"காக்க...காக்க...! நட்பைக் காக்க...!!"

மவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, பேராசிரியர் : இர்ஃபானுல் ஹுதா - அரபிக்கல்லூரி, தாராபுரம். 9865804000


ஜூலை - 30 என்றவுடன் நம் நினைவுகளில் தவழ வேண்டியது அன்று தான் சர்வதேச நட்பு தினம். அவரவர் தமது நட்பை இன, மொழி, நிற வேறுபாடின்றி வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதை முன்னிட்டு ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட தினம் தான் இந்த நட்பு தினம். அது குறித்து இனி நாம் சில செய்திகளைப் பார்ப்போம்.

மனிதன் உலகில் வாழ்கிறபோது ஒரு போதும் அவன் பிறரின் நட்பின்றியும், பிறரோடு நட்பின்றியும் தனித்து வாழ்ந்து விட முடியாது. உன்ஸ் என்ற அரபுச் சொல்லிற்கு அன்பு, நட்பு, பிரியம், பாசம், நேசம் என்றெல்லாம் பொருள் பலவுண்டு. இம்மூலச் சொல்லில் இருந்துதான் இன்சான் - மனுசன் - மேன் போன்ற முறையே அரபி, சமஸ்கிருத, ஆங்கிலச் சொற்கள் மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றறிய முடிகிறது.
ஆக மனிதன் என்றாலே அவன் அன்பானவன், நட்பாளன், நல்லுறவுக்குரியவன், பிரியமானவன், பாச, நேசமானவன் என்று விளங்கிக் கொள்ளமுடிகிறது. உண்மையிலேயே நட்புக்கு நேரம் - காலம், ஜாதி, மதம், நாடு - நகரம், ஆண் - பெண் போன்ற வேறுபாடுகளும், பாகுபாடுகளும் அறவேயில்லை. ஆனாலும் இதே மனிதன் தான் தன்னைத்தானே பல்வேறு கூறுகளாக பிரித்துப் போட்டு நிறமும், தரமும் பார்த்துப் பழகத் தொடங்கினான்.

விளைவு, இன்றைக்கு சர்வதேசமெங்கும் இனவெறி, நிறவெறி, மொழி வெறி, கலாச்சார வெறி கூடவே தற்போது மதவெறி என பல வெறித்தனமான செயல்பாடுகளுக்கிடையே மனிதன் தன் அசல் தன்மையான நட்பை மட்டும் எங்கோ தொலைத்துப் போட்டுவிட்டு நிம்மதியின்றி அங்கும் இங்குமாக அலையாய் அலைந்து, திரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு இப்போதைய அவசரத் தேவை சரியான வழிகாட்டுதல் தான் அதை தரப்போவது யார்...?

