"முதியோரின் கடமைகளும்..! அவர்களின் உரிமைகளும்..!

பேரா, SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, DUIHA கல்லூரி, தாராபுரம். 98658 04000.
முப்பருவங்களில் மூன்றாம் பருவமான முதுமைப்பருவத்திற்கு அதிக முக்கியத்துவமும், மிகுந்த பொறுப்புகளும் உண்டு. வயதாகிவிட்டது இனி நமக்கென்ன வேலை, அல்லது இனி நமக்கென்ன கவலை என்று ஒதுங்கிக் கொள்ளும் பருவமல்ல அது. இப்பருவத்தில் தான் நாம் பெறவேண்டிய நிறைய உரிமைகளும், நாம் செய்ய வேண்டிய நிறைய கடமைகளும் நம் முன் வரிசைவரிசையாய் கைகட்டி நிற்கின்றன.
நாம் தான் அவற்றை கண்டும் காணாமல் சென்று விடுகிறோம். முதுமைப் பருவம் என்பது நாற்பது வயதை நாம் தொடும் போதே அது நம்மைத்தொட்டுச்சென்றுவிடுகிறது. நமது முப்பத்து மூன்று வயதை (33) அது வாலிபத்தின் உச்சம் என்கிறது இஸ்லாம். அப்படியானால், 33 ஐ நாம் தாண்டுகிறபோதே நாம்முதுமையை நோக்கித் தான் பயணிக்கிறோம் என்று பொருள். எனவே நாம் நமது முதுமைப்பருவத்தை மிக இனிமையானதாக நாமாகத்தான் மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் பிறருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மிகச் சரியாகச் செய்தாலே போதும், நாம் பெற வேண்டிய சகல உரிமைகளையும் மிகச்சரியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
குடும்பக் கடமை : கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் திருமணம் தொடங்கி பேறுகாலம் வரை ஏன் அதையும் தாண்டி சிறியதும் பெரியதுமாய் நிறையக் கடமைகள் இருக்கின்றன.
பிள்ளைகள் பருவவயதை அடைந்து விட்டால் அவர்களுக்குமிகச்சரியான ஜோடிப் பொருத்தத்தை சீக்கிரமாக நாம் தான் ஏற்படுத்தித்தர வேண்டும். இது தவறுகிறபோது தான் தவறுகள் பல தலைதூக்க ஆரம்பிக்கின்றன. பிறகு என்ன... நமது மஹல்லாவிலேயே நாம் அசிங்கப்பட்டு நிற்க வேண்டிய திருக்கிறது அல்லது ஊரை விட்டு ஓட வேண்டியதிருக்கிறது. நாம் நமது கடமைகளில் சற்று கவனமற்றிருக்கிறபோது இதுமாதிரியான சமூகத் தீமைகள் தீப்பற்றியெரிய ஆரம்பித்து விடுகின்றன. பிறகு அதை அணைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றா என்ன....!?
அதற்காக அதிக அவசரமும் கூடாது. நீண்டதாமதத்தைப் போலவே அதிக வேகத்தனமும் மிகத் தவறான ஜோடிகளை ஒன்றிணைத்து, பின் ஓரிரு மாதங்களில் விவாகரத்திற்கு வந்து நடு வீதியில் நம்மை நிற்கவைத்து விடுகிறது.கூடவே முதுமையடைந்த பெற்றோர்களும் இனி நாம் என்ன செய்வதென்று ஏதும்அறியாது ஏங்கி நிற்கின்றனர் பேந்தப் பேந்த விழித்த படியே...!
வீட்டில் ஒழுக்கம் தவறுகிறபோது, அல்லது கண்டிக்கப்படாமல் விட்டு விடப்படுகிறபோது, அல்லது கண்டும் காணாமல் இருக்கிறபோது, இது போன்ற காதல் மற்றும் மோதல் விவகாரங்கள் மெல்ல வேர்விட ஆரம்பிக்கின்றன. எனவே, வீட்டுப் பெரியவர்கள் என்றும் மிகக் கவனமாகவே இருக்க வேண்டியவர்கள். அந்த வீணாண அற்பக் காதல் தீப்பொறிதானே மாபெரும் சொகுசு பங்களாக்களை கூட சொற்ப நேரத்தில் சாம்பலாக்கி விட்டுச் சென்றுவிடுகிறது...? எனவே, எப்போதும் நாம் கழுகுப் பார்வையுடனும், கூர்கவனத்துடனும் இருக்க வேண்டிய நேரமிது.
*நபி ஜகரிய்யா(அலை) அவர்கள் தமது முதுமைப் பருவத்திலும் தமது சகோதரரின் மகளான மரியமை எவ்வளவு முழுப்பொறுப்புடனும், பாதுகாப்புடனும் கண்ணும் கருத்து மாக கவனித்துக் கொண்டார்கள்...? அத்தகையதொரு பொறுப்புணர்வு நம்மிடம் வரவேண்டும்.
