நம்மை நாமே மூடிக்கொண்டு விட்ட ஒரு சமுதாயமாக நாம் மாறி விட்டோம்!

எஸ்.ஏ.மன்சூர் அலி, மனித வள மேம்பாட்டாளர்

கேள்வி:
மக்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களைப் பொருத்தவரை நபியவர்களின் அணுமுறை எவ்வாறு இருந்தது?
பதில்:
நபியவர்களின் நபித்துவ வாழ்க்கை மொத்தம் 23 ஆண்டுகள். மக்கத்து வாழ்க்கை 13 ஆண்டுகள். மதீனத்து வாழ்க்கை 10 ஆண்டுகள். மக்களுடைய பழக்க வழக்கங்களைப் பொருத்தவரை - மக்காவுக்கும் மதீனாவுக்கும் பொதுவானவைகளும் உண்டு. தனித்தன்மை உடையவைகளும் உண்டு.
இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபியவர்கள் - மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டார்கள் என்பதனை ஆய்வு செய்தல் அவசியம்.

அணுகுமுறை ஒன்று :
மக்கத்து மற்றும் மதீனத்து மக்களின் பழக்க வழக்கங்களில் காணப்பட்ட மூன்று தீமைகளை இஸ்லாம் தடை செய்து விடுகின்றது. அவை: மது, விபச்சாரம், வட்டி.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - இவைகளை முற்றாகத் தடை செய்வதற்கு முன் மக்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது என்பது தான்.
நபியவர்கள் - முஆத் பின் ஜபல் (ரலி) எனும் நபித்தோழரை யமன் தேசத்துக்கு அனுப்பி வைக்கும்போது - மக்களுக்கு இலகுவாக்குங்கள்; கடினப்படுத்தி விடாதீர்கள் என்ற அறிவுரையையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அணுகுமுறை இரண்டு:
மதீனத்து மக்கள் ஆண்டுக்கு இரண்டு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவற்றில் நபியவர்களுக்கு திருப்தி இல்லை. அந்தப் பெருநாட்களைத் தடை செய்வதற்கு பதிலாக வேறு இரண்டு பெரு நாட்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள் நபியவர்கள்.

இதில் நமக்கென்ன படிப்பினை. மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் ஒன்றில் மார்க்கத்துக்கு உடன்பாடு இல்லையெனில் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டியது நம் கடமை. அது ஹராம், இது ஹராம் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. மக்கள் விட மாட்டார்கள். இதுவே நிதர்சனமான உண்மை.

அணுகுமுறை மூன்று:

குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு பாலுறவில் இடை முறிப்பு (அஸ்ல்) என்ற ஒரு பழக்கத்தைக் கடைபிடித்து வந்தனர் அம்மக்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (பாலுறவு இடைமறிப்பு) செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி); நூல் : முஸ்லிம் (2610)

மக்களின் இப்பழக்கத்தை பொருத்தவரை நபியவர்கள் அதனை ஊக்குவிக்கவும் இல்லை; தடை செய்திடவும் இல்லை என்பதை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும்.

அணுகுமுறை நான்கு:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! உங்களுடன் பாடல் பாடும் சிறுமியர் இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள். புகாரி (5162)
இந்த நபிமொழியின் மூலத்தில் "லஹ்வுன்" என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் - இதனை amusement, entertainment, pastime, pleasure, sport, fun, play - என்றெல்லாம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
கவனிக்க வேண்டியது என்னவெனில் மக்களின் பழக்கங்களில் ஒன்றை செய்திடத் தூண்டி ஆர்வமூட்டுகிறார்கள் நபியவர்கள்.
நபியவர்களின் இந்த அணுகுமுறைகளை நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையோ என்றே எனக்குத் தோன்றுகிறது!
இதனால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று என்ன தெரியுமா?

We became a closed community!
நம்மை நாமே மூடிக்கொண்டு விட்ட ஒரு சமுதாயமாக நாம் மாறி விட்டோம்!
உண்மையா? இல்லையா?