இக்கட்டான எந்தவொரு நேரங்களிலும் சட்டென ஒளிவீசி வழிகாட்டுவது இஸ்லாம் தான் என்றால் அது மிகையல்ல...! திருமறை வசனம் ஒன்று திட்டமாய் ஓதிக்காட்டுகிறது இப்படி : மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)
இந்த வசனத்தை மீண்டும் நீங்கள் ஒன்றுக்கு மூன்றுமுறை நிறுத்தி, நிதானமாக வாசித்துப் பாருங்கள் இந்த உலகமே ஒரேகுடையின் கீழ் தான் இயங்குகிறது என்பது புரியும்.
தக்வா எனும் இறையச்சம் மட்டுமே இறுதிப் பிரதானமாக, உறுதிப் பிரமாணமாக இவ்வசனத்தின் இறுதியில் குறிப்பிடப்படுவதையும் நாம் நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும். குர்ஆன் கூறும் இறையச்சமும், பயபக்தியும் இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே உண்டு என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், எப்படியும் வாழலாம் என்பதல்ல இஸ்லாம்..! இப்படித்தான் வாழவேண்டும் என்பதே இஸ்லாம். அப்படிப் பார்க்கிறபோது இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களோடு பழகுவதற்கும், நட்புகொள்வதற்கும் தடையேதும் விதிக்கவில்லை என்பதுதான் நாம் இங்கு கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு மனித நட்புறவுகள் எப்படி இருக்கின்றன...? உண்மையிலேயே அவை நட்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டைவையா...? இல்லை பணம், பொருள், பதவி, அழகு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவையா...? என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் இன்றைக்கு பல நட்புகள் பாதியில் முறிந்து போன கதையாகத்தான் இருக்கின்றன. "நா.... ஏமாந்துட்டேன்", "என்ன... ஏமாத்திட்டான்/ள்...! "அவனெல்லாம் ஒரு மனுசனா...?", "அவன் மனுஷனே இல்ல மிருகம்...!","ச்சே...இப்படி அவ இருப்பான்னு நா... கொஞ்சங் கூட நெனச்சே பாக்கல...! "இப்படியான புலம்பல்கள் பலவற்றை அன்றாடம் நீங்கள் கேட்டிருக்கக் கூடும். ஏன்... நீங்களே கூட அப்படி ஒரு கட்டத்தில் புலம்பியிருக்கவும் கூடும். ம்ம்...யார் கண்டது எந்தப்புற்றில் எந்தப் பாம்பு இருக்கின்றதென்று...?
எந்தப் பெரும் பிரச்னையையும் சர்வசாதாரணமாக தாங்கிக் கொள்ளும் மனிதனால் நட்பு உடைவதை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஒரு நட்பின் ஆழ, அகலத்தை நம் புறக் கண்களால் நிச்சயம் எடை போட்டு விட முடியாது. தங்கத்தை, தக்காளியை எடைபோடும் தராசில் எடைபோட்டுப் பார்க்க முடியுமா என்ன...?
ஆனாலும் மனிதன் சில நேரங்களில் தவறான வழிகளை சரியான வழி என புரிந்து கொள்கிறான். அதன் விளைவு தான் அதுமாதிரியான புலம்பல்கள். "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பதை மட்டும் ஏனோ இவன் அவ்வப்போது வசமாய் மறந்து போய் விடுகிறான்...? நல்லோர்களின் நட்பு எப்போதும் நம்மை நேரிய, சீரிய வழியில் தான் வழிநடத்தும் என்பதை மட்டும் என்றைக்கும் நாம் மறந்து விடக்கூடாது.
நபி யூசுஃப் (அலை) அவர்கள் தமது இறுதி நாட்களில் செய்த பிரார்த்தனைச் சொற்களை பின்வருமாறு பதிவு செய்து வைத்திருப்பதிலிருந்தே நன்னட்பின் அவசியத்தை நாம் நன்குணர்ந்து கொள்ள முடியும்.
"என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள் புரிந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று யூசுஃப் நபி பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன் : 12:101)

யூசுஃப் நபி மட்டுமின்றி பல்வேறு நபிமார்களும் "இறைவா ! என்னை நல்லடியார்களோடு சேர்த்து வை...!" என்றுதான் துஆப் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பது புனிதக் குர்ஆன் வெவ்வேறு இடங்களில் நமக்கு காட்டிக் கொடுக்கும் ஒரு அற்பதமானதொரு நல்வழியாகும். எனவே நாமும் நமது அன்றாட துஆக்களில் இதை அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும். நல்ல நட்பு ஒன்று நமக்குக் கிடைத்து விட்டால் அதை
விட வேறென்ன பாக்கியம் வேண்டும் மனிதப் பதவிகளில் நபித்துவப் பதவி மிகவும் உயர்ந்தது. அந்தப் பதவியிலுள்ள ஒருவரே "நல்லடியாரோடு
எம்மைச் சேர்ப்பீராக ! "என்று கேட்கும் போது நட்பின் ஆழம் நமக்குப்புரிகிறது. அது மட்டுமல்ல.! தீய நட்பு நம்மை நம்மை பாழும் நரகில் தள்ளிவிடும் என்பதையும் நாம் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.