*நபி சுஅய்ப்(அலை) தமது இருபெண் பிள்ளைகளையும் எவ்வளவு தூரம் பேணிப் பாதுகாத்து, இருவரில் ஒருவரை பின்னாளில் தமது ஊருக்கு அகதியாக வந்த நல்லதொரு நம்பிக்கையும் நல்ல பலசாலியுமான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மணம் புரிந்து கொண்டவர் வேறு யாருமல்ல... அவர் தான் நபி மூசா (அலை) அவர்கள் ஆவார்கள்.
*நபி இப்றாகீம் (அலை), நபி யஅகூப் (அலை) போன்றோர் தமது தள்ளாத வயதிலும் தம் பிள்ளைகளை எப்படி போற்றி வளர்த்தார்கள் என்பதையும், நபி நூஹ் (அலை) தமது பிள்ளையை இறுதி வரை காப்பாற்றுவதற்காகப் போராடினார்கள். ஆனால் மகனோ தமது தந்தைக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து முரண்டு பிடித்த போது தூஃபான் சுனாமி சுருக்குப் பிடியில் அழிந்து போனதையும் குர்ஆன் நமக்கு கூறி நற்படிப்பினையூட்டுகிறது.
சமூகக் கடமை : முதியவர்கள் இச் சமூகத்திற்கு என்று செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே உண்டு. குறிப்பாக, சமூகத் தீமைகளை தடுக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு பெரியவர்களுக்கே உண்டு நமக்கேன் ஊர்வம்பு...? என்று ஊரை விட்டு ஒதுங்கிப்போனதால் தான் இன்றைக்கு பல மஹல்லாக்களில் வட்டி, வரதட்சிணை, விவாகரத்து என பல்வேறு பிரச்னைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. பிறகு என்னஅவர்களே கூட அப்பிரச்னைகளிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாமல் போய்விடுகிறது.
முன் வாழ்ந்த நபிமார்கள் பலரும் தமது ஊரின் சமூகப் பிரச்னைகளுக்காக இறுதிவரை போராடினார்கள் என்று தானே குர்ஆன் பல்வேறுஇடங்களில் கோடிட்டுக் கூறிச் செல்கிறது.
சுஐப் நபி, வணிக மோசடியையும்; லூத் நபி, ஓரினச் சேர்க்கையையும்; மூசா நபி, சூனியத்தையும்; ஜகரியா நபி போலி மதகுருமார்களையும் என அவரவர் காலத்தில் வீரநடை போட்ட சமூகத் தீமைகளை வேரோடு களைய அரும்பாடுபட்டு தம் உயிரையும் கூட இழந்திருக்கிறார்கள் என்பது தான் வரலாறு. குறிப்பாக, "இறைவன் ஒருவனே...!" என்ற ஏகத்துவத்தை
இவ்வையகத்தில் நிலை நாட்டுவதற்காக பாடுபட்ட இறைத் தூதர்கள் தான் மிகஅதிகம் என்பது யாவரும் அறிந்த ஒன்று தான். எனவே, சமூகத் தீமை என்ற பட்டியலில் இறைமறுப்பும், பலதெய்வக் கொள்கையும் அவசியம்இடம்பெறும் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது.
சமூக சேவை :
முதியோர்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகளில் சமூகசேவையும் ஒன்று. இன்று நமது இளைஞர்கள் பலர் சேவை செய்யத் தயாராக இருக்கிறார்கள் ஆனால் அவர்களை வழிநடத்துவதற்குத்தான் மிகச்சரியான ஆட்கள் இல்லை. இது அனுபவமிக்க முதியவர்களால் தான் முடியும் என்பதில் மறுகருத்தில்லை. ஆனால் அவர்கள் சமூகத்தை விட்டும் கொஞ்சம்
கொஞ்சமாக விலகிச் செல்லவது நம் சமூகத்திற்கு நல்லழகல்ல! "முதியோர்கள் அவர்கள் நமது நபிமார்களைப் போன்றவர்கள்" என்ற நபிமொழியொன்று இவ்விடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கது.
நாற்பது வயதுக்கு பின்பு தான் "நபிப் பட்டம்" ஒருவருக்கு வழங்கப்படுகிறது. காரணம், அப்போதுதான் அவர் அனுபவசாலியாக, பொறுமையின் சிகரமாக இருப்பார் என்பதுதான். அந்த அனுபவமும், அசரா பொறுமையும் இவரிடம் இருப்பதால் இவரும் ஒரு நபியைப் போன்று நல்வழி காட்ட தன்னை தயார் படுத்திக் கொள்கிறார். எனவே நேர்வழியை காட்டுவதென்பது இவர் மீது கட்டாயக் கடமையாகி விடுகிறது. எனவே அவர் எந்த பொறுப்பும் எனக்கில்லை என்று என்றைக்கும் அவர் விலகிச் சென்று விட முடியாது. நபிமார்கள் யாவருமே ஏகத்துவப் பணியுடன் சமூகச் சேவையையும் மிகச் சரியாகவே செய்து வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களது வாழ்வியல் வரலாறு தெளிவாகக் கூறும்.
