாய் இன்றைக்கு இவர்களும் மறு மாற்றம் பெறுவது ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகல்ல...!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். அது இம்மாணவக் கண்மணிகளுக்கும் பொருந்தும் என்பதையும் அவர்கள் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். யாரையும் சட்டென தூக்கியெறிந்து விடுவது என்பது பின்னொரு கால கட்டத்தில் அவர்களையே அது தூக்கி எறிந்துவிடச் செய்து விடக்கூடும். எனவேநாம் நமது மாணவப்பருவத்தில் கூடுதல் கவனமுடன் கட்டாயம் செயல்பட வேண்டும். இல்லையேல், தனித்த நிலையில் ஒரு ஓரமாய், ஒண்டியாய் நிற்கப்போவது நாம் தான் என்பதையும் மறந்து விடக்கூடாது.
அரும்புமீசை முளைக்கும் போது கூடவே ஆசைக்குறும்பும் முளைக்கத் தொடங்கும். அவ்வேளைகளில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதையே “டீன் ஏஜ்”என்கிறார்கள். இதையே நாம் “ஸ்டூடண்ட் ஏஜ்”என்றும் கூறலாம். இவ்வளரிளம் வயதில் உடல், பொருள், ஆவி என யாவற்றிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தவறினால்,
நமது பொன்னான எதிர்காலம் மண் ணாகப் போய்விடக்கூடும். எனவே முதலில் மாணவப் பருவத்தில் நமது மனதை நல்லதொரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
இந்த நேரத்தில் கொண்டு வராவிட்டால், பிறகு எந்த நேரத்திலும் நம் மனதை நாம் நமது நற்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவே முடியாது போய் விடும் வாய்ப்புள்ளது.
இன்னொருபுறம் மாணவர்கள் என்ற அர்த்தத்தைக் கொண்டது தான் “தாலிபான்கள்”என்ற அரபுச் சொல். அது இன்றைக்கு தீவிரவாதங்களைத் தூண்டும் அல்லது பயங்கரவாதச் செயல்களை செய்யும் இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படுவது தான் நம்முன்னுள்ள மிகப்பெரிய சோகம். மீடியாக்களின் திட்டமிடப்பட்ட உண்மைத்தனமான தீவிரவாதம் இதுதான் என்றால் அது மிகையல்ல..! இச்சொல் “தலப”என்ற மூலச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்கு “தேடினான்” என்று பொருள்.
அதாவது மாணவர்கள் என்றைக்கும் தங்களுக்கான கல்வியை தேடிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் அவர் சும்மா சோம்பேறி களாக இருந்து விடக்கூடாது என்ற ஆழிய அர்த்தத்தை தன்னுள் அடக்கி வைத்துத் தான் கல்வியைத் தேடும் மாணவர்களுக்கு “தாலிபான்”என்று அரபுமொழி வெகுஅழகாக பெயர் வைத்து விட்டுச் சென்றிருக்கிறது.
அச்சொல் ஆப்கானிஸ்தானுக்கு மட்டும் சொந்தமானதல்ல... அது அனைவருக்கும் சொந்தமான ஒரு சொல்தான், ஆனால் அது இன்றைக்கு தீவிவாதத்தின் குறியீடாகவே மாறிப் பிரதிபலிப்பது மாபெரும் துரதிஷ்ட மான ஒன்று.
வாருங்கள்...!
தூய மாணவர்களைப்போற்றுவோம்
தீய மாணவர்களை மாற்றுவோம்...!