சுவனவாசி - நரகவாசிகளுக்கிடையேயான பின் வரும் உரையாடல் ஒன்று இதை மெய்ப்பித்துக் காட்டுகிறது இப்படி : அவர்கள் சுவனபதியில் இருந்து கொண்டு, குற்றவாளிகளை நோக்கி, "உங்களை நரகத்தில் புகுத்தியது எது?" என்று கேட்பார்கள். 74:43. அவர்கள் (பதில்) கூறுவார்கள் : “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை (அதற்கு வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். (என்று பதிலளிப்பார்கள்) (அல்குர்ஆன் : 74:40-45)
ஆக, நமது நட்புறவு எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராத நட்புறவாக இருக்க வேண்டும். அது தான் மெய்யான நட்புறவு. ஆனால் இன்றைக்கு
அத்தகைய நட்பு நம்மிடையே இருக்கிறதா என்ன...? எல்லாவற்றின் பின்னணியிலேயும் பேராசையும், பெரும் பணமும் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. விளைவு, பெரும் நஷ்டத்தைத் தவிர வேறு என்ன...?
பண்பு, பாசம், ஈகை, இரக்கம், விட்டுக் கொடுத்தல், மறத்தல், மன்னித்தல் என எல்லாம் கலந்த கலவை தான் நட்பு என்பது. ரசிப்பதும், ருசிப்பதும் பிறகு காரியம் முடிந்தவுடன் தூக்கி எறிவதும் நல்லதொரு நட்புக்கு நல்லழகல்ல...! சுகத்திலும் - துக்கத்திலும், இன்பத்திலும் - துன்பத்திலும், அமைதியிலும் - பிரச்னையிலும் என எந்தவொன்றிலும் சரிசமமாக பங்கேற்பதுதான் மெய்யான நட்புறவு. இந்த நிலை இன்றைக்கு நமது நட்புகளில் இருக்கிறதா என்ன...? ரொம்பவும் யோசிக்க வேண்டிய ஒன்று.
பெரும்பாலான நட்புறவுகளில் இன்று அவரவர்களின் சுயநலம் தான் முன்னிற்கிறது என்பது கண்கூடு. சும்மா வார்த்தை ஜாலங்கள் வேண்டுமானால் "உனக்காக நான்...", "நா இருக்கற வர உனக்கு ஒரு கவலயும் இல்ல...!" என்றெல்லாம் அவரவர் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டுவதை நீங்கள் உங்கள் காது குளிரக் கேட்டிருக்க முடியும். உண்மையான நட்புகள் பேசுவதில்லை; பேசுவதிலும் இல்லை போலியான நட்புகள் தான் புலம்பித் தள்ளுகின்றன.
குறிப்பாக இன்றைக்கு பள்ளிக்கூட நட்புகளும் பாதைமாறிச் செல்வது பெரும் வேதனையளிக்கிறது. நட்பு என்பது மிகவும் தவறாக புரியப்பட்டு அதற்கு காதல் என்று சாயம் பூசுகிற ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதி. ஆனால் அதை எவ்வாறு எதிர்கொள்ளவது என்பது தான் இன்றைய பெரும் பிரச்னையாக நம் கண்முன் நிற்கிறது.

நட்பை நாம் நட்பாகப் பார்க்கப் பழகிக் கொடுக்க வேண்டும். யாரும் இங்கு தனித்து வாழ்ந்து விட முடியாது. ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ வேண்டிய சூழல் இருக்கிறது. அதை நாம் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.
சுருக்கமாகச் சொல்வதானால் நட்பை நாம் நட்பாக மட்டுமே பார்க்க வேண்டும். காதல் என்பதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் என்று இஸ்லாம் சொல்வது இதனால் தான் என்னவோ...?
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. (குறள் - 786) என்ற திருக்குறள் மட்டும் நம் செவிகளில் என்றென்றைக்கும் திருக்குரலாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கட்டும்...!
வாருங்கள் !
நமது தூய நட்பை போற்றுவோம்..!
நமது தீய நட்பை மாற்றுவோம்...!