*நூஹ் நபி, ஏற்படவிருந்த வௌ்ளப் பிரளயத்தின் போது கப்பல் செய்து தம் சமூக மக்களைக் காப்பாற்றியது,
*மூசா நபி, மத்யன் நகருக்குச் சென்ற போது முன்பின் அறிமுகம் இல்லாத அந்த ஊரில் ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்ற இரு கண்ணியக் கன்னிகைகளின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டி தாகம் தீர்த்தது,
*ஹிழ்ர் நபி (யும் மூசா நபியும்) தமது தொடர் பயணத்தில் மூன்று வகையான சேவைப் பணிகளைச் செய்தது,
*அரசர் துல் கர்னைன் தமது நீண்ட, நெடிய பயணத்தின் வழியே நல்ல பல சேவைப் பணிகளைச் செய்தது இப்படியாக நபிமார்களின் சேவைப் பணிகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஆக நபிமார்களைப் போன்ற நம்மூர் பெரியவர்களிடம் ஏதோ ஒரு சேவைப்பணி அவசியம் இருக்க வேண்டும். அது வேலையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அது ஒரு நல்ல ஆலோசனையாகக் கூட இருக்கலாம். இன்றைய அவசியத் தேவையும் கூட அதுதான்..!
நமது உரிமைகள் :
மதிப்புரிமை : முதலில் முதியவர்கள் தமக்குரிய மதிப்பு, மரியாதையை, கண்ணியத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எங்கு நமக்கு மரியாதை இல்லையோ அங்கு நாம் வாயைத் திறப்பது நமக்கு நல்லழகல்ல...! முன்னதாக எப்போதும் நாம் மற்றவர்களால் மதிக்கப்படுபவர்களாக, மரியாதையைப் பெறுபவர்களாக நடந்து பழகிக் கொள்ள வேண்டும். எனவே, அதற்குரிய நற்பண்புகளை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். "எவர் நற்குணத்தில் பரிபூரணமானவராக இருக்கிறாரோ அவரே ஈமானில் பரிபூரணமானவர்" என்று என்றோ நபிகளார் நவின்றது இன்றும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.
"வாலிப காலத்தில் வயது முதிர்ந்தவர்களை நீங்கள் மதித்து நடங்கள்; அப்போதுதான் உங்களது வயோதிக காலத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்" என்ற ஏந்தல் நபியின் எச்சரிக்கை மொழியும் இங்கு கவனிக்கத்தக்கது.
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்து) சொல்ல வேண்டாம்! அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம்! இன்னும் அவ்விரு வரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
இவ்வான்மறை வசனத்தை சற்று நாம் உற்று கவனித்தால் "அவர்கள் முதுமையை அடைந்து விட்டால்..." என்ற சொற்றொடரின் வழியே ஒரு பேருண்மையை நாம் சட்டென்று புரிந்துணர முடியும். முதிர்ந்த வயதுப் பெற்றோர் கட்டாயம் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது. பொதுவாக பெற்றோர் என்பவர்கள் அவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதிலும் அதிகவயது முதிர்ந்தோர் அவசியம் மதிக்கப்பட வேண்டியவர்களே...! மதிப்புரிமை என்பது அவர்களின் அனுபவ அறிவிற்காகவும், ஆக்கப்பூர்வ கல்விக்காகவும் கிடைக்கப் பெறுவதாகும். அதற்காகத்தான் அவர்களை நாம் மதிக்கவும் செய்கிறோம் என்பதை முதலில் அவர்கள் நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நாமும் அதையுணர்ந்து அவர்களை முழுமையாக, நன்கு மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆலோசனையுரிமை : "எந்தக்காரியம் பெரியவர்களோடு ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படுகிறதோ அது மிகுந்த பரகத் - இலாபத்திற்குரியதாகும்" என்ற மூத்தோர்வாக்கு என்றென்றும் மிகுந்த கவனத்திற்குறியதாகும். "நல்லாலோசனை கேட்கப்படுபவர் நம்பிக்கை வைக்கப்பட்டவராவார்" என்ற நபிகளாரின் நல்லெச்சரிக்கை நம் முதியோர்களுக்கு நல்லதொரு சவுக்கடியாகும். அனைவருக்கும் ஆலோசனை சொல்லும் உரிமை முதியவர்களுக்கு உண்டு. ஆனால் அதில் அவர்கள் சற்றும் தவறிழைத்து விடக்கூடாது. ஏனெனில், அது அவர்களின் உரிமை என்றாலும் அவர்கள் கொடுக்கும் ஒரு தவறானயோசனை ஒரு தலைமுறையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விடக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மசூறா எனப்படும் நல் ஆலோசனை நமது காரியங்களை இலகுவாக்கி வைக்கிறது; நம்மை பதட்டப்படாமல் இருக்கச் செய்கிறது; அடுத்தது எது? என்ற குழப்பத்தை நீக்குகிறது. ஆக மசூறா நமக்கு கிடைக்கப் பெற்ற ஒரு "மாபாக்கியம்" என்றே சொல்லலாம். சஹாபாக்கள் தமது சகலவிதமான காரியங்களையும் நபிகளாருடன் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தும் பழக்கமுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது அவர்களது வாழ்வியல் வரலாறு கூறும் உண்மை.
தீய காரியங்களுக்கு தீவிரமாக ஆலோசனை செய்யும் போது ஏன் நல்ல காரியங்களுக்கு நன்கு ஆலோசனை செய்யக்கூடாது...? அது அவ்வவ்வூர் பெரியவர்கள் வழங்கும் ஆலோசனையைப் பொறுத்துத்தான் அதன் மீதான ஆர்வம் பிறக்கும். எனவே அனுபவப்பூர்வமான, விலை மதிக்கமுடியாத, அரிய நல்லபல ஆலோசனைகளை தாமாகவே முன் வந்து தருவது அவர்களின் ஈருலகிற்கும் மிக மிக நல்லது.
அதிகாரயுரிமை : அதிகாரம் இல்லாமல் எந்தவொரு காரியம் நிச்சயம் செயல்பாட்டுக்கு வராது. எனவே, அதிகாரம் செலுத்தும் உரிமை முதியவர்களுக்கு உண்டு. அவர்களுக்கென்று பொறுப்புப் பதவி கொடுக்கப்படாவிட்டாலும் அவர்கள் அதிகாரத்திற்குரியவர்களே..! காரணம் அவர்களது மூத்த முதுமை தான். பதவி இருப்பின் இன்னும் சிறப்பு எனினும் தங்களது அதிகாரத்தை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்து விடக்கூடாது. பொதுவாக நல்லதை ஏவவும், தீயதைத் தடுக்கவும் தான் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர பணத்தையும், பதவியையும் பறிப்பதற்காக அல்ல...!
மூசாநபி தமது இறைவனைப் பார்க்க தூர்சினா மலைக்குச் சென்ற போது ஊர்ப் பொறுப்பை தம்மைவிட ஓரிரு வயது முதிர்ந்த ஹாரூன் நபியிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள் என்பது குர்ஆன் கூறும் வரலாறு.
"தவறுகளைக்கண்டு முகம்கூட சுழிக்காத முதியவர் இறைவனின் கடுங்கோபத்திற்கு ஆளானவர்" என்ற நபிகளாரின் நல்லெச்சரிக்கை என்றும் நம் நினைவுகளில் நிற்க வேண்டியஒன்று.
ஒரு முறை நபிகளார் நவின்றார்கள் : "ஒரு உண்மையான இறைவிசுவாசி தவறுகளைக் காண்கிறபோது, முதலில் தம் கையால் தடுக்கட்டும்; இயலாவிட்டால், தம் நாவால் தடுக்கட்டும்; அதற்கும் இயலாவிட்டால், தம் மனதால் வருத்தப்படட்டும்...! இந்த (மூன்றாம்) நிலைதான் ஈமானில் ஆக மிக பலவீனமானது" என்றார்கள்.
இன்றைக்கு நம்மூர் பெரியவர்கள் இந்த மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் வருத்தத்திற்குரியதுதான். அதை மீண்டும் மீட்டெடுக்கும் பொறுப்பும், உரிமையும் அவர்கள் மீதே கடமையாக இருக்கிறது. எனவே முதுமை என்பது ஒய்யாரமாக ஒரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு அங்குமிங்குமாக அசைந்தாடுவதல்ல அல்லது ஏதோவொரு மூலை முடுக்கில் முடவனாய் முடங்கி, அடங்கி ஒடுங்கிப் போய் விடுவதும் அல்ல...! நமது முதுமை என்பது அதற்கென்று சில கடமைகளும், சில உரிமைகளும் உண்டு. அவற்றை நாம் தினசரி, சரி வரப்பேணி நடந்தால் நிச்சயம் அவரவரது வாழ்க்கை பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதைத்தான் இதன் ஆரம்பத்திலுள்ள வான்மறை வசனமும், வள்ளல் நபியின் பொன்மொழியும் நமக்கு நன்கு சுட்டிக் காட்டுகின்றன. வாருங்கள்
தூய முதுமையைப் போற்றுவோம்...!
தீய இளமையை மாற்றுவோம்...!